கர்நாடக சங்கீத வித்வான்களின் பெயருக்கு முன்னால் உள்ள ஊரைப் பற்றி விசாரித்தால் அநேகமாக அது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராகத்தான் இருக்கும். இல்லையென்றால் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வித்வானின் சிஷ்யராக இருப்பார். தஞ்சாவூருக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு.
வாய்ப்பாட்டு மட்டுமில்லாமல் பக்க வாத்தியம், நாதஸ்வரம், மேளம் ஆகிய வாத்யங்களையும் பயின்ற நிபுணர்களை கொடுத்த பெருமை தஞ்சைக்கு உண்டு.
இப்படி நல்ல கலைஞர்கள் வளர காரணம் அந்த மாவட்ட மக்களுடைய சங்கீத ரசனை. பல கோயில் திருவிழாக்கள், செல்வந்தர் வீட்டு திருமணங்கள் சங்கீத கச்சேரி இல்லாமல் நடப்பதில்லை. நல்ல கச்சேரிகளைக் கேட்க கிரமங்களிலிருந்து பல மைல் தூரம் நடந்தும், சைக்கிளில் சென்றும் பாட்டு கேட்கும் பாமர ரசிகர்களை தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே பார்க்க முடியும். கேட்ட பாடல்களை பல நாட்கள் முணு முணுத்தபடியே இருக்கும் ரசிகர்களை பார்க்கலாம்.
அப்படிபட்ட ஒரு ரசிகர்தான் சுப்பிரமணிய ஐயர். கிராமத்தில் உள்ள சொற்ப நிலத்தை வைத்துக் கொண்டு வாய்க்கும் கைக்குமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர். அவருக்கு கர்நாடக சங்கீதம் நாதஸ்வர இசை என்றால் உயிர். அன்று பிரபலமாக இருந்த திருவாரூர் T.N. ராஜரத்னம் பிள்ளையின் நாதஸ்வர கச்சேரி என்றால் விடமாட்டார். சுற்று வட்டாரத்தில் எங்கு நடந்தாலும் பல மைல் பயணம் செய்து சீக்கிரமே சென்று முன் வரிசையில் உட்கார்ந்து நாதஸ்வர இசையில் மூழ்கி எழுந்து சொட்டச் சொட்ட நனைந்து வருவது அவருடைய வழக்கம்.
சுப்பிரமணிய ஐயருடைய ஒரே குமாரனுக்கு உபநயனம் ஏற்பாடாகியிருந்தது. அந்த காலங்களில் திருமண மண்டபம் கிடையாது. உறவினர்கள், ஊர் அக்ரஹாரத்தில் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் சிறிய நிகழ்ச்சி. வீட்டு வாசலில் பந்தல் போட்டு தோரணம் கட்டி வீட்டிலேயே நடக்கும் நிகழ்ச்சி. ஐயர் பத்திரிகைகூட அச்சடிக்கவில்லை. வெளியூரில் உள்ள உறவினர்களுக்கு தபால் கார்டில்தான் எழுதி அழைப்பு அனுப்பினார்.
கடிதங்கள் எழுதுவதற்கு முதல் நாள் ஐயர் திருவாருர் ராஜரத்னம் பிள்ளையின் இசை நிகழ்ச்சியை கேட்டு விட்டு வந்திருந்தார். அந்த சங்கீத சுகத்தில் அவர் மனம் லயித்திருந்தது. கடிதம் எழுதும் போது ஒரு கடிதத்தில் ராஜரத்னம் பிள்ளையின் விலாசத்தை எழுதினார், எல்லா கடிதங்களையும் தபாலில் சேர்த்தார்.
உபநயனத்தன்று காலையில் வேத மந்திரம் முழங்க நிகழ்ச்சி தொடங்கியது. வீட்டில் உள்ள ஹாலில் உறவினர்கள் நெருங்கி அடித்து உட்கார்ந்திருந்தார்கள். சுப்பிரமணிய ஐயர் புரோகிதர் அருகில் உட்கார்ந்து சுபகாரியங்களை செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் ஜரிகை, பட்டு வேஷ்டி பளபளக்க கைவிரல்களில் வைர மோதிரம் ஜொலிக்க ராஜரத்னம் பிள்ளை உள்ளே நுழைந்து கிடைத்த இடத்தில் நெருக்கி அடித்து உட்கார்ந்தார்.
