Showing posts with label நந்தனார். Show all posts
Showing posts with label நந்தனார். Show all posts

Thursday, August 27, 2009

ஆபீஸில் தூங்கலாமா?

"சபாபதிக்கு வேறொரு தெய்வம் சமானமாகுமோ" என்ற பாடல் தமிழ்நாட்டில் எல்லா சங்கீத மேடைகளிலும் கேட்கலாம்.

"மீசை நரைத்த தாத்தா உனக்கு ஆசை நரைக்கலையே" என்ற கேலி பாட்டு தெருக்கூத்துகளில் அடிக்கடி ஓலிக்கும். இப்படி சங்கீத மேடையிலும், தெருக்கூத்துகளில் பாடும் பாடல்களையும் எழுதியவர் ஒருவர்தான். அவர்தான் கோபலகிருஷ்ண பாரதி.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனைகளில்தான் இந்த பாடல்கள் இடம் பெற்றன. அவர் எழுதிய பாடல்களையும் மற்ற புராணங்களையும், பாடியும் பேசியும் பிழைப்பு நடத்திய ஏழை பிராமணர் அவர். இரவு உணவு வேளைக்கு பிறகு நடைபெறும் அவருடைய கதை பிரசங்கத்தை கேட்க அந்த காலத்தில் நல்ல கூட்டம் கூடும்.

பிரெஞ்சு காரர்கள் ஆதிக்கத்தில் இருந்த காரைக்காலுக்கு அருகில், பிரிட்டிஷார் பொறுப்பில் இருந்த தஞ்சை மாவட்ட கிராமம் ஒன்றில் கோபலகிருஷ்ண பாரதியின் தொடர்க்கதை பிரசங்கம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. காரைக்காலில் உள்ள french agent அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த 2 குமாஸ்தாக்கள் பாரதியின் பேச்சை இரவு வெகு நேரம் கேட்டுவிட்டு, விடியும் முன்பு காரைக்காலுக்கு திரும்பி போனார்கள்.

மறுநாள் ஆபீஸுக்கு வந்த இரண்டு குமாஸ்தாக்களுக்கும் நல்ல அசதி. வேலை செய்ய முடிய வில்லை. இரவில் கண் விழித்தாலும் நடந்த களைப்பும் அவர்களை கொஞ்சம் கண் மூட செய்து விட்டது. கொஞ்சம் என்ன, நல்ல தூக்கம்தான் !! அந்த சமயம் பார்த்து பிரெஞ்சு அரசாங்க அதிகாரி ( மாவட்ட கலெக்டருக்கு சமமானவர்) ஆபீஸுக்கு வந்து விட்டார். தூங்கி கொண்டு இருந்தவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குமாஸ்தாவை அனுப்பி அந்த இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு வரச் செய்தார். கையை கட்டி கொண்டு நடுங்கியபடி நின்றார்கள். அதிகாரியினுடைய மிரட்டலை கண்டு, பயந்து, இரவில் கதை கேட்க போனதையும் தூக்கம் இல்லாமல் சில மைல் தூரம் நடந்து வந்த அசதியில் தூங்கி விட்டதாக உண்மையை சொன்னார்கள். "யார் கதை சொன்னார்" என்று அதிகாரி கேட்டார். கோபலகிருஷ்ண பாரதி என்று பதில் அளித்தார்கள்.

அவ்வளவுதான்.

அதிகாரியின் முகத்தில் இப்பொழுது கோபம் போயி ஆச்சரியம். "காசே" என்ற அந்த அதிகாரி கோபலகிருஷ்ண பாரதியை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியும். அதுமட்டும் அல்ல அவருக்கு தமிழ் மொழி மீது பற்றும் உண்டு.

பாரதியின் கதை சொல்லும் திறமை பற்றி கேள்விப்பட்டிருப்பதாகவும், தானும் அவருடைய கதை பிரசங்கத்தை கேட்க வேண்டும் என்று சொன்னார்.

கதை பிரசங்கம் நடக்கும் இடம் மற்ற விவரங்களை கேட்டறிந்தார். பாரதியின் கதை நிகழ்ச்சி தொடர்ந்து சில நாட்களுக்கு அங்கே நடக்கும் என்ற விவரங்களையும் அதிகாரியிடம் அவர்கள் சொன்னார்கள். மறுநாள் இரவு அந்த இரண்டு குமாஸ்தாக்களோடும் வேறு சில பாதுகாப்போடும் அந்த அதிகாரி இரவு நேர இருட்டில் தன்னை மறைத்துக்கொள்ளும் அளவுக்கு வேஷம் போட்டு, பாரதியின் கதை நிகழ்ச்சி நடக்கும் கிராமத்துக்கு சென்றார். வெகு தூரத்தில் நின்று நிகழ்ச்சியை கேட்டு விட்டு காரைக்காலுக்கு இரவிலேயே திரும்பினார். பிரெஞ்சு அதிகாரி ஆன அவர் பிரிட்டிஷ் நிர்வாக பகுதிக்குள் நுழைவது பற்றி  தயக்கம் இருந்ததால் தன்னை அப்படி மறைத்து கொண்டார்.

சில நாட்களுக்கு பிறகு கோபலகிருஷ்ண பாரதியை காரைக்காலுக்கு வரவழைத்து அவர் எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் பற்றி மேலும் விவரங்கள் கேட்டறிந்தார் அந்த பிரெஞ்சு அதிகாரி. அந்த காலத்தில் புத்தகங்களை அச்சிடுவது மிகுந்த செலவு பிடிக்கும் ஒரு விஷயம். ஆகையால் பாரதி தன்னுடைய நூல்களை ஓலைச் சுவடியில்தான் எழுதி வைத்திருந்தார்.

நந்தனார் சரித்திர கீர்த்தனையை புத்தகமாக வெளியிடலாமே என்று அந்த அதிகாரி கேட்டார். தன்னுடைய வறுமை நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை என்று பாரதி கூறினார். சில மாதங்களுக்கு பிறகு அந்த பிரெஞ்சு அதிகாரி காசே கொடுத்த நிதி உதவியைக்கொண்டு நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் புத்தகமாக வெளிவந்தது.

இப்பொழுது சொல்லுங்கள். ஆபீஸில் தூங்கினால் நல்லதா? கேட்டதா?

எப்படியோ!! இரண்டு பேர் தூங்கியதால் தமிழுக்கு ஒரு நல்லது நடந்தது.

மு. கோபாலகிருஷ்ணன்
(அரவிந்தின் தந்தை)