Showing posts with label சேமிப்பு. Show all posts
Showing posts with label சேமிப்பு. Show all posts

Monday, July 06, 2009

வலை வலம்

உங்க வீட்டில் மீன் அல்லது பூண்டு குழம்பு வைத்த பாத்திரம் ஒரு வாரம் கழுவிய பின்னும் அந்த வாசம் போகவில்லையா? உங்கள் காலனிகளில் தார் பட்ட கறையை எடுக்க வேண்டுமா? இதுபோல பல கேள்விகளுக்கு நல்ல உபயோகமுள்ள டிப்ஸ் இந்த வலை தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளனர். மேலும் இந்த தளத்திற்கு நீங்கள் டிப்ஸ் வழங்கி அது பதிவானால், Clean Water Fund என்ற பயனுள்ள அமைப்பிற்கு இவர்கள் இருபத்தி ஐந்து சென்ட் (கால் டாலர்) டோனஷனாக வழங்குகிறார்கள். இந்த தளத்தை பாவிக்க எந்த கட்டணமும் இல்லை, உங்கள் ஈமெயில்-ஐ-டி-யும் கொடுக்க வேண்டியதில்லை. இதுபோல மற்றொரு தளம் http://www.ehow.com . இது போல உங்களுக்கு தெரிந்த உபயோகமுள்ள தளங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

நம்மில் பலரும் அமெரிக்க நிறுவனங்களின் தொலைபேசிவழி செவகர்களுக்காக பல

மணி நேரங்கள் காத்திருந்து நேரத்தை வீணடித்திருப்போம். பல சமயம் இணைய வழி நிறுவனங்களுக்கு கஸ்டமர் சர்வீஸ் தொலைபேசி எண்ணை கண்டுபிடிக்கவே முடியாது. இந்த தகவல்களையெல்லாம் http://gethuman.com/ என்ற தளத்தில் விரிவாக தொகுத்து வழங்குவதுடன், விரைவாக மனித செவகர்களை அடைய வழிகளையும் கொடுத்துள்ளார்கள். நீங்கள் ஐ-போன் வைதிருப்பவரானால், அதில் பாவிக்கவும் இவர்கள் ஒரு மென்பொருளை கொடுக்கின்றனர்! என்னோட ஐ-போனில் இதை ஏற்றி வைத்துள்ளேன், சமயத்திற்கு உதுவும் நண்பன்!

உங்க வீட்டில் திருடன் கதவு/சன்னல் உடைத்து நுழைய முற்பட்டால் என்ன செய்வீர்கள்?

சில வீடுகளில் ஹோம் அலாரம் போன்ற சந்தா கட்டிய செக்யூரிட்டி அமைப்புகள் வைத்திருந்தால் அது உடனே அந்த நிறுவனத்தை அலர்ட் செய்யும். நம்மில் பலருக்கு இந்த வசதி வீட்டில் இருக்காது. திருடன் நுழைய முற்படுவதை நீங்கள் பார்த்துவிட்டால் உடனே 911 அழைத்தால் போலீஸ் வந்துவிடும். ஆனால் வரும் வரை திருடனை சமாளிக்க வேண்டுமே! சரி

உங்கள் தொலைபேசி வேலை செய்யாவிட்டால் இதுவும் சாத்தியமில்லை (எங்க வீட்டினுள் செல்லிடை தொலைபேசி சில சமயம் வேலை செய்வதில்லை). உங்க வீட்டில் காரில் பொதுவாக "keyless entry /alarm" சாவி வைத்திருந்தால் அதை வைத்து திருடனுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம். அதிலுள்ள "Panic" சிவப்பு பொத்தானை அமுக்கினால் உடனே உங்கள் காரில் இருக்கும் அலாரம் அடிக்க ஆரம்பிக்கும். இது காரின் பேட்டரி சாகும் வரை சத்தம் கொடுக்கும். இதை காணும் திருடன் உடனே இடத்தை காலி செய்து ஓட வாய்ப்புகள் அதிகம். அதற்குள் போலீஸ் வந்துவிடும் சாத்தியம் உள்ளது. அது தவிர உங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தொடரும் பெரும் சத்தத்தை கேட்டு போலீஸ்சை அழைத்துவிடுவார்கள். திரும்ப "Panic" பொத்தானை அமுக்கி சத்தத்தை நிறுத்திவிடலாம். ஒரு சின்ன விஷயம், உங்களுக்கு அருகில் காரின் சாவியை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்! இது வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதைபோல பல நல்ல சேமிப்பு ஐடியாக்களை http://www.wisebread.com/ என்ற தளத்தில் காணலாம்.

