Monday, June 18, 2007

பொல்லாதவன்


பொல்லா தவனெறி நில்லா தவனைம் புலன்கடமை
வெல்லா தவன்கல்வி கல்லா தவன்மெய் யடியவர்பாற்
செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்
பில்லா தவன்மண்ணி லேன்பிறந் தேன்கச்சி யேகம்பனே.


சத்தியமாக இது நான் எழுதியதல்ல. கிண்டலாக வேறு யாரும் சமீபத்தில் யாரும் எழுதியதுமல்ல. நம் வெண்பா வேந்தர் சதங்காவையே கொந்தளிக்க வைக்கும் ரஜினி படத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை :) நம்மை பட்டினத்தார் சில நாட்களுக்கு முன் அலைக்கழித்தார் இல்லையா? அதிலிருந்து அவ்வப்போது அவரைக் கொஞ்சம் கண்டுகொள்வது வழக்கமாயிருக்கிறது. அப்படி கண்டுகொள்ளும்போதுதான் கண்டுபிடித்தேன் திருவேகம்பமாலையில் ஒளிந்திருக்கும் பொல்லாதவனையும், பில்லாவையும். மண்சோறு உண்டுவிட்டு பால்குடம் சுமந்து செல்லும் வழியில் இதைப் பாடிக்கொண்டு சென்றால் கொஞ்சம் புண்ணியம் கிட்டும்.

மேலே இருக்கும் பாடல் எளிமையானதுதான். இதை நீங்கள் உங்களுக்கு தெரிந்த பாடல் மெட்டில் பாட முயற்சித்தால் நான் பொறுப்பில்லை.(இரண்டாவது வரியிலேயே சித்து விளையாட்டு ஆரம்பித்து விடுகிறார் பட்டினத்தார்). இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவையென்றால் தமிழை நீங்கள் சன் டீவியோடு நிறுத்திக்கொல்வது உத்தமம்.

இன்னொரு பாடலைப் பார்ப்போம்.


வேதத்தி னுட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலை யோசெய்த புண்ணியத்தால்
ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம தாம்பொழுது
காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே.


இதில் மூன்றாம் அடிக்குத்தான் கொஞ்சம் உதவி வேண்டும். சூரிய சந்திர வொளிபோல ஆத்மா ஒளிமயமாகிற பொழுது(இறங்குங்காலத்தில்) மரணத்தின் பின்னுள்ள வழித்துணைக்குக் காதறுந்த ஊசியும் உடன் வாராது.

பட்டினத்தார் பாடல்கள் - திரு.வி.க. விளக்கவுரை. பொழிப்புரையும், விருத்தியுரையும் எழுதியிருக்கிறார். பல இடங்களில் மற்ற இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டியிருப்பதும் சுவையைக் கூட்டுகிறது. காதற்ற ஊசி பற்றி சொல்லும்போது, "பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால், உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார், கொண்ட விரதமும் ஞானமும் அல்லது, மண்டி அவருடன் வழிநடவாதே" திருமந்திரம்.

அன்னையின் தேகத்தை வாழைமட்டைகள் மேலிட்டு எரியச் செய்த பாடல்:


முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்
அன்னை யிட்டதீ யடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க மூள்கவே.


தாயைப் பற்றி உருகி உருகி பாடிய பட்டினத்தார் ஏன் பெண்களை போட்டுத் தாக்குகிறார்? தாயும் ஒரு பெண்தான் என்பதை மறந்ததேனோ?
இன்னும் நிறைய இருக்கிறது. ஒரு சில பாடல்களைப்பற்றி அவ்வப்போது எழுத உத்தேசம். ரிச்மண்ட் மக்கள் கரும்பு கொண்டு நம்மை புடைக்காமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

கங்கை புத்தக நிலையத்தாருக்கு ஒரு வேண்டுகோள். இப்படி பொ-ரை, வி-ரை என்று சுருக்கவேண்டாம். சுருக்கவேண்டுமென்றால், பொ:, வி: என்று எழுதினால் போதும்.

11 comments:

 1. //தமிழை நீங்கள் சன் டீவியோடு நிறுத்திக்"கொல்"வது உத்தமம்.. //

  haha..

