எப்போது சென்றாலும்
தப்பாமல் வேறுவழி
மாற்றிவிடும் காவலர்
மாறிவிடும் மக்கள்
தெருவிற்குள் நுழைகையிலே
பல்லடுக்கு மாடிக்கடை
சிலபடிகள் கொண்டகடை
மணற்சாலைக் குட்டிக்கடை
இருபுறமும் கடைபரப்பி
நடுவகிடாய் மக்கள்வெள்ளம்
பண்டிகை என்றில்லை
என்னாளும் திருநாளே
பறவைப் பார்வையிலே
தார்ச்சாலை நெளிவதுபோல்
மாடியேறி கீழ்நோக்கின்
தலைச்சாலை ஆகும்தெரு
பாத்திரங்கள் பளபளக்க
அணிமணிகள் மினுமினுக்க
நகைக்கடைகள் ஜொலிஜொலிக்கும்
புகைமண்டலமாகும் தெரு
சுவாசிக்கும் நம்உள்ளம்
மாசென்று அறிந்தபோதும்
குப்பைக்குக் குறைவில்லை
சுத்தமா(க்)க வழியில்லை
குறுகிய இத்தெருவில்
கடுகிவழி நடந்தால்
தொண்டைக்குழி வறண்டிருக்கும்
தொப்பலாய் நனையும்உடை
ஒன்றை இரண்டுக்கும்
இரண்டை மூன்றுக்கும்
விற்பவர்கள் ஏராளம்
கற்றதில்லை அவர்பாடம்
வாலிபத்தைத் தாண்டியவன்
வசதியற்ற காரணத்தால்
காலம் கடந்தபின்
வாய்ப்பாடு கூவுகின்றான்
கடைகடையாச் சுத்திவர
கடைசிவரை நேரமில்லை
வேண்டியது வாங்கவில்லை
அண்டியது அயற்சிமட்டும்
மீண்டும் வந்திங்கு
தேவையான பொருள்வாங்க
எண்ணவே முடியவில்லை
இருந்தும் மக்கள்கூட்டம்.
மார்ச் 31, 2009 யூத்ஃபுல் விகடனில்