Monday, June 15, 2009

சேமிப்பிற்கு சில உபயோகமான வழிகள்!


அமெரிக்க பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே போகிறது. இந்த காலத்தில் நம் வாழ்கையில் சில தேவையில்லாத செலவுகளை குறைத்திடவும், சேமிப்பினை அதிகரிக்கவும் சில வழிகளை இங்கு பார்ப்போமா! இது போல உங்களுக்கு தெரிந்த, முயன்ற வழிகளை பின்னூட்டமிட்டால் படிக்கும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

உபயோகமில்லாத பொருட்களை வெளியேற்றுங்கள்:
"கராஜ் சேல்", கிரைக்ஸ் லிஸ்ட் , ஈ-பே போன்ற பல வழிகளில் நீங்கள் உபயோகிக்காத பொருட்களை விற்று காசாக்கலாம். சிலவற்றை உங்கள் அருகிலிருக்கும் குட்-வில் கடைக்கு வழங்கி வரி விலக்கு பெறலாம். உதாரணத்திற்கு கணினிகள், மின் கருவிகள் போன்றவை சில வருடங்கள் கழித்து அவற்றின் மதிப்பு குறைந்துவிடும். இவற்றை தேவையில்லாமல் வீட்டில் வைத்து குப்பை சேர்ப்பதை விட விற்று காசாக்கலாம் அல்லது குட்-வில் கடைக்கு வழங்கி வரி விலக்கு பெறலாம்.

பொது வளம்:
பொது நூலகம் ஒரு சிறந்த உபயோகமான "இலவச" வளம்! புத்தகங்கள், ஒளி குறுந்தகடுகள், இலவச வலை உபயோகம், குறைந்த செலவில் அச்சு மற்றும் நகல் எடுக்க வசதி, தனியாக படிக்க அறைகள் மற்றும் பல இலவச சேவைகள் உள்ளன. நீங்கள் கிங்கொஸ் சென்று பிரிண்ட் எடுத்தால் ஒரு பக்கத்திற்கு ஐம்பது சென்ட் செலவாகும்! ஆனால் நூலகத்தில் பத்து சென்ட் மட்டுமே!

தொலைகாட்சி மற்றும் டிஷ்:
நாம் தினமும் பார்க்கும் மிக முக்கியமான செய்திகள் மற்றும் நிகழ்சசிகள் (அமெரிக்காவில் மட்டுமே!!) பெசிக் கேபிள் எனப்படும் உள்ளூர் சேனலிலேயே வந்துவிடும். ஆனால் எக்ஸ்-டென்டேட் கேபிள் தேவையில்லாத பல சேனல்கள் கூட்டி விலை மூன்று மடங்காக்கிவிடுவர்கள். தேவையில்லாத டி-வி-ஆர் எனப்படும் கருவிக்கு மாதம் ஐந்து டாலர் வேறு! இப்போது பல சேனல்களின் நிகழ்சசிகள் இணையத்தில் இலவசமாக பார்க்கும் வசதி வந்துவிட்டது. http://www.hulu.com தளத்தில் டிவி நிகழ்சசிகள், சில திரைப்படங்கள் கூட உள்ளன. அதற்கு தேவை ஒரு கணினி (இணைய வசதியுடன்), மற்றும் ஒரு எஸ்-வீடியோ கேபிள். இந்த தளத்தில் கேபிள் டிவி'க்கு மாற்றாக ஆறு வழிகள் தந்துள்ளார்கள், முயன்று பாருங்கள். இதன் மூலம் வருடத்திற்கு முந்நூறு டாலர் வரை சேமிப்பு!

