Saturday, June 30, 2007

வலைவலம்

கோடைகாலத்திற்கு நிறைய பேர் இந்தியாவிற்கு போய்விட்டு வருவார்கள். போகும்போதும், வரும்போதும் நேர வித்யாசத்தினால் பல தொந்தரவுகள். இந்த ஜெட்-லேகிற்கு ஒரு நிவாரணம் கண்டுபிடிக்க அர்ஜெண்டைனாவில் சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவாரஸ்யமான முயற்சி செய்கிறார்கள். அதுசரி தலைவலி போய் 'திருகு'வலி வராதா என்று கேட்காதீர்கள். அதைப்போல இந்த செய்தியை வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று இந்த மருந்தைக் கேட்டால் நான் பொறுப்பில்லை.

மருத்துவர் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அமெரிக்காவில் ஒரு புது ஊருக்கு போனவுடன் ஒரு நல்ல டாக்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா? அதற்கு உதவுகிறார் பாரதி இந்தப் பதிவில். பாரதி என்றால் முண்டாசுக்காரர் இல்லை. அவரது பதிவில் சில நல்ல வலைத்தளங்களை சுட்டியிருக்கிறார். அது மாதிரியான ஒரு தளம்தான் ரெவல்யூஷன் ஹெல்த். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அமெரிக்காவில் வலைஉலாவிற்கு AOL மூலம் வித்திட்டு பட்டை கிளப்பிய ஸ்டீவ் கேஸ்.

உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தின் பல மூலைகளில் உள்ள நல்ல விஷயங்களைப் பார்க்க வேண்டுமா - இந்த தளத்தில் பாருங்கள்.. எல்லா ஊருக்கும் போய் பாருங்கள். கஜுராஹோவிலேயே உட்கார்ந்து விட வேண்டாம்.(அங்கே இங்கே போய் 'அதே' இடத்துக்கு வரீங்களேன்னு பித்தன் குரல் விடுவது கேட்கிறது)

ஈபே கேள்விப்படாதவர்கள் இருக்கமுடியாது. இங்கிலாந்தில் வாழும் ஒரு இந்தியக் குடும்பம் ஒரு தலைகீழான ஈபே ஆரம்பித்திருக்கிறது. ஹம்ராஸ் தளத்தில் ஒரு பொருளை ஜெயிக்க வேண்டுமென்றால், நீங்கள் எல்லாரைவிட குறைந்த விலைக்கு கேட்கவேண்டும். அது எப்படி என்கிறீர்களா? அந்த குறைந்த விலைக்கு நீங்கள் மட்டுமே கேட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு பொருளுக்கு இப்படி பேரம் நடந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்:

1.20 - பத்து பேர்
1.23 - இரண்டு பேர்
1.24 - ஒருவர்
1.28 - மூன்று பேர்
1.39 - ஒருவர்

ஜெயிப்பவர் 1.24க்கு கேட்டவர். அவர் ஒருவர் மட்டும்தான் குறைந்த விலைக்கு கேட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அஸ்மத் மோனகன் எனும் தாயும் அவரது மகள்கள் ஆம்பரின், ஹென்னா. இதைப் பற்றி விவரமாக இங்கே படிக்கலாம்.

பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது என்பார்கள். ஏன் என்று தெரியாது. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும். நான் இங்கே பேரைச் சொல்லாமல் ஊரைச் சொல்கிறேன். நம் வலைப்பதிவில் எழுதும் ஒரு நபரின் ஊரில் நடந்த சம்பவம் மிக சுவாரசியமானது. கவிச் சக்கரவர்த்திக்கு எந்த ஊரில் சமாதி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நாட்டரசன் கோட்டைக்காரர்கள் தவிர மற்றவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். முதலில் கவிச்சக்கரவர்த்தி யாரென்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான் ஆளாளுக்கு அரசர், பேரசரர் என்று பேர் வைத்துக்கொள்கிறார்கள். நான் சொல்லுவது கம்பரைப் பற்றி. ஆனானப்பட்ட கவிச்சக்கரவர்த்தியையே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் வெட்கித் தலைகுனிய வைத்தது நாட்டரசன் கோட்டையில். கர்வமடங்கிய கம்பர் மீதமுள்ள வாழ்நாட்களைக் கழித்தது அந்த ஊரில்தானாம். அந்த சுவாரசியமான கதையை பிரபுவின் பதிவில் நீங்களே படித்துக் கொள்ளுங்கள். இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு Gods must be crazy யில் வரும் ஆதிவாசிதான் நினைவுக்கு வந்தான். அய்யய்யய்யய்யய்யய்.......


இப்படி ஒரு போராட்டம் ஆரம்பித்திருக்கிறார் ரவிசங்கர்.புரியவில்லையா?

தமிங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டாமென்கிறார். ஆங்கில அடிமை என்ற குற்றச்சாட்டுக்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த முறையில் தட்டச்சு செய்வது மிகவும் வேகமானது என்கிறார் ரவி. வேகமான முறை என்பதற்காகவே முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன். இந்த விசைப்பலகையை பார்த்தால்தான் கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது.
ஆனால் இந்த முறை ஆங்கில மோகத்தைக் குறைக்குமென்றால், தட்டச்சும் வேகத்தை அதிகமாக்குமென்றால் கண்டிப்பாக அனைவரும் முயலவேண்டும். நான் முயற்சி செய்து பார்க்கிறேன். இப்போதே வலைபதிய உட்காரும்போது 'கருத்து' கேட்க வேண்டியிருக்கிறது. இதில் இந்த விசைப்பலகையை முயன்றால், 'கருத்து' 'புராணமாக' மாறும் அறிகுறிகள் வலுக்கின்றன.

கடேசியாக நமது வர்ஜீனியா மாவட்டத்தில் மோசமாக காரோட்டுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அடுத்த முறை கன்னாபின்னாவென்று ஓட்டி மாமாவிடம் மாட்டினால் நீதிபதி தீட்டுவது மட்டுமல்லாமல் மூன்று வருடங்களுக்கு தண்டல் கட்டவேண்டும். முழு விவரங்கள் இதோ.

Friday, June 29, 2007

ஔவையார் vs [க|வ]ம்பர்

ஒரு நாள், சோழன் அவையில் புலவர் பெருமக்கள் பலரும் குழுமியிருந்தனர். அப்போது சொற் குறும்பினைத் தொடங்கினார் கம்பர்.

ஆரைக் கீரை ஒரு தண்டின் மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும். அதனை மனத்தே கொண்டார்.

ஔவையாரை ஆரைக்கீரையோடு ஒப்பிட்டு, 'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ' என்று சிலேடையாகக் கூற, ஔவையார் கோபம் கொண்டார்.

கம்பரின் குறும்பினை புரிந்து கொண்டு அதே பாணியில் ஒரு பாடலைச் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.


எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே -- முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா ?


தமிழில் 'அ' என்பது எண் 8 ஐக் குறிக்கும். 'வ' 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் 'அவ' என வரும். இந்த மாதிரி எழுத்தையும், எண்ணையும் தொடர்பு படுத்தி, வார்த்தை விளையாட்டுக் கவிதைகள் எராளம் உண்டு அக்காலத்தில்.

"அவலட்சணமே ! எமனின் வாகனமான எருமையே ! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே ! முழுவதும் மேற்கூரை இல்லாதுபோன வீடாகிய குட்டிச்சுவரே ! குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே ! அடே ! ஆரைக் கீரையைச் சொன்னாயடா !" என்று பொருள் பட பாடினார்.

டயலாக்ஸ்.. ரிலாக்ஸ்..

லைப்ரரியில்..


"சார்.. இந்த புத்தகத்துல கதைய காணோம்.. ஆனா எல்லா பாத்திரங்க பெயர் மட்டும் இருக்கு?"

"யோவ்.. நீ தான் அந்த டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனவனா?"
-------------------------------------------------------------------------

பார்க் அருகில்.

"ஏண்டா டிரைவிங் லைசன்ஸ புதைச்சுட்டிருக்க?"


"அது expire ஆயிடுச்சுடா"


-------------------------------------------------------------------------

ATM முன்.


