ஏழு வயதான சாங்-வூ-வின் தாய் சியோல் நகரத்தில் வேலை தேடவிருப்பதால் அவனை சிறு கிராமத்தில் வசிக்கும் வயதான தாயாரிடம் சில நாட்கள் விட்டுச் செல்கிறாள். மிக பின் தங்கிய கிராமத்தில் சிறுவன் சாங்-வூ-விற்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு அவனது வீடியோ கேம் மட்டுமே. பாட்டிக்கு பேச முடியாது, நியாபக மறதி வேறு. கிராமத்தில் விளைவிக்கும் காய்கறிகளை அருகில் இருக்கும் சிறு நகர் புறத்தில் விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறாள். ஆரம்பத்தில் பாட்டியை பிடிக்காமல் உதாசின படுத்துகிறான் சாங். ஆனாலும் பாட்டி அவனிடம் தனது நெஞ்சின் மேல் கையால் வட்டமிட்டு சைகையில் மன்னிப்பு கேட்கிறாள். பாட்டி தனது பழைய செருப்பினை தைக்க ஊசி நூல் கோர்த்து கொடுக்குமாறு, பையன் சலிப்புடன் சில முறை கோர்த்து கொடுக்கிறான்.

ஒரு சில நாட்களில் அவனது வீடியோ கேம் பாட்டரி தீர்ந்துவிடுகிறது. பாட்டியிடம் பாட்டரி வாங்க காசு கேட்டு அழுகிறான் சிறுவன். அவளிடம் காசு இல்லாததால் கோபத்தில் அவளது கூந்தல் முடிய வைத்துள்ள பழங்கால பொருளை விற்று விடுகிறான். அவளது ஒரே பழைய செருப்பினை தூக்கி எரிந்துவிடுகிறான். அவன் கொண்டுவந்த டின்னில் அடைத்த உணவுகள் தீர்ந்து விடுகிறது. பாட்டி கொடுக்கும் சாதம் அவனுக்கு பிடிக்கவில்லை. பசியால் வாடும் பேரனை பார்த்த பாட்டி அவனிடம் சைகையில் என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்கிறாள். அவன் தனது புத்தகத்தில் இருக்கும் கோழியை காட்டி கெண்டகி சிக்கன் வேண்டும் என்று கூறுகிறான். பாட்டியும் தனது விளைபொருட்களை எடுத்துக்கொண்டு சிறு நகருக்கு சென்று ஒரு கோழி வாங்கி வந்து நீரில் வேக வைத்து தருகிறாள். ஆனால் சிறுவனோ தனக்கு வறுத்த கோழி வேண்டும் என அழுகிறான்.

சிறுவனை அழைத்து கொண்டு சிறு நகருக்கு விளை பொருட்களை விற்க செல்கிறாள் பாட்டி. அவள் கஷ்டப்பட்டு சைகையில் விற்பதை பார்த்த சிறுவனின் மனதில் சிறு மாற்றம் ஏற்படுகிறது. அதில் வந்த பணத்தில் அவனுக்கு நல்ல ஷூ வாங்கி தருகிறாள். அவன் கேட்ட சாக்லேட் வாங்கி தருகிறாள். வீடு திரும்ப பஸ்சுக்கு காசு போதததால், சிறுவனை மட்டும் அருகில் வசிக்கும் ஒரு பையனிடம் பத்திரமாக பஸ்சில் கொண்டு விடும்படி சொல்கிறாள். வீடு திரும்பிய சிறுவன் வெகு நேரமாக பாட்டி வராததால் திரும்ப ரோட்டில் வந்து காத்திருக்கிறான். பாட்டி மாலையில் நடந்தே கிராமத்திற்கு வருவதை பார்த்த பையன் மனம் மிகவும் வருத்தமடைகிறது. பாட்டி தனக்கென மகள் கொடுத்த முதியவர் சாப்பிடும் மருந்துகளை அருகில் வசிக்கும் நோயுற்ற ஒரு முதியவருக்கு அளிக்கிறாள். அதை பார்த்த சிறுவன் மேலும் பாட்டியை மதிக்க ஆரம்பிக்கிறான்.
அவன் தாய் எழுதிய கடிதத்தில் இன்னும் சில நாளில் வந்து அவனை திரும்ப கூடிக்கொண்டு போவதாக சொன்னவுடன் பையன் வருத்தமடைகிறான். பாட்டியை விட்டு சென்றவுடன் எப்படி அவளால் தனக்கு கடிதம் எழுத முடியும் என்று எண்ணி தனது கையால் சில அட்டைகளில் "நலமாய் இருக்கிறேன்", "உடல் நலமில்லை", "உன்னை பார்க்க வேண்டும்" என எழுதி அதை படிக்க வசதியாக சிரிக்கும் படம், சோகமான படம் என வரைந்து தருகிறான். அவனது தாய் வந்து அழைத்து போகும் நாளில் பாட்டியிடம் சைகையில் நெஞ்சின் மேல் வட்டம் வரைந்து மன்னிப்பு கேட்கிறான்.
இந்த படம் நான் நேற்று பார்த்த கொரிய மொழியில் வெளியான "தி வே ஹோம்" படத்தின் கதை. இந்த காலத்து சிறுவர்கள் பார்த்து கற்று கொள்ள வேண்டிய படம் என தோன்றியது. பாட்டியாக நடித்த கிம் இந்த படத்தில் தான் முதன்முதலாக நடிக்கிறார் - இது வரை அவர் சினிமாவே பார்த்ததில்லை என்பது என்னும் ஒரு ஆச்சர்யம்!
ப்லோக்பஸ்டரில் இது வாடகைக்கு கிடைக்கும்.