கோவை என சுருக்கமாக அழைக்கப்படும் கோயமுத்தூர் நான் பிறந்து வளர்ந்த ஊர். மாசுபடாத காற்று, சுவையான சிறுவாணி குடிநீர், அதிக போக்குவரத்தில்லாத சாலைகள் ஒருகாலத்தில் (பதினைந்து வருடங்களுக்கு முன்னர்) இருந்தன. இப்போது சற்று மாறிவிட்டது. இருந்தாலும் கால மாற்றத்தால் மாசுபட்டதில் மற்ற ஊர்களை காட்டிலும் கோவையில் சற்று குறைவே என எனக்கு பட்டது. சுற்றிலும் அடர்ந்த காடுகள், பாலக்காடு கேப் (rainshadow என்று கூறுவார்கள்) இருப்பதால் என்றும் குளு குளு வென இருக்கும்.
கோவையின் சிறப்பு - அழகு கொங்கு தமிழ், சிறுவர்களை கூட "ங்க" போட்டு அழைக்கும் பண்பு. இவையிரண்டும் இந்த காலத்தில் வேறு எங்கும் பார்க்கமுடியாதவை. எங்காவது ஆட்டோ ஓட்டுனர் "வாங்க.. போங்க.." என்று கூப்பிட்டால் அது கோவையை தவிர வேறு ஊராக இருக்காது!
அதிகப்படியான பள்ளிகள் , சிறந்த கல்லூரிகள் இருக்கும் ஊர். அந்த காலத்தில் பெரும் நிலக்கிழார்கள் தங்கள் செல்வத்தை மூட்டை கட்டி வைக்காமல் பல நல்ல பள்ளி/கல்லூரிகளை நிறுவினர்! எங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் சர்வ ஜனா மேல் நிலைப்பள்ளியின் தொன்மையை பற்றி சொல்லவேண்டுமென்றால், அந்த பள்ளியின் விருந்தினர் வருகை கையேட்டில் மகாத்மா காந்தி கையெழுத்திட்டிருக்கிறா ர்! கிருஷ்ண்ணம்மாள் பள்ளி/கல்லூரி (ஹ்ம்ம்) வாசலில் பி-4 காவல் நிலையம் இருப்பதால் அந்த கல்லூரி தான் பெண் பிள்ளைகளை பெற்றவர்க்கு முதல் விருப்பத் தேர்வு! என் ஊரான 'பீளமேடு'வை சுற்றி பத்து பதினைந்து கிலோமீட்டர் வட்டத்துக்குள் மட்டுமே இருபது தனியார் பள்ளிகளும் பத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளும் உள்ளன! பி.எஸ்.ஜி., சி.ஐ.டி, எஸ்.என்.ஆர்., ஜி.சி.டி., தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, ஜி.ஆர்.டி., என பத்திற்கும் மேற்பட்ட சிறந்த பொறியியல் மற்றும் இரண்டு மருத்துவக்கல்லூரிகளும் அடக்கம்! ஜி.டி.நாயுடு குழுமம் சில நல்ல தொழில் பயிற்சி கல்லூரிகளை நடத்திவருகிறது!
இந்த ஊரில் மட்டும் வீதிக்கு ஒருவர் கிரைண்டர், மிக்சி தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகளை நடத்துவதை பார்க்கலாம்! அது தவிர பல பெரும் தொழிற்சாலைகள் - லஷ்மி மெசின் வொர்க்ஸ், பிரிகால் (வாகன dashboard), ஸ்பார்க் பிளக், யு.எம்.எஸ். ரேடியோ, டெக்ஸ்டூல், விஸ்கோஸ், திருப்பூர் textiles), பஞ்சாலைகள் என வேலை வாய்ப்பிற்கு குறைவே இல்லாத ஊர்! இந்த காலத்தில் டெக்னாலஜி பார்க் வந்தவுடன் டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ என பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளன.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி! அதற்கேற்ப மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் (கரிகால் சோழனால் கட்டப்பட்டது!), பன்னாரி அம்மன், கோனியம்மன், மாசாணியம் மன், ஐயன்கோவில், பூண்டி , ஈச்சனாரி விநாயகர், தண்டு மாரியம்மன், வெள்ளியங்கிரி மலை, காரமடை கோவில் என பல புரதான சிறப்புள்ள கோவில்கள் இங்கே உள்ளன! வெள்ளி மற்றும் சனி அன்று இங்கு கூட்டம் அதிகம். எனக்கு பிடித்த கோவில் மருதமலை மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாம்பாள் கோவில்.
