Sunday, February 17, 2008

ரிச்மண்டில் பொங்கல் விழா

பல பல்சுவை நிகழ்ச்சிகளோடு 2/16/2008 அன்று ரிச்மண்டில் நடந்த விழாவைப் பற்றிய என் பார்வை.

காட்டுக்குள்ளே ஸ்போர்ட்ஸ் டே
நாடகம் ஆரம்பித்து முடியும் தருவாயில், தோன்றியது. இத்தனை குழந்தைகளை ஒருங்கிணைத்து இப்படி ஒரு அருமையான நாடகத்தை தர முதலில் தேவை தைரியம், அடுத்த தேவை பொறுமை. ஒரு சிறிய வேண்டுகோள், நாடகத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும். பாவம், 30-40 நிமிடங்கள் புலி, சிங்கம், யானை, முயல் என வேடமிட்டிருந்த குழந்தைகள் அனைவரும் அதை கலைக்காமல் பொறுமையாக இருந்தது ஆச்சர்யம் ஆனால், நாடகத்தின் நீளம் பார்வையாளர்களை கட்டிப் போட முடியாமல் கொஞ்சம் தடுமாறியது உண்மை. நாடகத்தின் சிறப்பான அம்சம், வசனங்களை முன்கூட்டியே பதிவு செய்து அதை ஒலிபரப்பி அதனூடே நாடகத்தை நடத்தி சென்றது. கடுமையான பயிற்சியில்லாமல் குழந்தைகளால் அதை சாதித்திருக்க முடியாது. இதை சாதித்த குழந்தைகள் அனைவருக்கும், கலக்கிய தாய்மார்களுக்கும், இயக்குனருக்கும், ஒரு பெரிய ஜே.

சார்லோட்ஸ்வில்லில் இருந்து ஒரு புதிய நட்சத்திரம்
சார்லோட்ஸ்வில்லில் இருந்து வந்த சம்யுக்தாவின் நடனமும், பின்னர் அவர் பாடல் பாடியதும் நன்றாக இருந்தது. இவரைப் போல பல திறமைகள் கொண்டவர்கள் ரிச்மண்டின் தமிழ் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் கொணர முயல்வது மிக மகிழ்ச்சியூட்டும் விஷயம்.

நாட்டியாஞ்சலி

உமா செட்டி அவர்களின், அப்ஸராஸ் ஆர்ட்ஸ் குழுவின் மாணவிகள் ஐவரின் பரதநாட்டியம் மிக அருமை. கடும் பயிற்சி செய்திருந்தாலும், அவர்களின் ஒருங்கிணைந்த நடனம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாகு சொன்னது போல், இந்த குழந்தைகள் இந்த வயதிலேயே இப்படி அருமையாக நடனம் ஆடினால் இன்னும் சில வருடங்கள் கடந்த பிறகு எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பார்க்க எமக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. .

அசல் பொங்கல்
புஷ்பவனம் குப்புசாமியின் பாடலுக்கு, சின்னஞ் சிறார்களின் அற்புத நடனம். ஒரு உரல், அதில் இடிக்க உலக்கை, பளபளக்கும் முறம், பொங்கி வரும் பொங்கல் பானை என அருமையான பொங்கலை நடத்தி பரசவப் படுத்தினார்கள் குழந்தைகள்.

கும்மாங் குத்து
குத்துன்னா குத்து கும்மாங்குத்து குத்தி விட்டார் ஸ்வேதா. பதவிசாக வெளிப்பார்வைக்கு தெரியும் இவர் நடனமாடத் தொடங்கி விட்டால் பின்னி பெடலெடுத்து விடுகிறார்.

ஹாரிபார்ட்டர் க்விஸ்
மொத்தம் 21 பேர் கலந்து கொண்டு, தேர்வுச் சுற்றிற்கு பிறகு 7 பேர் கலந்து கொண்டு கலக்கின ஒரு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. கதையை எழுதிய ஜே.கே. ரோவ்ளிங்கே இந்த அளவு அவருடைய கதைகளை நினைவில் வைத்திருப்பாரா என்பது சந்தேகம். கலந்து கொண்டு பதிலலித்த சிறுவர், சிறுமியரின் திறமையை மெச்சு வதைத் தவிர வேறு தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் அரங்கத்தில் இருந்த பல சிறுவர் சிறுமிகளையும் இந்த க்விஸ் கட்டிப் போட்டது மட்டும் நிஜம். என்ன ஒரு குறை என்றால், எனக்கு கேட்ட கேள்வியே புரியவில்லை. புரிந்து கொள்ள முதலில் அந்த புத்தகங்களைப் படியுங்கள் என்கிறார் அரவிந்தன். அட போங்கப்பா, படிக்கரதுன்னா இன்னேரம் படிச்சிருக்க மாட்டோம். நமக்கு புரியரமாதிரி பீ.டி. சாமிக்கு அப்பரம் யாரும் தமிழ்ல மர்மக்கதை எழுதரதா தெரியலை.

