சங்க காலத்திலிருந்து பாரதி காலம் வரை தமிழ்நாட்டு வரலாற்றில் மாறாத ஒன்று உண்டென்றால் அதுதான் புலவர்கள் வறுமை. எவ்வளவோ மாற்றங்களும் தமிழ் படித்து தமிழுக்காக வாழ்ந்தவர்களுக்கு நிலையான செல்வ வாழ்வை கொடுத்ததில்லை.
இந்த காலத்தில் கொஞ்சம் மாறி இருக்கலாம். திரைப்படப் பாடல் எழுதி ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் வாங்கும் கவிஞர்களும் உண்டு. படம் வெளிவந்தும் எழுதிய பாட்டுக்கு பணம் வாங்கத் தயாரிப்பாளர்களிடம் நடையாய் நடக்கும் கவிஞர்களும் உண்டு.
தான் எழுதியதாகச் சொல்லி பாண்டிய மன்னனிடம் கொடுத்த பாடலுக்கு ஆயிரம் பொன் பரிசாக கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தான் தருமி என்ற புலவன். அவையில் இருந்த நக்கீரர் பாடலில் பொருள் குற்றம் கண்டவுடன் நம்பிக்கை இழந்த தருமி பட்ட பாட்டை திருவிளையாடல் படத்தில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்போது பட்ட வேதனையை நாகேஷ் அந்த படத்தில் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்.
நாகேஷுடைய தோற்றமும் உடல் அமைப்பும் தமிழ்ப்புலவர் கதாபாத்திரத்திற்கு தகுந்த முறையில் அமைந்திருக்கும்.
பிற்காலத்தில் தமிழ்ப் புலவர்கள் பாடு மேலும் மோசமானது. பதவியில் இருக்கும் அரசர்களை பாடிமனம் குளிரச்செய்து
அவர்களிடம் பரிசு பெற்று வாழ்வதுதான் வாழ்வு என்று சுருங்கிபோனார்கள். அதற்காக போர்க்களத்தையே பார்க்காதவனை போரில் அர்ஜுனன் என்றும், கொடுக்க மனம் இல்லாதவனை பாரிவள்ளல் என்றும் பாடி நாட்களை ஓட்டும் போலி வாழ்க்கை பல புலவர்களுக்கு தலைவிதியானது.
இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் குழப்பம் நிலவியது. பல புலவர்கள் ஆதரிப்பார் இல்லாமல் வறுமையில் வாடினார்கள். ஏன் தமிழ் படித்தோம் என்ற வேதனையில் வாழ்ந்தார்கள். இப்படி வேதனைப்பட்ட ஒரு புலவர் காரிகை கற்று கவி பாடுவதிலும் பேரிகை கொட்டி பிழைப்பது நன்றே என்று பாடினார்.
காரிகை என்பது செய்யுள் இலக்கணத்தை விளக்கிச்சொல்லும் யாப்பருங்கலக்கரிகை என்ற நூல். சுருக்கமாக காரிகை என்கிறார் புலவர். ஊருக்கு அறிவிக்க வேண்டிய செய்திகளை தண்டோரா போட்டு சொல்வது அன்றைய வழக்கம். தோலால் செய்யப்பட்ட அந்த கருவியை பேரிகை என்றும் தமுக்கு என்றும் சொல்வதுண்டு.
சுப்ரதீபக்கவிராயர் ஒரு நல்ல கவிஞர். தனக்கு ஆதரவு கொடுத்த குறுநில மன்னரை மகிழ்ச்சியில் குளிப்பாட்ட அவர் பாடிய "விறலிவிடு தூது" என்ற நூல் மிகவும் பிரசித்தம். இன்றைய சினிமாக்களில் வரும் மசாலா பாடல்களுக்கு சவால் விடும் வகையில் எழுதியிருக்கிறார் .என்ன செய்வது? எப்படியாவது பிழைப்பை நடத்த வேண்டுமே. அதற்காகத்தான்.
