Showing posts with label சம்சாரம். Show all posts
Showing posts with label சம்சாரம். Show all posts

Friday, June 05, 2009

பதிவு இரண்டு : மின்சாரம் அது சம்சாரம்!!

மின்சாரம் அது சம்சாரம்

முந்திய பதிவைப் படித்து, பாராட்டியும் ஊக்கமும் தந்து மறுமொழிகள் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி கூறி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். உண்மையில், அந்தப் பதிவை எழுதிய நேரத்தில் இருந்த மகிழ்வை விட மறுமொழிகளை படிக்கும் போது மேலும் மகிழ்வை உணர்ந்தேன். நன்றி!

தொடர் பதிவு என்று சொல்லிட்டோமே. அடுத்து என்ன எழுதுவது என்ற கவலை. எனது பட்டியலை தேடி எடுத்துப் பார்த்தேன். ஆ.. மாட்டிகொண்டது தலைப்பு!

பாகம் இரண்டு : மின்சாரம் அது சம்சாரம்!!

முதலில் மின்சாரம் அது சமாச்சாரம் என்று தான் தலைப்பு வைக்க எண்ணினேன். பிறகு மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் ஏதோ ஒற்றுமை வேற்றுமைகள் இருப்பதாக மனதிற்கு பட்டது. மின்சாரம் தொட்டால் அதிர்ச்சிதரும். சம்சாரம் தொடாமலே அதிர்ச்சி தரும். மின்சாரம் அறிவியல். சம்சாரம் அறியாவியல். என்னடா தலைப்பிலேயே பிரச்னை பண்ண ஆரம்பித்து விட்டானே என்று யோசிக்காதீர்கள். எல்லாம் கடைசியில் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கையில்...

15 வருடமாக உடனிருந்தும் என்னை கொஞ்சமாவது புரிந்து வச்சிருக்கிங்களா என்று சம்சாரம் ஒரு புறம் முனகிக் கொண்டு இருக்க.. மாதா மாதம் ஏறிக்கொண்டே செல்லும் மின்சார செலவு ஒரு புறம்.. இதெல்லாம் புரியாத புதிர் என்று இவ்வளவு நாட்கள் விட்டுவிட்டேன். பொறு பொறு! சம்சாரத்தை 15 வருடமாகத்தானே தெரியும். மின்சாரத்தை 40 வருடமாக தெரியுமே. மேலும் மின்சாரம் அறிவியல் ஆயிற்றே. சரி. கொஞ்சம் அலசினால் புரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்கினேன்.

பல இணைய பக்கங்கள் சென்று மின்சார செலவை குறைப்பது எப்படி என்று படித்தேன். எந்தெந்த மின்சார கருவிகள் எவ்வளவு மின்சாரம் குடிக்கிறது என்று ஆராய்ந்தேன். வீட்டில் ஒவ்வொருவரின் மின்சார உபயோக பழக்கங்களை நோட்டமிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக மின்சார புதிர் விளங்க ஆரம்பித்தது.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.. ஆனால் எனக்கு பல விஷயங்கள் புதிதாக இருந்தது.
வீட்டுக்கு முன் தானாக எரியும் இரவு விளக்கிற்கு மாத செலவு 2 வெள்ளி. ஒரு முறை துணி உலர்த்தும் இயந்திரத்தை உபயோகித்தால் 35 காசு. ஒரு மணி நேரம் காற்று குளிர்விப்பான் உபயோகித்தால் 42 காசு. சாதாரண மின் விளக்கிற்கு பதில் கச்சிதமான மின்குழல் விளக்கு உபயோகித்தால் 75% மின்சாரம் மிச்சம்.

சரி இதெல்லாம் தெரிந்து என்ன லாபம். செயலாக்க வேண்டுமே. வீட்டில் முடிந்த அறைகளில் மின்விசிறி மாட்டினேன். வசந்த காலங்களில் சூரியன் தாழ்ந்ததும் சன்னல்களை திறந்தும் பகல் நேரங்களில் சன்னல் திரைகளை மூடியும் காற்று குளிர்விப்பான் உபயோகப் படுத்துவதை முழுவதுமாக தவிர்க்க முடிந்தது. மாலை வேளைகளில் இயற்கை காற்றும் சுவாசிக்க முடிந்தது. குளிர்பதனப்பெட்டியில் தேவையான அளவு பனிக்கட்டி சேர்ந்ததும் பனிக்கட்டி செய்வானை நிறுத்தலாம். கொத்து விளக்கில் சில விளக்குகளை அகற்றினேன். முடிந்தவரை துணி உலரும் இயந்திரம் உபயோகிப்பதை குறைத்து சில துணிகளை கொடியில் உலர்த்தினோம். துணியும் பொலிவுடன் இருந்தது. வீட்டின் சீதோஷண நிலையும் மேம்பட்டது. இது போன்ற மேலும் பல முன்னேற்றங்கள் செய்த பின் வழக்கமாக 100 முதல் 180 வெள்ளி வரை ஆகும் மாதாந்திர மின்சார செலவு இப்போது 50 வெள்ளிக்குள் அடக்க முடிந்தது. அப்பாடா ஒருவழியாக மின்சாரத்தை புரிந்து கொள்ள முடிந்ததே என்ற கூடுதல் சந்தோஷம். எல்லாவற்றிற்கும் மேலே இயற்கையை காக்கும் போராட்டத்தில் நம்மால் ஓர் சிறு பணியாவது செய்ய முடிந்ததே என்ற மன நிறைவு.

மேலும் விவரங்களுக்கு கீழிருக்கும் இணைய முகவரிகளை சொடுக்கவும்.
http://michaelbluejay.com/electricity/
http://dom.com/

உங்களில் இந்த சமாச்சாரத்தில் மேலும் புது அனுபவங்களும் வழிகளும் தெரிந்து இருப்பின், தயவு செய்து தெரிவிக்கவும். கேட்டு தெரிந்து கொள்ள எப்போதும் நான் தயார்!