பெரியவர்கள் க்விஸ்
15 பேர்களை 5 குழுக்களாகப் பிரித்து வைத்து ஒரு அருமையான சினிமா க்விஸ் நடத்தி விட்டார் ரவி திருவேங்கடத்தான். பரதேசி: அவர் நடுவில் ஒரு சுற்று புத்தகங்களை பற்றி கேட்டது மறக்க வில்லை அதனால், உடனே கண்டித்து பின்னூட்டம் போட்டு விடாதீர்கள. ஆடியோ ரவுண்ட் எப்போதும் கொஞ்சம் காலை நொண்டும், அதுபோல இல்லாமல் சரியாக செய்யப்பட்டது பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

இனி எனது பொதுவான சில கருத்துக்கள்.

நிகழ்ச்சியை சரியான நேரத்தில் ஆரம்பிப்பதை இந்த முறையும் செய்தது பாரட்டப் பட வேண்டிய ஒன்று.

ஹாரி பார்ட்டர் க்விஸ் எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. அந்தக் கதை படித்தவர்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும், மற்றவர்களுக்கு? அது வேண்டாம் என்று சொல்லவில்லை, அதை ஒரு சுற்றாக மட்டும் வைத்து விட்டு, இந்த க்விஸ்ஸை பொது அறிவுக்கான ஒன்றாக செய்திருக்கலாம். புத்தகத்தை கரைத்து குடித்து விட்டு கேட்ட கேள்விகளுக்கு பளிச் பளிசென்று பதிலலித்த விதம் அசத்தலாக இருந்தாலும், ஹாரி பார்ட்டர் புத்தகங்கள் மட்டுமே வாழ்க்கையில்லை. இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

ரவி ஒரு செய்திக் கிடங்கு, அவரிடம் எந்த விஷங்களைப் பற்றியும் எப்பொழுது வேண்டுமானாலும் பேச முடியும், நகைச்சுவை அவருடைய மிகப் பெரிய சொத்து. அவர் ஏன் இன்னமும் தமிழில் standup comedy செய்யவில்லை என்று தெரியவில்லை.

சங்கத்திற்கு உடனடித் தேவை ஒரு தேர்ந்த தொகுப்பாளர். CCI-ல் நடந்த சில நிகழ்ச்சிகளில் பார்த்தது, அவர்களுடைய நிகழ்ச்சிகளை ஓரிருவர் மட்டுமே தொகுத்தளிக்கின்றார்கள், அது போல நிரந்தரமாக ஏன் ஒருவரை தொகுத்தளிக்க ஏற்பாடு செய்யக்கூடாது? செல்வம் சகஜமாக தமிழில பேசினாலும், நாகு ஆங்கிலம் தமிழ் கலந்து கட்டி அடிச்சாலும், மக்களை மகிழ்விக்க ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது.

முன்பே சொன்னது போல் சங்கத்து விழாக்களை ஒளிப்பதிவு செய்து குறுந்தகட்டில் பதிவு செய்து வெளியிடுவதை தொடர்ந்து செய்ய சங்கம் ஏற்பாடு செய்யலாம். தந்தையர்கள் குலமே வாழ்த்தும்.

அடுத்த கிறுக்கலில் சந்திக்கின்றேன்.

பித்தன்.

piththanp@gmail.com

9 comments:

  1. பித்தன்,

    நிகழ்ச்சிகளை பற்றி அருமையான விமர்சனம்.

    தொடரட்டும் உங்கள் பணி !!!

    ReplyDelete
  2. ஐயா பித்தரே,

    உமது 'பாரபட்சமில்லாத' விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. நிரந்தரமாக ஒருவரை தொகுத்தளிக்க வைப்பது நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை. நான் பார்த்த CCI நிகழ்ச்சிகளில் வெவ்வேறு நபர்கள் தொகுத்தளித்தார்கள். இந்த ஆண்டில் மற்ற நிகழ்ச்சிகளை வேண்டுமானால் உம்மிடம் விட்டு விடுகிறேன். என்ன சொல்கிறீர்?

