Wednesday, February 27, 2008

எழுத்தாளர் சுஜாதா காலமானார்

எழுத்தாளர் சுஜாதா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது எழுபத்து ஐந்து. சிறுகதை, தொடர்கதை, நாவல், நாடகம், சினிமா, அறிவியல், சங்க காலக் கவிதைகள் என்று அனைத்து வகைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் சுஜாதா.
அவருடைய மரணம் எழுத்துலகுக்கு பேரிழப்பாகும்.

சுஜாதா பற்றி விக்கிபீடியாவில்.

சற்றுமுன் பதிவில் வந்த செய்தி.

சுஜாதா பற்றி ஜெயமோகன்

Tuesday, February 26, 2008

கிராமத்து ஊருணி


"ஊருணி நீர் நிறைந்தற்றே - உலகவாம்

பேரறி வாளன் திரு"

என்று ஊரே உண்ணும் ஊருணி பற்றி வள்ளுவர் பெருந்தகை அருமையாக ஈற்றடிகளில் சொல்லியிருப்பார். அவர் சொல்கிற ஊருணியில் கடல் அளவுக்கு விசயங்கள் அடங்கியிருக்கும். நாம என்னதான் வரி வரியா எழுதினாலும், அந்தக் காலத்து ஆட்களை கிட்ட கூட நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது. இதோ எனது கவிதை.

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_25.html

Sunday, February 24, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 19

நடிகர்கள் கட்சி
நடிகர்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம். என்று பா.ம.க தலைவர் அதாவது மரம் வெட்டி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நடிகர்களையும், நடிகைகளையும் எந்த காரணத்தை கொண்டும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வதில்லை என்பது ஒரு முடிவு.

நடிகர்கள் தொடங்கியிருக்கும் கட்சியுடனோ அல்லது இனி நடிகர்கள் தொடங்கும் கட்சியுடனோ எந்த காரணத்தை கொண்டும் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்பது மற்றொரு முடிவு.அத்துடன் நடிகர்களின் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வேறு எந்த கட்சியுடனும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது இன்னொரு முடிவு.

முதல் முடிவு சரி அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொண்டால் அடுத்த எம்.ஜி.ஆராக வந்துவிட்டால், நம்ம கதை கந்தலாகிவிடும் என்று இவர் பயப்படுவதில் நியாயம் இருக்கிறது. இரண்டாவது முடிவும், மூன்றாவது முடிவும் தான் சூப்பர். இவரை விடமாட்டேன் என்று கெட்டியாக பிடித்திருக்கும், திருமாவளவன் சமீபத்தில் சில படங்களில் நடித்து (அல்லது வெறும வந்து போனாரோ என்னவோ, அதைப் பார்த்த துர்பாக்கியசாலிகள் சொன்னால்தான் தெரியும்) தானும் ஒரு நடிகன் என்று பறையறிவித்தாரே, அது பரவாயில்லையா? அல்லது அவரையும் கழட்டி விட்டு விடுவாரா? நடிகர்களை பட்டாளம் பட்டாளமாய் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும், தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளோடும் இனி கூட்டணி இல்லையா? இதுதான் இந்த புத்தாண்டில் நான் கேட்ட மிக நல்ல அரசியல் செய்தி, அவர் சொன்னது போல் செய்தார் என்றால் (அப்படி செய்யும் பழக்கம் இல்லாதவர் அவர்), பா.ம.க வுக்கு பெரிசாக சங்கு ஊதிவிடலாம், தமிழ் நாடு உருப்பட ஒரு வழி பிறக்கும்.

