Wednesday, March 16, 2011

புகுஷிமாவின் ஐம்பது சாமுராய்கள், ஜப்பானியர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை!


ஜப்பானியர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்களை வெகு காலமாக உலகப்போர்  வரலாறு மூலம் பலரும் எடுத்துகாட்டியதுண்டு.  இப்போது நம் காலத்தில் அதை மீண்டும் நேரடியாக  உணர வேண்டியிருக்கும் என நான் நினைத்து பார்க்கவில்லை. கடந்த வாரம் வந்த 9.0 நிலநடுக்கமும் அதை தொடர்ந்து வந்த சுனாமியும் முடிந்த போது சரி இத்தோடு விட்டதே இயற்கை என்று நினைத்தால்,  அணு உலை வெடித்து அதை விட பல மடங்கு ஆபத்தான அணுக்கதிர்கள் வெளிபட்டுவிடும் அபாயம் நிலவுகிறது! 

ஒரு பெரும் நகரத்தில் மின்சாரம் இல்லை, எரிபொருள்  தட்டுப்பாடு, நீர் மற்றும் உணவு தட்டுப்பாடு, இவை நடுவே உற்றார் உறவினரை தொலைத்து முகாமில் தங்கி இருக்கும் போதும் அம்மக்களின் முகத்தில் ஒரு அசாதாரண எழுச்சி தெரிகிறது. எவரும் ஆளும் கட்சியையோ அரசாங்கத்தையோ திட்டி கோஷம் போடவில்லை. நில நடுக்கம் வந்த போது அங்காடியிலிருந்து வெளியே ஓடிய மக்கள் அது முடிந்த பின் எடுத்த பொருளுக்கு பணம் கட்ட  உள்ளே வந்து நின்றது வேறு எங்கும் நடக்காது. மீண்டும் திங்கள் அன்று எல்லோரும் (ரயில் மற்றும் எந்த போக்குவரத்தும் இல்லாதபோதும்) தம் வேலைக்கு திரும்பிவிட்டனர்! 

வாகனங்கள் பெட்ரோல் போட நிற்கும் வரிசையில் ஒரு ஒழுங்கு/பொறுமை, இருக்கும் சின்ன உணவு பொட்டலத்தை முகம் தெரியாத பிறர்க்கு பகிர்ந்தளிக்கும் முதியவர்,  அங்காடிகள் இருக்கும் உணவு பொருட்களை அநியாய விலைக்கு விற்காமல் விலையை குறைத்து விற்பது, ஒரு இடத்தில கூட கடை சூறையாடல் போன்ற வன்முறை இல்லாதது, இந்த பகுதி மக்களுக்காக மொத்த ஜப்பானியர்களும் சிக்கனமாக எரி பொருள் செலவு செய்தல், ஒருவருக்கு ஒரு பாட்டில் குடிநீர் என்ற போதும் சண்டையிடாமல் வாங்கி செல்தல், சிலருக்கு நீர் திறந்துவிட்டது என்று சொன்ன பின்பும் சத்தம் ஏதும் இல்லாமல் வீடு திரும்புதல் என ஒழுக்கம், கட்டுப்பாடு, நாட்டுப்பற்று, மனித நேயமும்  தாங்கள் என்றும் பின்பற்றுபவர்கள் என மீண்டும் நிரூபித்துள்ளனர். 


# புகுஷிமாவின் ஐம்பது சாமுராய்கள்

  அணு உலை வெடித்து அதை விட பல மடங்கு ஆபத்தான அணுக்கதிர்கள் வெளிபட்டுவிடும் அபாயம் நிலவும் இடத்தில் முகம் தெரியாத  (எந்த கட்டாயமும் இல்லாமல் தாமே முன் வந்த) ஐம்பது பேர் மட்டும் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த அணு உலை ஆலையில் தீயை அணைக்கவும், வெப்பத்தை கட்டுபடுத்தவும் மின்சாரம் இல்லாமல் உடல் உழைப்பில் வேலை செய்துகொண்டுள்ளார்கள்! இவர்கள் மீண்டும் திரும்பி வருவார்களா என தெரியாது, அப்படி வந்தாலும் பெரும் உடல் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் தம் நாட்டிற்கும் மக்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாதென தம்முயிரையும் கொடுக்கும் இவர்கள் தான் நிஜ சாமுராய்கள். பல நாட்கள் இவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது நடக்கும் ஒரு உரையாடல் - இது போல ஒரு ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியதே! 
தம் மனைவி மக்களை அனுப்பிவிட்டு தான் மட்டும் இந்த ஆபத்தான இடத்தில இருக்க முடிவு செய்வதை என்னவென்று சொல்வது!  

