Showing posts with label கவிநயா. Show all posts
Showing posts with label கவிநயா. Show all posts

Monday, February 21, 2011

நாளின் நிறம்



பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.

கதிரவ னுடனே பிறந்த போதும்
கறுப்பில் முழுகிக் கிடக்கும் சில நாள்-
முகிலின் நடுவே பிறந்து வந்து
மழையாய்க் கண்ணீர் பொழியும் சில நாள்-
கீழை வானச் சிவப்பில் குளித்து
தகதக தகவென ஜொலிக்கும் சில நாள்-
பசுமை எழிலில் தானும் தோய்ந்து
புன்னகை மிளிர வலம்வரும் சில நாள்-
நீல வானைக் கையில் ஏந்தி
நேசக் கரத்தை நீட்டும் சில நாள்-
அமைதி யென்னும் விளக்கைக் கொண்டு
ஆனந்த ஒளியை ஊட்டும் சில நாள்-

ஒவ்வொரு நொடியும் பின்னிப் பிணைந்து
இணைந்தே நடக்கப் பிடிக்கும் சில நாள்-
முழுக்க முழுக்கத் தவிர்த்துத் தனியே
துவண்டு கிடக்க, கடக்கும் சிலநாள்-

பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.
வளரும் அன்பில் நிறங்கள் மாறும்
நாள் ஒவ்வொன்றிலும் நலமே சேரும்.

--கவிநயா

பி.கு. நாகு ரொம்ப வருத்தப்பட்டாரேன்னு, இப்போதான் எழுதிய கவிதை இங்கே... சுடச் சுட... :)

Tuesday, June 09, 2009

பட்டாம்பூச்சி


நான் என்ன பதிவு போடலாம்னு யோசிச்சி யோசிச்சி கண்ல பட்டாம்பூச்சி பறக்கற அளவு வந்ததை யாரோ கவிநயாகிட்ட சொல்லிட்டாங்க போல இருக்கு. கண்ல மட்டும் ஏன் பூச்சி பறக்கனும். பதிவு பதிவா பறக்கட்டும்னு எந்த புண்ணியவானோ ஆரம்பிச்ச தொடரில் சேர்ந்து அவங்க பறக்கவிட்ட பட்டாம்பூச்சி விருதுல என்னையும் சேத்துக்கிட்டாங்க. விருதுக்கு நன்றி கவிநயா! கவிநயா எந்த தலைப்பு எடுத்தாலும் கலக்கறவங்க. பதிவும் சரி, கவிதையும் சரி, பாடுகிறதுக்கு வசதியா பாடுறதும் சரி, நாட்டியத்திலும் சரி, பக்தியிலும் சரி - அவங்களுக்கு நிகர் அவங்கதான். அதனாலதான் அவங்களுக்கு ரெண்டு பேர் இந்தப் பட்டாம்பூச்சி விருதை கொடுத்திருக்காங்க....