கழிசடை அரசாங்கம்
ஒரு அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு குஜராத் உதாரணம் என்றால், எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு தமிழகம் உதாரணம் என்றால் அது மிகையில்லை.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள அரிசியை பெண்கள் கடத்துகிறார்களாம், அதனால், மனம் வெந்து, நொந்து, உருகி உருகி ஒரு (அபத்தக்) கவிதையை முதல்வர் எழுதியிருக்கிறார். இது என்ன அரசாங்கமா, அல்லது வடிவேலு நடிக்கும், 23-ம் புலிகேசி படமா? ஒரு குற்றம் நடந்திருக்கிறது, அதைச் செய்பவர்கள் யார் என்று தெரிகிறது, அவர்களைப் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்து அடுத்து அதே தவறை யாரும் செய்ய அஞ்சும்படி செய்யாமால், ஒரு கவிதை எழுதி விட்டால், அவர் ஒரு தலைவர், முதல்வர், என்னய்யா அரசாங்கம் இது, இது போதாதென்று, பாரதி பெயரையும் கவிதையில் சேர்த்து எழுதிவிட்டார். ஏன் பாரதி சொன்னாரே, 'சீ சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' அது நினைவில் இல்லையா? ஒரு ஓட்டுப் பள்ளிக் கூடத்தில் தீவிபத்தில் குழந்தைகள் இறந்தால் - ஒரு கவிதை, ஒரு திருமணத்தில் தீ விபத்து அதில் பலர் இறந்தால் - ஒரு கவிதை, என்ன நடவடிக்கை என்று யாராவது கேட்டால் - 'வரியா வரியா நீயும் நானும் தீ குளிக்கலாம்' என்று பொது மக்கள் எதிரில் நிருபர்களை அநாகரீகமாக பேசலாம், இப்படி ஒரு முதல்வர், இவர் தலைமையில் ஒரு அரசாங்கம். இந்தக் கழிசடை அரசாங்கம் இனியும் தேவையா? சிந்தியுங்கள்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல்
எனக்கு அமெரிக்காவின் தேர்தல் சற்று ஆச்சர்யம் கலந்த குழப்பம்தான். வீட்டுக்கு வீடு போஸ்டர் ஒட்டவில்லை, வண்ண (வன்னமா? வண்ணமா? என்பதை RTS-ல் யாராவது தீர்மானிக்கட்டும், எனக்குத் தெரிந்ததை நான் எழுதி விட்டேன், இதுக்காக பின்னூட்டம் போட்டு என் தமிழ் அறிவை(?) அசிங்கப் படுத்தாதீங்க) வண்ண சுவர் விளம்பரம் இல்லை, இரவு 12 மணி வரை முச்சந்தியில் மைக் செட் கட்டி அவன் இப்படி, இவன் இப்படி என்று ஏக வசனத்தில் லட்ச்சார்ச்சனை இல்லை. இதெல்லாம் இல்லாமல் என்ன தேர்தல் இது. அதுவும் ஒரே கட்சியிலிருந்து பலர் ஒரே பதவிக்கு போட்டியிடுவார்களாம், அவர்கள் அருகருகே அமர்ந்து அடிச்சுக்காம பேசுவாங்களாம். அடப் பாவிகளா, இது அடுக்குமா, அவ்வளவு நல்லவங்களாடா நீங்கள்ளாம்!

இந்தப் ப்ரைமரி கூத்து நடந்த பிறகு யார் அடுத்த கட்சி வேட்பாளரோடு போட்டியிடலாம் என்று முடிவெடுப்பார்களாம். இந்தியாவில் கட்சித் தலைவர்தான் முதல்வர், அதே மாதிரி கட்சித் தலைவர்தான் பிரதமர். (தற்போதைய பிரதமரைத் தவிர, மேலும், இவர் எங்கே ஆட்சி செய்கிறார், வேறு ஒருவர் செய்யர ஆட்சியில் இவர் வெறும், வாய்தானே அசைக்கிறார்). இங்கு எவர் அதிகம் பிரபலமோ, எவர் அதிகம் கட்சிக்கு நிதி கொண்டுவந்தாரோ அவர் போட்டியிடுவாராம், அட போங்கப்பா, இதேல்லாம் நல்லாவா இருக்கு, கஷ்டப்பட்டு ஒருத்தர் கட்சியை ஆரம்பிப்பாராம், வேர ஒருத்தர் அதிபராகி விடுவாராம். அந்தக் கதையெல்லாம், எங்க ஊர்ல கிடையாது. சொந்தப் பிள்ளைக்கே பதவி கொடுக்காம, புதையல பூதம் காக்கரமாதிரி நாங்க பதவியைப் பிடிச்சிட்டு இருக்கோம், இங்க யாரோ ஒருத்தர் கிட்ட பதவியை கொடுப்பாங்களாம். ஆமாம், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த பலரும் Democratic கட்சியின் ஆதரவாளர்களாமே, அப்படியா? அது ஏன் என்று யாராவது பின்னூட்டமிட முடியுமா? அதோடு Democratic கட்சிக்கு தமிழாக்கம் என்ன என்றும் பின்னூட்டமிட்டால் நல்லது.