என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜப்பானிய பெண் இவை  தனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை என சாதாரணமாக சொன்னார்.  "வீண் ஆர்ப்பாட்டமும், குழப்பமும் அந்த இடத்தை மேலும் மோசமாகவே ஆக்கிவிடும் அதனால் எல்லோரும் பொறுமையாகவே இருப்போம்! பொதுவாக எங்களுக்கு முதலில்  நாடும், நாட்டு  மக்களும், பிறகே தம் குடும்பம், ஆகவே இந்த ஐம்பது பேர் இதே மனநிலையில் தான் இருப்பார்கள்" என்றார்.  அமெரிக்கர் ஒருவர் சொன்னது "இங்கு நாங்கள் நாட்டை நேசிக்கிறோம். ஆனால் எமக்கு எது நல்லதோ அதை தான் செய்வோம்.  ஜப்பானியர் நாட்டை நேசிப்பவர்கள், நாட்டிற்கு எது நல்லதோ அதையே செய்வார்கள்.". ஒரு நாட்டில் வெகு சில மனித நேயமிக்கவர்களை காண்பது அதிசயமில்லை. பெரும்பாலானவர்கள் மனித நேயமிக்கவர் என்பது வேறு எங்கும் காண இயலாது. 

தற்போது நம்மால் முடிந்தது அவர்களுக்காக பிரார்த்திப்பது
ம்
,  முடிந்தால் http://www.redcross.org/ ரெட்கிராஸ் தளத்தில் (ஜப்பான் நில நடுக்கம் என்ற முதல் ஆப்ஷன் தெரிவு செய்யவும்) பண உதவி செய்வதுமே [::ஜாக்கிரதை:: - வேறு பல போலி இணைய தளங்கள் பணம் சேர்க்க  உலவுகின்றன, செய்யும் உதவி பலனில்லாமல் போகலாம்]

 ட்விட்டரில் தற்போது அதிகம் பேர் ட்விட் செய்யும் இந்த வாக்கியம் தான் எனக்கும் அவர்களுக்கு சொல்ல தோன்றியது. 
 "Ganbatte Nihon"  - "Do your best, Japan. Never give up." ( மன்னிக்கவும் இதற்கு எனது தமிழாக்கம் தகுந்த நிறை செய்யவில்லை).

9 comments:

 1. ஜெயகாந்தன்,
  மிக மிக அருமையான பதிவு. நிஜமாகவே இப்படி தாய்நாட்டை அவர்கள் நேசிப்பது கண்டு எனக்கு மிக மிகப் பொறாமையாக இருக்கிறது. ஏன் எனக்கு இப்படிப் பட்ட நாட்டுப் பற்று இல்லை என்று, ஏன் இப்படிப் பட்ட மனிதர்கள் நமது நாட்டை ஆள்வதில்லை என்று. சில நாட்களாக கிறுக்க வேண்டாம் என்று வைராக்கியமாக இருந்த என்னை உங்களின் பதிவு இந்திய குறிப்பாகத் தமிழக அரசியலைப் பற்றியும் கொஞ்சம் அமெரிக்க அரசியலைப் பற்றியும் கிறுக்கத் தூண்டியிருக்கிறது.

  அது ஒரு புறமிருக்க, உங்கள் பதிவிலிருந்த உண்மை, அதாவது சொல்லப் பட்ட கருத்தில்லை சொல்லிய உங்களின் உணர்வு வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று.

  அணு உலையில் அணுக்கதிர்களின் பாதிப்பை நன்கு அறிந்தும் தனது தேசத்திற்காக தங்கள் வாழ்வை துச்சமென மதிக்கும் அந்த 50 பேர் மட்டும் இன்றி அந்த நாட்டிற்கே நாம் தலை வணங்க வேண்டும்.

  முன்பு ஒரு பதிவில் நான் குறிப்பிட்டது போல், சீனர்களின் அட்டகாசங்களை சமாளிக்க ஜப்பானியர்களால் மட்டுமே முடியும் அதற்காகவாவது அந்த நாடு இந்தத் இயற்கையின் சீற்றத்திலிருந்து மிக விரைவில் மீண்டு வரவேண்டும்.

  அன்புடன்,

  பித்தன்.