நமக்கு அவங்க ரேஞ்சுக்கு எழுத முடியாட்டியும் கொஞ்சம் படம் காமிப்பமேன்னுதான் மேலே இருக்கற படம்.   வர்ஜினியா ட்வின் லேக் பார்க்கில் நானே எடுத்தது. டைகர் ஸ்வால்லோ டெய்ல் பட்டாம்பூச்சி. அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களில் காணப்படும் இந்தப் பட்டாம்பூச்சி வர்ஜினியா மற்றும் நான்கு மாநிலங்களுக்கு மாநிலப் பூச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நான் இந்தப் பட்டாம்பூச்சி விருதை இந்த மூனு பேருக்கு வழங்குகிறேன். முதலாவதாக எங்க கட்சியில் இருந்து போய் தனிக்கட்சி ஆரம்பிச்சி அப்பப்போ கூட்டணி தர்மத்தை காப்பாற்றும் சதங்கா!சுவையாக கவிதை, கதை எழுதுவதுஓவியம் வரைவது, வீட்டில் சமையலறை எந்த திசையில் இருக்கிறது என்று கூடதெரியாமல் சமையல் குறிப்பு எழுதுவது(சும்மானாச்சியும் சொன்னேன்) என்று பல கட்சிகள் நடத்தி கலக்கிக் கொண்டிருக்கிறார். மனுஷன் பல சுவையான சின்ன விஷயங்களை அவருடைய கவிதை மூலம் அப்படியே நம் கண் முன்னால் நிறுத்துவார். சுந்தரத் தெலுங்கினில் அவருடன் ஆணி பிடுங்கும் பெண்டிராகட்டும், நம்ம ஊர் டீக்கடை ஆகட்டும், ஓட்டு வீட்டு முற்றமாகட்டும், நம்ம ஊர் டவுன் பஸ்ஸாகட்டும்- இவருடைய எளிய, இனிய தமிழ் அப்படியே நம்முன் வந்து நிறுத்தும். நான் எழுதும் தமிழ் தாங்காமல் வேறு ஊருக்கு ஓடிவிட்டார். உங்க ஊர் 'பட்டாம்பூச்சி' குறித்து எழுதுங்க சதங்கா!

அடுத்தது செல்வராஜ்! அவருடைய கொங்குநாட்டுத் தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய எழுதிக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய எழுதும் செலுத்தலுக்கு ஏதோ கட்டுப்பாடு வந்திருக்கிறது :-) அதாங்க இவர் வேதிப் பொறியியலில் செலுத்தக் கட்டுறுத்தல் (Process Control) துறையில் பணி புரிபவர். தமிழ்மணத்தின் நிர்வாகத்தில் இவருடைய தொண்டும் உண்டு.  வேதிப் பொறியியலை விளக்கும் பதிவுகளும், அவருடைய மகள்கள் கேட்கும் கேள்விகள் குறித்த பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடித்தவை. இவருடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது மகள்களின் துவக்கப் பள்ளியில் இந்தியா குறித்து அவர் செய்த ஒரு வீடியோ. மழலையுடன் பெண்கள் இந்தியாவின் அருமை, பெருமைகளை விளக்க அழகாக இந்தியாவைப் படம் பிடித்திருந்தார். சுட்டி கிடைக்கவில்லை. நீங்கள் திரும்ப உங்க பதிவில் பட்டாம் பூச்சிகளைப் பறக்கவிடவேண்டும், செல்வராஜ்.

மூன்றாவதாக கானாப்பிரபா! "ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்" - அவரைப் பற்றிய அவரது விளக்கமே நெஞ்சில் ஒரு வலியைத் தரும்! எனக்கு இங்கே பல ஈழத்தோழர்கள் மூலமாக கொஞ்சம் ஈழப்பாரம்பரியம் குறித்துத் தெரிந்திருந்த போதிலும் ஈழத் தமிழரின் பாரம்பரியத்தை எனக்கு நிறைய அறிமுகப் படுத்தியவர் பிரபா. இணுவில், யாழில் வளர்ந்து இப்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். இவருடைய மடத்து வாசல் பிள்ளையாரடியும், றேடியோஸ்பதி பதிவும் மிகவும் பிரசித்தம்.

ஒருமுறை இவருடைய நல்லூர் கோவில் பதிவை எனது ஈழ நண்பர் வீட்டில் காண்பித்தேன். கண்கலங்க அப்படியே கணினி முன் சேவிக்கவிருந்தார்கள். நல்லூர் ஈழ மக்கள் வாழ்வில் எப்படி பிணைந்திருக்கிறது என்று எனக்கு உணர்த்தியது. அவருடைய பிள்ளையாரடி பதிவுகளில் எனக்கு ரொம்பவும் பிடித்தது கல்லடி வேலர் பதிவு.  சென்ற வாரம் பல ஈழப்பதிவர்களுடன் ஈழத்து முற்றம் ஆரம்பித்திருக்கிறார். ஈழத் தமிழின் இனிமையும், தூய்மையும் அனைவரும் அறிந்ததே. ஈழத்து பேச்சு வழக்குகளை நமக்கெல்லாம் விளக்குவதற்கான இந்த சேவையின் ஆரம்பமே முசுப்பாத்தியாக இருந்தது. ஈழத்து பட்டாம்பூச்சிகளைத் தொடர்ந்து பறக்கவிடவேண்டும், பிரபா!

