மாலை மணி 6.30 இருக்கும், அமைதியான ரிச்மண்ட் க்லென்ன் அலென் சாலையில் இருந்த "லேக் வியு" வட்டாரத்தில் ஒரு கருப்பு காம்ரி வந்து நின்றது.
கடும் மழையில் நனைந்தபடி தெருமுனையில் இருந்த 10 ஆம் நம்பர் வீட்டை அவசரமாய் நெருங்கி கதவை தட்டியது ஒரு உருவம். கதவைத் திறந்து, மின்னல் வெளிச்சத்தில் அந்த உருவத்தை பார்த்த மலர்விழி, "ரவி நீயா??" என்று திடுக்கிட்டாள்.
12 வருடங்களுக்கு முன்பு.........
யமஹா பைக் ஒன்று மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்து நின்றது.
வண்டியை சைடு ஸ்டான்ட் போட்டு நிப்பாட்டிய ரவி, "என்ன மச்சான் ரவுசு விட ரெடியா?" என்றபடி தன்னுடைய கலைந்த தலைமுடியை சீவினான்.
"என்ன மச்சான் இன்னிக்கும் லேட்டா? அந்த நாரை மண்டையன் உள்ள விடாம அசிங்கப்படுத்த போறான்டா", என்று கொக்கரித்தான் சுரேஷ்.
"விடு மாமு. நம்ம மச்சான் ரவிய பாத்தா, இந்த காலேஜே கிடுகிடுக்கும். இந்த எலெக்ட்ரானிக்ஸ் ப்ரொபசர் எம்மாத்தரம்; ஏன் சும்மா டென்சன் ஆவுர, கூல் மச்சி..." என்று சொல்லியபடி முதுகில் இருந்த நோட்டை ஸ்டெயிலாக உருவினான் கார்த்திக்.
தடதட வென்று சத்தம் கேட்டதை அடுத்து வாசலை பார்த்தார் ப்ரொபசர் ரங்கனாத்
"ஏன் லேட்?" என்று நெத்தியை சுருக்கியபடி கரகரப்பான குரலில் கேட்டார்.
அதற்கு ரவி, "உங்க பெண்ண ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு வர கொஞ்சம் டயம் ஆச்சு, இப்ப என்னான்றீங்க?" என்று நக்கலாக பதில் சொன்னான்.
மொத்த வகுப்பும் சிரிப்பலையில் மூழ்கியது. ஆனால் முதல் பெஞ்சில் இருந்த மலர் கடும் கோபத்தில் முணுமுணுத்தாள்.
இதைப் பார்த்த ரவி, "என்ன மலர் உன்ன பிக்கப் பண்ணலன்னு கோவமா? விடு ஈவனிங் நானே உங்க வீட்ல ட்ராப் பண்றேன், இப்போ சந்தோஷம் தானே?" என்று சொல்லி சிரித்தான்.
"செருப்பு பிஞ்சிடும் பொறுக்கி ராஸ்கல்", என்று கூறிய படி முகத்தை திருப்பிக் கொண்டாள் மலர்.
"அதுக்கென்ன புதுசா ஒண்ணு வாங்கிட்டா போச்சு", என்று கண்ணடித்தான் ரவி.
எரிச்சலோடு ப்ரொபசர் ரங்கனாத்,"சரி சரி உள்ள வாங்கப்பா எடஞ்சல் பண்ணாம, இனிமேலாச்சும் நேரத்துக்கு வாங்க, திஸ் இஸ் த லாஸ்ட் வார்னிங்", என்று எழுதிக் கொண்டிருந்த கணக்கை முடித்தார்.
உடனே சுரேஷ் கார்த்திக்கிடம், "இவரு சீக்கிரமா வந்துட்டு நமக்கு வார்னிங் குடுக்கறாரு, மச்சான் இது எத்தனாவது லாஸ்ட் வார்னிங்னு" கேட்க,
அதற்கு கார்த்திக் "100 ஆச்சு மச்சான், ஈவனிங் பார்ட்டி வச்சர வேண்டியதுதான்", என்று சொல்ல, மொத்த வகுப்பும் மீண்டும் சிரிப்பலையில் மூழ்கியது.
இன்று ரிச்மண்டில்.....
"இந்த அட்ரெஸ்ல பேஸ்மண்ட் வாடகைக்குனு சுலேகால பாத்தேன். அதான் பாக்கலாம்னு வந்தேன்", என்ற ரவி, "சாரி, இது சரிவரும்னு தோனல", என்று சொல்லியபடி தன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
தயக்கத்தோடு "உள்ள வரலாமே", என்று குழப்பமான முகத்தோடு கூப்பிட்டாள் மலர்.
மஞ்சள் விளக்கில் மின்னியது ஹார்ட்வுட் தரை. மிகவும் கவனத்தோடு அமைக்கப்பட்டிருந்த லிவிங் ரூமில் ஒய்யாரமாக மூலையில் இருந்த லெதர் சோபாவைக் காட்டி, "உக்காருங்க. குடிக்க எனிதிங் ஹாட் ஆர் கோல்ட்" என்று கேட்டாள் மலர்.
"காபி கெடைக்குமா", என்று கூறிய படி வீட்டை அவன் கண்கள் நோட்டம் விட்டன.
"கண்டிப்பா", என்று சொல்லியபடி உள்ளே சென்ற மலரின் மனதில் பல கேள்விகள் எழுந்தன.
தொடரும்.............