கடந்த சில ஆண்டுகளாக கொலு சுற்றுலா போக முடியவில்லை. இந்த ஆண்டுதான் எந்த சாரண முகாமும் போகாமல் ஊரில் இருந்ததால், சுண்டல் வேட்டைக்கு கிளம்பினேன். ஆரம்பித்தது பார்கவி-கணேஷ் தம்பதியினர் வீட்டில்.கொலு என்றால் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற மனப்பான்மை ஒன்று நிலவுகிறது. அதற்காக கொலுவுக்கு நிஜமாக வேலை செய்தவர்களை வைத்து படம் பிடிக்கவேண்டும் என்று ஒரு திட்டம். அதனால் நம் நண்பர் ஆனைமுகனை நிற்க வைத்து ஒரு படம். என்ன பெருமையாக நிற்கிறார் பாருங்க...
கணேஷை மட்டும் ஏன் என்று அவர் மகனுடன்...
பச்சை யந்திரன் தனியாக... இந்த கொலுவில் எனக்கு மிகவும் பிடித்த பொம்மை கருடனின் தோள்களில் அமர்ந்திருக்கும் மஹாவிஷ்ணு.
இந்த திருமண காட்சியும் அருமை.நம் ஊரில் கிரிக்கெட் விளையாடும் பிள்ளையார், டென்னிஸ் ஆடும் பிள்ளையார் பொம்ம்மை பார்த்திருப்பீர்கள். இவர்கள் வீட்டில் சீனத்து பிள்ளையார் பொம்ம்மைகள் பார்த்தேன். இந்தப் படங்களில் தேடாதீர்கள். படம் பிடிக்கவில்லை :-)
அடுத்ததாக திருவாசகம் மீனா சங்கரன் வீட்டு கொலு. உடல் சரியில்லாவிட்டாலும் அழகாக சிரிக்கும் அவர்கள் மகளுடன் மீனா.
ரிச்மண்டில் இதுவரை காணாத கிரிக்கெட் மைதான அமைப்பு. ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்திய அணி. ஆனால் மட்டையை காலுக்குப் பின்னால் ஒளித்து வைத்து விளையாடி பார்த்ததில்லை.
இந்த கொலுவில் எனக்குப் பிடித்தது தூணைப் பிளந்து வெளியே வரும் நரசிம்மர். பிளந்திருக்கும் தூணைப் பார்த்தால் எனக்கு என்னவோ நினைவுக்கு வருவது பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளச்செங்கூர் வாய் நாரைதான் :-)
மேல்தட்டில் கஜேந்திர மோட்சமும் உண்டு.
அடுத்ததாக சித்ரா-ரவி வீட்டு கொலு. வேறு எந்த வீட்டிலும் பார்க்காத காட்சி இங்கே - வேஷ்டியில் ரவி!
கொலு பொம்மைகள் அழகா, இந்தப் பெண்கள் அழகா...
இந்த கொலுவில் எனக்குப் பிடித்தவை அஷ்டலஷ்மிகளும் பிள்ளையார் வாத்தியக் கோஷ்டியும்.
அடுத்த வீடும் சித்ரா-ரவி வீடுதான் :-) ஒரு சிறிய அழகான கொலு!
இந்த கொலுவி எனக்குப் பிடித்தது கொலுவின் முன்னே சித்ரா வரைந்திருந்த பெருமாள் ரங்கோலி.
அடுததது லாவண்யா ராம்கி வீட்டு கொலு.
இந்த கொலுவில் எனக்குப் பிடித்தது பால்குடத்தைக் கவிழ்க்கும் கண்ணன். மற்றவர்களைக் கவர்ந்தது ஒளிரும் நீலமயில்கள்.
அடுத்ததாக மாலதி என்கின்ற சாவித்ரி - முரளி வீட்டு பிரம்மாண்டமான கொலு.
நான் வீட்டுக்குள் நுழையும்போது ஓடிக்கொண்டிருந்த ரயில்.
இந்தக் கொலுவில் எனக்குப் பிடித்தது மரத்தால் செய்த யானை அம்பாரி.
கடைசியாக பவானி-கண்ணன் வீட்டுக் கொலு.
இந்தக் கொலுவில் எனக்குப் பிடித்தது தசாவதார பொம்மைகள்.
இவ்வளவு பொம்மைகள் பார்த்துவிட்டு எனக்கு ஊர் ஞாபகம் வந்துவிட்டது. உங்களுக்கெல்லாம் இப்போது பண்ருட்டியென்றால் பலாப்பழம்தான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் பொம்மைகளுக்கு பெயர் போனது பண்ருட்டி. முத்தையர் பள்ளியில் படிக்கும்போது சுற்றுவட்டார வீதிகளில் நிறைய பொம்மைகள் செய்து வெளியே காயவைத்திருப்பார்கள். சப்பாணி செட்டி தெரு முழுக்க பொம்மைகள் நிற்கும். தெருவில் ஜாதிப்பெயர்கள் நீங்கி பொம்மைகளும் அகன்று இப்போது வெறும் சப்பாணி ஆகிவிட்டது அந்தத் தெரு.
பல வீடுகள் இந்தப் பட்டியலில் நீங்கிவிட்டன. இந்த வாரம் பிள்ளையாண்டான்களுக்கு சாரதித்துவம் செய்ததால் சில வீடுகளுக்கு என்னால் போகமுடியவில்லை. போனவள் காமிரா கொண்டுபோகவில்லை. அதனால் விட்டுப்போன கொலுக்களுக்காக பொறுத்துக் கொள்ளுங்கள்.