"டேய்.. நான் உன்னோட பாஸ்வோர்ட்'ஐ பார்த்துட்டேன்.. அது ***** தானெ?"


"போடா முட்டாள்.. என்னோட பாஸ்வோர்ட் 12345"

-------------------------------------------------------------------------


[-- சுட்ட பழமானாலும், சுவைதானே!]

காய் காயா காய்த்திருக்கு

உலகில் எத்தனை விதமாகக் காய் காய்க்கிறது என்று யோசித்ததில் தோன்றியவை வெண்பாப் பாடலாகக் கீழே அளித்திருக்கிறேன். பாடலை உங்கள் கண்முன்னே கொண்டுவர இணையத்தில் இருந்து படங்களை தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறேன். புகைப்பட உரிமையாளர்களுக்கு நன்றி.

பாடல் :

படரலில் உருண்டு பந்தலில் நீண்டு
செடியில் குவிந்து கொடியில் உதிர்ந்து
கிளையில் பரந்து மரத்தில் அடர்ந்து
கோளமும் காய்க்கும் காய்

படங்கள் :

Thursday, June 28, 2007

அரிசியை விட சிறிய யானை பார்த்திருக்கிறீர்களா ?

அன்பர்களே,

ஒரைகாமி, ஆரிகாமி ஏதோ ஒன்னு ! Origami நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தெரியாதவங்களுக்கு, நம் பள்ளிப் பருவத்தில் நாம் அனைவருமே இதில் ஈடுபட்டிருப்போம். அதாங்க காகிதத்தில கப்பலு, ராக்கெட்டு எல்லாம் செய்வோமே, அதே தான்.

கிரிகாமி (Kirigami) கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்னது கிருக்குப் புடிச்சிருக்கானு கேட்டு அடிக்க வராதீங்க ;-) காகித்தில் வெட்டி ஏதாவது உருவம் கொண்டு வரும் கலைக்குப் பேரு தாங்க Kirigami.

கீழே உள்ள you tube-ஐ play பண்ணி பாருங்க. சும்மா மனுசன் கத்தரியையும், காகிதத்தையும் வைத்துப் புகுந்து விளையாடுவதைப் பார்த்து அதிசயுங்கள்.அரிசியை விட சிறிய யானை எப்படி வந்தது-னு பார்த்து அசந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Wednesday, June 27, 2007

வலைப்பதிவர் ஆத்திச்சூடி

அற்புத வலை
ஆர்ப்பாட்டம் குறை
இனிதாய் எழுது
ஈர்ப்பது நட்பு
உற்றது உரை
ஊக்கம் வளர்
எழில் பதிவிடு
ஏமாற்றம் தவிர்
ஐயமற விளக்கு
ஒவ்வாதன நீக்கு
ஓய்வு எடு-----

சில வரிகள் எழுத பல நேரம் பிடித்தது. 'ஓய்வு எடு'னு எழுதினவுடனே தான் ஞாபகம் வந்தது, நான் ரொம்ப நேரமா வலையிலே இருக்கிறேன் என்று. அதானால ஓய்வு எடுத்துக்கிறேன். ;-)

கடைசி இரு எழுத்துக்களுக்கு, உங்களுக்கு ஏதாவது தோன்றினால் பின்னூட்டமிடுங்கள். அசத்தலாகச் சொல்பவர்களுக்கு "திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா" (சங்கத்து சார்பா, அப்பாடா தலை தலையில தூக்கிப் போட்டாச்சு பொறுப்ப :)) வழங்கப்படும்.

என்றும் அன்புடன்
சதங்கா

Tuesday, June 26, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 11

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

http://pkirukkalgal.blogspot.com/2007/06/11.html

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

Monday, June 25, 2007

மீன் பிடிக்க வாரீயளாஅதோ நெளியுது
இதோ திரியுது
தள்ளிச் செல்லுது
துள்ளிக் குதிக்குது

ஒன்றா இரண்டா
ஓரேழெட் டிருக்குமா ?
அத்தனையும் வேண்டாம்
ஓரிரண்டு பிடித்திடலாம்

என்றே எண்ணியங்கு
தின்னமாய் அமர்ந்து
நெளியும் புழுதனை
நீளமான தூண்டிலிலிட்டு

எவரும் பின்னில்லை
என்றறிந்து வீசியதில்,
மிதக்கும் பந்து
மிதந்து கொண்டேயிருக்க

சிலநேரக் காத்திருப்பில்,
என்ன நடக்குதென்று
சுழற்றி நூலிழுக்கையிலே
முள்ளிலிட்ட புழுவில்லை !

அதோ நெளியுது
இதோ திரியுது
தள்ளிச் செல்லுது
துள்ளிக் குதிக்குது.

Thursday, June 21, 2007

வைராக்கியம் - இருநூறாவது பதிவு!

தஞ்சைப் பெரிய கோவிலின் மணி டாங், டாங், டாங்கென அடித்து அன்றைய சாயங்கால பூசையை ஊருக்கு உரைத்தது.

விபூதிப் பிரசாதம் வாங்கி அணிந்து கொண்டு வெளியில் வந்தார் பரமசிவம். சிலு சிலுவென வீசிய காற்றில் சுற்றுப் பிரகாரத்தில் இருந்த மரங்களின் இலைகள் சிற்றருவியென சலசலத்தன. தென்றலின் தீண்டலில் கோவிலுள் இருந்த புழுக்கம் குறைந்து ஒருவித வேதியல் மாற்றம் நிகழ்ந்து தேகத்தில் குளுமையை உணர்ந்தார் பரமசிவம்.

பெரிய வளாகம் என்பதால், ஓரளவுக்கு மக்கள் இருந்தும் கூட்டமாகத் தெரியவில்லை.வெளிச்சம் மெல்ல விடைபெற துவங்கியது. வலக்கையை மேல்தூக்கி மலைமுகடாய்ப் புருவங்களின் அருகில் வைத்து நந்தி மண்டபத்தைப் பார்த்தார். 'நாவன்னா' நேரத்துக்கு வந்திட்டானே என வியந்து, அத்திசையை நோக்கி நடையை சற்று துரிதப்படுத்தினார். சக வயதுடையோர் வட்டத்தில், நாராயணபிள்ளையை நாவன்னா என்று தான் அழைப்பார்கள். எனக்கென்ன அவ்வளவு வயதா ஆகிவிட்டது, அந்தக்காலத்து ஆளுக மாதிரி கூப்பிடறீங்களே என்று அன்பாய்க் கடிந்து கொள்வார். அப்படி ஒன்றும் வயோதிகர் இல்லை நாவன்னா, வருகிற ஆவணியில் அவருக்கு வயது 65.

தெய்வ நம்பிக்கை கொண்டவர்தான் நாவன்னா. ஆனால் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு யாரும் பார்த்ததில்லை. வெளிப்பிரகாரத்தோடு சரி. சாமியை வெறும் கல் என்று நினைத்தாரோ, இல்லை அர்ச்சகர்களை வெறுத்தாரோ தெரியவில்லை.

நாவன்னாவை நெருங்கிய பரமசிவம், "என்ன ஓய், மேல்சட்டையில அங்கங்கே அழுக்கு படிந்து இருக்கு" என்றார்.

ஒன்னுமில்லவோய், இன்னிக்கு வேலையில சுந்தரபாண்டி பயல காணோம். வெஷம் குடிச்சிக் கெடக்கானாம். அவன் ஆத்தா செல்லம்மா வந்து சொல்லி அழுதுட்டுப் போறா. இன்னிகுனு பாத்து ஒரு கல்யாண ஆர்டர். அதான் வெறகு மண்டில நானே வெறகு அள்ளி போடவேண்டியதாப் போச்சு. குனிஞ்சு நிமிந்ததில முதுகு தான் கொஞ்சம் வலிக்குது.

துள்ளிக்குதிக்கிற வயசுனு நெனைப்பாய்யா உமக்கு. இன்னோரு ஆளப் போட்டு வேலையப் பாக்கவேண்டியது தானே. என்ன வெறகு மண்டி வச்சு நடத்தறே ? ஊரோட இலவசமா கேஸ் அடுப்பு வேற கவுருமெண்டு கொடுக்குது. வெறகு விக்கிறாராம் வெறகு. நாவன்னாவைப் பார்க்கும்போதெல்லாம் பரமசிவம் புலம்பும் புலம்பல் தானிது.