  ReplyDelete
 2. சரியான நேரத்தில் அருமையான பகிர்வு, ஜெயகாந்தன். ஜப்பானியர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. பதிவிற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. ஜெயகாந்தன்,
  மிக்க நன்றி. ஒரு உணர்ச்சி பூர்வமான உண்மை. இதை படிக்கும் ஒவ்வொருவரும் நாட்டின் தேசாபிமானிகள் ஆவார்.
  இதை நம் அன்பர்களும் நண்பர்களும் மற்றவர்களிடம் பகிர்ந்தாலே சில மாற்றங்களை கொண்டு வர முடியும்.
  உண்மையிலே அந்த சூழ்நிலையில் நம் குழந்தைகளையும், குடும்பத்தையும் மட்டுமே நினைக்கும் நம்மை விட
  திட நம்பிக்கையும், மனிதாபிமான உணர்வும் உடைய ஜப்பானியர் உயர்ந்தவர்.

  பிறர் பற்றி இழிவாகவும் தாழ்த்தியும் பேசுவதை விட இந்த மாதிரி உண்மை சம்பவங்கள் மனித வாழ்க்கையை உயர்த்தும்
  என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.

  வேதாந்தி

  ReplyDelete
 4. @பித்தன் பெருமான்: நன்றி பித்தரே! நேற்று இரவு இச்செய்தியை படித்து மனம் மிக கனமானது. வேலைக்கு சென்ற போது என் சக ஊழியர் (ஜப்பானிய பெண்) கூறிய சில கருத்துக்கள் என்னை இந்த பதிவை எழுதிட தூண்டியது.
  //ஏன் இப்படிப் பட்ட மனிதர்கள் நமது நாட்டை ஆள்வதில்லை என்று// - இருந்த ஒரு சிலரையும் நாம் இழந்துவிட்டோம். இந்த குணங்கள் நம் எல்லோரிடமும் இருந்தால் தானாக நல்ல தலைவன் அமைவான்.
  //சொல்லிய உங்களின் உணர்வு வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று.// - நன்றி, செய்திகளை படித்த போது சில வினாடிகள் கண்கள் பனித்தன, மனம் கனத்தது. இவ்வளவு நல்ல மனிதர்களுக்கு ஏன் கடவுள் மீண்டும் மீண்டும் துயரத்தையே தருகிறான்?
  @கவிநயா - நன்றி.
  @வேதாந்தி - நன்றி.
  //பிறர் பற்றி இழிவாகவும் தாழ்த்தியும் பேசுவதை விட இந்த மாதிரி உண்மை சம்பவங்கள் மனித வாழ்க்கையை உயர்த்தும்
  என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.// -- மிக்க உண்மை.

  ReplyDelete
 5. //என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜப்பானிய பெண் இவை தனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை என சாதாரணமாக சொன்னார்.//

  இத்தகைய நிலையிலும் ஜப்பானியர்கள் காட்டும் சமூக ஒழுங்கினைப் பற்றி வியந்த அமெரிக்க CNN டிவி செய்தியாளர், CNN டிவி ஜப்பான் நிருபரிடம் கேட்ட போது, ஜப்பான் நிருபரின் பதிலும் இதுதான். இவ்வாறு நடக்காமல் ஏதேனும் கலவரம் ஏற்பட்டால் அதுதான் ஜப்பானியர்கள் விசயத்தில் தனக்கு ஆச்சர்யம் தரும் என்றார். முற்றிலும் உண்மை. அவர்களுடைய 'சிவிக் சென்ஸ்' மகத்தானது.

  ReplyDelete
 6. நன்றி திரு. ஜெயகாந்தன் அவர்களே,
  படித்து முடித்ததும் நெஞ்சம் கணக்கிறது.
  இறைவா, அடுத்தபிறவியில் ஜப்பானியராகப்பிறக்க வேண்டும்.

  ReplyDelete
 7. படுமோசமான இன்றைய சூழ்நிலையில் கூட ஜப்பானியர்களின் தளராத நம்பிக்கையையும், நிதானமான அணுகுமுறையும், பதற்றப்படாமல் சக மனிதருக்கு உதவும் மனப் பக்குவமும், முக்கியமாக நாட்டிற்காக உயிரையே குடுக்க தயங்காத அவர்களின் நாட்டு பற்றும் என்னை அசர வைக்கிறது. இங்கு அனைவரும் கூறியது போல அவர்களிடமிருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அந்த நாட்டிற்கு என் பிரார்த்தனைகள்.

  அருமையான பதிவு ஜெயகாந்தன்.

  ReplyDelete
 8. நன்றி அனானி மற்றும் பாவிஸ் ப்ரோமஸ். மேலே வேதாந்தி சொன்னது போல //இதை நம் அன்பர்களும் நண்பர்களும் மற்றவர்களிடம் பகிர்ந்தாலே சில மாற்றங்களை கொண்டு வர முடியும்.// அடுத்த பிறவியில் மற்றவர்கள் இந்தியனாக பிறக்க வேண்டும் என நினைக்க வைக்கலாம்.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!