    என்ன செய்வது? நானும் ஒவ்வொரு முறையும் ஆங்கிலத்தில் பேசலாம் என்றுதான் முயற்சிக்கிறேன். தமிழைத் தவிர்க்க முடியவில்லை ;-)

    சிறுவர்களை மகிழ்விக்கத்தான் ஹாரி பாட்டர் க்விஸ். அடுத்த முறை நாங்கள் வாழ்க்கை சம்பந்தமான க்விஸ் வைத்து பெற்றோர்கள் கோபித்துக் கொண்டால் உம்மிடம் அனுப்புகிறோம். சரியா?

    இன்னொரு விஷயம். நீர் யார் என்று என்னை குடாய் குடாய் என்று குடாய்கிறார்கள்.(யாரும் இந்த பதிவுகளைப் படிப்பதில்லை என்ற நம் நம்பிக்கையில் மண்) தனியாக மின்மடலில் ஒரு லிஸ்ட் அனுப்புகிறேன். உம்ம அடையாளத்தை ஒரு non-disclosure ரத்தத்தில் கையெழுத்து வாங்கி தெரிவித்துவிட்டால் உமக்கு கோடி புண்ணியம்.

    திடீர்னு ஒரு ஐடியா. நம்ம சதங்காவுக்குப் புல்லரிக்குமாறு ஒரு சுஜாதா நாவல் க்விஸ் வைத்தாலென்ன?

    ReplyDelete
  3. சதங்கா - தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் கவிதைகளைத் தவறாமல் படித்து விடுவேன். உங்கள் எழுத்து திறமையையும் உங்கள் தனிப் பார்வையையும் பார்த்து வியப்பது வாடிக்கையாகி விட்டது.

    நாகு: ஹாரி பார்ட்டர் பற்றி எழுதிய பிறகு, காலையில் என் துணைவியார், பட் என்று தலையில் போட்டு சொன்னது,
    "பல வருஷங்களாச்சு, தமிழ் சங்கத்தில் சிறுவர்களையும், சிறுமிகளையும் மந்திரக் கயிறு போட்டு கட்டி ஒரு நிகழ்ச்சி தந்து, அது பொறுக்கலையா உங்களுக்கு. உங்களுக்கு புரியலைனா என்ன போச்சு, பாக்காதீங்க, சரி உங்களுக்கு நடனம் என்ன புரிஞ்சுதுன்னு பெரிசா எழுதிடீங்க"

    என்ன செய்வது, "முதலையும், மூர்கனும், கொண்டது விடா" என்ற மூதுரை என்னைப் போன்றவர்களை யோசித்துத்தானோ என்னவோ யார் கண்டது.

    அவர்கள் சொன்ன அடுத்த செய்தி என்னை பட்டென்று புரட்டி போட்டது.

    "கலை நிகழ்ச்சிகள் ஒரு eveninig time-ஐ ஜாலியாக கழிக்கத்தான், அதில் பொது அறிவு, maths பற்றி கேட்டால் அவ்வளவுதான், இப்ப வர்ர 10-20 பேர் கூட இனிமே வரமாட்டாங்க". இது எனக்கு சத்தியமா அவங்க சொல்ற வரைக்கும் தோணலை.

    சுஜாதா க்விஸ் சதங்காவுக்காகவா! அவர் என்ன அவ்வளவு நல்லவர்ன்னு சொல்றாரா? எங்கிட்ட கொஞ்சம் சுஜாதா நாவல்கள் இருக்கு, வேண்டுமானால், இரவல் தருகிறேன். ஆனால், சுஜாதா பற்றி க்விஸ் வெக்கர அளவுக்கு சுஜாதா அவ்வளவு பெரியா ஆளா? வேண்டுமானால், தி.ஜா, கல்கி, தேவன், ஜாவர் சீதாராமன், புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், லா.சா.ரா. (இந்த லிஸ்ட் முடியவே முடியாது போல இருக்கு) போன்றவர்கள் படைப்பிலிருந்து கேள்விகள் கேட்கலாம். தி.ஜா, ஜா.சீ, ஜெ.கா படைப்புகள் தற்சமயம் என் கைவசம் இல்லை, அடுத்த முறை தாய்நாடு சென்று வரும்போது என் பெற்றோர் வீட்டிலிருக்கும் எனது சேகரிப்பிலிருந்து கொண்டு வர முடியும். (இந்த நிகழ்ச்சியை பாக்கரது யார்?)

    நாகு, என்னைப் பற்றி விசாரிப்புகள் அதிகமாகியிருப்பதாக கேள்விப் பட்டு ஆச்சர்யமாக இருக்கிறது. சமயம் வரட்டும் அப்பரம் நானே என்னை வெளிப் படுத்திக் கொள்கிறேன். ஆமாம் - சதங்கா, பரதேசி, அஜாத சத்ரு, நீர்வைமகள் போன்றோர் யார் என்று இன்னும் நீங்கள் சொல்லவில்லை என்பது ஞாபகம் இருக்கட்டும்.