தமிழ்நாட்டில் சமயப்பிரச்சாரம் செய்ய வந்த கிறிஸ்தவ பாதிரிமார்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்து வாழ்க்கையை கழித்தார் கவிராயர். எப்படி வாழ்ந்தாலும் தமிழ்தான் கதி என்று பிடிவாதமாக தமிழை படித்து தமிழுக்காக வாழ்ந்தவர்கள் உண்டு. உ.வே. .சாமிநாதய்யர் அந்த பட்டியலில் இடம் பெற்றவர் . அவர் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலப் படிப்புக்கும் அரசாங்க வேலைக்கும் வாய்ப்பு கொஞ்சம் கிடைக்கத் தொடங்கிய காலம். அவருடைய தந்தை ஜமீன்தார் ஆதரவில் வாழ்ந்த சங்கீத வித்வான். அவருடைய இளைய சகோதரர், சாமிநாதய்யரின் சித்தப்பா, கதையோடு கலந்த சங்கீதம் பாடி பிழைப்பு நடத்தியவர்.
உ.வே சாவின் தந்தைக்கு ஜமீன்தார் தானமாக கொடுத்தநிலம் ஒரு வானம் பார்த்த பூமி. நிலத்திலிருந்து நிரந்தரமான வருமானம் கிடையாது. அந்த ஜமீந்தாரருக்கும் கஷ்டகாலம். தன்னுடைய தேவைக்காக அய்யருக்கு தானமாக கொடுத்த நிலத்தை அவருக்கே தெரியாமல் விற்றுவிட்டார்.
எல்லாம் போய்விட்டது. ஆகையால் மகன் சாமிநாதனை ஆங்கிலம் படிக்க வைத்து அரசாங்க வேலைக்கு அனுப்ப முயன்றார். அவருடைய சகோதரர் தம்பி மகன் சாமிநாதனை தனக்கு பின்பாட்டு பாடசங்கீதம் கற்க அழைத்தார். சாமிநாதன் சங்கீதமும் வேண்டாம், ஆங்கிலப்படிப்பும் வேண்டாம், தமிழ்தான் படிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தான்.
அவருடைய விருப்பப்படியே மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்தார். திருவாவடுதுறையில் இளைஞன் சாமிநாதனுக்கு அக்கிரகாரத்தில் அப்பாசாமி அய்யர் வீட்டில் சாப்பாட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது .
சில மாதங்கள் கழித்து ஆசிரியருடன் ஊரை விட்டு வேறு ஊருக்கு போக வேண்டியதாயிற்று. அப்பொழுதுதான் பல மாதங்கள் உணவு அளித்த அப்பாசாமி அய்யருக்கு ஒப்புக்கொண்ட படி பணம் போய் சேரவில்லை என்ற விஷயம் சாமிநாதனுக்கு தெரியவந்தது . இளைஞனுக்கு சொல்லமுடியாத சங்கடம். ஊரை விட்டு போகுமுன் சாப்பாட்டு கடனை எப்படியாவது தீர்க்க முயன்றார் .
உபனயனகாலத்தில் அவருடைய மாமா செய்து போட்ட வெள்ளி அரைஞான்கயிறு அவருடைய நினைவுக்கு வந்தது. விற்று காசாக்க வேறு எந்த பொருளும் அவரிடம் இல்லை. அரைஞான் கயிற்றை விற்று அப்பாசாமி அய்யருடைய கணக்கை தீர்க்கப் போனான் சாமிநாதன். விஷயம் அறிந்த அப்பாசாமி அய்யர் பணம் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.
"நீ ஊருக்கு பத்திரமாக போய்ச் சேர், பணத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று சாமிநாதனை வழி அனுப்பி வைத்தார் அந்த பெரியவர்.
தமிழ் படித்து ஆசிரியர் பொறுப்பில் இருந்த காலத்திலும் சாமிநாதய்யர் வளமாக வாழ்ந்ததாக சொல்லமுடியாது. ஓலைச்சுவடிகளை தேடி ஊர் ஊராகச் சென்றார். தேடல் முயற்சியில் பயணத்துக்கும் இதர வகையிலும் பெரிய தொகையை செலவு செய்ய நேர்ந்தது.
பிற்காலத்தில் எழுதிய புத்தகத்தை அச்சில் பதிப்பித்து வெளியிட நிதி வசதி இல்லாமல் அவதிப்பட்டார். அவர் தயாரித்த சீவகசிந்தாமணி என்ற நூலை அச்சிட்டு புத்தகமாக வெளியிட கையில் பணம் இல்லை.