வந்திட்டாரு சிவம். சிவய்யா, நீயும் சொல்லிகிட்டே தான் இருக்கே. நானும் கேட்டுக்கிட்டே தான் இருக்கேன். கையக் கால மடக்கி, ஒடம்ப வளச்சி, வேல பாத்து சாப்பிட்ட உடம்புய்யா. சும்மா உக்காந்து சாப்பிட மனம் வரமாட்டேங்குது.

மேல்துண்டை உதறி படிக்கல்லில் போட்டு நாவன்னாவின் அருகில் பரமசிவமும் அமர்ந்தார். இப்பவாவது சொல்லுமய்யா, ஸ்ரீவிமானத்தின் உச்சியில் இருக்கும் 80 டன் கல், ஒரே கல்லா ? நமக்குத் தெரிஞ்சு அது ஒரே கல்லுனு தான் படிச்சிருக்கோம். ஆனா அது இரு கற்கள் என்றும், ஆரஞ்சுச் சுளையென ஆறேழு கற்கள்னும் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்களே என்றார்.

உம்ம குசும்பு உம்ம விட்டுப் போகுமாய்யா. என் தம்பி மக கற்பகம் புகுந்த வீடு மூலமா, கணபதி ஸ்தபதி சொந்தக்காரன்னு சொன்னதில இருந்து கோவிலப் பத்தி ஏதாவுது கேட்டுக்கிட்டே இருக்கியே. ஸ்தபதி அவர்களயே ஓரிரு முறைதான் பாத்துருக்கேன். அவுக பாட்டன் பூட்டன் கட்டுன கோவில் பத்தி எனக்கு என்னய்யா தெரியும் என்று சீறித்தள்ளினார் நாவன்னா.

சரி விடுமய்யா. என்னத்த சொல்லிப்புட்டேன். இம்புட்டுக் கோபம் வருது இந்த வயோதிக வாலிபருக்கு என்று மீண்டும் சீண்டினார் பரமசிவம்.

என்னவிட நீர் ரெண்டு வருசம் மூப்புன்றத மறக்காம இருந்தாச்சரி என்றார் நாவன்னா புன்முறுவல் பூத்தபடி.

வட்ட பல்புகளும், நீள ட்யூப்லைட்டுகளும் மினுக்கி கோவில் வளாகம் முழுதும் ஒளி பரவியது. கம்பீரமாகக் காட்சி அளித்தது ஸ்ரீவிமானம். நந்தியின் மேல் தடவிய எண்ணையின் பளபளப்பில் மேலும் மின்னியது நந்தி மண்டபம். கோவிலிருந்து ஓரிருவராக வெளியேறத் துவங்கினர்.

நம்ம நக்கல் பேச்சு கெடக்கட்டும். என்னவாம் அந்த பயலுக்கு, எதுக்கு வெஷம் குடிச்சானாம் என்று நாவன்னாவைக் கேட்டார்.

வா நடந்துகிட்டே பேசிக்கிட்டு போகலாம் என்று நாவன்னா எழுந்தார். பரமசிவமும் அவரைத் தொடர்ந்தார். மண்டபத்தை விட்டு இறங்கி இருவரும் நடக்கத் தொடங்கினர்.

மராத்தியர் கட்டிய கோட்டைச் சுவர் வாயிலில் சுந்தரபாண்டியனின் தாய் நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்டு கொண்ட நாவன்னா, என்னம்மா பய எப்படி இருக்கான் இப்போ என்றார். அழுத அவளின் கண்களால் வீங்கியிருந்தது ஒட்டிப்போன கன்னங்கள்.

நைந்துபோன முந்தானையை வாயில் வைத்தபடி
, கண்களில் நீர் பெருக்கெடுக்க "அப்படியே தான் கெடக்கான். சோறு தண்ணி எறங்க மாட்டேங்குதுய்யா". நெலக்குத்தின தேர் மாதிரி விட்டத்தை வெறித்த படி கெடக்கான்யா என்று தாங்கமுடியாத அழுகையை அடக்கிக் கொண்டாள்.

சுப்ரமணிக்குச் சேதி தெரியுமா என்று கேட்டார் பரமசிவம்.

ஊர் ஊரா போற பொளப்பு அவருக்கு. எப்ப வருவாருனு தெரியல. இப்ப எந்த ஊர்ல இருக்காருன்னும் தெரியல. எப்பவாவுது பக்கத்து வீட்டு போன்ல கூப்பிட்டு பேசுவாரு. அவரா கூப்புட்டாத்தான்யா என்று விம்மினாள்.

ஏதாவுது பேசறானா ? நான் என்ன செய்யட்டும் என்றார் நாவன்னா.

படிக்கனும், படிக்கனும்னு சொல்லிக்கிட்டே இருக்கான்யா. ஆயிரத்துக்கு மேல மார்க் எடுத்து என்னய்யா ப்ரயோசனம். மேலே படிக்க வைக்க முடியாத வசதியற்ற என் வயிற்றில் பொறந்து இப்படிக் கஷ்டப்படுறானே என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

படிக்கும்போதே உங்க வெறகு மண்டில வேலை செஞ்சுகிட்டே தானய்யா படிச்சான். அதையே முழுசா செய்யிடானு சொன்னாலும் கேக்க மாட்டேன்கிறான்யா என்று தளுதளுத்தாள்.

சரி சரி கண்ண தொடச்சுக்கவே. பெத்தவ கஷ்டம் எங்களுக்கும் புரியுது. நாங்க நாளைக்கு அவன வந்து பாக்குறோம் என்று சொல்லி, கையில் தொங்கிய மஞ்சப் பையில் கையைவிட்டு, சில நூறு ரூபாய்த்தாள்களை உருவி, செல்லம்மாளிடம் நீட்டினார் நாவன்னா. மேல்படிப்புக்கு நாங்க உதவி பண்றோம்னு சுந்தரபாண்டி கிட்ட சொல்லு. வேற ஏதாவுது உதவி தேவைனா சொல்லு என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தனர் பரமசிவமும் நாவன்னாவும்.

சோகம் அப்பிய செல்லம்மாளின் விழிகள் வியப்பில் ஆனந்தக் கண்ணீர் சிந்தியது முதல் முறையாய். கைகூப்பி இருவரையும் வணங்கி வீடு நோக்கி விறைந்தாள்.

சிறிது தூரம் நடந்து, யாரும் அவர்கள் அருகில் இல்லை என்று அறிந்து, "ஏய்யா நாவன்னா, புத்தி மழுங்கிப் போச்சாய்யா உமக்கு. நல்லாப் படிக்கிற பையனையா வேலைக்கு வெச்சிருந்தே ?" கையக் கால மடக்கி வேல செஞ்சு சாப்பிட்டா மட்டும் போதுமா ? அந்த வைராக்கியம் செய்யற செயல்லயும் இருக்க வேணாமா ? ஒன்னுமில்லாத பயலெல்லாம் ஓகோனு இருக்க இந்தக் காலத்தில படிக்கிற ஒரு பய அழியலாமா ? அதுக்கு நாமலும் உடந்தையா இருக்கலாமா ? என எண்ணையிலிட்ட எள்ளாய்ப் பொறிந்து தள்ளினார் பரமசிவம்.

படிப்புச் செலவுக்கு எங்க வருமானம் பத்தல. நீங்க உதவி பண்ணி அவனுக்கு வேல போட்டுக் கொடுங்க. அந்த சம்பளத்தில அவன் படிச்சிக்கிருவான் என்று ஆத்தாளும், அப்பனும் விழுந்து கெஞ்சினதுக்கு நான் பண்ணின காரியம் அது. என்ன பண்ணச் சொல்றே இப்போ என்று சீறினார் நாவன்னா.

