சாரி கொழுப்பு கொஞ்சம் ஓவர்
(இந்த கதைக்கும் மீனாவுக்கும் சம்பந்தம் இல்லை. கதையில் வருவன யாவும் கற்பனையே. மீனாவின் அனுபவம் எங்களது கற்பனயில் )
மனைவி மற்றும் குழ்ந்தைகள் அனைவரையும் இந்தியா அனுப்பி விட்டு அடுத்த நாள் கோவிலுக்கு சென்றேன். அங்கு அன்னபூரணியில் மீனாவை சந்தித்த போது அவர்கள் இந்தியா செல்ல இருப்பதாகவும், அவர்களின் சாம்பார் வடை சபதம் பற்றியும் சொன்னார்கள். நானும் அதே நாளில் அதே விமானத்தில் பயணம் செய்கிறேன் என்று சொன்னதும் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனால் சாம்பார் வடை சபதம் மட்டும் எனக்கு உறுத்தி கொண்டு இருந்தது. மனதுக்குள் அதனை சவாலாக எடுத்து கொண்டு, மீனாவை முந்தி விட வேண்டும் என்று நினைத்தவாறே கோவிலை விட்டு வெளியே வந்தேன். எல்லாம் இறைவனின் திருவிளையாடல்.
அது படியே நான் சவாலில் ஜெயித்து விட்டேன். எப்படி என்று தானே கேட்கிறீங்க. அதுக்கு தானே இந்த கற்பனையே.
என் கதையை படிச்சுட்டு நாகு இன்னொரு பஜ்ஜி ன்னு கமென்ட் அடிக்க போறாரு. அவருக்கு கொஞ்சம் லொள்ளு ஓவர் தான். இப்பவே அவருக்காக பஜ்ஜி ஆர்டர் பண்ணி வச்சுட்டேன், கூடவே கொஞ்சம் அல்வாவும், ஏன்னா அவர் வாயையும் திறக்க கூடாதுன்னு தான். தமிழனுக்கு ரொம்ப நல்ல எண்ணம்.
எங்கள் குடும்பம் பாசம் மிகுந்த பெரிய கூட்டு குடும்பம். அதுனால என் அண்ணனிடம் சாம்பார் வடை சவால் பற்றி சொன்னேன். அவர் கவலை படாதேன்னு சொல்லி விமான நிலையத்திற்கு வரும் போதே வாங்கி வந்து விடுகிறேன்னுட்டார். பயண நாளும் வந்தது, சாம்பார் வாடையும கிடைக்க போகுது.
அண்ணன் சொன்ன மாதிரியே வடை வாங்கி வந்து விட்டார். உடனே மீனாவை தேடினேன், அவரை காணவில்லை. சரி என்று நானே சாப்பிட்டு விட்டேன். மீனாவுக்கு போன் பண்ணி சொல்ல வேண்டும் என்று தான் ஆசை, அனால் அவர் வீட்டிற்கு போனவுடன் தான் பேச முடியும். மறுநாள் பேசிக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.
என் முகத்தில் எதையோ சாதித்தது போல ஒரு பெருமை.
காரில் ஏறி வீட்டிற்கு வந்தால் அங்கு ஏக கூட்டம். எல்லோருக்கும் ஹாய் சொல்லிவிட்டு, ஒரு குளியல் போட்டு வந்து உட்கார்ந்தால், அங்கு ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. என் அம்மாவிற்கு எப்படியோ வடை ரகசியம் தெரிந்து என் மனைவியை திட்டி கொண்டே ஒரு வடை கூட செஞ்சு கொடுக்க கூடாதான்னு சொல்லி கொண்டே வடை சுட்டு வைத்து இருந்தார்கள். பத்து வடையை (சும்மா ஒரு கணக்கு தான்) சாப்பிட்டு விட்டு கூடவே சுட சுட மதுர மல்லிகைப்பூ இட்லி, மல்லி சட்னியுடன் இட்லி பொடியும் சேரவே நாக்குல தண்ணி கொட்ட கொட்ட சாப்பிட்டு எழுந்தேன். சொந்த கதை எல்லாம் பேசி முடிக்க நைட் 2 1/2 மணி ஆயிடுச்சு. அதுக்கப்புறம் தூங்க போய் விட்டேன். காலை முழிச்சு பார்த்தால் மணி 12. வீட்டுல எல்லோரும் பயண களைப்பு என்று சும்மா கண்டுக்காம விட்டு விட்டாங்க. நைட் பட்ட வேதனை எனக்கு தான் தெரியும். எத்தனை தடவ தான் போறது. எனக்கோ யாரோ அமுக்குவது போல ஒரு வேதனை. சத்தம் போட்டு கூப்பிடலாமுன்னு பார்த்ததால் யாரும் வந்த மாதிரி தெரியலை. சிரிக்காதீங்கப்பா, எவ்வளவு வேதனை தெரியுமா.