1896 அண்டு பாண்டிதுரை தேவர் அய்யரை கெளரவம் செய்ய ஒரு விலை உயர்ந்த பொன்னாடையை அவருக்கு போர்த்தினார். அந்த பொன்னாடையை விற்று, அதில் வந்த பணத்தைக் கொண்டு புத்தகம் அச்சிட சாமிநாதய்யர் முடிவு செய்தார்.
சுப்ரமன்யதேசிகர் என்ற சைவசமய பெரியவர் விஷயம் அறிந்து அய்யர் பொன்னாடையை விற்பதை தடுக்க முயன்றார்.
கௌரவப்படுத்த அளித்த பொன்னாடையை விற்பதை பாண்டிதுரை தேவருக்கு தெரிந்தால் அவர் மனம் வருந்துவார் என்று கூறி அதை தடுத்தார். அவரே தற்காலியமாக நிதி உதவி ஏற்பாடு செய்தார். அதனால்தான் அய்யரை பாரதியார் வாழ்த்தி பாடும்போது
"நிதி அறியோம் இவ்வுலகத்து ஒரு கோடி இன்பவகை நித்தம் துய்த்தறியோம்"
என்று வருந்த வேண்டாம் என்று ஆறுதல் கூறினார். தமிழுக்காக வாழவந்த உனக்கு உலக இன்பங்களைப் பற்றி நினைத்துப்பார்க்க முடியாது என்றார் பாரதி. மாறாகத் தமிழ் மொழியின் வரலாற்றில் உனக்கு நிரந்தரமான, பெருமை மிக்க இடம் கிடக்கும் என்று வாழ்த்தினார்.
பொதியமலை பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவோர் வாயில்
துதியறிவாய்அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றி துலங்குவாயே
என்று பாடினார். கடுமையான வறுமையிலும் தன்னம்பிக்கை குறையாமல் பிடிவாதம் தளராமல் வாழ்ந்த புலவர்கள் உண்டு. தன்னுடைய புலமையையும் நிலையையும் எண்ணி பெருமிதம் கொண்ட கவிஞர்களுமுண்டு. இல்லையென்றால்
இருந்தமிழே உன்னால் இருந்தேன் வானோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்
என்று பாடி இருக்கமுடியுமா ? வேறு சில புலவர்கள் வருமையின்கொடுமை யால் தாங்கள் விதியை நொந்து பாடியது உண்டு. அப்போதுகூட தம் மொழியின் வளமையை காட்டும்வகையில் பாடி இருக்கிறார்கள். தங்கள் வேதனையை சொல்லி நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
ஒரு புலவர் நடனம் ஆட கற்காமல், கழைக்கூத்தாட கற்காமல், செப்பிடுவித்தை கற்காமல், பிழைப்புக்காக தமிழை படித்தோமே என்று தன் வேதனையை வெளிப்படுத்துகிறார். அவர் அதோடு நிறுத்தவில்லை. அழகான பெண்ணாக பிறக்காமல் போனோமே என்கிறார். இன்னும் சற்று மேலே போய் வேறு ஏதாவது கேவலமான தொழில் செய்யப்போகாமல் தமிழைப் படித்தோமே என்று புலவர் புலம்பித் தீர்த்து விடுகிறார்.
பாட்டைப் பாருங்கள். புலவருக்காக நீங்கள் அனுதாபப்படுவதோடு நிச்சயமாக சிரிக்கவும் செய்வீர்கள். புலவர் நோக்கமும் உங்களை சிரிக்க வைப்பதுதான் .
அடகெடுவாய் பலதொழிலும் இருக்க கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்
திடமுள மோகனமாடக் கழைக்கூத்தாடச்
செப்பிடு வித்தைகளாட தெரிந்தோமில்லை
தடமுலை வேசையராய்ப் பிறந்தோமில்லை
கனியான தமிழைவிட்டுத் தையலார்தம்
இடமிருந்து தூது சென்று பிழைத்தோமில்லை
என்ன சென்மமெடுத்துலகில் இருக்கின்றோமோ !!
தனக்கு வாழ்வு கொடுக்க தவறிவிட்ட தமிழ் மீது அவருக்கு உண்மையில் வெறுப்பு எதுவும் இல்லை. இருந்தால் "கனியான தமிழை விட்டு" என்று புலவர் பாடுவாரா?
மு.கோபாலகிருஷ்ணன்