கோவிலைச் சுற்றி வந்து தற்போது சிவகங்கைக் குளத்தருகே இருந்தனர் இருவரும். குப்பையும், முட்புதர்களும் அண்டி இருந்தது. ஒருகாலத்தில் அரண்மனைக்கு இணையாக பராமரிக்கப் பட்ட இடமாக இருக்கலாம் ! குப்பையில் தான் மாணிக்கம் இருக்கும் என்பதால் குளமெங்கும் குப்பையோ என்னவோ !

நாளைக் காலை நேரா சுப்ரமணி வீட்ல சந்திப்போம் என்று சொல்லி இருவரும் விடைபெற்றனர்.

குடியானவர் தெரு, வெறித்த கண்கள் விலகாமல் மேல் பார்த்துக் கிடந்த சுந்தரபாண்டியனின் அருகில் செல்லம்மாள் விரித்த கிழிந்த பாயில் அமர்ந்திருந்தனர் பரமசிவமும், நாவன்னாவும்.

முட்டாப்பய மவனே, இப்படிப் பண்ணிப்புட்டியேடா. மார்க் எடுக்கத் தெரிஞ்ச உனக்கு மத்த விசயம் தெரியலையேடா. படிச்சா மட்டும் போதுமா? உன்கிட்ட வசதியில்லேன்ற காரணத்துக்காக உசிரக்குடுக்கத் துணிஞ்ச நீ, அந்த வைராக்கியத்தை உங்க ஆத்தா சொல்ற மாதிரி முழுநேரம் வேலை செஞ்சு நாளப்பின்ன ஒரு பெரிய ஆளா ஆகிக் காமிக்க வேண்டாமா ?

தமிழ் நாட்டையே ஆண்ட காமராசர் எந்தப் பள்ளிக்கூடத்தில படிச்சாருனு தெரியுமா உனக்கு. பள்ளிக்கூடத்தில் மழையைப் பார்த்துக்கொண்டு படிக்காமல் போன கி.ரா. ஒரு பல்கலைகழகத்துல சிறப்புப் பேராசிரியரா இருந்திருக்கார். கண்ணதாசன் படிச்சாரா என்ன ? எத்தனையோ கவிஞர்கள் இன்னிக்கு இருந்தாலும் உலகம் பூரா அவரத் தான இன்னும் கவியரசர்னு சொல்லுது. இப்படியே சொல்லிகிட்டே போகலாம் படிக்காத மேதைகளைப் பத்தி. வைராக்கியத்துல வேகமா இருக்கத விட விவேகமா இருக்கனும். பாடத்தவிட இதையல்லவா நீ படிச்சிருக்கனும் மொதல்ல. யோசிக்கறதே இல்ல, இந்தக் காலப் பசங்க சட்டுபுட்டுனு முடிவெடுக்கறீங்க. வாழ்ந்து காட்டணும், அது தான் வைராக்கியம்.

செல்லம்மாள் கொடுத்த நீர்க்காபியை அருந்திக் கொண்டே பரமசிவம் சொன்ன சொற்கள் காபியைவிடச் சூடாய் இருந்தது.

நாவன்னா கிட்ட பேசி உன்னோட படிப்புச் செலவுக்கு உதவி பண்ணச் சொல்லியிருக்கேன். நடந்தத மறந்துட்டு நல்லாப் படிச்சு, வேலைக்குப் போய்ட்டு பிற்பாடு நாவன்னாவுக்கு settle பண்ணிடு. என்ன நாஞ்சொல்றது என்று கேட்டார் பரமசிவம்.

கண்கள் மெல்லத் துடிக்க, உடலை சற்று நெளித்து எழுந்து அமர்ந்தான் சுந்தரபாண்டி. நாவன்னாவிடம், எப்ப வரணும்னு சொல்லுங்கய்யா வேலைக்கு என்றான் !

நாற்பது வருடம் முன்பு இவ்வுலகைவிட்டுப் பிரிந்த தன் தமையன் வேலுச்சாமியின் எண்ணம் பரமசிவத்தின் கண்களில் முத்துக்களாய் உதிர்ந்தது.

மார்ச் 30, 2009 யூத்ஃபுல் விகடனில்

-------------

இது எங்க சங்கத்து இருநூறாவது (200) பதிவு. அத பதியறதுல முதல்ல பெருமைப்படறேன். இந்த எண்ணிக்கைகு உழைத்த எங்க சங்கத்து மக்கள் அனைவருக்கும் என்னோட நன்றிய தெரிவிச்சுக்கிறேன்.

இதுவரைக்கும் படித்து, பின்னூட்டம் இட்டவர்களுக்கும் இனிமேலும் படிக்கப் போகிறவர்களுக்கு நன்றிகள் பல.

தஞ்சைப் படம், நம்ம தமிழ் ப்ளாக்ல இருந்து எடுத்து போட்டிருக்கேன். அதன் உரிமையாளருக்கு என் நன்றி.

கதை பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா

படம் பாரு கடி கேளூ - 13


ஐயையோ! ஒவரா குங்பூ ஜம்ப் பண்ணிட்டேனோ? அது என்னது கீழே கார் பஸ் எல்லாம் போகுது?

படம் பாரு கடி கேளூ - 12


ஆ! ஆ! டாக்டர் அந்த கடைசி பல்லு தான் கொஞ்சம் வலிக்குது. தைரியமா கையை விட்டு பாருங்க ப்ளீஸ்.

படம் பாரு கடி கேளு - 11


அப்பா! என்ன கனம்! கடைசி வரை இந்த பளு தூக்கிற போட்டியிலே எதை தூக்கணும்னு சொல்லாம ஏமாத்திட்டாங்களே! என் முதுகு வேறு நமநமன்னு அரிக்குது. யாராவது சொரிஞ்சு விடுங்க ப்ளீஸ்!

Wednesday, June 20, 2007

சிவாஜி வாயிலே ஜிலேபி


சின்ன வயதில் எல்லோரும் இந்த குறுக்கெழுத்து வார்த்தைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும், வார்த்தைகள் மாறாது. எனக்கு நினைவிருக்கும் இரண்டு:சிவாஜி
வாயிலே
ஜிலேபிடி
யில்
டில்லிசிவாஜி வாயிலே ஜிலேபி என்றால் ரசிகர்கள் வாயில் என்ன என்று முயற்சித்தேன். இதற்கு மேல் போகமுடியவில்லை.சி
சிவாஜி
ஜினி
இதிலும் முழு வார்த்தைகளில்லை. நாலெழுத்தில் ஒன்றும் தோன்றவில்லை. பார்ப்போம். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன் பின்னூட்டத்தில். நான் ஜெயிப்பவர்களுக்கு தண்டனையாக ஒரு தசாவதாரம் டிக்கெட் :-)

பின்னூட்டமிடும் மக்களே - நான் பாலின்ட்ரோம் தேடவில்லை. பாலின்ட்ரோம் என்றால் இடமிருந்து வடமாகவும் வடமிருந்து இடமாகப் படித்தாலும் ஒன்றாக இருக்கும். நான் கேட்பது - மூன்று வார்த்தைகள் - மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் - அட மேலே இருக்கும் வார்த்தைகள் போல - இருக்க வேண்டும்.

Monday, June 18, 2007

பொல்லாதவன்


பொல்லா தவனெறி நில்லா தவனைம் புலன்கடமை
வெல்லா தவன்கல்வி கல்லா தவன்மெய் யடியவர்பாற்
செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்
பில்லா தவன்மண்ணி லேன்பிறந் தேன்கச்சி யேகம்பனே.


சத்தியமாக இது நான் எழுதியதல்ல. கிண்டலாக வேறு யாரும் சமீபத்தில் யாரும் எழுதியதுமல்ல. நம் வெண்பா வேந்தர் சதங்காவையே கொந்தளிக்க வைக்கும் ரஜினி படத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை :) நம்மை பட்டினத்தார் சில நாட்களுக்கு முன் அலைக்கழித்தார் இல்லையா? அதிலிருந்து அவ்வப்போது அவரைக் கொஞ்சம் கண்டுகொள்வது வழக்கமாயிருக்கிறது. அப்படி கண்டுகொள்ளும்போதுதான் கண்டுபிடித்தேன் திருவேகம்பமாலையில் ஒளிந்திருக்கும் பொல்லாதவனையும், பில்லாவையும். மண்சோறு உண்டுவிட்டு பால்குடம் சுமந்து செல்லும் வழியில் இதைப் பாடிக்கொண்டு சென்றால் கொஞ்சம் புண்ணியம் கிட்டும்.

