ஜப்பானியர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்களை வெகு காலமாக உலகப்போர் வரலாறு மூலம் பலரும் எடுத்துகாட்டியதுண்டு. இப்போது நம் காலத்தில் அதை மீண்டும் நேரடியாக உணர வேண்டியிருக்கும் என நான் நினைத்து பார்க்கவில்லை. கடந்த வாரம் வந்த 9.0 நிலநடுக்கமும் அதை தொடர்ந்து வந்த சுனாமியும் முடிந்த போது சரி இத்தோடு விட்டதே இயற்கை என்று நினைத்தால், அணு உலை வெடித்து அதை விட பல மடங்கு ஆபத்தான அணுக்கதிர்கள் வெளிபட்டுவிடும் அபாயம் நிலவுகிறது!
ஒரு பெரும் நகரத்தில் மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, நீர் மற்றும் உணவு தட்டுப்பாடு, இவை நடுவே உற்றார் உறவினரை தொலைத்து முகாமில் தங்கி இருக்கும் போதும் அம்மக்களின் முகத்தில் ஒரு அசாதாரண எழுச்சி தெரிகிறது. எவரும் ஆளும் கட்சியையோ அரசாங்கத்தையோ திட்டி கோஷம் போடவில்லை. நில நடுக்கம் வந்த போது அங்காடியிலிருந்து வெளியே ஓடிய மக்கள் அது முடிந்த பின் எடுத்த பொருளுக்கு பணம் கட்ட உள்ளே வந்து நின்றது வேறு எங்கும் நடக்காது. மீண்டும் திங்கள் அன்று எல்லோரும் (ரயில் மற்றும் எந்த போக்குவரத்தும் இல்லாதபோதும்) தம் வேலைக்கு திரும்பிவிட்டனர்!
வாகனங்கள் பெட்ரோல் போட நிற்கும் வரிசையில் ஒரு ஒழுங்கு/பொறுமை, இருக்கும் சின்ன உணவு பொட்டலத்தை முகம் தெரியாத பிறர்க்கு பகிர்ந்தளிக்கும் முதியவர், அங்காடிகள் இருக்கும் உணவு பொருட்களை அநியாய விலைக்கு விற்காமல் விலையை குறைத்து விற்பது, ஒரு இடத்தில கூட கடை சூறையாடல் போன்ற வன்முறை இல்லாதது, இந்த பகுதி மக்களுக்காக மொத்த ஜப்பானியர்களும் சிக்கனமாக எரி பொருள் செலவு செய்தல், ஒருவருக்கு ஒரு பாட்டில் குடிநீர் என்ற போதும் சண்டையிடாமல் வாங்கி செல்தல், சிலருக்கு நீர் திறந்துவிட்டது என்று சொன்ன பின்பும் சத்தம் ஏதும் இல்லாமல் வீடு திரும்புதல் என ஒழுக்கம், கட்டுப்பாடு, நாட்டுப்பற்று, மனித நேயமும் தாங்கள் என்றும் பின்பற்றுபவர்கள் என மீண்டும் நிரூபித்துள்ளனர்.
அணு உலை வெடித்து அதை விட பல மடங்கு ஆபத்தான அணுக்கதிர்கள் வெளிபட்டுவிடும் அபாயம் நிலவும் இடத்தில் முகம் தெரியாத (எந்த கட்டாயமும் இல்லாமல் தாமே முன் வந்த) ஐம்பது பேர் மட்டும் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த அணு உலை ஆலையில் தீயை அணைக்கவும், வெப்பத்தை கட்டுபடுத்தவும் மின்சாரம் இல்லாமல் உடல் உழைப்பில் வேலை செய்துகொண்டுள்ளார்கள்! இவர்கள் மீண்டும் திரும்பி வருவார்களா என தெரியாது, அப்படி வந்தாலும் பெரும் உடல் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் தம் நாட்டிற்கும் மக்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாதென தம்முயிரையும் கொடுக்கும் இவர்கள் தான் நிஜ சாமுராய்கள். பல நாட்கள் இவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது நடக்கும் ஒரு உரையாடல் - இது போல ஒரு ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியதே!
தம் மனைவி மக்களை அனுப்பிவிட்டு தான் மட்டும் இந்த ஆபத்தான இடத்தில இருக்க முடிவு செய்வதை என்னவென்று சொல்வது!
என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜப்பானிய பெண் இவை தனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை என சாதாரணமாக சொன்னார். "வீண் ஆர்ப்பாட்டமும், குழப்பமும் அந்த இடத்தை மேலும் மோசமாகவே ஆக்கிவிடும் அதனால் எல்லோரும் பொறுமையாகவே இருப்போம்! பொதுவாக எங்களுக்கு முதலில் நாடும், நாட்டு மக்களும், பிறகே தம் குடும்பம், ஆகவே இந்த ஐம்பது பேர் இதே மனநிலையில் தான் இருப்பார்கள்" என்றார். அமெரிக்கர் ஒருவர் சொன்னது "இங்கு நாங்கள் நாட்டை நேசிக்கிறோம். ஆனால் எமக்கு எது நல்லதோ அதை தான் செய்வோம். ஜப்பானியர் நாட்டை நேசிப்பவர்கள், நாட்டிற்கு எது நல்லதோ அதையே செய்வார்கள்.". ஒரு நாட்டில் வெகு சில மனித நேயமிக்கவர்களை காண்பது அதிசயமில்லை. பெரும்பாலானவர்கள் மனித நேயமிக்கவர் என்பது வேறு எங்கும் காண இயலாது.
தற்போது நம்மால் முடிந்தது அவர்களுக்காக பிரார்த்திப்பது
ம்
, முடிந்தால் http://www. redcross.org/ ரெட்கிராஸ் தளத்தில் (ஜப்பான் நில நடுக்கம் என்ற முதல் ஆப்ஷன் தெரிவு செய்யவும்) பண உதவி செய்வதுமே [::ஜாக்கிரதை:: - வேறு பல போலி இணைய தளங்கள் பணம் சேர்க்க உலவுகின்றன, செய்யும் உதவி பலனில்லாமல் போகலாம்]
ட்விட்டரில் தற்போது அதிகம் பேர் ட்விட் செய்யும் இந்த வாக்கியம் தான் எனக்கும் அவர்களுக்கு சொல்ல தோன்றியது.
"Ganbatte Nihon" - "Do your best, Japan. Never give up." ( மன்னிக்கவும் இதற்கு எனது தமிழாக்கம் தகுந்த நிறை செய்யவில்லை).