Sunday, October 01, 2023

ஒழிக்கப்பட வேண்டிய நோய்

 உலகில் ஒழிக்கப்பட வேண்டிய நோய்கள் பல உண்டு. தீ-உயிராக (Virus) உடலுக்குள் நுழைந்து ஆளைக் கொல்வது முதல் மூளைக்குள் தீ எண்ணமாக நுழைந்து நன்மனதைக் கொல்வது வரை நோய்கள் பலவிதம், ஒழிக்கப்பட வேண்டியதும் பலது உண்டு.

உலக வரலாற்றில் மனிதகுலத்தின் அதிகாரம் (Dominance) நாம் சிந்திக்கத் துவங்கிய பின் வெகுவாக வேகம் எடுத்தது. அதற்கு முன்பு நாம் மற்ற குரங்கின (Primates) கூட்டத்தைப் போல பத்தோடு பதினொன்றாக ஏனோதானோ என்றே இருந்திருக்கிறோம். சிந்தனைப் பொறி தட்டிய உடனேயே "முதல் நிலை வேட்டையாடி" (Apex predator) ஆவதற்கான பாதையில் நகரத்துவங்கிவிட்டோம். ஆனால், சிந்தனை, நினைவாற்றல், அதை ஒட்டிய செயல்திறன் என்பன ஒருங்கிணைந்து அறிவார்ந்த (Cognitive) குழுவாக நாம் மாறிய போது நம்முள் பிளவுகளும் போட்டிகளும் தோன்றின என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

இன்றுவரை தொடர்கிறது. சமூக வாழ்விலும், அரசியலிலும், நாம் இன்னொரு மனிதனுடன் போட்டியிடும் எல்லா இடங்களிலும் பிளவுகள்  நீக்கமற உள்ளது. அதைத் தவறு என்றும் சொல்வதற்கில்லை. நம் முன்னேற்றத்துக்கான உந்துதல் இன்னொரு குழு/தனி-மனிதப் போட்டிகளில் இருந்தே பிறக்கிறது.

போட்டிகள் சரி என்றாலும் ஒரு அறிவார்ந்த சமூகமாக, பகிர்ந்துண்டு எல்லோரும் பசியாறி இன்புற்றிருக்க தடையாக இருப்பது மாறுபட்ட சிந்தனை கொண்டோர் மீது வளர்த்துக் கொள்ளும் வெறுப்ணர்வு. பழைமை விரும்பும் யானை, செலவை விரும்பும் கழுதை, நோயுற்று தடுமாறும் இலை, சுட்டெரிக்கும் சூரியன் என எந்தக் குழுவில் இருந்தாலும் எதிர்க் குழுவினர் மீது வெறுப்பை (Hate) வளர்த்தல் நல்லதுக்கில்லை. அப்படியான சூழல் உருவாவதை நோய் என்கிறார் ஐயன் வள்ளுவர்.

திருக்குறளில் நட்பியல் எனும் பகுதியை மட்டும் தனியாக ஒரு ஆராய்ச்சி நூலாகவே பதிப்பிக்க முடியும். அதன் அதிகார வரிசை அமைப்பும், உள்ளடக்கமும் ஆழ்ந்து படிப்போரை அசரடிக்கும் அடர்த்தி கொண்டது. நட்பு என்பதை எப்படி கவனமாக அமைத்துக்கொள்ள வேண்டும், தீய நட்பு, கூடாத நட்பு, பேதைமை (லூசுத்தனம்) என நட்பு மெதுமெதுவாசச் செல்லும் பாதையிலேயே அதிகாரங்கள் வரிசையாக வருகிறது. நட்பு திரிந்து கடுப்பாகி வெறுப்பு தோன்றுவது பகை உண்டாகும் முன் என அசத்துகிறது குறளின் அதிகார அமைப்பு.

வெறுப்புணர்வு துளிர்விடுவதைப் பற்றி எச்சரிக்கும் அதிகாரம் இகல்.

அந்த அதிகாரத்தின் முதல் குறள்,
"இகல் (வெறுப்புணர்வு) என்பது உயிர்களிடையே பிரிவினை எனும் பண்பற்ற தன்மையைப் பரப்பும் நோய்" என்கிறார்.

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்


இகல் என்பது எல்லா உயிர்க்கும் பகல் எனும்
பண்பின்மையைப் பரப்பும் நோய்

இகல் = வெறுப்புணர்வு
பகல் = பகுதல் = பிரிவினை
பாரிக்கும் = பரப்பும்

முழு அதிகாரமும் இகல் எனும் வெறுப்புணர்வை ஒழித்தால் கிடைக்கும் நிம்மதி, இன்பம், நன்மை பற்றி பேசுகிறது.

வெறுப்பை ஒழிக்க முடியாமல் போனால் பகை மூளும் என அடுத்த அதிகாரமே பகை பற்றித் துவங்குகிறார்.

அடுத்த மனிதனோடு பிளவை உண்டாக்கி, சமூகத்தில் நீதியைக் குலைக்கும் சிந்தனைகள், வேறுபாடுகள், வெறுப்பு என்பன நோய்களேதான். ஒழிக்கப்படட்டும். பிறப்பு நம் எல்லோருக்கும் ஒரே முறைதான், இப்பிறப்பில் நம்மைப் போலவே எல்லோரும் பிறப்பொக்கும் என வேறுபாடு களைந்து மனிதம் தழைக்கச் செய்வோம்.

--------