இரண்டாம் கை பொருட்கள்:
கார்கள் மட்டுமின்றி, வீட்டுக்கு தேவையான மேஜை போன்றவை சில சமயம் மிக குறைவான விலையில் craigslist.com போன்ற தளத்தில் பார்த்து வாங்கலாம். பல நல்ல பொருட்களுடன் சில சமயம் தரம் குறைந்தவையும் வருவதால் மிக கவனமாக சோதித்து பார்த்து வாங்குதல் நலம். எங்கள் தமிழ் சங்கத்திற்கு வாங்கிய முநநூறு டாலர் மதிப்புள்ள கம்பியில்லா ஒலி வாங்கி (wireless lapel mic) வெறும் எழுபத்தி ஐந்து டாலர் மட்டுமே!

அலைபேசி:
கர்ணனுக்கு கவச குண்டலம் போல மனிதனுக்கு அலைபேசி மிக அத்யாவசியமானதாகிவிட்டது. நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் சில சமயம் அலைபேசி நிறுவனங்களுடன் தள்ளுபடி விலையில் வழங்க வகை செய்திருக்கலாம். அப்படியில்லையேன்றால், http://www.freelancersunion.org/ என்ற தளத்தில் நிங்கள் ஒரு "சுதந்திரமாக தொழில் செய்பவர்" என பதிவு செய்து T-Mobile அலைபேசி மாத சந்தாவில் பத்து சதவிகிதம் தள்ளுபடி பெறலாம். (பிற அலைபேசிகளுக்கு இது போல இருக்கிறதா என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டமிடவும்). இந்த தளத்தில் இன்னும் பல நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தங்கள் சேவையை வழங்குகிறது. என்னுடைய அலைபேசி சந்தாவில் இதனால் மாதத்திற்கு ஆறு டாலர் சேமிப்பு!

கிரெடிட் யூனியன்:
உங்கள் அருகில் இருக்கும் credit union வங்கிகளில் பல நல்ல சேவைகள் இலவசமாக கிடைக்கும். இதில் சேர ஒரு அறிமுக உறுப்பினர் அல்லது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தார் அந்த வங்கியுடன் இவ்வகை ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். நான் https://www.penfed.org/ என்ற வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். அவர்களது கடன் அட்டை மூலம் உங்கள் அலைபேசி மாத சந்தாவை கட்டினால், உங்கள் அலைபேசிக்கு இலவச காப்பீடு தருகிறார்கள். இதன் மூலம் அலைபேசி தொலைந்தாலோ, உடைந்துவிட்டாலோ அல்லது திருடு போனாலோ உங்களுக்கு பகுதி பணம் திரும்ப கிடைக்கும்! (மேலும் விபரங்களுக்கு https://www.penfed.org/pdf/accountsforms/CellPhoneProtectDisc.pdf). இதே கடன் அட்டையின் மூலம் வாகன எரிவாயுவிற்கு பணம் கட்டினால், ஐந்து சதவிகிதம் கட்டண தள்ளுபடி அந்த மாத இறுதியில் திருப்பி கொடுக்கிறார்கள்! இந்த கடன் அட்டைக்கு மாத சந்தா எதுவும் இல்லை.

ஆக்டேன் ரேடிங்:
வாகன எரிவாயு நிரப்பும் பொது மூன்று விதமான ஆக்டேன் ரேடிங் இருப்பதை பார்க்கலாம். பொதுவாக விலை அதிகமாக இருப்பதுதான் நல்ல எரிவாயு என சிலர் நம்பி அதிக விலை கொடுத்து நிரப்புவர். உங்கள் வாகனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட குறைவான ஆக்டேன் ரேடிங் எரிவாயு நிரப்பினால் போதுமானது! பல வாகனங்களுக்கு ஆக்டேன் ரேடிங் 87 போதுமானது! அது தவிர சக்கரங்களில் சரியான அளவு காற்று நிரப்புதல் எரிவாயு சேமிப்பிற்கு உதவும்!

