அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
இப்படிப் பட்ட வரிகள் பிரசவிக்க, சமூகத்தின் மீது எவ்வளவு கூர்ந்த நோக்கும் அக்கறையும் இருக்க வேண்டும். சமூக நிலை, சொல்லாடல், மொழித்திறன், ஆளுமை எனக் கலந்து கட்டிய கனல் வரிகள்:
தர்மமென்பார் நீதி என்பார்
தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தை சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
...
கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு
...
நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க ஆமா
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க ஹாங்
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க ஹா
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க - இன்னும்
பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும் - நாம
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்
இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
(திரைப்படம்: பதிபக்தி, 1958)
மேலே,
'கவைக்குதவாத வெறும் பேச்சு' என்ற வரிகளில் சில நேரம் பயணித்தேன். அதென்னது 'கவை', எழுத்துப் பிழையாக இருக்கலாம் எனத் தேடியதில், 'கதை' என்றும், 'சபை' என்றும் பலர் பலவிதமாகத் தங்கள் தளங்களில் பதிந்துள்ளார்கள். எல்லா வரிகளும் 'க'வில் இருக்க 'சபை' சரியானதாக இருக்க முடியாது. ஆனால், 'க'வில் ஆரம்பிப்பதால், 'கதை' ஒத்துப்போகிறது. இருப்பினும் அதுவும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. சமூகத்தின் அவலத்தைப் பாடுகையில், அவன் எங்கே 'கதை' கேட்டுக் கொண்டிருக்க முடியும்.
'கவை' கொண்டு ஏதாவது அடிப்பானானால், உணவுக்கு வழி கிடைக்கலாம் அவனுக்கு.
வாழ்வின் மிதவேகப் பயணத்தின் ஆரம்ப கால மாட்டு வண்டியிலிருந்து மாறி, கைவண்டி ரிச்சாவுக்கு மாறியிருந்தது காலம். யாரெல்லாம் இந்த வண்டியில் பயணிக்கிறார்கள், எந்த மாதிரியான சூழலில் இருக்கிறது உலகம், என்றெல்லாம் சொல்லி, மாட்டை மாற்றி, மனிதனாக மாறி, சக மனிதனைச் சுமந்து, வண்டி இழுத்து, ஊரெல்லாம் சுற்றினாலும், தன் வாழ்வு சாலையின் ஓரமாகக் கிடக்கிறதென்று சொல்லும் வரிகள் உண்மையிலே சுடுகின்றது இன்றும்!
***
ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் வந்தாலும், பலரும் தாயத்தைப் எப்படிப் பார்க்கின்றனர் என்று கவிஞரின் எண்ணத்தில் உதித்த கனல் வரிகள். உட்கார்ந்த இடத்தில் இருந்து சாதிக்க முடியுமா என்ற நோக்கில் தான் மனிதனின் சிந்தனை இருந்திருக்கிறது/இருக்கிறது. போகிற போக்கில், கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு, அப்படியே போய்க்கிட்டே இருக்கிறோம். இந்தப் பாடலில், மனித எண்ணங்களான இரண்டு கேள்விகளுக்கு என்ன அற்புதமாகப் பதில் தருகிறார் கவிஞர்.
ஏம்பா , பணம் வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா ?
உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில்
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு
ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு
தாயத்து தாயத்து ...
ஏயா , இதிலே பொம்பளைகளை மயக்க முடியுமா ?
கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்
காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
கண்ட கண்ட பக்கம் திரிஞ்ச கையும் காலும் வாழ்வும்
துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்
தம்பி , அதெல்லாம் செய்யாது இது வேற
தாயத்து தாயத்து ...
(திரைப்படம்: மகாதேவி, 1957)
***
'ஒன்னிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம், கொண்டாட்டம்' என்ற
என்.எஸ்.கே அவர்களின் பிரபலான பாடல் நினைவுக்கு வருகிறது, பட்டுக்கோட்டையாரின் கீழ்வரும் பாடலைப் படிக்கையிலே. அன்றைய சூழலுக்கு முற்றிலும் ஒத்துப் போயிருந்தாலும், இன்று இவ்வரிகள் பொருத்தமாக இருக்க முடியுமா ? யாரு கிட்ட காசு இல்ல இன்று ?!