மேலே இருக்கும் பாடல் எளிமையானதுதான். இதை நீங்கள் உங்களுக்கு தெரிந்த பாடல் மெட்டில் பாட முயற்சித்தால் நான் பொறுப்பில்லை.(இரண்டாவது வரியிலேயே சித்து விளையாட்டு ஆரம்பித்து விடுகிறார் பட்டினத்தார்). இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவையென்றால் தமிழை நீங்கள் சன் டீவியோடு நிறுத்திக்கொல்வது உத்தமம்.

இன்னொரு பாடலைப் பார்ப்போம்.


வேதத்தி னுட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலை யோசெய்த புண்ணியத்தால்
ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம தாம்பொழுது
காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே.


இதில் மூன்றாம் அடிக்குத்தான் கொஞ்சம் உதவி வேண்டும். சூரிய சந்திர வொளிபோல ஆத்மா ஒளிமயமாகிற பொழுது(இறங்குங்காலத்தில்) மரணத்தின் பின்னுள்ள வழித்துணைக்குக் காதறுந்த ஊசியும் உடன் வாராது.

பட்டினத்தார் பாடல்கள் - திரு.வி.க. விளக்கவுரை. பொழிப்புரையும், விருத்தியுரையும் எழுதியிருக்கிறார். பல இடங்களில் மற்ற இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டியிருப்பதும் சுவையைக் கூட்டுகிறது. காதற்ற ஊசி பற்றி சொல்லும்போது, "பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால், உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார், கொண்ட விரதமும் ஞானமும் அல்லது, மண்டி அவருடன் வழிநடவாதே" திருமந்திரம்.

அன்னையின் தேகத்தை வாழைமட்டைகள் மேலிட்டு எரியச் செய்த பாடல்:


முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்
அன்னை யிட்டதீ யடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க மூள்கவே.


தாயைப் பற்றி உருகி உருகி பாடிய பட்டினத்தார் ஏன் பெண்களை போட்டுத் தாக்குகிறார்? தாயும் ஒரு பெண்தான் என்பதை மறந்ததேனோ?
இன்னும் நிறைய இருக்கிறது. ஒரு சில பாடல்களைப்பற்றி அவ்வப்போது எழுத உத்தேசம். ரிச்மண்ட் மக்கள் கரும்பு கொண்டு நம்மை புடைக்காமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

கங்கை புத்தக நிலையத்தாருக்கு ஒரு வேண்டுகோள். இப்படி பொ-ரை, வி-ரை என்று சுருக்கவேண்டாம். சுருக்கவேண்டுமென்றால், பொ:, வி: என்று எழுதினால் போதும்.

Where is Paradesi?

Where is Paradesi?

I am sure you all must have been wondering (Ok Ok. I can hear that. This is for the few who really wonder). Yes! I am in Chennai. I can't believe that I am in Chennai after more than 6 years. I am on vacation and just got some time to sit down and write a few lines. I haven't caught up with the articles (Sivaji review etc.) that Shan, Sathanga have posted. I just had a glance. I am trying to get the Tamil font loaded too. Of course, I will try to post some articles from here.

As I promised Murali and Sathanga, I went to Saravana Bhavan and had a nice dinner. But this Saravana Bhavan was the one in Mylapore. I will try to go to the other one and take a peek at Ranganathan Street also.

Will blog later.

Paradesi.

Got to go. Lot of things to do.

Sunday, June 17, 2007

சிவாஜி எனும் அக்கப்போர்

"அமெரிக்காவிலிருந்து தாய்நாடு திரும்பும் இளைஞர் (!) வில்லனை சமாளித்து, லஞ்சம் கொடுத்து ஊருக்கு நல்லது செய்கிறார் !"

இந்த ஒரு வரி (பழைய) கதைக்கு,


படமாக்க செய்த செலவு 80 கோடிக்கும் மேல்.

பில்ட்அப்-களுக்கு பஞ்சமே இல்லை.

நின்றால் ஒரு செய்தி, நடந்தால் ஒரு செய்தி.

சென்னையில் பால் குடம், பீர் குடம் அபிஷேகம் (எங்கே போய் முடியுமோ ?!)

10 ரூபா டிக்கட் ப்ளாகில் (நம்ம blog இல்லிங்கோ !) 500 ரூபாய்க்கு சென்னையில் விற்றிருக்கிறார்கள்.

திருச்சியில் 500 ரூபா நோட்டில் காந்தி இருக்குமிடத்தில் இவர்.

முன்னாள், இன்னாள் முதல் அமைச்சர்களுக்கு பிரத்தியேக காட்சி (அதிக கமிட்மென்ட் இல்லாத நமக்கே ஆயிரம் வேலை இருக்கும்போது, இவர்களால் எப்படி இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிறது என்று நினைக்கிறபோது வியப்பாகத் தான் இருக்கிறது !)

இதெல்லாம் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும், இணையச் செய்திகளிலும் வெளியானவை.


வலைப் பதிவர்கள் இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல,

முதல் விமர்சனம் போட்டாச்சில்ல என்கிறார் ஒருவர்.

ஒருவர் சொல்கிறார் பாபா படம் போல் ஆகவேண்டும் என்று.

இன்னொருவர் சொல்கிறார் 100 நாள் என்ன 1000 நாள் ஓடும் என்று.

படத்தை பார்ப்பதைப் புறக்கணியுங்கள் என்கிறார் கோபத்துடன் ஒருவர்.

logic விசயத்தில் நம்ம ஊர் என்றில்லை வெளிநாடுகளில் அடிக்காத கூத்தா என்கிறார் இன்னொருவர்.

அவர் கர்நாடகத்துக்காரர், தமிழனுக்கு உதவி செய்வதில்லை என்கிறார் மற்றவர்.

கர்நாடகம், காவிரி, தமிழன், ஒரு கோடி, இப்படி பல விசயங்களையும் அலசி அதிரவைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


சரி, விசயத்துக்கு வருவோம்.

பால் குடம் எடுப்பவருக்கும், பீர் பாட்டில் உடைப்பவருக்கும் நோக்கங்கள் இருக்கலாம். அவர்களைப் பொருத்தவரை என்றாவது ஒருநாள் 'தலைவர்' அரசியலுக்கு வருவார். நாமலும் நாலு காசு பார்க்கலாம் என்று.

படித்த, பண்புள்ள, பல நாடுகளில் வாழும் நாமும் 'சிவாஜி' பில்ட்அப்புக்கு சத்தமில்லாமல் உதவுகிறோம். ஒரு படம் நல்லா இருந்தா பாருங்கள். தாராளமா விமர்சனம் செய்யுங்கள். ஆனால் இன்றைக்கு தமிழ்மணத்தின் அனைத்துப் பக்கங்களிலும் நாம் காண்பது 'சிவாஜி' பற்றிய செய்தியே. இது சற்று வேதனை தரும் விசயம்.

நாம் பார்க்க, படிக்க, அனுபவிக்க, பகிர்ந்துகொள்ள எவ்வளவோ விசயங்கள் இருக்கும்போது, ஒரு பொழுதுபோக்குப் படத்திற்கு இத்தனை நேரம் செலவழிப்பது நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டிய ஒன்று. இந்தக் கால சூழலுக்கு பொழுதுபோக்கு மிக அவசியமான ஒன்று என்று மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தப் பொழுதுபோக்கு கொஞ்சம் ஓவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

உங்களுடைய பதிவுகள் வெறும் பின்னூட்ட எண்ணிக்கைக்கும், site traffic-க்கும் ஆக இருக்கும் பட்சத்தில் எனது கருத்துக்களை நீங்கள் நிராகரிக்கலாம். உங்களுக்கும் பீர் பாட்டில் உடைப்போருக்கும் வித்தியாசமில்லை என்பது எனது தாழ்மையான எண்ணம்.

