முதலில் அந்த விளம்பரத்தைப் படித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. "நிறைய நண்பர்கள் தொந்தரவா? ஒரு நண்பர்கூட இல்லாமல் செய்கிறோம். அல்லது உங்கள் கட்டணம் வாபஸ்!" அந்த மாதிரி ஒரு விளம்பரத்தை நான் பார்த்ததே இல்லை. எனக்கு வெகு சிலரே நண்பர்கள் இருந்தாலும், அவர்களில் ஒரு சிலரை கழட்டிவிடலாம்தான். ஆனாலும் ஒரு நண்பர்கூட இல்லாமல் செய்யும் வழி என்ன என்பதை பார்க்க மிக ஆவலாக இருந்தது. பார்த்துவிட்டு வரலாம் என்று போனேன்.
விளம்பரத்தில் இருந்த முகவரியில் போய் நின்றால், அது ஒரு வீடு. சிரித்த முகத்துடன் வந்து என்னை உள்ளே வரவேற்றார் மைக்கேல். இப்படி இனிய சுபாவம் கொண்ட மனிதரா நண்பர்களைத் தொலைக்க வழி சொல்லப் போகிறார் என்ற கேள்வியோடு உள்ளே போனேன். மைக்கேல் அவருடைய நண்பர்கள் குறைக்கும் முறையை விளக்க ஆரம்பித்தார். முதலில் அந்த முறையை எப்படி கண்டுபிடித்தார் என்று சொன்னார். பல மாதங்களுக்கு முன்னால் மைக்கேல் பல்பொருள் அங்காடியில் பண்டம் வாங்கும்போது ஒரு நபரை சந்தித்தாராம். அந்த ஆள் மைக்கேலுக்கு நிறைய சம்பாதிக்கும் ஒரு வியாபாரத்தை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனானாம். அந்த வியாபாரத்தை சில வருடங்கள் செய்தாலே போதும், நிறைய பணம் சம்பாதித்து வேலையெல்லாம் விட்டுவிட்டு நிம்மதியாக இருக்கலாமாம். இப்படியாக ஆரம்பித்து மெக்டோனால்ட் நிறுவனர் உதாரணம், ரெசிடுவல் இன்கம், உங்கள் கீழே உங்களை பணக்காரர் ஆக்குவதே குறிக்கோளாய் ஒரு கூட்டம், உங்கள் உள்ளே தூங்கிக்கிடக்கும் உங்கள் ஆற்றல், தன்னம்பிக்கை, ஊக்கம், என்று நீட்டி முழக்க, மைக்கேல் எப்படியோ தப்பித்துக் கொண்டு ஓடினாராம்.
அப்படி தப்பிக்குமுன்னால் மைக்கேலிடம் இரண்டு வீடியோ டேப்புகள் வேறு - இந்த வியாபாரத்தை மேலும் விளக்குவதற்கு. அந்த டேப்புகளில் மேலும் ஒரு விஷயமும் இல்லை என்றார் மைக்கேல். நிறைய தம்பதிகள் இந்த வியாபாரத்தை செய்ததனால் பெரிய மாளிகையில் வாழ்ந்துகொண்டு விடுமுறைக்கு பல ஊர்கள் சுற்றுவது போன்ற படங்கள்தானாம் அந்த வீடியோ முழுக்க. அதிலிருந்து ஆரம்பித்தது மைக்கேலின் ஓடி ஒளியும் ஆட்டம். முதலில் யார் தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள் என்று காண்பிக்கும் சாதனம் வாங்கினார் மைக்கேல். பிறகு பல்பொருள் அங்காடிகளிலோ உணவகங்களிலோ அந்த நபர் தெரிகிறாரா என்று சுற்றுமுற்றும் பார்ப்பாராம். எங்கேயாவது அந்த ஆள் தெரிந்தால் 'கப்'பென்று பதுங்குவாராம். அவருடைய வாழ்க்கையே அந்த நபரால் மாறிவிட்டதாம். தொலைபேசி ஒலித்தால் நடுங்குவது, பக்கத்து ஊருக்குப் போய் பண்டங்கள் வாங்குவது என்று போலீஸில் தப்பித்த கைதி மாதிரி வாழ்ந்தேன் என்றார். ஒரு முறை வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது தொலைபேசி மணியடித்தது. அந்த நபரின் எண் என்று தெரிந்து எடுக்காமல் விட்டுவிட்டாராம். அந்த மணி நாராசமாய் ஒலித்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு இந்த மாதிரி யோசனை வந்தது.