மாத சந்தாவா அல்லது வருட சந்தாவா!:
சில சமயம் வருட சந்தா கட்டினால் பல நிறுவனங்கள் கட்டணத்தில் தள்ளுபடி செய்வார்கள்! உதாரணத்திற்கு, வாகன காப்பீடு ஆறு மாதம் ஒரு முறை கட்டினால் மாதத்திற்கு பத்து டாலர் வரை சேமிக்கலாம்! அது தவிர வருடத்திற்கு ஒரு முறை உங்கள் வாகன காப்பீடிற்கு மற்ற நிறுவனங்கள் குறைவாக கொடுகின்றர்களா என பார்த்து கொண்டிருக்கவும். பல சமயம் புது வாடிக்கையாளர்களை கவர பல தள்ளுபடிகள் கொடுக்கலாம். கய்கோ நிறுவனத்தின் காப்பீடில் நான் penfed.org credit union உறுப்பினராக இருப்பதால் மாதம் பத்து டாலர் வரை தள்ளுபடி கொடுத்தார்கள்! அது தவிர நீங்கள் வருடத்திற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்வீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சந்தா அமையும். அதனால், ஆரம்பத்தில் நீங்கள் சற்று குறைவான தூரம் கொடுப்பதனால் கட்டணத்தில் சேமிக்கலாம்.

தண்ணீர் தண்ணீர்:
அமெரிக்காவில் ஒரு காலத்தில் தண்ணீரும் எரிவாயுவும் ஒரே விலை இருந்தது! இப்போதும் தண்ணீரை பலர் காசு கொடுத்து பாட்டில்களில் வாங்குகின்றனர். அந்த பாட்டில்களில் நீர் எங்கு பிடிக்கப்பட்டது என எழுதியிருப்பதை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். பல நிறுவனங்கள் நகரின் குடிநீரை மேலும் சுத்தப்படுத்தி பாட்டில் அடைத்து விற்கின்றனர்! இதற்கு நம் வீட்டு குழாயில் வரும் நீரை பில்டர் செய்து குடிக்கலாம். அல்லது அருகாமையில் இருக்கும் கடைகளில் குறைவான விலையில் உடனடி பில்டர் செய்த நீரை விலைக்கு வாங்கலாம். அது தவிர உணவகங்களில் கோக், பெப்சி போன்ற குளிர் பானங்கள் வாங்காமல் நீரை பருகினால் உடலுக்கும் நல்லது, நம் பர்சுக்கும் நல்லது!

முயன்று பாருங்கள்!

Friday, June 05, 2009

பதிவு இரண்டு : மின்சாரம் அது சம்சாரம்!!

மின்சாரம் அது சம்சாரம்

முந்திய பதிவைப் படித்து, பாராட்டியும் ஊக்கமும் தந்து மறுமொழிகள் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி கூறி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். உண்மையில், அந்தப் பதிவை எழுதிய நேரத்தில் இருந்த மகிழ்வை விட மறுமொழிகளை படிக்கும் போது மேலும் மகிழ்வை உணர்ந்தேன். நன்றி!

தொடர் பதிவு என்று சொல்லிட்டோமே. அடுத்து என்ன எழுதுவது என்ற கவலை. எனது பட்டியலை தேடி எடுத்துப் பார்த்தேன். ஆ.. மாட்டிகொண்டது தலைப்பு!

பாகம் இரண்டு : மின்சாரம் அது சம்சாரம்!!

முதலில் மின்சாரம் அது சமாச்சாரம் என்று தான் தலைப்பு வைக்க எண்ணினேன். பிறகு மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் ஏதோ ஒற்றுமை வேற்றுமைகள் இருப்பதாக மனதிற்கு பட்டது. மின்சாரம் தொட்டால் அதிர்ச்சிதரும். சம்சாரம் தொடாமலே அதிர்ச்சி தரும். மின்சாரம் அறிவியல். சம்சாரம் அறியாவியல். என்னடா தலைப்பிலேயே பிரச்னை பண்ண ஆரம்பித்து விட்டானே என்று யோசிக்காதீர்கள். எல்லாம் கடைசியில் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கையில்...