இந்தா அந்தா என்று படமும் ரிலீஸாகிவிட்டது. இத்துடனாவது 'சிவாஜி' எனும் அக்கப்போர் ஓயவேண்டும் என்றும் மனம் குமுறும் வாலிபர் (!)

Saturday, June 16, 2007

பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 2

என்னோட ஆர்வமெல்லாம் இசை தான். சிறு வயதில், என் அண்ணனோடும், தம்பியோடும் சேர்ந்து இந்தியா முழுக்கசுத்தி நாடகங்களுக்கு இசை அமைச்சிருக்கேன்.

ஹார்மோனியம் தான் பிரதான வாத்தியம். பிறகு சென்னைக்கு வந்து பியானோவும், கித்தாரும் கத்துக்க ஆரம்பிச்சேன்.

அப்புறம் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் டிப்ளமோ பயின்று தங்கப் பதக்கம் பெற்றேன்.

ஆண்டவன் கிருபையில என்னோட வாரிசுகளையும் இசைத்துறையில பேர் சொல்ற அளவுக்கு கொண்டுவந்திட்டேன்.

இசைக்கு அப்புறம் எனக்கு புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் நிறைய உண்டு. • பிரபலம் யாருனு கண்டுபுடிச்சிருப்பீங்க, அவரே தான். இளையராஜா என்று அழைக்கப்படும் டேனியல் ராசய்யா அவர்கள்.


 • இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பல இந்திய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


 • இவரது இசையில் முதல் படமான அன்னக்கிளியில் வந்த 'மச்சானப் பாத்திங்களா' பாட்டு இன்றளவும் பேசப்படுகிறது.


 • சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான விருதுகள் பெற்றவர், தன் மாநிலம் தன்னை கெளரவிக்கவில்லையே என்ற தாக்கத்திற்கு ஆளானவர். பின்பு கலைமாமனி, இசைஞானி போன்ற பட்டங்கள் கிடைத்தது.


 • ஆசிய கண்டத்திலிருந்து ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர்.


 • ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.


 • காட்சியை விவரித்தவுடனே காகிதத்தில் இவருக்கு இதென்று notes எழுதிக் கொடுத்திடுவார். அவசரத்துக்கு எழுதற notes-ஆக இல்லாமல் அத்தனை துல்லியமாக இருக்கும் என்று இவரைப் பற்றி ப்ரமித்தவர் பிரபலமான இயக்குனர் மணிரத்தினம் அவர்கள்.


 • அரைமணி நேரத்தில தன்னால் ஒரு திரைக்கு இசை அமைக்க முடியும் என்றவர்


 • பஞ்சமுகி என்ற கர்நாடக ராகத்தை கண்டுபிடித்தவர்.


 • மக்களைக் கவரும் வண்ணம் இசையால் பல பல திரைப்படங்களை வெற்றிகரமாக்கி ஓடச் செய்து திரையில் பல ஹீரோக்களை உருவாக்கியவர்.


 • திருவாசகம் இசை வடிவில் அமைத்து புகழ் பெற்றார். அதற்கு உண்டாகும் தயாரிப்பு செலவை தன் ஒருவனால் செய்யமுடியும் என்றும் ஆனால் எல்லோரையும் சேர்த்து செய்து இது எல்லோராலும் உருவாகிய முயற்சி என்று மற்றவர்களையும் பெருமைப் படுத்தியவர்.


 • இன்னும் நிறைய ப்ரமிப்புக்கள் இளையராஜாவைப் பற்றி இருந்தாலும், பதிவின் நீளம் கருதி மிகச் சிலவே அளிக்கப்படுகிறது.

  மேலும் இவரைப் பற்றி ப்ரமிக்க சுட்டிகள் கீழே

  Internet Movie Database
  விக்கிபீடியா
  ராக்காம்மா

  Friday, June 15, 2007

  சிவாஜி விமர்சனம்

  அதோ வருகிறது, இதோ வருகிறது என்று பூச்சி காட்டிக்கொண்டு இருந்த சிவாஜி படம் வெளிவந்துவிட்டது. வந்தே விட்டது.... ரஜினி ரசிகர்கள் செய்யும் திவ்ய பாலாபிஷேக அலம்பல் பார்த்து புல்லரித்துப் போனேன். பாலை விரயம் செய்தால் பரவாயில்லை. இப்போது பீருக்கு வந்திருக்கிறார்களாம். கலி முத்திவிட்டது. இப்படி மக்களும் வவ்வால்களும் அத்தியாவசிய பொருட்களை விரயம் செய்வதை தடுக்க ஒரு சட்டம் வரவேண்டும்.

  சில விமர்சனங்கள் இதோ...

  இட்லிவடையாரின்
  குற்றப் பத்திரிக்கை (FIRஆம்).... பாவி. தலைவருக்கே FIRஆ?

  டுபுக்கு டவுன்லோடு செய்து பார்த்தேன் என்கிறார். சிவாஜின்னு பேரு இருக்கறதால மக்களோட குசும்பு ஜாஸ்தியாயிருக்கு...


  கொஞ்சம் விலாவாரியான (அந்த விலா இல்லை) விமர்சனம், சக்கரபாணியோடது... ரஜினி இவ்வளவு நாள் சென்றும் பட்டையைக் கிளப்புவதற்கு காரணத்தை நச்சுன்னு கடைசி பாராவில் கோடி காட்டியிருக்கிறார். ரிச்மண்ட் மக்கள் இந்த வாரக்கடைசியில் ஜென்மசாபல்யம் அடைவார்களாக!

  ஆனால் வலையில் ஜாக்கிரதையாக இருங்கள். இல்லாவிடில் இந்த மாதிரி சிவாஜி பஞ்ச் டயலாக் எல்லாம் படிக்க நேரிடும். மற்றபடி எல்லா 'சிவாஜி' விஷயங்களுக்கும் சிறில் அலெக்ஸ் வலையில் ஒரு கோவில் கட்டியிருக்கிறார். அங்கே போய் பார்த்து திவ்ய தரிசனம் செய்யுங்கள்.

  கடைசியாக - குதிரையின் வாயிலிருந்தே..... (தயவு செய்து பாலையும், பீரையும் கணினித் திரையில் கொட்ட வேண்டாம்)


  Wednesday, June 13, 2007

  நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி...

  டும், டும், டும்.....

  நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி. தலைவர் நாகு அவர்களுக்கு ஒரு சந்தே.. ஹி.. ஹி... பழக்க தோஷம்.... சரி நேரா சப்ஜெக்டுக்கு வருகிறேன்.

  அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஆவலுடன் மாதா மாதம் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு தகவல் இதுதான். இந்த மாதம் நல்ல செய்தி.

  க்ரீன்கார்டை நோக்கி நெடும்பயணம் செய்யும் மக்கள் முகத்தில் புன்னகை பூக்கும் காலம் வந்து விட்டது. வக்கீல் அலுவலகத்தில் வியர்வை சிந்திய எம் குல மக்கள் ஆனந்தமாக அஞ்சாமல் வீடு வாங்கி கடனாளியாகும் காலம் கனிந்து விட்டது. உத்தியோக சம்பந்தப்பட்ட அனைத்து விதமான விசாக்களும் கரண்ட். எனதருமை மக்களே... படையெடுங்கள் உடனே. தூங்கும் உங்கள் வக்கீல் அலுவலகத்துக்கு சென்று தட்டியெழுப்புங்கள் சிங்கங்களே....

  டிபண்டெண்ட் விசாத் துணைகளே(politically correct ma..), பேசாம ஒரு பேங்க் எம்ப்ளாயியை கல்யாணம் செய்து கொண்டு நிம்மதியாக இந்தியாவில் இருந்திருக்கலாம் என்ற புலம்பலை நிறுத்தி, சதங்கா எழுதிய மாதிரி ஒரு விருந்து படையுங்கள் பார்க்கலாம்! சீனக்கடையில் உறைந்த வாழையிலை கிடைக்கிறதாகக் கேள்வி! முதலில் defrost செய்து கொள்க. இல்லாவிடில் அப்பளத்துடன் சிறிது வாழையும் இறங்கும்.