அவருடைய இந்த அனுபவங்களை விருப்பு,வெறுப்பின்றி ஆராய்ந்தாராம். அந்த நபரின் உத்திகள், அதனால் இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாவற்றையும் அலசியவுடன் அவருடைய யோசனை கொஞ்சம் தெளிவாக ஆரம்பித்தது. மறுநாள் அவருடைய நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்து விரைவில் பணக்காரர் ஆவது எப்படி என்று விளக்க ஆரம்பித்தாராம். அவருடைய பிரசங்கத்தில்
அந்த நபரைவிட ஒரு சில படி மேலே போய் கழுத்தில் ரத்தம் கொட்டுமளவு மனிதர் ராவு ராவு என்று ராவினாராம்.
மறுநாளில் இருந்து ஆரம்பித்தது அவருடைய பரிசோதனையின் விளைவு. அவருடைய நண்பர்களைத் தொடர்பு கொள்ள தினமும் முயன்றாராம். ஒருவர் கூட சிக்கவில்லை. அவருடைய ஐடியா வேலை செய்ய ஆரம்பித்ததில் அவருக்கு கொள்ளை மகிழ்ச்சி. உள்ளூர் போன் கம்பெனி அவருக்கு ஒரு பரிசு அனுப்பியதாம். இவரால் தொலைபேசி எண் காண்பிக்கும் சாதனம் அமோக விற்பனையாம் ஊரில்.
அப்படியே படிப்படியாக அவரது செயல்முறையை மேம்படுத்தி ஆட்களையே காணாமல் போவது வரை கொண்டு வந்திருக்கிறேன் இப்போது என்றார் மைக்கேல். என்னால் நம்ப முடியவில்லை. சரி வா, நீயே உன் கண்களால் பார்த்துக் கொள் என்று வீட்டுக்கு பின்புறம் அழைத்துக் கொண்டு போனார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் தோட்டத்தில் ஏதோ வேலையாக இருந்தார். மைக்கேல் அவரை பெயர் சொல்லி அழைத்ததுதான். அடுத்த விநாடி அந்த ஆள் மாயமாய் மறைந்தார். நிஜமாகவே காணோம். சினிமாவில் வருவதுபோல் ஒரு 'உஷ்' இல்லை, ஒரு 'ஜிங்' இல்லை. ஒரு விநாடி இருந்தார். மறுவிநாடி காணோம். அவ்வளவுதான்.
எனக்கு அப்படியும் சந்தேகம், இது ஏதோ மனோவசியமா என்ன என்று. இன்னும் சிலமுறை செய்து காண்பியுங்கள் என்றேன். மைக்கேல் என்னை ஜேம்ஸ் நதிப்பக்கம் அழைத்துக் கொண்டு போனார். பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடியில் நிறைய செய்து காண்பிக்கலாம். ஆனால் இப்பொதெல்லாம் அவரை உள்ளே விடுவதில்லையாம். நதிக்கறையில் நிறைய பேர் நடப்பதும், ஓட்டமுமாக இருந்தார்கள். சிலர் ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். யாராவது தெரிந்தவர்கள் இருக்கிரார்களா என்று நோட்டம் விட்டுக்கொண்டே போனார் மைக்கேல். அவருடைய சக ஊழியர் ஒருவர் கயாக் படகில் வந்து கொண்டிருந்தார். மைக்கேல் கூப்பிட்டு கையை அசைத்தார். அவ்வளவுதான். மறுவிநாடி வெறும் கயாக் மட்டும் தண்ணீரில் ஆடிக் கொண்டிருந்தது.
வீட்டுக்குத் திரும்பும் வழியில் எனக்கு ஒரு சந்தேகம். அப்படி மாயமாய் மறையும் மனிதர்கள் திரும்ப வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டேன். மைக்கேல் சிரித்துக் கொண்டே சொன்னார், "யாருக்குத் தெரியும்....."