மூவருக்கும் வாழ்த்துகள்!
நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

Wednesday, April 30, 2008

காற்றுக்குமிழி

காற்றுக்குமிழி - தொடாமல் பார்க்கவும்! (தொட்டா உடைஞ்சிடும்ல, அதுக்கு சொன்னேன்)

http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_30.html

Saturday, April 26, 2008

சிறுகதை(கள்)

"இடுக்கண் வருங்கால்...", மற்றும் "அவளைப் போல்..." (இது சிலர் முன்னாடியே படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு நினைவுபடுத்தினதுக்கு நாகுவுக்கு நன்றி!)

http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_26.html
http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_23.html

Thursday, April 17, 2008

வசந்தம்

மலர்கள் மலர்ந்திட
மகரந்தம் சிந்திட
புவிமகள் மீதினில்
பொன்போர்வை போர்த்திட
வசந்தம் வந்ததிங்கே!

வந்துதான் பாருங்களேன்! :)
http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_17.html

Sunday, April 13, 2008

அருவி

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! சித்திரை வெயிலுக்கு இதமா அருவில வந்து கொஞ்சம் நனைஞ்சுட்டு போலாமே :)

Monday, April 07, 2008

பெண்

நீங்க ஆணா இருந்தாலும் இதைப் படிக்கலாம்; தப்பில்லை.

Monday, March 31, 2008

என் கண்மணி

நானே எப்பவாச்சும்தான் என் வலைப்பூ பக்கம் போறேன்; ஆனா நீங்களெல்லாம் எப்பவுமே (சதங்கா மட்டும் போனாப் போகுதுன்னு... நன்றி, சதங்கா! :) அந்தப் பக்கம் வரதில்லை. இதான் என் கடைசி முயற்சி, உங்களை வர வைக்க...

என் கண்மணி

Tuesday, March 25, 2008

என்று வருவான்?

கண்ணனுக்காக காத்திருக்கும் ராதைக்கு கொஞ்சம் வந்து ஆறுதல் சொல்லிட்டு போங்க :)

http://kavinaya.blogspot.com/2008/03/blog-post_25.html

Friday, March 14, 2008

என் தமிழ்!

என்தமிழ் என்கின்ற போதில்
என்உயரம்ஓர் அடியேனும் கூடும்
தீந்தமிழ்பேர் சொன்னால் நாவில்
தீஞ்சுவை தேனாறாய் ஓடும்

என்றும் பதினாறவள் இளமை
அவள் அழகைப்பாடுவதே இனிமை
அள்ளக் குறையாத ஊற்று
அவள்பெருமைக் கேதிங்கே மாற்று

காற்றாகி என்னுள்ளே படர்ந்தாள்
பெருங்கடலாகி இதயத்தில் விரிந்தாள்
உள்ளங்கவர் கள்வன்போலே - என்
உதிரத்தி லேகலந்து நிறைந்தாள்

உச்சிமுகர்கின்ற தாய்போல் - உடைந்த
உயிருக்குத் தாலாட்டும் அவளே
என்னை மறந்தாலும் மறப்பேன் - ஆயின்
என்தமிழை மறப்பேனோநானே!