ஆத்திகமா, நாத்திகமா

ஆத்திகம் நாத்திகம் ரெண்டையும் பற்றிய குழப்பம் பலருக்கும் இருக்கும். சமீபத்தில் சன் டீவியில் சத்யராஜின் பேட்டியில் இதை விளக்கி தனது நாத்திகப் பற்றை விளக்கினார். அவர் சொல்கிறார், எப்போது ஒருவர் கடவுள் தந்த கண்ணை நம்பாமல் கண்ணுக்கு கண்ணாடி அணிகிறாரோ அப்போதே அவர் நாத்திகவாதியாகி விட்டார். எவர் கடவுளை நம்பாமல் டாக்டரை பார்க்க போகிறாரோ அவரும் நாத்திகவாதிதான் என்கிறார். அடுத்து எவர் காலையில் பல் துலக்குகிறாரோ அவரும், எவர் குளிக்கிறாரோ அவரும், எவர் உடை உடுத்துகிறாரோ அவரும், ஏன் உலகில் யாருமே ஆத்திகவாதிகள் இல்லை, எல்லோருமே நாத்திகவாதிகள்தான் என்று சொல்வார் என்று நினைக்கிறேன். இதற்கு அவர் பெரியார்தான் தனக்கு ஆசான் என்று கூறினார். கடவுள் சிலைகளைக் கும்பிட்டால், நாம் பழமைவாதிகள், மறைந்த மனிதர்களுக்கு வைக்கப் பட்டுள்ள சிலைகளை வணங்கினால், பகுத்தறிவு. கனவில் கடவுள் தோன்றியதாக புராணங்கள் சொன்னால், அது கட்டுக்கதை, கனவில் அண்ணா, பெரியார், இராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத் போன்றோர் வந்ததாகச் சொல்லி மக்களை முட்டாளாக்கினால், அது பகுத்தறிவு. சத்யராஜிடம் எனக்குப் பிடித்தது, அவருடைய கிண்டல், கேலி, ஆனால், இந்து மதத்தை மற்றும் தாக்கிக் கொண்டிருந்த பெரியாரின் சீடர் என்று சொல்லிக் கொள்ளும் அவர், தைரியமாக இப்படி எல்லா மதத்தினரையும் தாக்கி அனைவரும் நாத்திகர்தான் என்று சொன்னது ரொம்ப அதிகமாக இருந்தாலும், அவர் இப்படியே பேசி வருவது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

வெத்து அன்புமணியின் மற்றுமொரு வேண்டுகோள்
ஷாருக் கான், ஆமீர் கானைப் பார்த்து அவரிடமிருந்து படைப்பாளிகளின் முக்கியத்துவம், மற்றும் அருமைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

சினிமாவில் நடிகர்கள் புகை பிடித்தால் அது பார்கின்ற சிறுவர்களை பாதித்து அவர்கள் புகை பிடிப்பது அதிகரிக்கிறது, நடிகர்கள் குடிப்பது போன்ற காட்சியினால், சிறுவர்களை அது பாதித்து அவர்களும் குடிக்க ஆரம்பிக்கின்றனர். எனவே, ஷாருக் கானும், அமிதாப் பச்சனும், படங்களில் புகை பிடிக்கிற, மது அருந்துகிற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று மீண்டும் கூறியிருக்கிறார். அனைத்து அதிகாரங்களும் உள்ள அரசாங்கத்தால், சிகரெட், பீடி, புகையிலை எல்லாவற்றையும் தடை செய்ய முடிந்தாலும், செய்ய மாட்டார்கள் அது அவர்கள் பாக்கெட்டை நிரப்புவது தேவை, ஏன் குறைந்த பட்சம் சாராயத்தை தடை செய்யுங்களேன், அது முடியவில்லையே, தெருவுக்கு 2-3 டாஸ்மார்க் கடை வருகிறதே அது பரவாயில்லையா? ஆமாம், சினிமாவில் வரும் வன்முறையால் சிறுவர்கள் பாதிப்படையவில்லையா? காதல் காட்சி என்ற போர்வையில் வரும் கவர்ச்சியும், அநாகரீகங்களும், பரவாயில்லையா? வசனங்களால் வரும் பாதிப்பு பரவாயில்லையா? இதையெல்லாம் தடை செய்து விடலாமா? பிறகு என்ன கருமத்துக்கு படம் எடுப்பது என்று எல்லோரும் வேறு வேலை செய்யப் போயிட்டா, பல கோடி அரசாங்கத்துக்கு வரும் வரிப்பணம் போயிடுமே பரவாயில்லையா?