நான் பார்த்த/சுற்றிய/உணவருந்திய/மனதில் நின்ற சில இடங்கள் நேரு விளையாட்டரங்கம், வா.வு.சி. பூங்கா, டாப் ஸ்லிப்ஸ் (மலை), அட்டகட்டி மலைபகுதி, ஒப்பணக்கார வீதி (சகல விதமான பொருட்களும் கிடைக்கும்!), அன்னபூரணா உணவகம் (இட்லி சாம்பார்!), அங்கண்ணன் கடை (பிரியாணி), இராணி உணவகம், ஆர்யா பவன் (சில்லி பரோட்டா), சிக்கன் சம்பூர்ணா (என் அண்ணனின் நெருங்கிய நண்பர் கடை!), ஸ்ரீபதி தியேட்டர் (ஆங்கில படங்கள் காண - ஹலோ யாரது.. அந்த மாதிரி படம் அல்ல, குடும்பத்துடன் காணும் படங்கள்., இந்த திரையரங்கம் இன்னும் இருக்கிறதா என தெரியாது ), கே.ஜி. தியேட்டர் , சாய் பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் என பட்டியல் நீளும். தேன் மிட்டாய் (ஐந்து பைசா தான்!), சுகன்யா பேக்கரி பப்ஸ், டைமண்ட் சிப்ஸ், என்.எம்.பி பேக்கரி முட்டை பப்ஸ், தேங்காய் பன் இன்றும் நாக்கில் எச்சில் ஊறவைக்கும்! ஹிக்கீன்போதம்ஸ் புத்தக கடை, மணிகூண்டு கடைகள், டவுன் ஹால் துணி கடைகள், லஷ்மி காம்ப்ளெக்ஸ் (எண்பதில் பல மாடி கொண்ட உள் அரங்கு கடைகள்-mall. நான் முதன் முதலாக ஒலி நாடா வாங்கி பாடல்கள் பதிவு செய்தது இங்கே தான்!), ஹோப்ஸ் காலேஜ் டீ கடை, கரிவரதன் ரேஸ் மைதானம், ரேஸ் கோர்ஸ் சாலை (இங்கே தான் முதலில் ரோலர் ஸ்கேடிங் பழகினேன்) என பல இடங்கள் இன்னமும் கண் முன்னே நிற்கிறது!
கோவைக்கே உரித்தான லொள்ளு படித்தவர், படிக்காதவர், சிறியவர், பெரியவர் என எல்லோரிடமும் இருக்கும்! அதை சினிமாவில் கொண்டுவந்து வெற்றிகண்டனர் பல நடிகர்கள்! பாக்யராஜ், சத்யராஜ், மணிவண்ணன், சிவகுமார், நிழல்கள் ரவி, கோவை சரளா, கௌண்டமணி என கோவையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் ஏராளம்! தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (பின்னாளில் டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கம் 1900ஆம் ஆண்டு கட்டப்பட்டது ! இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்! சினிமா தவிர, உடுமலை நாராயணகவி, ஜி.டி.நாயுடு, F1 ரேஸ் வீரர் கரிவரதன், நரேன் கார்த்திகேயன் பல பிரபலங்கள் பிறந்த ஊர்.
வேலைக்காக மெட்ராஸ் செல்ல வேண்டியிருந்தது. வேறு ஒரு ஊருக்கு சென்ற பின் தான் நம்ம ஊரின் சிறப்புகள் நினைவிற்கு வரும்! சிறுவாணி தண்ணீர் குடித்தவருக்கு மெட்ராஸில் பிஸ்லேரி தண்ணீர் கூட குடிக்கமுடியாது! 'தோடா.. வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா.. சாவு கிராக்கி' என்று மெட்ராஸ் ஆட்டோகாரர் திட்டுடன் நாள் ஆரம்பமானால் உடனே கோவை மக்கள் நினைவில் வருவார்கள்! பேருந்து நிலையத்தை தாண்டி நிறுத்தாத ஓட்டுனர், அவரசரமாக ஓடி வரும் பெரியவருக்காக வண்டியை வழியில் நிறுத்தி ஏற்றிக்கொள்ளும் ஓட்டுனர் என அடுக்கிக்கொண்டு போகலாம்! ஒவ்வொரு முறை நான் பிறந்த ஊருக்கு விடுமுறையில் வரும்போதும் இந்த பண்புகள் மாறாமல் இருந்ததை எண்ணி வியந்திருக்கிறேன். அமெரிக்கா வந்தவுடன் எங்காவது ஒருவர் "சொல்லுங்'ணா" என பேசுவதை கேட்டால் உடனே போய் அவரிடம் கோவையில் எந்த இடம் என்று கேட்டதுண்டு! சரி, ரிச்மண்டில் கொங்கு தமிழ் மக்கள் யாராவது உண்டா?
சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா!
இந்த பதிவை ஒரு தொடர் பதிவாக்கினால் பல இடங்களை பற்றி (விக்கி'யில் இல்லாத பல தகவல்களை) தெரிந்து கொள்ளலாம் என தோன்றியது! ஆதலால் அடுத்து நான் பண்ருட்டியாரை (அவருக்கு தெரியும் யார் என்று! உங்களுக்கு தெரியாதென்றால் அடுத்த பதிவு வரும்வரை காத்திருக்க வேண்டும்!) இந்த பதிவின் தொடர்ச்சியாக அவரது ஊரைப் பற்றி எழுத அழைக்கிறேன்!