--கவிநயா

Tuesday, March 04, 2008

சின்னக் கண்மணி…

பட்டுப்பா வாடை கட்டி
பச்ச மரு தாணி வச்சு
பட்டுக் கன்னம் பளபளங்க
பச் சரிசிப் பல்லு மின்ன

சின்னப் பெற நெத்தியிலே
செந் தூரப் பொட் டொளிர
வன்னப் பிஞ்சுப் பாதத்துல
வெள்ளி மணிக் கொலு சொலிக்க

சுத்திஜொ லிக்கும் கண்ணு
சூரி யனத் தோக்கடிக்க
கத்திக் கல கலக்கும்
கைவளையல் கதைகள் பேச

தத்தி நடை பழகும்
தங்கப் பொண்ணே தங்கப் பொண்ணே
கொத்திக்கொத்தி என் மனச
கொள்ளை கொண்ட சின்னப் பொண்ணே

மோகமுல்லச் சிரிப்பக் கண்டு
சோகந் தொலஞ்சு போச்சுதடி
பால்நெலவின் குளிர்ச்சி யிலே
பார மெல்லாங் கரைஞ்சதடி

ஒன்னழகப் பாக்கையிலே
உள்ளம் உருகிப் போகுதடி
வாரி ஒன்னக் கட்டிக்கத்தான்
வாஞ்ச மீற ஏங்குதடி


--கவிநயா

Friday, February 22, 2008

பதங்களின் சரசம்

அண்ட சராசரம் அனைத்தும் உறைய!
ஆடிய பதங்களில் ஆனந்தம் துலங்க!

இருகரு விழிகளில் கனவுகள் விரிய!
நவரசம் கண்டு நானிலம் மயங்க!

காற்றினில் கால்கள் கவிதைகள் எழுத!
காற்சதங்கை ஒலி பாடல்கள் இசைக்க!

கூந்தல் கலைந்து வானம் அளக்க!
அபிநயம் பார்த்து அகிலம் வியக்க!

சுவாசம் சற்றே வேகம் கூட்ட!
வியர்வை கங்கை ஆறாய் ஓட!

நினைவுகள் யாவும் நிர்மலமாக!
உணர்வுகள் மறைந்து உலகம் ஜொலிக்க!

ஆடல் புரிதல் ஆனந்தமன்றோ!!
பதங்களின் சரசம் பரவசமன்றோ!!


--கவிநயா

Wednesday, February 13, 2008

வேண்டும்!

நதியோடு ஜதிபோட்டு நான் ஆட வேண்டும் ;
நட்சத்திரப் பூப்பறித்து நான் சூட வேண்டும் !
வான் நிலவைக் கைவிளக்காய் நான் ஏந்த வேண்டும் ;
வானவில்என் வாசலிலே தோரணமாய் வேண்டும் !

கதிரவன்என் கவிதையில்தன் கனல் மறக்க வேண்டும் - நான்
காற்றாகிக் குழல் நுழைந்து மனம் மயக்க வேண்டும் !
மணம்வீசும் மலராகி நான் சிரிக்க வேண்டும் - நான்
ரீங்கார வண்டாகித் தேன் குடிக்க வேண்டும் !

சின்னச்சிற் றோடையாய்ச் சிலுசிலுக்க வேண்டும் - நான்
புத்தம்புது வெள்ளமாய்ப் புவி தழுவ வேண்டும் !
வன்னச்சிட்டுக் குருவியாய்ச் சிறகடிக்க வேண்டும் - நான்
சிறகடித்து மனம்விரித்து வான் அளக்க வேண்டும் !

பாறைக்குள் பச்சையாய் நான் துளிர்க்க வேண்டும் - நான்
பாசமுடன் உயிர்கள் தமை நேசிக்க வேண்டும் !
அன்பென்னும் ஆதார ஸ்ருதியாக வேண்டும் - நான்
ஆசைகளைக் கடந்துலகில் அறம் வளர்க்க வேண்டும் !

--கவிநயா

Friday, June 08, 2007

கவிநயாவின் பரிசுப் பெற்ற காட்சிக்கவிதை

அன்புடன் கவிதைப் போட்டியில் கவிநயாவின் காட்சிக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது. கவிநயாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!


அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - காட்சிக்கவிதைப் பிரிவு
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
===========================================================

ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 1
காட்சி வடிவம் இறுதியில் தரப்பட்டுள்ளது

அருவி

உலகத்து மாந்தர்களின்
உள்ளத்து அன்பெல்லாம்
ஒன்றாகத் திரண்டு வந்து
அருவியெனப் பொழிந்ததுவோ!

அன்புக்கு அளவில்லை;
அருவிக்கோ அணையில்லை!

கட்டுப்பாடின்றித் துள்ளும்
காட்டாற்று வெள்ளம்போல்
அட்டகாசமாய்ச் சிரித்து
ஆர்ப்பாட்டமாய் விழுந்து
ஆசையுடன் புவி தழுவும்
அற்புதமும் இதுதானோ!

வைரக் கற்கள் தம்மை
வஞ்சனை யின்றிவாரி
வழியெங்கும் இறைத்ததுபோல்
துளித்துளியாய் துள்ளுகின்ற
நீர்த்துளியின் உயிரினுள்ளே
காதலுடன் கதிர்நிறைத்து
கண்மலரக் கதிரவன்தன்
ஒளிசிதறச் செய்தானோ!

பரவசமாய்ச் சரசமிடும்
பாதங்கள் பண்ணிசைக்க
நவரசங்கள் காட்டுகின்ற
நர்த்தனப் பெண்களைப் போல்
பல வண்ண ஆடைகட்டி
மனங் கவர ஒளிவீசி
ஆலோலப் பாட்டிசைத்து
ஆனந்த நடனமிட்டு
கற்பனைக்கும் எட்டாமல்
கருத்தினைக் கவர்ந்து கொள்ளும்
இயற்கைத் தேவதையின்
இன்னெழிலும் இதுதானோ!

- கவிநயா என்றழைக்கப்படும் மீனா
ரிச்மண்ட், அமெரிக்கா

Wednesday, May 02, 2007

அமைதி

கால வீசி நடக்கும் போது
காத்து கூந்தல் கோதும் போது
தென்றல் கொஞ்சம் தீண்டும் போது
வெள்ளி நெலவு காயும் போது
வானில் மீன்கண் சிமிட்டும் போது
வசந்த மரங்கள் அலையும் போது
மனசில் அன்பு மலரும் போது
நேசம் நெஞ்சில் நெறயும் போது
அமைதி வந்து எட்டிப் பாக்கும்
இதயக் கதவத் தட்டிப் பாக்கும்!

--கவிநயா

Tuesday, April 24, 2007

அன்பு

வறண்ட நிலத்தின் மேல்
வான் பொழியும் பூச்சொரியல்
கனத்த மனதிற்கு
மருந்திடும் மென் மயிலிறகு
துன்பத்தின் சாயலையும்
துரத்தி விடும் தேவதை
இன்பத்தை வரவழைத்து
இதம் தரும் இன்னிசை
சுட்டெரிக்கும் வெயிலினிலே
சுகந் தரும் ஆலமரம்
அலைக்கழியும் மனதிற்கு
அமைதி தரும் நந்தவனம்

அன்பு –
அது ஒரு அதிசயம்
அன்பு ஒரு அக்ஷய பாத்திரம்
எடுக்க எடுக்க நிறையும்
கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!