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

பித்தன்.
piththanp@gmail.com
பித்தனின் மற்ற கிறுக்கல்களை இங்கு படிக்கலாம்

Saturday, February 23, 2008

உயிர் காக்க உதவுங்கள்

ராஜேஷ் அவர்கள் பற்றி ஒரு கட்டுரையும், கவிதையும் எழுதி எண்ணாலான மிகச் சிறிய உதவியாக எனது வலைத்தளைத்தில் பதிந்திருக்கிறேன். வாருங்கள், வாசியுங்கள், ராஜேஷ் குடும்பத்தாருக்கு உதவிக் கரம் நீட்டுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_23.html

இன்ஸ்ப்ரூக்கில் வெடிகுண்டு...

வெள்ளிக்கிழமை மதியம் ஒரு ஐந்து மணி இருக்கும். எப்போதடா வீட்டுக்கு கம்பி நீட்டலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். சக ஊழியர் கூப்பிட்டார் - "ஏய் இங்கே வந்து பாரேன்". போய் ஜன்னல் வழியாக பார்த்தால் தூக்கிவாரிப்போட்டது. சூப்பர் ஸ்டார் சிவாஜி படத்துல ஸ்பேஸ் ஸூட் போட்டு வருவாரே, அதுபோலவும் அசலாய் கீழே படத்தில் இருப்பவர்போலவும் ஒருவன் பார்க்கிங் லாட்டில் ஒரு காரைச் சுற்றி சுற்றி வந்தான்.

அதுவும் நம் காருக்கு அடுத்த வரிசையில் ஒரு காருக்கு பின்னால் மண்டியிட்டான். அப்புறம் எழுந்து வேகமாக ஜகா வாங்கினான். சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் வந்து காருக்கு பின்னால் மண்டியிட்டு ஏதோ செய்தான். மறுபடியும் ஜகா வாங்கினான். சக ஊழியன் சினிமாவில் வருவது போல சிவப்பு வயர் இல்ல, நீல கலர் வயரை கட் பண்ணு என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தான். 
இப்படியே போய் கொண்டிருந்தது. பிறகு முகமூடி மனிதன் காணவே காணோம். நான்கு தீயணைப்பு வண்டிகளும், இரண்டு இன்ஸ்ப்ரூக் பேட்ரோல் கார்கள், சில போலீஸ் கார்கள் வந்து பார்க்கிங் லாட்டை நிரப்பி விட்டார்கள். இதற்குள் வெடிகுண்டு பயம் போய், கார் சுக்கு நூறாய் வெடிக்கும் காட்சியைப் பார்க்கும் ஆசை பாழும் மனதில் தொற்றிக் கொண்டது. ஆனால் யாரும் கார் கிட்டேயே போகவில்லை. கிட்டே போனால்தானே தப்பான வயரை வெட்டுவதற்கு...
கொஞ்ச நேரம் அந்தக் காரையே வேடிக்கை பார்த்துவிட்டு போரடித்ததால் வீட்டுக்கு கிளம்பி விட்டேன். இப்போது கவிநயாவின் கவிதையில் புல்லரித்துப் போய் உட்கார்ந்திருந்த போது, சக ஊழியனிடம் இருந்து இந்த சுட்டி வந்தது. இதற்குத்தானா இவ்வளவு கலாட்டா? ஆனால் அவ்வளவு காத்திருந்ததற்கு அந்த சின்ன வெடிப்பையாவது சீக்கிரம் பண்ணித் தொலைத்திருக்கலாம் :-)

Friday, February 22, 2008

பதங்களின் சரசம்

அண்ட சராசரம் அனைத்தும் உறைய!
ஆடிய பதங்களில் ஆனந்தம் துலங்க!

