Wednesday, May 16, 2007

மனங்கவர் சிங்கை

ஆசியக் கண்டத்தின் ஆச்சரியக் குறிப்புள்ளி
தேசிய மிதுவெனவே போற்றி வசிக்குமாந்தர்
அளவிற் சிறிதாயினும் அனைவரையும் ஆனந்தத்
திலார்த்து மற்புதச் சிங்கை (1)

வானுயர்ந்த வண்ணக் கட்டிடங்கள் வரிசையில்
வனப்புமிக பச்சைமரங் களெங்கும் -- வானம்
முழுதும் பெய்யும் வெய்யிலு மிருக்கும்
பொழுதில் நீர்வடிந்து விடும் (2)

சிவ லயன்சித்தித் தண்டபாணி சீனிவாசன்
ஸ்ரீவடபத்ர வைராவிமடவீ  ரகாளிமாரி யவள்
யாவருடன் இன்னும்பலர் வீற்றிருக்கு மழகில்த்
தவக்கோலம் காணும் சிங்கை (3)

தீபத் திருநாள் திருக்கோலம் ஆண்டோறும்
தைப் பொங்கல் மறந்தாலும் தைப்பூசத்
திருவிழாவில் பலவிதக் காவடி தாங்கித்
தெருவெலாம் பக்தர் மயம் (4)

அரசுப் பேருந்தோ வாடகைச் சிற்றுந்தோ
விரைவுரயிலு மதோவெதிலும் சுற்றுகையில் ஊரழகு
வியக்கவைக்கும் நம்மனதை அதற்குழைக்கப் பாடுபடும்
தயக்கம் சிறிதுமிலாச் சிங்கை (5)

ஆடை அணிகலன்கள் அணிவகுக்கும் தொழில்நுட்பக்
கடைத் தெருக்கள் ஏராளம் -- கூட்டம்
அலைமோதி வாங்கத்துடிக் குமுயர்தரப் பொருட்கள்
விலைமலிவில்க் கிடைக்கும் சிங்கை (6)

ஆட்சி மொழி நான்கிலும் சமத்துவமே
வீட்சி யுறுமெனக் கூறும் காட்சி
இங்கில்லை அரசியலாக்க வில்லை இருந்தும்
எங்கிலும் தெரியும் தமிழ் (7)

உடுக்க உடை உண்ண உணவு
படுக்க இடம் எல்லாமும் கிடைத்திட
உண்டிங்கு வேலை என்று நம்மைச்
சுண்டி யிழுக்கும் சிங்கை (8)

கட்டுமானத் தொழிலாளர் ஓய்வான அந்நாளில்
திட்டுத் திட்டாய்க் குவிதலில்க் கூட்டம்
எட்டுத் திக்கும் பரவிநிற்க படபடக்கும்
சிட்டாய்ச் சிராங்கூன் சாலை (9)

குறைவிலா வசதி நிறைவான வளமுடன்
முறையான வாழ்வு தனில் உறையும்
ஊர்முழுக்கத் தூசிலாச் சுத்தத்திற்கு மாசற்ற
பேர்பெற்ற மனங்கவர் சிங்கை (10)

-----

ஐந்து பாடல்களில் முடிக்க எண்ணி பத்து பாடல்களாகிவிட்டன. எவ்வளவோ முயன்றும் குறைக்க முடியவில்லை. நெல் விதைத்து நெல் அறுக்க, நிறையையே சொல்ல முயற்சித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டமிடுங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா

14 comments:

 1. சிங்கையை நன்றாக விவரித்திருக்கிறீர்கள். சிங்கைத் தமிழர் பேசும் ஆங்கிலம் கலக்காத அற்புதமான தமிழை விட்டு விட்டீர்களே? சிங்கைத் தமிழர்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது அதுதான்.

