பாரதியார் ஆசிரியர் பொறுப்பு ஏற்று நடத்தி வந்த இந்தியா பத்திரிகையை பிரிட்டிஷ் அரசாங்கம் 1908 -ம் ஆண்டு தடை செய்தது. பாரதியாரை கைது செய்யவும் உத்திரவு போட்டது. கைது உத்தரவு பற்றி முன் கூட்டியே அறிந்த பாரதியார் தலைமறைவாக பாண்டிச்சேரிக்கு போய்ச் சேர்ந்தார்.
பிரெஞ்சு நிர்வாகத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தங்கி கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து எழுதும் நோக்கத்துடன்தான் அங்கே போய் சேர்ந்தார். அங்கு தங்கி இருந்த படி பல பத்திரிகைகளை எழுதினார்.அவர் எழுதிய கட்டுரைகள் பாண்டிச்சேரியில் அச்சடித்து பிரிட்டிஷ் நிர்வாக பகுதிக்கு கடத்தி வர பட்டு விநியோகிக்க பட்டது.
1918 -ம ஆண்டு வரை பத்து ஆண்டுகள் பாரதி பாண்டிச்சேரியில்தான் வாழ்ந்தார். அங்கே வாசம் செய்த காலத்தில்தான் பாரதியார் பாஞ்சாலி சபதத்தை எழுதினார். பல இலக்கிய விமர்சகர்கள் பாஞ்சாலி சபதத்தை பாரதியின் படைப்புகளிலேயே உன்னதமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர். வ.வே.சு ஐயர் பாஞ்சாலி சபதத்தை "அக்ஷர லக்ஷம்" பெறும் என்று கூறி பாராட்டி இருக்கிறார். இப்படி எல்லோராலும் பாராட்ட பட்ட பாஞ்சாலி சபதத்தை பாரதி என்ன நோக்கத்தில் எழுதினார்?? பாரதியாரை பாஞ்சாலி சபதம் எழுத வைத்த அந்த ரசமான சம்பவம் பற்றி பார்க்கலாம்.
பாண்டிச்சேரியில் பாரதியாருக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர். அரவிந்தருடனும் பாரதிதாசனுடனும் தொடர்பு கிடைத்தது அந்த நாட்களில்தான்.
பல நண்பர்களுடன் கூடி ரசமான இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவதுண்டு. பாரதியார் மிகச்சிறந்த முறையில் விவாதிக்கும் திறன் கொண்டவர். நகைச்சுவையாக பேசி தன் கருத்துக்களை முன்வைக்கும் ஆற்றல் அவருக்கு அதிகம். போலித்தனத்தையும் மூடநம்பிக்கையையும் கேலியும் கிண்டலும் செய்து குபீர் சிரிப்பு வரவழைப்பார்.
ஒரு நாள் இரவு வேளையில் தன்னுடைய நண்பர் வீட்டுக்கு போனார்.அன்று ஏதோ விசேஷமான நாள். அதை ஒட்டி நண்பர் வீட்டு அருகில் தெருவில் உபந்நியாசம் ஏற்பாடு ஆகி இருந்தது. மகாபாரத கதையின் ஒரு பகுதியை ஒருவர் பிரசங்கம் செய்து விளக்கி கொண்டு இருந்தார்.
பாரதி தேடி போன நண்பர் வீட்டில் இல்லை. ஆகையால், பாரதியார் நண்பர் வீட்டு அருகில் நின்று கொண்டு கதை பிரசங்கத்தை கேட்டு கொண்டிருந்தார். பிரசங்கம் செய்து கொண்டிருந்தவர் பேச்சில் சத்தும் இல்லை சாரமும் இல்லை. இடையில் சொல்லுக்கும் தடுமாறினார். சொல்ல வந்த பொருளையும் தேடி தேடி சொன்னதால் பேச்சு தடைப் பட்டது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கூட்டத்தில் இருந்தவர்கள் கதை கேட்டு கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் பலர் தூங்கி கொண்டிருந்தார்கள். விசேஷ நாட்களில் புராணம் சொல்வதை கேட்டால் போகும் இடத்துக்கு புண்ணியம். அதை தூங்கி கொண்டு கேட்டால் என்ன? விழித்துக்கொண்டு கேட்டால் என்ன ?
சொல்ல வந்த விஷயம் நினைவுக்கு வராதபோது அதை சமாளிக்க பிரசங்கி " கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா " என்று குரல் கொடுத்தார்.
அவருடைய ஓங்கிய குரலை கேட்டு தூங்கி கொண்டிருந்தவர்களும் விழித்துக் கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்று குரல் கொடுத்தார்கள். இப்படியாக தூங்கி கொண்டிருந்தவர்களை விழிக்க செய்ய கோவிந்தன் பெயர் பயன் பட்டது .
இந்த காட்சியை தொடர்ந்து அரை மணி நேரம் பார்த்து கொண்டிருந்தார் பாரதியார். அவருக்கு மனதில் பெரும் வேதனை. வீர காவியமான மகாபாரதத்தை பொழுது போக்கவும் புண்ணியம் தேட குறுக்கு வழியாகவும் எண்ணிய மக்களைப் பற்றி நினைத்து வேதனை பட்டார். அரைகுறையாக படித்து விட்டு கதை சொல்லி பிழைப்பு நடத்தும் பிரசங்கியை நினைத்து வருந்தினார். பக்தி என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்பதை ஒருபோதும் பாரதியார் ஏற்று கொண்டதில்லை.
பாரதியின் நண்பர் வீட்டு வேலைக்காரன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அவனுடைய பெயர் கோவிந்தன். பாரதியார் அவனை அழைத்தார். அவனிடம் சொன்னார்: அந்த ஐயர் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். இடையில் கோவிந்தா கோவிந்தா என்பார். அப்படி அவர் சொன்னவுடன் அவரிடம் ஓடி போய் "ஏன் சாமி, கூப்பிடீங்களா" என்று கேள் என்றார்.
வேலைக்காரன் தயங்கினான். பாரதியார் அவனை வற்ப்புறுத்தி தைரியமாக போய் நான் சொன்னபடி செய் என்றார். வேலைக்காரன் கோவிந்தனும் பிரசங்கி அருகில் போய் நின்றான்.
சில நிமிடங்கள் கழித்து பிரசங்கி வழக்கம் போல் "கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா" என்றார். வேலைக்காரன் கோவிந்தன் அவர் அருகில் போய் "ஏன் சாமி, கூப்பிடீங்களா" என்றான்.
பாகவதர் திகைத்து போனார். கூட்டத்தில் இருந்த எல்லோரும் விஷயம் அறிந்து சிரித்தார்கள். இப்பொழுதுதான் எல்லோருடைய தூக்கமும் முழுமையாக கலைந்தது.
சற்று தூரத்தில் நண்பர் வீட்டு வாசலில் நின்றபடியே அந்த காட்சியை பாரதியார் ரசித்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவருடைய உள்மனதில் ஒரு வேதனை இருந்தது. அந்த வேதனை அவருக்கு பல நாள் தொடர்ந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வீரகாவியத்தின் உண்மை பொருளை உணர்த்தும் நோக்கத்தோடும், காவியம் சொல்லும் நீதிகளை சமகாலத்துக்கு பொருத்தமான முறையில் சொல்லும் நோக்கத்தோடும்தான் பாரதியார் பாஞ்சாலி சபதம் எழுதினார்.
மு. கோபாலகிருஷ்ணன்