  ReplyDelete
 2. பட்டினத்தார் பாடல்கள் முற்பகுதி வரை (தன் தாய்க்கு எரியூட்டும் வரை) பெண்களை இழிவாக கூறும் பாடலாகவும், அதன் பின் ஆழ்ந்த தத்துவங்களுடன் சைவ சித்தாந்த விளக்க பாடல்களாக அமைந்தன என எங்கேயோ படித்த நியாபகம். ஆனால் ஏன் இழிவாக பாடினார் என தெரியவில்லை.

  ReplyDelete
 3. என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. கலைஞன் பதிப்பகம். ஆசிரியர் நா.சுப்புரெட்டியார். அதில் பிரபலமான 'காதற்ற ஊசி' பாடல் நீங்கள் குறிப்பிட்டது போல அல்லாமல் இப்படி வருகிறது.


  வாதுற்ற திண்புயர் அண்ணா
       மலையார் மலர்ப் பதத்தைப்
  போதுற்ற போதும் புகலுநெஞ்
       சே!இந்தப் பூதலத்தில்
  தீதுற்ற செல்வம்என் தேடிப்
       புதைத்த திரவியம்என்
  காதற்ற ஊசியும் வாராது
       காணும் கடைவழிக்கே


  நம்ம ஊரில் சரியான வரலாற்றுக் குறிப்புக்கள் இல்லை எந்த ஒரு படைப்புக்கும். நா.சு. அவர்களே சொல்கிறார், மூன்று விதமான பட்டினத்தார்களின் கதையை. எது சரி, எது தவறு என்று தெரியவில்லை. அதுபோல பெண்களை அவர் இழிவுபடுத்தும் பாடல்கள் எழுதியதாகச் சொல்வதும் இடைச்செறுகலாக இருக்கலாம்.

  ReplyDelete
 4. //அதில் பிரபலமான 'காதற்ற ஊசி' பாடல் நீங்கள் குறிப்பிட்டது போல அல்லாமல் இப்படி வருகிறது.//

  அந்த அடியில் முடியுமாறு இரண்டு மூன்று பாடல்கள் இருக்கின்றன. நான் எளிமையாக(எனக்கு) இருந்ததை எடுத்து எழுதினேன்.

  ReplyDelete
 5. அருமையான பாடல்களுடன் நன்றாகப் பதிந்திருக்கிறீர்கள். உங்களுடைய வெற்றி timing தான். சரியான நேரத்தில் சரியான பாடலுடன் ஆரம்பித்தது சிறப்பு. அப்புறம் உங்கள் நகைச்சுவை நடை. இதிலும் அசத்திவிட்டீர்கள். தொடர்ந்து பட்டினத்தார் விருந்து படையுங்கள்.

  ReplyDelete
 6. நாகு,

  //அந்த அடியில் முடியுமாறு இரண்டு மூன்று பாடல்கள் இருக்கின்றன. நான் எளிமையாக(எனக்கு) இருந்ததை எடுத்து எழுதினேன்.//

  தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

  "அன்னையிட்ட தீயை"ப் பற்றி ஒருவர் அருமையான கதை எழுதியிருக்கிறார். பாசம் எனும் தலைப்பில் கீழ்க்காணும் சுட்டியில் உள்ளது அக்கதை.

  பாசம்

  அப்படியே இந்தப்பாடலும் அந்தச் சூழலலும் நம் கண்முன்னே நிற்பதை உணரலாம்.

  ReplyDelete
 7. மிக்க நன்றி, Shan.

  தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 8. நாகு,

  ஒரு 5-6 முறை படித்துவிட்டேன், சொல்ல ஒரு வார்த்தையில்லை. மிக மிக நன்றாக பதிந்திருகின்றீர்கள்.

  //தாயைப் பற்றி உருகி உருகி பாடிய பட்டினத்தார் ஏன் பெண்களை போட்டுத் தாக்குகிறார்?
  தாயும் ஒரு பெண்தான் என்பதை மறந்ததேனோ?//

  அவர் பெண்களை ஏசவில்லை. காமத்தின் பால் பட்டு வாடும் மானுடர்களை கரை சேர்க தன்னை முன்னிருத்தி பாடல் இயற்றியுள்ளார்.
  அவர் காமத்தை வென்றவர், அவர் மானுடர்கள் தங்கள் தேகத்தின் மீதுள்ள பற்றை விட்டுவிட வேண்டும் என்று உரைக்கிறார்.