    பொதுவாக எனது இந்தப் பதிப்பு நமது தமிழ் சங்கத்தின் நிர்வாகிகளையோ அல்லது உறுப்பினர்களையோ புண்படுத்துவதுபோல இருந்தால், வருந்துகிறேன்.

    பித்தன்.

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம் பித்தன் அவர்களே!

    Stand Up Comedy பற்றி - அதற்கு மிமிக்ரி செய்ய தெரிந்திருந்தால் நல்லது. எனக்கு என் குரலே அப்பப்ப சரியா வராது. இதிலெங்கே மிமிக்ரி?
    Quiz ஒரு மணி நேரத்துக்கு மேல் ஓடிவிட்டது. தவிர்த்திருக்கலாம். 45 நிமிடம் போகும் என்று நினைத்தேன். ஆனால் rehearsal செய்யாததால் சரியாக கணிக்க முடியவில்லை.

    ReplyDelete
  5. தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு வர முடியாத குறை உங்கள் விமர்சனத்தைப் படித்ததும் தீர்ந்து விட்டது, பித்தன் அவர்களே :) நன்றி!

    (இனிமே அடுத்த நிகழ்ச்சிக்கும் போக வேண்டாமே; நீங்க எழுதறதைப் படிச்சாலே போதும்! :)

    ReplyDelete
  6. கவிநயா அவர்களே, பின்னூட்டத்திற்கு நன்றி.

    எனது விமர்சனம், விழாவைப் பார்க்காத பலரையும், சரி அடுத்த வாட்டி நாமே போய் பார்த்துப்போம் இவன் என்ன சொல்றது, நாம என்ன கேக்கரதுன்னு செய்யும்ன்னு பார்த்தால், இப்படி தமிழ் மீதும், தமிழ் சங்கத்தின் மீதும் பற்று உள்ள உங்களைப் போன்றவர்களே விழாவிற்கு வராமல் ஜகா வாங்கி விட்டால், அப்பரம் அவ்ளவுதான், என்னை கட்டம் கட்டி எழுத விடாம பண்ணிடுவாங்க. (ஓ, அதுதான் திட்டமா! அட இதப் பாருப்பா இது தெரியலையே எனக்கு!!! ஹும் நான் ஒரு தவளை, என்னத்த எழுதி என்னத்த பண்றது....).

    பித்தன்.

    ReplyDelete
  7. ராம் ராமச்சந்திரன் அவர்களிடம் இருந்து மின்னஞ்சலில் வந்த கருத்து:

    Hi EC members,

    The Pongal program was superb and all new ideas with programs for the kids are excellent. Meena and I enjoyed the evening very much. We really appreciate the gesture of home-made delicious snacks for raising funds for Rajesh. Great job and inspiration. Keep it up.
    are close by my house.

    Ram and Mee

    ReplyDelete
  8. ஜகா வாங்குவது என் நோக்கமில்லை, பித்தரே. சும்மானாச்சிக்கும்தான் சொன்னேன். அதுக்காக உங்க விமர்சனத்தை எழுதாம இருந்துடாதீங்க!

    புதுப்புது உத்திகளைக் கையாண்டு வித்தியாசமான நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருகின்ற நம் தமிழ்ச் சங்கக் குழுவினரைப் பாராட்டத்தான் வேண்டும். வாழ்த்துக்கள் ரி.த.ச!

    ReplyDelete
  9. ரவி, வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

    Stand Up Comedy செய்ய மிமிக்ரி தேவையில்லை. நானே செய்யலாமா என்று யோசித்திருந்தேன், வீட்டில் பேசிப் பார்த்தபோது, எனக்கே சிரிப்பு வரவில்லை, மேலும் எனக்கு மேடை பேச்சு பழக்கமில்லை, கை கால் உதற
    ஆரம்பித்துவிடும், அதனால் RTS மக்களை துன்புறுத்த வேண்டாம் என்று விட்டு விட்டேன். உங்கள் timing sense-க்கு நீங்கள் stand up comedy கண்டிப்பாக செய்ய வேண்டும். அதை விரைவில் எதிர் பார்க்கிறேன்.

    உங்கள் க்விஸ் ஆரம்பிக்குமா இல்லையா என்று ஒரு பட்டிமன்றம் போடும் அளவிற்கு தாமதமானாலும், முடிக்கும் போது, என்ன இவ்வளவுதானா, அதுக்குள்ள முடிஞ்சுருச்சா என்ற ஆதங்கம்தான் எனக்குள் இருந்தது.


    பித்தன்...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!