Showing posts with label பாப்பா. Show all posts
Showing posts with label பாப்பா. Show all posts

Thursday, February 26, 2009

ஈழத்துப் பாப்பா பாடல்

ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா.



  ---      ---   ---



எழுதியது யாரென்று தெரியவில்லை. நெஞ்சை பிசையும் பாடல். வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு நீர்வை மகள் அனுப்பினார்.... 

ஒரு ஈழத்து நண்பர் சொன்னார்: " எனக்கு இந்த பிரச்சினை எப்படி முடியும் என்று கூட கவலையில்லை. சீக்கிரம் முடிந்தால் நிம்மதி"... 

எனக்கு மீண்டும் மீண்டும் கானா ப்ரபாவின் பதிவின் முகப்பில் அவருடைய சிரித்த முகத்திற்கு கீழே இருக்கும் வரிகள்தாம் மனதில் ஓடுகின்றன...  

ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்....

என்று தணியும் இந்தத் துயரம்?