  ReplyDelete
 2. சதங்கா..
  நல்லா இருக்கு உங்க கவிதை.
  நாகு ஏதோ சொல்கிறார்,உள்குத்தா என்று தெரியவில்லை.
  ஆங்கிலம் கலக்காத தமிழா?யார் பேசுகிறார்கள்?ஒருவேலை 1960யில் அவர் பார்த்திருக்ககூடும்.
  நாகு உங்க கனவை நான் கலைக்கவிரும்பவில்லை.:-))

  ReplyDelete
 3. வாவ்,

  சதங்கா,

  சொல்ல ஒர் வார்த்தையில்லை. அருமை, அருமை எனச்சொல்லி உம்மை பாராட்டுவதைத் தவிர
  என்னிடம் வேறு ஒரு வார்த்தையில்லை.

  கொஞ்சம் எனக்கும் வெண்பா பாடும் ரகசியத்தைச் சொல்லித்தரக்கூடாதா?

  அன்புடன்,

  முரளி

  ReplyDelete
 4. நான் சிங்கை சென்றதில்லை. சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் 'பத்துப்பாட்டின்' மூலம் சிங்கைக்கே நேரில் சென்று பார்த்த ஒரு அனுபவத்தை அளித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 5. //ஆங்கிலம் கலக்காத தமிழா?யார் பேசுகிறார்கள்?ஒருவேலை 1960யில் அவர் பார்த்திருக்ககூடும்.//
  வாங்க வடுவூர். 1960களில் சிங்கையில் பிறந்தவர்களின் தமிழ் கேட்டிருக்கிறேன் :-). இப்போது எப்படி என்று தெரியாது.

  சிங்கையின் வானொலியும் இனிமைதான். ஆனால் கொஞ்ச நாளாக அவர்களுக்கு அமெரிக்க ரசிகர்களைக் கண்டால் பிடிக்கவில்லை :-(

  ReplyDelete
 6. நாகு
  சிங்கையின் வானொலியும் இனிமைதான். ஆனால் கொஞ்ச நாளாக அவர்களுக்கு அமெரிக்க ரசிகர்களைக் கண்டால் பிடிக்கவில்லை :-(
  அப்படியா?
  கொஞ்ச வருடங்களுக்கு முன்பு அங்கிருந்து வரும் அழைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த மாதிரி இருந்ததே!!
  இங்கு தமிழர்களை தமிழ் பேச வைக்க அரசாங்கம் படாத பாடு படுகிறது.பலர்,வீட்டிலேயே தமிழில் பேச மாட்டார்கள்,வெளியில் எப்படி முடியும்?
  அவர்கள் சொல்லும் காரணம்,த்மில் பேச கஷ்டமாக இருக்கு,ஆங்கிலம் சுலபமாக இருக்கு.. இப்படி பல.
  இதே ஒரு மலாய் காரரிடம் பேசினால் முதலில் மலாய் தான் வரும் தப்பித்தவறி ஆங்கிலம் எப்போதாவது தான் நுழையும்.ஏனென்றால் அவர்கள் வீட்டிலும் அதே தான் பேசுகிறார்கள்.

  ReplyDelete
 7. அடக் கடவுளே, அங்கேயும் அந்த கதைதானா! அதுதான் சதங்கா விவரமாக விட்டிருக்கிறார். :-)

  இங்கு என் சிங்கப்பூர், மலேசிய, ஈழ நண்பர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான். ஏன் இந்தியத் தமிழர்கள் தமிழில் ஆங்கிலத்தை இவ்வளவு கலக்கிறார்கள்? அடுத்த முறை கேட்கட்டும். பார்த்துக் கொள்கிறேன்.

  //கொஞ்ச வருடங்களுக்கு முன்பு அங்கிருந்து வரும் அழைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த மாதிரி இருந்ததே!!//

  உங்கள் திருஷ்டிதான் பட்டிருக்க வேண்டும். இப்போ இப்படி வருகிறது.

  Thank you for your interest.

  We regret to inform that users using US registered IP addresses will not be able to access our internet simulcasts due to unresolved copyright issues.