--கவிநயா

Sunday, April 22, 2007

மனசு

வானம் போல விரிஞ்சிருக்கும்
வண்டு போலச் சுத்தி வரும்
கானங் கேட்டுக் கனிஞ்சிருக்கும்
கனவுக் குள்ள கத படிக்கும்

வெள் ளந்திப் புள்ள போல
சொல்லுக் கேக்க வாடிப் போகும்
மறுகி உருகி மாஞ்சு போகும்
மாத்துத் தேடி ஏங்கிப் போகும்

அன்பக் கண்டா அசந்து போகும்
ஆவல் மீற ஆட்டம் போடும்
காட்டு மல்லிப் பூவப் போல
காடும் மேடும் வாசம் வீசும்

--கவிநயா

Wednesday, April 18, 2007

வெர்ஜீனியா டெக் சம்பவத்தில் உயிரிழந்தோருக்காக பிரார்த்தனைகள்

வெர்ஜீனியா டெக் சம்பவத்தில் உயிரிழந்தோருக்காக.....அவர்தம் ஆத்மா சாந்தியடையவும், அவர் குடும்பத்தோர் இந்தத் துயரத்தை எதிர்கொள்ளத் தேவையான மனதைரியத்தை இறைவன் அவர்களுக்கு அளிக்கவும்...


கண்களிலே கனவுகளுடன்
கல்லூரியில் கால்வைத்தாய்
ஏதோஓர் கொடுமைக்கு
எதனாலோ பலியானாய்

உயிர்விலகும் நேரத்தில்
உன்மனதின் நினைவெதுவோ
உன்வாழ்வின் லட்சியங்கள்
(உன்)உயிருடனே புதைந்தனவோ

அன்பூற்றி உனைவளர்த்த
அன்னை என்செய்வாளோ
அரவணைத்துப் போற்றிய
உன்தந்தை என்செய்வானோ

தருமங்கள் நியாயங்கள்
புரியாத மாயங்கள்
ஏதேதோ கேள்விகள்
விடைதெரியா வினோதங்கள்

மிதமிஞ்சிய அன்பாலே
இறைவன் உன்னைச்
சேர்த்துக் கொண்டான்
என்றே நம்பிடுவோம்
நம்பித் தொழுதிடுவோம்


பிரார்த்தனைகளுடன்...
கவிநயா.

Tuesday, March 13, 2007

கவிதைப் போட்டி

கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி! இதனால் அறிவிக்கப்படுவது யாதெனில் 'அன்புடன்' குழுமம், தன் இரண்டாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு, சிறந்த பரிசுகளுடன், கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. விவரங்களுக்கு:

http://priyan4u.blogspot.com/2007/03/2.html

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

அன்புடன்,
கவிநயா.

Friday, December 08, 2006

நிறம்

அன்னை வயிற்றின் கதகதப்பில்
அன்புக் குடிலின் அரவணைப்பில்
கண்கள் மூடி அருந்தவத்தில்
காத்திருந்தாய், அன்று நிறங்களில்லை

ஈரைந்து மாதங்கள் கரைந்த பின்னே
உறக்கம் கலைந்து எழுந்த பின்னே
உலகைக் கண்ணால் கண்ட பின்னே
உன் சிரிப்பினில் மலர்ந்தது வெள்ளை நிறம்

தத்தித் தவழ்ந்து நடை பயின்றாய்
மழலைப் பேச்சால் மயங்க வைத்தாய்
கள்ளம் இல்லாப் பிள்ளை நெஞ்சில்
இன்னும் இருந்தது வெள்ளை நிறம்

செல்லக் கோபம் காட்டக் கற்றாய்
ஒன்று கிடைக்காவிடில் பிடிவாதம் செய்தாய்
கண்ணீர் சிந்தி அடம்பிடிக்கையிலே
லேசாய் மாறுது வெள்ளை நிறம்

பாகுபாடுகள் பார்க்கக் கற்றாய்
ஏற்றத் தாழ்வையும் ஏற்றுக் கொண்டாய்
நம்பிக்கையின்றி வாழக் கற்றாய்
அன்பைக்கூட அளந்து வைத்தாய்
ஆளைப் பார்த்து ஆடை பார்த்து
ஆதாயம் பார்த்து நடக்கும் பொழுதினில்
தானாய் மறையுது வெள்ளை நிறம்…

--கவிநயா