  எரியெனக்கு என்னும் புழுவோ
  எனக்கெனும் இந்த மண்ணும்
  சரி எனக்கு என்னும் பருந்தோ
  எனக்கு எனும் தான் புசிக்க
  நரியெனக்கு என்னும்புன் நாய்எனக்கு
  என்னும் இந்நாறு உடலைப்
  பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறு எனக்கே

  என்கிறார்.

  //இன்னும் நிறைய இருக்கிறது. ஒரு சில பாடல்களைப்பற்றி அவ்வப்போது எழுத உத்தேசம்.
  ரிச்மண்ட் மக்கள் கரும்பு கொண்டு நம்மை புடைக்காமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.//

  தைரியமாக எழுதுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் (எங்கெங்கே வீங்கியிருக்குன்னு)

  சதங்கா,

  நீங்கள் தந்துள்ள பாசம் linkஐ மீண்டும் தரவும், அதில் சொடுக்கினால் எந்த வலைதளத்துக்கும் செல்லவில்லை.

  அன்புடன்,

  முரளி.

  ReplyDelete
 9. நன்றி முரளி. உங்களிடமிருந்து பேச்சேயில்லையே. சரி நாம் எழுதியது பிடிக்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

  பெண்கள் குறித்த விளக்கத்திற்கு நன்றி. அந்த கண்ணோட்டத்தில் பிறகு படித்துப் பார்க்கிறேன். பாசம் link எனக்கும் வேலை செய்யவில்லை.

  ReplyDelete
 10. ஏதோ technical faultனு நெனைக்கிறேன்.

  link try பண்ணுங்க.

  பாசம்

  திரும்பவும் வேலை செய்யவில்லை என்றால், கீழே உள்ள url அப்பி ஒட்டுக ;-)

  http://noolaham.net/library/books/01/84/84c.htm

  ReplyDelete
 11. சதங்கா,

  பாசம் லிங்க் வேலை செய்கிறது. படித்து விட்டு பதிலிடுகிறேன்.

  நாகு:

  //உங்களிடமிருந்து பேச்சேயில்லையே. சரி நாம் எழுதியது பிடிக்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். //

  என்ன இது சின்னபுள்ளத் தனமாயிருக்கு, நீங்க எழுதி பிடிக்காமலா!

  என்னிடம் இருக்கும் பட்டினத்தார் பாடல் புத்தகத்தில் பாடல்களுக்கு விளக்கமும் இருக்கிறது அது படிக்க படிக்க மேலும் மேலும் பலப்பல விளக்கங்களை எனக்கு விளக்குகிறது.

  அதில் ஒரு பாடல், பாடல் முழுவதுமாக நினைவு இல்லை ஆனால் விளக்கம் நினைவில் இருக்கிறது

  மண்ணும் தனலாற
  விண்ணும் புகையாற
  என்னற்றத் தாய் மார் இளைப்பாற
  நான் காலாறவும்
  அயனும் கையாறவும்
  அருள்வாய் அய்யா திருவையாறா

  என்ற பாடல்
  விளக்கம்.

  மண்ணும் தனலாற - எனக்கு அடுத்து பிறவி இல்லை என்றால், என்னை பூமியில் வெச்சு கொளுத்த வேண்டியது இல்லை
  விண்ணும் புகையாற - அப்படி கொளுத்தி கொளுத்தி வானம் முழுவது புகையாக வேண்டியது இல்லை
  என்னற்றத் தாய் மார் இளைப்பாற - அடுத்து ஒரு தாயின் வயிற்றில் பிறந்து அவள் என்னை பெற வேண்டிய சொர்வு இல்லை
  நான் காலாறவும் - என் பிறவிப் பெருங்கடனை தீர்க்க நான் நடந்து நடந்து கால் தேயவேண்டியது இல்லை
  அயனும் கையாறவும் - என்னை மீண்டும் மீண்டும் படைக்கின்ற ப்ரம்மாவும் கை சோர்ந்து போக வேண்டியது இல்லை
  அருள்வாய் அய்யா திருவையாறா - இதை எனக்குத் தருவாய் திருவையாற்றில் இருக்கும் சிவனே என்கிறார்.

  அவருடைய சில (பல என்றே சொல்லலாம்) பாடல்கள் நம் முகத்தில் திராவகமாக அறைகிறது ஆனால், அவை ஒரு அவதாரப் புருஷன் அன்றி வேறு யாராலும் சொல்ல முடியாத விளக்கங்கள்.

  அன்புடன்,

  முரளி

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!