இருகரு விழிகளில் கனவுகள் விரிய!
நவரசம் கண்டு நானிலம் மயங்க!

காற்றினில் கால்கள் கவிதைகள் எழுத!
காற்சதங்கை ஒலி பாடல்கள் இசைக்க!

கூந்தல் கலைந்து வானம் அளக்க!
அபிநயம் பார்த்து அகிலம் வியக்க!

சுவாசம் சற்றே வேகம் கூட்ட!
வியர்வை கங்கை ஆறாய் ஓட!

நினைவுகள் யாவும் நிர்மலமாக!
உணர்வுகள் மறைந்து உலகம் ஜொலிக்க!

ஆடல் புரிதல் ஆனந்தமன்றோ!!
பதங்களின் சரசம் பரவசமன்றோ!!


--கவிநயா

Sunday, February 17, 2008

அரிதாரத்தப் பூசிக் கொள்ள ஆசை

கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆகிப்போச்சு என்று நினைக்கும்போது காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என வியக்க வைக்கிறது. அதாங்க போன வருசம் பனி பற்றி ஒர் வெண்பா பதிவு போட்டோம். இந்த வருசம் பனி பத்தி யோசித்துக் கொண்டிருந்தபோது கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்று, அசையாப் பொருட்கள் எல்லாம் அரிதாரம் பூச ஆசைப்பட்டு, விழுந்த பனியை தம்மேல் பூசிக்கொள்வது போல எழுதியிருக்கிறேன். படித்துச் சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று ;-)

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_11.html

ரிச்மண்டில் பொங்கல் விழா

பல பல்சுவை நிகழ்ச்சிகளோடு 2/16/2008 அன்று ரிச்மண்டில் நடந்த விழாவைப் பற்றிய என் பார்வை.

காட்டுக்குள்ளே ஸ்போர்ட்ஸ் டே
நாடகம் ஆரம்பித்து முடியும் தருவாயில், தோன்றியது. இத்தனை குழந்தைகளை ஒருங்கிணைத்து இப்படி ஒரு அருமையான நாடகத்தை தர முதலில் தேவை தைரியம், அடுத்த தேவை பொறுமை. ஒரு சிறிய வேண்டுகோள், நாடகத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும். பாவம், 30-40 நிமிடங்கள் புலி, சிங்கம், யானை, முயல் என வேடமிட்டிருந்த குழந்தைகள் அனைவரும் அதை கலைக்காமல் பொறுமையாக இருந்தது ஆச்சர்யம் ஆனால், நாடகத்தின் நீளம் பார்வையாளர்களை கட்டிப் போட முடியாமல் கொஞ்சம் தடுமாறியது உண்மை. நாடகத்தின் சிறப்பான அம்சம், வசனங்களை முன்கூட்டியே பதிவு செய்து அதை ஒலிபரப்பி அதனூடே நாடகத்தை நடத்தி சென்றது. கடுமையான பயிற்சியில்லாமல் குழந்தைகளால் அதை சாதித்திருக்க முடியாது. இதை சாதித்த குழந்தைகள் அனைவருக்கும், கலக்கிய தாய்மார்களுக்கும், இயக்குனருக்கும், ஒரு பெரிய ஜே.

சார்லோட்ஸ்வில்லில் இருந்து ஒரு புதிய நட்சத்திரம்
சார்லோட்ஸ்வில்லில் இருந்து வந்த சம்யுக்தாவின் நடனமும், பின்னர் அவர் பாடல் பாடியதும் நன்றாக இருந்தது. இவரைப் போல பல திறமைகள் கொண்டவர்கள் ரிச்மண்டின் தமிழ் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் கொணர முயல்வது மிக மகிழ்ச்சியூட்டும் விஷயம்.

நாட்டியாஞ்சலி

உமா செட்டி அவர்களின், அப்ஸராஸ் ஆர்ட்ஸ் குழுவின் மாணவிகள் ஐவரின் பரதநாட்டியம் மிக அருமை. கடும் பயிற்சி செய்திருந்தாலும், அவர்களின் ஒருங்கிணைந்த நடனம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாகு சொன்னது போல், இந்த குழந்தைகள் இந்த வயதிலேயே இப்படி அருமையாக நடனம் ஆடினால் இன்னும் சில வருடங்கள் கடந்த பிறகு எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பார்க்க எமக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. .

