
அதோ நெளியுது
இதோ திரியுது
தள்ளிச் செல்லுது
துள்ளிக் குதிக்குது
ஒன்றா இரண்டா
ஓரேழெட் டிருக்குமா ?
அத்தனையும் வேண்டாம்
ஓரிரண்டு பிடித்திடலாம்
என்றே எண்ணியங்கு
தின்னமாய் அமர்ந்து
நெளியும் புழுதனை
நீளமான தூண்டிலிலிட்டு
எவரும் பின்னில்லை
என்றறிந்து வீசியதில்,
மிதக்கும் பந்து
மிதந்து கொண்டேயிருக்க
சிலநேரக் காத்திருப்பில்,
என்ன நடக்குதென்று
சுழற்றி நூலிழுக்கையிலே
முள்ளிலிட்ட புழுவில்லை !
அதோ நெளியுது
இதோ திரியுது
தள்ளிச் செல்லுது
துள்ளிக் குதிக்குது.