  RIAAவின் அட்டகாசம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 8. சரி நம்கதையை விடுவோம். வெண்பா வேந்தர் சதங்கா வெளுத்துக் கட்டியிருக்கிறார். அடுத்து தலைவரை சிங்கையில் போய் இந்த பாட்டை பாடச் சொல்லவேண்டும். 'அக்கரை சீமை அழகினிலே' போல. (ஆனா ஒன்னு. சிங்கை, சிங்கைன்னு முடிவதால் நம்ப பசங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்)

  ReplyDelete
 9. நாகு, வடுவூர் குமார், முரளி, பரதேசி ...

  அனைவருக்கும் நன்றி.

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete
 10. // நாகு:

  சிங்கைத் தமிழர் பேசும் ஆங்கிலம் கலக்காத அற்புதமான தமிழை விட்டு விட்டீர்களே?//

  // வடுவூர் குமார்:

  இங்கு தமிழர்களை தமிழ் பேச வைக்க அரசாங்கம் படாத பாடு படுகிறது.//

  நாகு, வடுவூர் குமார் சொல்வது மெத்தச் சரி. "தமிழில் பேசுவோம்"-னு சில ஆண்டுகள் முன்பு ஒலி 96.8ல் கேட்டிருக்கிறேன்.

  ஆனால், பாடல் 7ல் சொன்னது போல தமிழ் எல்லா இடங்களிலும் காண முடியும். ஒரு உதாரணம்: விரைவு ரயில் நிலையங்கள். அறிவிப்புப் பலகைகள் மற்றும் அறிவிப்பாளர் தமிழிலிலும் சொல்வது.

  எழுத நினைத்து விட்டுப்போனதில் ஒன்று: சிங்கைத் தமிழ்ப் பெண்மணிகளின் (தோற்றம் தவிர்த்து - யாரும் சண்டைக்கு வராம இருக்கனுமே !) குரல் இனிமை பாராட்டத்தக்கது. ;-)

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete
 11. //பரதேசி said...
  நான் சிங்கை சென்றதில்லை. சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் 'பத்துப்பாட்டின்' மூலம் சிங்கைக்கே நேரில் சென்று பார்த்த ஒரு அனுபவத்தை அளித்ததற்கு நன்றி.
  //

  இதைத் தான் பதிவின் மூலம் எதிர்பார்த்தேன். அந்த அனுபவம் உங்களுக்கு இப்பதிவு ஏற்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete
 12. முரளி,

  //
  சொல்ல ஒர் வார்த்தையில்லை. அருமை, அருமை எனச்சொல்லி உம்மை பாராட்டுவதைத் தவிர
  என்னிடம் வேறு ஒரு வார்த்தையில்லை.
  //

  ரொம்ப சந்தோசமா இருக்கு. ஒரு வினாடி நான் தன்னிலை மறந்தேன் உங்கள் வரிகளைப் படித்து விட்டு ;-)

  //கொஞ்சம் எனக்கும் வெண்பா பாடும் ரகசியத்தைச் சொல்லித்தரக்கூடாதா?
  //

  ஆஹா, உங்களை நக்கீரராக ஆக்க நான் தயாராயில்லை. ;-)

  ஒரு எண்ணம் இருக்கிறது, பதிவின் மூலமாக வெண்பா எழுதுவது எப்படினு பதிய !!! (தற்போது பணிச்சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. என்னோட காலதாமதப் பின்னூட்டப் பதில்கள் மூலம் அறிந்திருப்பீர்கள்). முக்கியமான கவனிக்கப் பட வேண்டிய விஷயம், நான் இப்ப தான் ஆரம்பிச்சிருக்கிறேன். சரியோ, தவறோ - ஏதோ எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்.

  வெண்பாவில் தற்போதைக்கு என்னோட பலவீனம்:

  எதன் பின் எந்தச் சீர் வரவேண்டும் என்பதில் மட்டும் நான் இன்னும் கவனம் செலுத்தவில்லை. மற்ற விதிகள் கடைபிடிக்கறேன் என்று நெனைக்கிறேன்.

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete
 13. you are 100% right about singapore..I love that country too.

  thanks for your New Venba...

  thanks
  Murugu

  ReplyDelete
 14. முருகு,

  வாசித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி.

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!