  Sunday, June 10, 2007

  விருந்து  தழுவி வரவேற்று
  தலைவாழை இலைபோட்டு

  அறுசுவைக் காய்கறிகள்
  அரணென நிறுத்தி

  இட்ட சாதத்தில்
  விட்ட நெய்கிளறி

  சொட்டு நீர்விட்டு
  உட்கொளல் ஆரம்பம்

  தாளித்த சாம்பாரும்
  புளித்த மோர்க்குழம்பும்

  தக்காளி ரசத்தின்பின்
  தயிர்சாதம் பிசைந்துண்ண

  வடைபாயசம் அப்பளம்
  தடையின்றி தானிறங்க

  நறுக்கிவைத்த ஆப்பிள்
  ஆரஞ்சு மாம்பழம்

  சிலதுண்டு வாயில்போட்டு
  சிலாகித்து உள்ளிறங்க

  காம்புகிள்ளி வெற்றிலை
  காரத்துடன் நான்மெல்ல

  உண்டு முடியுமுன்
  துணிந்ததென் உறக்கமுமே

  என்னென்று வியப்பேன்
  எளிதில் மறவேன்.

  Friday, June 08, 2007

  கவிநயாவின் பரிசுப் பெற்ற காட்சிக்கவிதை

  அன்புடன் கவிதைப் போட்டியில் கவிநயாவின் காட்சிக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது. கவிநயாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!


  அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - காட்சிக்கவிதைப் பிரிவு
  நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
  ===========================================================

  ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 1
  காட்சி வடிவம் இறுதியில் தரப்பட்டுள்ளது

  அருவி

  உலகத்து மாந்தர்களின்
  உள்ளத்து அன்பெல்லாம்
  ஒன்றாகத் திரண்டு வந்து
  அருவியெனப் பொழிந்ததுவோ!

  அன்புக்கு அளவில்லை;
  அருவிக்கோ அணையில்லை!

  கட்டுப்பாடின்றித் துள்ளும்
  காட்டாற்று வெள்ளம்போல்
  அட்டகாசமாய்ச் சிரித்து
  ஆர்ப்பாட்டமாய் விழுந்து
  ஆசையுடன் புவி தழுவும்
  அற்புதமும் இதுதானோ!

  வைரக் கற்கள் தம்மை
  வஞ்சனை யின்றிவாரி
  வழியெங்கும் இறைத்ததுபோல்
  துளித்துளியாய் துள்ளுகின்ற
  நீர்த்துளியின் உயிரினுள்ளே
  காதலுடன் கதிர்நிறைத்து
  கண்மலரக் கதிரவன்தன்
  ஒளிசிதறச் செய்தானோ!

  பரவசமாய்ச் சரசமிடும்
  பாதங்கள் பண்ணிசைக்க
  நவரசங்கள் காட்டுகின்ற
  நர்த்தனப் பெண்களைப் போல்
  பல வண்ண ஆடைகட்டி
  மனங் கவர ஒளிவீசி
  ஆலோலப் பாட்டிசைத்து
  ஆனந்த நடனமிட்டு
  கற்பனைக்கும் எட்டாமல்
  கருத்தினைக் கவர்ந்து கொள்ளும்
  இயற்கைத் தேவதையின்
  இன்னெழிலும் இதுதானோ!

  - கவிநயா என்றழைக்கப்படும் மீனா
  ரிச்மண்ட், அமெரிக்கா

  Wednesday, June 06, 2007

  மூப்பு

  காலையிலிருந்து ஒரே கேள்வி மண்டையை குடைந்து கொண்டிருக்கிறது. குளித்துக் கொண்டிருக்கும்போது இந்த வரி ஞாபகத்திற்கு வந்தது. 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'. நேற்று பேங்க் பேலன்ஸ் பார்த்ததாலா, இல்லை பசங்கள் கேட்ட விளையாட்டு சாதனத்தாலா என்று தெரியவில்லை. நீங்கள் நினைக்கிற மாதிரி 'ஒரு நகை நட்டு உண்டா' என்ற டயலாக்கிலிருந்து இல்லை.

  மனம் அந்த வரிகளை அசை போட ஆரம்பித்தது. ஆஹா என்ன வரி? எப்படி ஒரு உதவாத பொருளை வைத்து எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறார். இதை புரியும்படி எப்படி மகன்களுக்கோ, காதற்ற ஊசி போல பல விஷயங்களை வாங்கப் பார்க்கும் நம்ம வீட்டு பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டுக்கோ சொல்வது?
  இங்க பாரு மக்கா, இதுக்கெல்லாம் அடிச்சிக்கறீங்களே - கடைசீல இத எல்லாமா கொண்டு போகப்போறீங்கன்னு கேட்டிருக்காரு பாருங்க அப்படின்னு ஒரு பில்ட் அப் கொடுத்து ஒரு பெரிய லெக்சர் அடிக்கலாமே. சரி யாரு சொன்னது இதை.

  இது நம்மளுக்கு ரொம்ப தெரிஞ்ச விஷயமாச்சே. அட சட்னு பேரு வரமாட்டெங்குது. அதாம்பா பெரிய பணக்காரரா இருப்பாரு. அழகா ஒரு பையன் பிறப்பான். இவர விட வியாபாரத்துல பெரிய ஆளா வருவான். பையன் பேர்கூட திருவெண்காடன். அது பையன் பேரா, அப்பா பேரா? பையன் வியாபாரத்துக்கு வெளிநாடு போயி ரொம்ப பொருளெல்லாம் வாங்கிட்டு வருவான். இவரு போயி திறந்து பாத்தா எல்லாம் வரட்டியா இருக்கும். கோபத்துல பையன அடிக்க தேடுவாரு. ஒரு துண்டுசீட்டுல 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே'ன்னு எழுதிட்டு பையன் எஸ்கேப். பையன் வேறுயாருமில்லை. இறைவந்தான். அப்பறம் இவருக்கு ஞானம் வந்து எல்லாத்தையும் துறந்துட்டு ஆண்டியாவாரு.

  அட - இவரு பேரு இப்பகூட தெரியாட்டி கேவலம். பேரு தெரியறவரைக்கும் படுத்தப்போவுது. பல்லிடுக்குல மாட்டின மாம்பழ நாரு மாதிரி உறுத்திட்டே இருக்கும்.

  டி.எம். சௌந்தரராஜன்கூட நடிச்சிருப்பாரு. படம்பேரு இவருபேருதான். பாட்டெல்லாம் பிரமாதமாயிருக்கும். இவரு நாயன்மாரா இல்லையா? சரியா தெரியலை. பெரிய சித்தரு. இவரு ஆண்டியா அலையறாரு குடும்ப மானம் போகுதுன்னு இவரு அக்கா ஆப்பத்துல விஷம் வெச்சு இவருக்கு பிச்சை போடுவாங்க. அதுல விஷம் இருக்கறது தெரிஞ்சு ஓட்டப்பம் வீட்டைச் சுடும்னு ஆப்பத்தை கூரை மேல போடுவாரு. வீடு எரிஞ்சி போயிடும். அட வீடு கிடக்கட்டும். அவரு பேரு என்னா. சட்.

  அக்கா புருஷனா எம்.ஆர். ராதா கலக்கியிருப்பாரு. ஊர்ல யாரோ கெளப்பிவிட்டு ரெண்டாம் ஷோ போயி, நா ஒருத்தன் தான் தியேட்டர்லியே முழிச்சிருந்தேன். டி.எம்.எஸ். ரொம்ப சின்னவயசா இருப்பாரு. நல்ல கம்பீரம். அவருக்கே இந்த படம் ஞாபகம் இருக்கோ இல்லியோ. நம்மள இந்த ப்ரச்னை இப்படி வாட்டுதே?

  அம்மா சாகறவரைக்கும் அந்த ஊர்லயே சுத்திக்கிட்டு இருப்பாரு - இல்லையே அது ஆதி சங்கரர் கதையோ? இல்ல இதுலயும்தானா?? என்னடா ஒரே குழப்பமாயிருக்கு. அம்மா செத்த உடனே கொள்ளி வைக்கும்போது, அம்மா உடலை விறகுக்கட்டையேல்லாம் வாட்டும்னு வாழத்தண்டுங்க மேல போட்டு கொள்ளி வச்சாரு. அப்ப அவர் பாடுன பாட்டுகூட ரொம்ப உருக்கமா இருக்கும்.