ஒரு வழியாக என் அம்மா வந்து பார்த்தார்கள். என் நெலமையை பார்த்தட்வுன்ஒரே அழுகை. என்னவோ ஏதோ என்று மற்றவர்களும் மேல வந்தவுடன் சாம்பார் வடையின் விபரீதம் அவர்களுக்கு தெரிந்தது.
என் தங்கையோ ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து, கொஞ்சமா சாப்பிடனும், எதோ காஞ்ச மாடு கம்பம் கொல்லைல பாஞ்ச மாதிரி சாப்பிட்ட இப்படித் தான்.
என் அப்பாவோ, அது என்ன வந்ததும் வராததுமா சாம்பார் வடை. இவனை சொல்லி குத்தமில்ல, இவனுக்கு வடையை வாங்கி கொடுத்தவன தான் சொல்லனும்ன்னு என் அண்ணனுக்கு ஒரு குட்டு வைத்தார். என் அண்ணன் அங்கிருந்தால் வம்புன்னுட்டு உடனே எஸ் ஆயிட்டான்.
இதுக்கு அப்புறம் தான் ரகளையே.
என் அப்பா உடனே காரில் ஏற்றி அவருக்கு தெரிந்த நர்சிங் ஹோம் என்று ஒரு புது ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றார். அங்கு அதே அனுபவம் தான். ஆனா ஒரு வித்தியாசம். டாக்டருக்கு தான் அனுபவம் பத்தலை. நம்ம உடம்ப பார்க்காம வேகம் அதிகமா இருக்குற மாத்திரையை கொடுக்க, அது தன வேலையை காட்டிடுச்சு. அலர்ஜி ஆகி, வேற மாத்திரை கொடுக்குறதுக்குள்ள மீனாவோட எல்லா அனுபவமும் அனுபவிச்சுட்டேன்.
நம்மள சமாதான் படுத்த டாக்டரும், நீங்கள் லோக்கல்ல இருந்தா ஒன்னு இரண்டு மாத்திரை கொடுத்து இருப்பேன். ஆனா நீங்கள் வெளி நாடுல இருந்து வந்து இருக்கீங்க, எப்பவாவது தானே வருவீங்க, அதுனால தான் இந்த கம்ப்ளீட் சிகிச்சைன்னு ஒரு சமாளிப்பு. அடுத்து கிரெடிட் கார்டு நம்பர் கேட்டாரு, அது எல்லாம் எடுத்து வரலைன்னு நானும் பதிலுக்கு ஒரு சமாளிப்பு ( எப்படி நம்ம திறமை) சமாளிச்சுட்டு வந்துட்டேன்.
ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தா, என் அம்மா கையில ஆரத்தி தட்டும் எலுமிச்சம் பழமும் நின்னு கிட்டு யாரையோ திட்டி கொண்டே இருந்தாங்க. எந்த பாவி கண்ணு பட்டுதோ, வந்ததும் வராததுமா இப்படி ஆயிடுச்சே.
ஆரத்தி எடுத்த கையோட, திருப்பதிக்கு மொட்டை போடனும்னு வேண்டிகிட்டங்க.
அடுத்த நாள் என் அண்ணனோ அவன் ஒரு ஹோமியோபதியை கூட்டி வந்து இருந்தார். அவரும் கை பிடித்து பார்த்து விட்டு சில மாத்திரைகளை கொடுத்தது விட்டு சாப்பாட்டில கவனமா இருக்க சொல்லிட்டு போய்ட்டாரு.
இது இப்படி இருக்க என் சித்தி விஷயம் அறிந்து ஒரு பச்சிலை வைத்தியரை கூடி வந்து விட்டார்கள். அவரும் கதையை எல்லாம் கேட்டு விட்டு, ஒரு தொக்கு எடுத்தால் சரி ஆகிவிடும் என்று வயிற்றை சுற்றி சாம்பல் தடவி தொக்கு எடுத்து சென்றார். ( இந்த வழி இன்னும் போக வில்லை)
என் அப்பவோ ஒரு படி மேல போய் ஜோசியரை கூடி வந்து விட்டார். ஆயுள் பலம் பற்றி கேட்டு விட்டு ஏதாவது பரிகாரம் உண்டான்னு கேட்க, ஜோசியரும் குசியாக தண்ணீரில் கண்டம் இருக்கு, வெறும் பிஸ்லேரி தண்ணி மட்டும் குடிக்க சொல்லி விட்டு அவர் பையை நிரப்பி விட்டு சென்றார்.