அசல் பொங்கல்
புஷ்பவனம் குப்புசாமியின் பாடலுக்கு, சின்னஞ் சிறார்களின் அற்புத நடனம். ஒரு உரல், அதில் இடிக்க உலக்கை, பளபளக்கும் முறம், பொங்கி வரும் பொங்கல் பானை என அருமையான பொங்கலை நடத்தி பரசவப் படுத்தினார்கள் குழந்தைகள்.

கும்மாங் குத்து
குத்துன்னா குத்து கும்மாங்குத்து குத்தி விட்டார் ஸ்வேதா. பதவிசாக வெளிப்பார்வைக்கு தெரியும் இவர் நடனமாடத் தொடங்கி விட்டால் பின்னி பெடலெடுத்து விடுகிறார்.

ஹாரிபார்ட்டர் க்விஸ்
மொத்தம் 21 பேர் கலந்து கொண்டு, தேர்வுச் சுற்றிற்கு பிறகு 7 பேர் கலந்து கொண்டு கலக்கின ஒரு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. கதையை எழுதிய ஜே.கே. ரோவ்ளிங்கே இந்த அளவு அவருடைய கதைகளை நினைவில் வைத்திருப்பாரா என்பது சந்தேகம். கலந்து கொண்டு பதிலலித்த சிறுவர், சிறுமியரின் திறமையை மெச்சு வதைத் தவிர வேறு தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் அரங்கத்தில் இருந்த பல சிறுவர் சிறுமிகளையும் இந்த க்விஸ் கட்டிப் போட்டது மட்டும் நிஜம். என்ன ஒரு குறை என்றால், எனக்கு கேட்ட கேள்வியே புரியவில்லை. புரிந்து கொள்ள முதலில் அந்த புத்தகங்களைப் படியுங்கள் என்கிறார் அரவிந்தன். அட போங்கப்பா, படிக்கரதுன்னா இன்னேரம் படிச்சிருக்க மாட்டோம். நமக்கு புரியரமாதிரி பீ.டி. சாமிக்கு அப்பரம் யாரும் தமிழ்ல மர்மக்கதை எழுதரதா தெரியலை.

பெரியவர்கள் க்விஸ்
15 பேர்களை 5 குழுக்களாகப் பிரித்து வைத்து ஒரு அருமையான சினிமா க்விஸ் நடத்தி விட்டார் ரவி திருவேங்கடத்தான். பரதேசி: அவர் நடுவில் ஒரு சுற்று புத்தகங்களை பற்றி கேட்டது மறக்க வில்லை அதனால், உடனே கண்டித்து பின்னூட்டம் போட்டு விடாதீர்கள. ஆடியோ ரவுண்ட் எப்போதும் கொஞ்சம் காலை நொண்டும், அதுபோல இல்லாமல் சரியாக செய்யப்பட்டது பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

இனி எனது பொதுவான சில கருத்துக்கள்.

நிகழ்ச்சியை சரியான நேரத்தில் ஆரம்பிப்பதை இந்த முறையும் செய்தது பாரட்டப் பட வேண்டிய ஒன்று.

ஹாரி பார்ட்டர் க்விஸ் எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. அந்தக் கதை படித்தவர்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும், மற்றவர்களுக்கு? அது வேண்டாம் என்று சொல்லவில்லை, அதை ஒரு சுற்றாக மட்டும் வைத்து விட்டு, இந்த க்விஸ்ஸை பொது அறிவுக்கான ஒன்றாக செய்திருக்கலாம். புத்தகத்தை கரைத்து குடித்து விட்டு கேட்ட கேள்விகளுக்கு பளிச் பளிசென்று பதிலலித்த விதம் அசத்தலாக இருந்தாலும், ஹாரி பார்ட்டர் புத்தகங்கள் மட்டுமே வாழ்க்கையில்லை. இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

ரவி ஒரு செய்திக் கிடங்கு, அவரிடம் எந்த விஷங்களைப் பற்றியும் எப்பொழுது வேண்டுமானாலும் பேச முடியும், நகைச்சுவை அவருடைய மிகப் பெரிய சொத்து. அவர் ஏன் இன்னமும் தமிழில் standup comedy செய்யவில்லை என்று தெரியவில்லை.

