Showing posts with label தந்தை. Show all posts
Showing posts with label தந்தை. Show all posts

Friday, September 28, 2018

மறதி



கடந்த மாதம் துபாயில் வசிக்கும் என் கல்லூரித் தோழன் ராஜேஷ் ரிச்மண்ட் வந்திருந்தான். ரிச்மண்ட் நண்பர்கள் பலர் அவன் குறித்து அறிந்திருப்பீர்கள். இங்கே ஒரு நாள் தங்கி மற்ற தோழர்களை சந்தித்துவிட்டு வாஷிங்டன் வழியாக ஊர் திரும்ப இருந்தான். அவனுக்கு வாஷிங்டன் நகரத்தை சுற்றிக் காண்பித்துவிட்டு வழியனுப்பி வைக்கலாம் என்று கிளம்பினேன்.

போய்க்கொண்டிருக்கும்போது வாஷிங்டன் அருகில் வசிக்கும் நண்பன் ராஜாஜியின் தந்தையை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வந்தது. அதுவும் விமானநிலையம் அருகில் இருக்கும் மருத்துவமனை. ராஜாஜியும் ராஜேஷும் சந்தித்து கால் நூற்றாண்டு ஆகியிருந்தது. கடைசியாக இருவரும் சந்தித்தது ராஜாஜியின் திருமணத்தில்தான். அந்த திருமணத்துக்குக்கூட நானும், ராஜேஷும்தான் பெங்களுரில் இருந்து சென்னை சென்றிருந்தோம். ராஜாஜி மருத்துவமனை பார்க்கிங் லாட்டில் காத்துக் கொண்டிருந்தான். அவனுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு  உள்ளே சென்றோம். அப்பா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன். அவருடைய ஞாபக சக்தி மிகவும் குறைந்திருப்பதாகவும், இரவு நர்ஸ்கள் கூட அப்பா கத்தி சண்டை போட இருந்ததாகவும் ராஜாஜி கதை விட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம் கற்பனைவளம் கொஞ்சம் அதிகம்.

ராஜாஜியின் அப்பா அறைக்குப் போனோம். அவரைப் பார்த்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆயிற்று. மிகவும் மெலிந்திருந்தார். அறையில் நுழைந்ததும் என்னையும் ராஜேஷையும் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார் அவர். எப்படி இருக்கிறீர்கள் மாமா என்றேன். உன்னைப் பார்த்ததும் எனக்கு பலம் இரண்டு மடங்காகிவிட்டது என்றார் மாமா மகிழ்ச்சியுடன். ராஜேஷை பெயர் சொல்லி அழைக்கிறாரே என்று ராஜாஜியிடம் விசாரித்தேன். நீங்கள் இருவரும் வருகிறீர்கள் என்று சொல்லியிருந்தேன். மற்றபடி அவருக்கு அவனை நினைவில்லை என்றான் ராஜாஜி.

உனக்கு ரெண்டு பசங்கதானே ராஜேஷ், என்றார் மாமா. என்னடா என்றேன் ராஜாஜியிடம். அது எல்லாம் சும்மா அடிச்சி விடறார்டா என்றான்.

கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று கோபாலகிருஷ்ணன் எப்படி இருக்கிறார் என்று கேட்டார் மாமா. ராஜாஜிக்கு ஒன்றும் புரியவில்லை. நானும் கொஞ்சம் யோசித்தேன், யாரை சொல்கிறார் என்று. நாங்கள் முழிப்பதைப் பார்த்து அவரே சொன்னார். அந்த காலத்து நினைவுகளை எல்லாம் எவ்வளவு அழகாக எழுதுகிறார், சமீபத்தில் ஏதாவது எழுதினாரா என்றார் மாமா. ஆடிப் போய் விட்டேன். கண்கலங்கி விட்டது எனக்கு.

சேதி என்னவென்றால், ரிச்மண்ட் வலைப்பதிவில் திரு. மு. கோபாலகிருஷ்ணன் எழுதும்போதெல்லாம் அவற்றை நான் மின்னஞ்சலில் மாமாவுக்கு அனுப்பி வந்தேன். இவருக்கு கடைசியாக அவற்றை அனுப்பி நான்கைந்து ஆண்டுகள் ஆகியும் நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். இவருக்கு மட்டும் அல்ல. தமிழார்வம் கொண்ட என் கல்லூரித் தோழர்கள் தந்தைகள் சிலருக்கும் அனுப்புவது என் வழக்கம். மு.கோ. அவர்கள் அண்மையில் சற்று உடல்நலம் குன்றியிருந்ததாலும், ஓரிரு புத்தகங்கள் எழுதுவதில் மும்முரமாக இருந்ததாலும் அவர் நம் பதிவுக்கு எழுதுவது குறைந்திருந்ததை சொன்னேன். முடியும்போது எழுதச் சொல்லு என்றார் மாமா.

மு.கோ. அவர்களே – யார் படிக்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டே இருப்பீர்களே? பாருங்கள் உங்கள் எழுத்தை ரசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். என்ன ஒன்று – யாரும் பின்னூட்டம் இடுவதில்லை, நேரில் பார்க்கும்போதுதான் விசாரிக்கிறார்கள். ஆகவே முடியும்போதெல்லாம் எழுதுங்கள். அந்த காலத்து அரசியலும், வாழ்க்கை அனுபவங்களும், அந்தப் பார்வையில் இந்த காலத்து அரசியல், அனுபவங்களை அலச உங்களால்தான் முடியும்.
-->