அடுத்த நாள் என்ன நடக்கும் என்று யோசிப்பதற்குள் காலையிலேயே உடுக்கை சத்தம் கேட்டது. என்னடாவென்றால் என் பாட்டி அவர் பங்கிற்கு ஒரு மாந்த்ரிகரை கூட்டி வந்து இருந்தார்கள்.
அவன் இது ஒரு செய்வன, நான் சாப்பிட்ட வடையை எடுத்து விட்டால் சரி ஆகி விடும் என்றான். சாப்பிட்டு மூணு நாளாச்சு, இப்ப எடுக்க போறாரா? நம்ம பேச்சை யார் கேட்க போகிறார்கள்? என்னால் ஒன்றும் பேச விடாமல் தண்ணீரை எடுத்து என் மேல் தெளித்தான்.
எப்படி என் வாயில் வடையை திணித்தான் என்று யோசிப்பதற்குள் வடையை வாயில் இருந்து எடுத்து எல்லோரிடமும் காட்டினான். என் பாட்டிக்கோ ஓர் சந்தோசம். செய்வன வடையை எடுத்தாச்சு என்று.
நல்ல வேளை, நான் 10+2 வடை சாப்பிட்டத சொல்லலை. சொன்ன இன்னும் 11 வடையை எடுக்கணும்ன்னு சொல்லி கொடுமை படுத்தி விடுவான். எப்படி நம்ம அறிவு. என் அண்ணனோ இது வேற வடை மாதிரி இல்ல இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணி கொண்டு இருந்தான்.
இதுக்கு மேல் இங்க இருந்தா பைத்தியம் பிடித்து விடும் என்று மாமனார் வீட்டிற்கு வந்தேன். அங்கு வந்தால் மனைவியும், குழந்தையும் ஓர் அழுகை. எனக்கு ஒன்றும் இல்லை என்று சமாதானப் படுத்தும் போது, என் மனைவி சொன்னாள். அதுக்கெல்லாம் நாங்க அழவில்லை. நான் இப்படி இருக்கறதால அவர்களால் எங்கும் செல்ல முடிய வில்லையாம். இந்தியா வந்ததே வேஷ்ட்டுனு சொல்லி மீண்டும் ஓர் அழுகை.நம்ம என்ன செய்யறது, அவரவர் கவலை அவரவர்க்கு.
உள்ளே சென்ற மனைவி கையில் ஒரு லிஸ்டுடன் வந்தால். உங்கள் இரண்டு வார லீவு முடிய போகுது, அங்க இங்க சுத்தாம இதுல இருக்குறதா வாங்கி பேக் பண்ணுங்க. மறந்துறாம அமெரிக்க எடுத்துட்டு போங்கன்னு ஒரு அட்வைஸ்.
சரின்னு தலையை ஆட்டி விட்டு வீட்டுக்கு வந்தேன். என் அம்மா வேண்டுதலை நிறைவேத்தாம ஊருக்கு போக கூடாதுன்னுட்டு திருப்பதிக்கு டிக்கெட் புக் வேற பண்ணி வச்சுட்டாங்க. எனக்கோ முடி கொஞ்சம் கூட இல்லை. இதுல எங்க போய் மொட்டை போடறது. இறைவா இது எல்லாம் உன் திருவிளையாடல் தானே. அடுத்த தடவையாவது நல்ல சாப்பாடு கிடைக்க வழி செய்யப்பா என்று வேண்டி கொண்டே பேக் பண்ண ஆரம்பித்து விட்டேன்.
இன்று வரை உடம்பு சரி இல்லாததால் மீனா கூட கால் பண்ணி பேச கூட முடியவில்லை.
கொழுப்பு கொஞ்சம் ஓவர் தான்னு மீனாவோட புலம்பல் கேட்குது. அதுனால கற்பனையை இப்படியே ஓரம் கட்டி வச்சுட்டு ஊருக்கு கிளம்ப ஆயத்தமாயிட்டேன்.
- வேதாந்தி