  அம்மா செத்ததுக்கப்பறம் இவரு கெளம்பி ஊர் ஊரா சுத்துவாரு. ஒரு ஊர்ல திருடனுங்க அரண்மனைல நகைய திருடிட்டு ஓடும்போது இவர் மேல போட்டுட்டு போயிடுவானுங்க. இவர திருடன்னு நினைச்சு ராஜாகிட்ட கூட்டிட்டுபோயி ராஜா இவர கழுவேத்த உத்தரவு போடுவாரு. கழுவேத்தறதுன்னா உங்க எத்தன பேருக்கு தெரியும்? அப்பறம் சொல்றேன். இப்ப சித்தர கண்டுபிடிக்கனும். டி.எம்.எஸ்(இவரு, இவருன்னு சொன்னா சித்தரா, ராஜாவான்னு நீங்க குசும்பு பண்ணுவீங்கன்னு தெரியும்) உடனே ஒரு பாட்ட எடுத்து உட்ட உடனே கழுமரம் எரிஞ்சி போயிடும். அப்பறம் அந்த ராஜாவும் இவரு சிஷ்யனாயி இவரு பின்னாடியே வந்துருவாரு. அந்த சிஷ்யருக்கு ஒரு நாயி தோஸ்த் ஆயிடும். இவரு சிஷ்யரு பந்தபாசம் எல்லாம் உட்றனும்னு சொல்லி அந்த நாய் மண்டைலியே திருவோட்டால ஒரு போடு போட்டு தள்ளிடுவாரு. இவருடைய சிஷ்யகோடி இவருக்கு முன்னாலியே மோட்சம் வாய்க்குவாரு. அட இவ்ளோம் பெரிய மனுஷன். இன்னமும் பேர் ஞாபகம் வரமாட்டிங்குது. என்ன லொள்ளுய்யா இது...

  அப்பறம் சோழராஜா வந்து இவரண்ட கண்டுக்குவாரு. சோழராஜா யாருன்ரீங்க. நம்ம மேஜர்னு நெனக்கிறேன். மேஜர் தமிழ்ல சொல்லி இங்கிலிஷ்ல சொல்லாத ஒரே படம் இதுதான்னு நெனக்கிறேன். அப்பறம் கரும்ப வெச்சு சித்தர் பிலாசபியெல்லாம் உடுவாரு. ஆரம்பத்துல இனிக்கும் முடிவுல கசக்குற வாழ்க்க மாதிரி (ஆரம்பம் கரும்போட அடியில இருந்து). அப்பறம் கொஞ்சம் சித்து விளையாட்டுல்லாம் விளையாடுவாரு. விளையாடற பசங்கள கூப்ட்டு மேல ஒரு கூடய கவுக்க சொல்லிட்டு மாயமா அவங்க பின்னாடி இருந்து வருவாரு. ரெண்டு, மூனுவாட்டி இது மாதிரி பண்ணிட்டு அப்பறம் கூடய கவுத்திட்டு தொறந்து பாத்தா - சிவலிங்கமாயிருப்பாரு. அதாம்பா மோட்சம் வாங்கி எஸ்கேப்.

  இவ்ள விஷய்ம் ஞாபகம் வருது, பேரு மட்டும் தெரியலையே? அய்யோ, அய்யோ!!!

  அப்பறம் எங்கியாவது குளிக்கும்போது ஞாபகம் வந்து யுரேகா, யுரேகான்னு ஓடப்போறேன். அதுசரி. அப்டி ஓட்னது யாரு? போச்சுறா. இன்னொரு பேரும் அவுட்டா? ஆமா நம்ப பட்டினத்தாரு பேரே மறந்து போ...

  ஹையா!!!! பட்டினத்தார்!!!!! பட்டினத்தார்!!!!!!! ஆகா நம்ப ஞாபகசக்தியே ஞாபகசக்தி!

  யுரேகா பார்ட்டிய அப்பறம் பாக்கலாம். பட்டினத்தார் பத்தி உடனே கூகுளாண்டவர் கிட்ட கேக்கனும். நமக்கு தெரிஞ்ச விஷயத்துல எவ்ள நிஜம் எவ்ள உல்ட்டானு பாக்கறதுக்கு.

  ரங்கநாதன் தெரு - தொடர்ச்சி


  விக்கி பீடியாவில் ரங்கநாதன் தெரு பற்றி இருக்கிறது என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.


  மேலும் தகவல் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும். http://en.wikipedia.org/wiki/T.Nagar
  அன்புடன்,
  முரளி.

  Tuesday, June 05, 2007

  ரங்கநாதன் தெரு, சென்னை

  எப்போது சென்றாலும்
  தப்பாமல் வேறுவழி
  மாற்றிவிடும் காவலர்
  மாறிவிடும் மக்கள்

  தெருவிற்குள் நுழைகையிலே
  பல்லடுக்கு மாடிக்கடை
  சிலபடிகள் கொண்டகடை
  மணற்சாலைக் குட்டிக்கடை

  இருபுறமும் கடைபரப்பி
  நடுவகிடாய் மக்கள்வெள்ளம்
  பண்டிகை என்றில்லை
  என்னாளும் திருநாளே

  பறவைப் பார்வையிலே
  தார்ச்சாலை நெளிவதுபோல்
  மாடியேறி கீழ்நோக்கின்
  தலைச்சாலை ஆகும்தெரு

  பாத்திரங்கள் பளபளக்க
  அணிமணிகள் மினுமினுக்க
  நகைக்கடைகள் ஜொலிஜொலிக்கும்
  புகைமண்டலமாகும் தெரு

  சுவாசிக்கும் நம்உள்ளம்
  மாசென்று அறிந்தபோதும்
  குப்பைக்குக் குறைவில்லை
  சுத்தமா(க்)க வழியில்லை

  குறுகிய இத்தெருவில்
  கடுகிவழி நடந்தால்
  தொண்டைக்குழி வறண்டிருக்கும்
  தொப்பலாய் நனையும்உடை

  ஒன்றை இரண்டுக்கும்
  இரண்டை மூன்றுக்கும்
  விற்பவர்கள் ஏராளம்
  கற்றதில்லை அவர்பாடம்

  வாலிபத்தைத் தாண்டியவன்
  வசதியற்ற காரணத்தால்
  காலம் கடந்தபின்
  வாய்ப்பாடு கூவுகின்றான்

  கடைகடையாச் சுத்திவர
  கடைசிவரை நேரமில்லை
  வேண்டியது வாங்கவில்லை
  அண்டியது அயற்சிமட்டும்

  மீண்டும் வந்திங்கு
  தேவையான பொருள்வாங்க
  எண்ணவே முடியவில்லை
  இருந்தும் மக்கள்கூட்டம்.

  மார்ச் 31, 2009 யூத்ஃபுல் விகடனில்

  Sunday, June 03, 2007

  படம் பாரு கடி கேளு - 10


  அப்பா அப்பா அந்த போலீஸ் மாமாவை கூப்பிட்டு அந்த துப்பாக்கி எங்கே வாங்கினார்னு கேட்டு எனக்கும் அது மாதிரி ஒரு துப்பாக்கி வாங்கி குடுப்பா!

  டேய் கம்னு இருடா. ஹெல்மெட்டுக்கு பதிலா குல்லா போட்டுக்கிட்டு வந்திருக்கோம். அவருக்கு தெரியாம நைஸா நழுவிடலாம்னு பார்த்தா அவரை வேறு கூப்பிடு அப்படீங்கிறியே!

  படம் பாரு கடி கேளு - 9


  அட சீ கையை தூக்கு. கல்யாணத்தில் தாலிக்கு ஆசீர்வாதமா பண்றே?
  ஜனாதிபதி பதக்கம் இது.

  Saturday, June 02, 2007

  ஜூன் மாத லொள்ளு மொழிகள்

  பந்திக்கு முந்து
  படைக்கு பிந்து
  ப்ளாக் எழுத கப்னு குந்து

  பாலாடையில் பால் விடலாம்
  நூலாடையில் நூல் விட முடியுமா?