கூட்டத்தில் இருந்த எல்லோருக்கும் வியப்பு, பரபரப்பு, செய்தியை சற்று தூரத்தில் இருந்த ஐயருக்கு தெரிவிக்க, அவர் திகைப்படைந்தார், எழுந்து ஓடி வந்தார். வந்தவரை கையால் சைகை காட்டி உட்காரச் சொன்னார் ராஜரத்னம் பிள்ளை.
உபநயன நிகழ்ச்சி முடியும் வரை பிள்ளை அங்கேயே இருந்ததால், செய்தி அக்ரஹாரம் முழுவதும் பரவியது. ஊரில் மற்ற பகுதிக்கும் செய்தி பறந்தது.
“T.N. வந்திருக்கார், ஐயர் வீட்டு பூணுலுக்கு T.N. வந்திருக்கார்” இதுதான் பேச்சு.
அன்றைய தஞ்சை மாவட்டத்தில் T.N. என்றால் நாதஸ்வர சக்கரவர்த்தி T.N. ராஜரத்னம் பிள்ளைதான்.
ஐயருக்கு ஒரே பரவசம், கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. நிகழ்ச்சி முடிந்து நடந்த விருந்திலும் பிள்ளை கலந்து கொண்டார். அளவு கடந்த மகிழ்ச்சியில் திணறிப் போய் நன்றி தெரிவித்த ஐயருக்கு ராஜரத்னம் பிள்ளை பதில் சொன்னார். “என்னுடைய பல கச்சேரிகளில் நீங்கள் முன்னால் உட்கார்ந்து என் இசையை ரசித்ததை நான் பார்த்திருக்கிறேன், என் மேல் கொண்ட அன்பில் நீங்கள் அனுப்பிய அழைப்புக்கு வரக் கடமைப்பட்டவன். நான் மட்டும் வரவில்லை, வாத்தியங்களுடன் வந்திருக்கிறேன். இங்கேயே கச்சேரிக்கு மேடை போடுங்கள்” என்றார்.
கொஞ்ச நேரத்தில் ஐயர் வீட்டு எதிரில் தெருவிலேயே சிறிய மேடை தயாரானது. ஊர் மக்கள் அனைவரும் தகவல் அறிந்து கூடினார்கள். பெரிய கூட்டம் இல்லையென்றாலும் அவருடைய அன்றைய கச்சேரி பெரும் அமிர்தகானமாக அமைந்தது. அவருடைய நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிகழ்ச்சி என்பார்கள்.
தோடி ராகத்தில் புகழ் பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தியின் கச்சேரிகள் அந்தக் காலத்தில் ஜமீன்தார்கள், சமஸ்தான மன்னர்கள் வீட்டுத் திருமணங்களில் மட்டுமே நடக்க முடியும் என்பார்கள். அந்த அளவுக்கு பெரிய தொகையை அவர் வாங்கினார்.
சாதாரண ரசிகரான சுப்பிரமணிய ஐயர் வீட்டு சிறிய உபநயன நிகழ்ச்சிக்கு அன்று அவருடைய நிகழ்ச்சி அமைந்த்து.
கடைசியாக ஒரு முக்கியமான செய்தியோடு இதை முடிக்கிறேன்.
அதே தினத்தில் பம்பாய் மாநகரத்தில் தனக்கு ஏற்பாடாகியிருந்த இசை நிகழ்ச்சிக்குத் தன்னால் வர முடியவில்லை என்று ராஜரத்னம் பிள்ளை தந்தி கொடுத்திருந்தார்.
மு. கோபாலகிருஷ்ணன்
(தட்டச்சில் தயாரித்த
முரளி ராமச்சந்திரனுக்கு நன்றி)