கருத்து அதுவன்று ! அன்று, வரவும் செலவும் சில பல ரூபாய்கள். இன்று, வரவும் செலவும் பல லட்ச ரூபாய்கள். இது தானே வித்தியாசம்! ஒருவர் சம்பாதிக்கும் வீடுகளில் இது தான் இன்றைய நிலை. இதில் 'ஏழை' என வரும் இடங்களில் 'பணக்கார ஏழை' என்றும், 'கடன்காரன்' என்கிற இடங்களில் 'வரி, வீட்டுக் கடன், வாகனக் கடன், மின்சாரம், பாலு, சோறு, தண்ணீ, லொட்டு, லொசுக்கு...' என்று போட்டுக் கொள்வோம்.
கையில வாங்கினேன் பையில போடல காசு போன
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே
ஏழைக்கு காலம் சரியில்லே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
மாசம் முப்பது நாளும் உழைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்
காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
சொட்டு சொட்ட வேர்வை விட்டா
பட்டினியால் பாடு பட்டா
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
விதவிதமாய் துணிகள் இருக்கு
விலையை கேட்டா நடுக்கம் வருது
வகை வகைய நகைகள் இருக்கு
மடியை பாத்த மயக்கம் வருது
எதை எதையோ வாங்கனுமின்னு
என்னமிருக்குது வழியில்லே
இதை எண்ணாமல் இருக்கவும் முடியல்லே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
கண்ணுக்கு அழகா பொண்ண படைச்சான்
பொண்ணுக்கு துணையா ஆண படைச்சான்
ஒன்னுக்கு பாத்தா செல்வத்த படைச்சான்
உலகம் நிறைய இன்பத்த படைச்சான்
என்னப் போல பலரையும் படைச்சி
அண்ணே என்னப் போல பலரையும் படைச்சி
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
வேலைய கடவுள் ஏன் படைச்சான்
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
(திரைப்படம்: இரும்புத் திரை, 1960)
எல்லாத்தையும் படைச்சு, என்னையும் படைச்சு, எல்லாத்துக்கும் ஏங்க வைக்கிறாயே என்ற பாடலின் இறுதி வரிகள், பிறைகீற்றுப் புன்னகை வரவழைக்கிறது.
***
'காயமே இது பொய்யடா' என்று
கண்ணதாசனும், அவருக்கு முன் சில சித்தர்களும் சொல்லிச் சென்றிருக்க, நம் கவிஞரின்
'காயமே இது மெய்யடா' என்ற வரிகள் சிந்தனையில் ஆழ்த்துகிறது நம்மை. வியப்போடு தேடினால், இதைச் சில சித்தர்களும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
திருமூலர் திருமந்திரத்தில்,
'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன். உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்றார். இங்கே 'காயம்' என்பது 'தேகம்' அல்லது 'உடம்பு' என்று பொருள் கொள்ள வேண்டும்.
காயமே இது மெய்யடா இதில்
கண்ணும் கருத்துமே வையடா
நோயும் நொடியும் வராமல் காத்து
நுட்பமாக உய்யடா !
ஆயுள் காலம் மனிதர்களுக்கு
அமைப்பிலே யொரு நூறடா
அரையும் குறையுமாய் போவதவனவன்
அறிவும் செயலும் ஆமடா
மாயமெனும் குயவன் செய்த
மண்ணுபாண்டம் தானடா இது
மத்தியில் உடையாதபடி நீ
மருந்து மாயம் தின்னடா
(திரைப்படம்: கற்புக்கரசி, 1957)
அதென்னது, மத்தியில் உடையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்?! கவிஞரே சொல்கிறார்...
வாயக்கெடுத்தது பசியடா
அந்தப் பசியைக் கொடுத்தது குடலடா !
இந்தக் குடலைச் சுத்தம் செய்திடாவிடில்
உடலுக்கே சுகம் ஏதடா ?
***
டூ மினிட்ஸ் நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் காஃபி, ஒன் லைன் ஃபேஸ்புக் அப்டேட், ஃப்யூ மினிட்ஸ் லஞ்ச், குயிக் நாப் என எல்லாமே டக் டக் என்று வேகமா செஞ்சு எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம். எல்லாம் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா செய்யும் நிலையில் இன்றிருக்கின்றோம். ஆனால், கவிஞர் வேறொரு ஷார்ட்கட் பத்தி சொல்றாரு. நம்மைப் பற்றியே நாம் யோசித்துக் கொண்டிருக்க, சமூகத்தைப் பற்றியே சிந்திக்கும் கவிஞரின் கனல் வரிகள்:
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…
(திரைப்படம்: மகாதேவி, 1957)
கனல் பறக்கும் ...