15 வருடமாக உடனிருந்தும் என்னை கொஞ்சமாவது புரிந்து வச்சிருக்கிங்களா என்று சம்சாரம் ஒரு புறம் முனகிக் கொண்டு இருக்க.. மாதா மாதம் ஏறிக்கொண்டே செல்லும் மின்சார செலவு ஒரு புறம்.. இதெல்லாம் புரியாத புதிர் என்று இவ்வளவு நாட்கள் விட்டுவிட்டேன். பொறு பொறு! சம்சாரத்தை 15 வருடமாகத்தானே தெரியும். மின்சாரத்தை 40 வருடமாக தெரியுமே. மேலும் மின்சாரம் அறிவியல் ஆயிற்றே. சரி. கொஞ்சம் அலசினால் புரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்கினேன்.

பல இணைய பக்கங்கள் சென்று மின்சார செலவை குறைப்பது எப்படி என்று படித்தேன். எந்தெந்த மின்சார கருவிகள் எவ்வளவு மின்சாரம் குடிக்கிறது என்று ஆராய்ந்தேன். வீட்டில் ஒவ்வொருவரின் மின்சார உபயோக பழக்கங்களை நோட்டமிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக மின்சார புதிர் விளங்க ஆரம்பித்தது.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.. ஆனால் எனக்கு பல விஷயங்கள் புதிதாக இருந்தது.
வீட்டுக்கு முன் தானாக எரியும் இரவு விளக்கிற்கு மாத செலவு 2 வெள்ளி. ஒரு முறை துணி உலர்த்தும் இயந்திரத்தை உபயோகித்தால் 35 காசு. ஒரு மணி நேரம் காற்று குளிர்விப்பான் உபயோகித்தால் 42 காசு. சாதாரண மின் விளக்கிற்கு பதில் கச்சிதமான மின்குழல் விளக்கு உபயோகித்தால் 75% மின்சாரம் மிச்சம்.

சரி இதெல்லாம் தெரிந்து என்ன லாபம். செயலாக்க வேண்டுமே. வீட்டில் முடிந்த அறைகளில் மின்விசிறி மாட்டினேன். வசந்த காலங்களில் சூரியன் தாழ்ந்ததும் சன்னல்களை திறந்தும் பகல் நேரங்களில் சன்னல் திரைகளை மூடியும் காற்று குளிர்விப்பான் உபயோகப் படுத்துவதை முழுவதுமாக தவிர்க்க முடிந்தது. மாலை வேளைகளில் இயற்கை காற்றும் சுவாசிக்க முடிந்தது. குளிர்பதனப்பெட்டியில் தேவையான அளவு பனிக்கட்டி சேர்ந்ததும் பனிக்கட்டி செய்வானை நிறுத்தலாம். கொத்து விளக்கில் சில விளக்குகளை அகற்றினேன். முடிந்தவரை துணி உலரும் இயந்திரம் உபயோகிப்பதை குறைத்து சில துணிகளை கொடியில் உலர்த்தினோம். துணியும் பொலிவுடன் இருந்தது. வீட்டின் சீதோஷண நிலையும் மேம்பட்டது. இது போன்ற மேலும் பல முன்னேற்றங்கள் செய்த பின் வழக்கமாக 100 முதல் 180 வெள்ளி வரை ஆகும் மாதாந்திர மின்சார செலவு இப்போது 50 வெள்ளிக்குள் அடக்க முடிந்தது. அப்பாடா ஒருவழியாக மின்சாரத்தை புரிந்து கொள்ள முடிந்ததே என்ற கூடுதல் சந்தோஷம். எல்லாவற்றிற்கும் மேலே இயற்கையை காக்கும் போராட்டத்தில் நம்மால் ஓர் சிறு பணியாவது செய்ய முடிந்ததே என்ற மன நிறைவு.

மேலும் விவரங்களுக்கு கீழிருக்கும் இணைய முகவரிகளை சொடுக்கவும்.
http://michaelbluejay.com/electricity/
http://dom.com/

உங்களில் இந்த சமாச்சாரத்தில் மேலும் புது அனுபவங்களும் வழிகளும் தெரிந்து இருப்பின், தயவு செய்து தெரிவிக்கவும். கேட்டு தெரிந்து கொள்ள எப்போதும் நான் தயார்!