உலகத்துல இப்படி வாழைப் படத்துல ஊசி ஏத்தற மாதிரி எழுதின ஆளுக வேற யாரும் இருக்காங்களான்னு தெரியலை என்றபடியே வந்தான்.
வாடா செல்வம், என்ன ஒரு மாதிரியா இருக்கே? எதும் சிக்கலா?
ப்ச்..
அதெல்லாம் ஒன்னுமில்லை. என் மதிப்புக்குரிய ஆசிரியர் ஒருத்தர் தவறிட்டார். அதான் கொஞ்சம் மனசு கனமா இருக்கு.
யாரு? எனக்குத் தெரியுமா?
உனக்குத்
தெரியாது. என் பள்ளிகால ஆசிரியர். என்னை நன்முறையில் பாதித்த
பெருமகனார்களில் அவரும் ஒருவர். வயது முதிர்ந்து இயற்கை எய்திட்டார்
சமீபத்தில். நேற்று தான் எனக்குத் தெரிய வந்தது; அதான் கொஞ்சம் மனம் வாடி
இருக்கேன்.
அவரையா வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி எழுதறவர்ன்னு சொல்லிகிட்டே வந்தே?
அவரை
இல்லை. வள்ளுவரைச் சொன்னேன். ஆசிரியர் தவறியதைப் பற்றி யோசிக்கையில் ஒரு
குறள் நினைவுக்கு வந்துச்சு. எதுவும் நிலையில்லை எல்லாம் ஒரு நாள்
போய்டும், போய்டுவோம் என்ற நிலையாமையைச் சொல்ற அதிகாரத்தில் வரும் குறள்.
வள்ளுவரின் நாசூக்கும், anguish என்று ஆங்கிலத்தில் நாம் சொல்லும்
மனச்சோர்வும் வெளிப்படும் குறள் அது. நிலையற்ற தன்மைதான் இயல்பு, இயற்கை,
உலகம். அந்த இயற்கையை, உலகத்தை வஞ்சப்புகழ்ச்சியாக குத்திக் காட்டுகிறார்
என்றும் சொல்வாங்க.
இன்னொரு பார்வையாக,
எவ்வளவு பெரிய
அறிவாளியாக, நல்லவராக இருப்பினும் நாளைக்கு இருப்போம் என்ற உறுதி
யாருக்கும் இல்லை. அந்த நிலையாமையே உலகை இயக்குகிறது அதுவே அதன் பெருமை
என்றும் சொல்வாங்க.
எது எப்படியாகினும் என் மதிப்புக்குரிய
ஆசிரியப் பெருமகனார் இன்றில்லை. அவரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு
இன்னொரு தருணத்தில் சொல்றேன் என்றபடியே கிளம்பினான்.
டேய், இருடா அந்தக் குறளையாவது சொல்லிட்டுப் போ.
ஓ, அதுவா.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் உலகு
நெருநல் = நேற்று வரை
உளன் ஒருவன் = இருந்த ஒருவன்
நேற்றுவரை
நம்மோடு இருந்த ஒருவன் இன்றைக்கு இல்லை என்ற "பெருமை" உடையது இந்த உலகம்.
20 நூற்றாண்டுகள் கடந்தும் அப்படியே புரியும் எளிய இனிய தமிழ்.
இதில்
வரும் "பெருமை" என்ற சொல் அவரவர் மன இறுக்கத்தைப் பொறுத்து ஆழமான பொருள்
தருகிறது. நெருங்கினவர் தவறிட்டால், ஏ உலகமே இப்படி சட்டென்று என்
அன்புக்குரியவர் வாழ்வை முடித்துவிட்டாயே எவ்வளவு இழிவான இயல்பு உனக்கு
என்று திட்டத் தோன்றும். அதைத்தான் குத்தலாக வள்ளுவர் உலகின் "பெருமை"
என்கிறார் என்று எடுத்துக் கொள்ளத் தோன்றும்.
தத்துவ நயமாக, இந்த நிலையற்ற இயல்பே இவ்வுலகின் உண்மையான பெருமை என்றும் எடுத்துக் கொள்வதும் உண்டு.
சரி,
களைப்பாகவும் சோர்வாகவும் இருக்கு கொஞ்சம் தூங்கி எழுந்து அப்புறம்
வர்றேன். உறங்குவது போல சாக்காடு, தூங்கி எழுவது போன்றது பிறப்பு என்ற
புகழ் பெற்ற குறளும் இந்த அதிகாரத்தில் தான் இருக்கு.
புதிதாய் பிறந்து இன்னொரு நாள் வர்றேன் என்றபடியே கிளம்பினான்.
Friday, July 01, 2022
ஏ உலகமே, இதுல என்ன "பெரும" உனக்கு?
Subscribe to:
Posts (Atom)