சங்கத்திற்கு உடனடித் தேவை ஒரு தேர்ந்த தொகுப்பாளர். CCI-ல் நடந்த சில நிகழ்ச்சிகளில் பார்த்தது, அவர்களுடைய நிகழ்ச்சிகளை ஓரிருவர் மட்டுமே தொகுத்தளிக்கின்றார்கள், அது போல நிரந்தரமாக ஏன் ஒருவரை தொகுத்தளிக்க ஏற்பாடு செய்யக்கூடாது? செல்வம் சகஜமாக தமிழில பேசினாலும், நாகு ஆங்கிலம் தமிழ் கலந்து கட்டி அடிச்சாலும், மக்களை மகிழ்விக்க ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது.

முன்பே சொன்னது போல் சங்கத்து விழாக்களை ஒளிப்பதிவு செய்து குறுந்தகட்டில் பதிவு செய்து வெளியிடுவதை தொடர்ந்து செய்ய சங்கம் ஏற்பாடு செய்யலாம். தந்தையர்கள் குலமே வாழ்த்தும்.

அடுத்த கிறுக்கலில் சந்திக்கின்றேன்.

பித்தன்.

piththanp@gmail.com

Wednesday, February 13, 2008

பொங்கல் விழா - காட்டுக்குள்ளே ஸ்போர்ட்ஸ் டே!

வரும் சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு வர்ஜினியா ஹிந்து செண்டரில்  நமது தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அவற்றில் ஒரு பாகமான இளம் தென்றல் தியேட்டர்ஸின் காட்டுக்குள்ள ஸ்போர்ட்ஸ் டே! (To view full trailer, click here)


வேண்டும்!

நதியோடு ஜதிபோட்டு நான் ஆட வேண்டும் ;
நட்சத்திரப் பூப்பறித்து நான் சூட வேண்டும் !
வான் நிலவைக் கைவிளக்காய் நான் ஏந்த வேண்டும் ;
வானவில்என் வாசலிலே தோரணமாய் வேண்டும் !

கதிரவன்என் கவிதையில்தன் கனல் மறக்க வேண்டும் - நான்
காற்றாகிக் குழல் நுழைந்து மனம் மயக்க வேண்டும் !
மணம்வீசும் மலராகி நான் சிரிக்க வேண்டும் - நான்
ரீங்கார வண்டாகித் தேன் குடிக்க வேண்டும் !

சின்னச்சிற் றோடையாய்ச் சிலுசிலுக்க வேண்டும் - நான்
புத்தம்புது வெள்ளமாய்ப் புவி தழுவ வேண்டும் !
வன்னச்சிட்டுக் குருவியாய்ச் சிறகடிக்க வேண்டும் - நான்
சிறகடித்து மனம்விரித்து வான் அளக்க வேண்டும் !

பாறைக்குள் பச்சையாய் நான் துளிர்க்க வேண்டும் - நான்
பாசமுடன் உயிர்கள் தமை நேசிக்க வேண்டும் !
அன்பென்னும் ஆதார ஸ்ருதியாக வேண்டும் - நான்
ஆசைகளைக் கடந்துலகில் அறம் வளர்க்க வேண்டும் !

--கவிநயா

Monday, February 04, 2008

தடயம் - மர்மத் தொடர்

தடயம் மர்மத்தொடரின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது அத்தியாயங்களை இங்கே படிக்கலாம்.

http://kalaichcholai.blogspot.com/2008/02/8.html
http://kalaichcholai.blogspot.com/2008/02/9.html

பி.கு. எல்லோரும் தொடர்ந்து ஏதாவது எழுதும் போது, நமக்கு கவிதையும், அரசியலும் வராட்டி என்ன கெட்டு போச்சு, இப்படி போட்டு தாக்கிடுவோம்ல... இன்னும் ரெண்டு மூனு அத்தியாயத்தில தடயத்தை முடிச்சுடுவோம், அப்பதான், என்ன எழுதி உங்களை எல்லாம் எப்படி படுத்தலாம்னு யோசிக்கனும். இந்தக் கதை எப்படி முடியப் போகுதுன்னு யாரும் கவலைப் படாதீங்க, ஏன்னா அது எனக்கும் தெரியாது.

- முரளி.

Saturday, February 02, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 18

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2008/02/18.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com