Showing posts with label தவளை. Show all posts
Showing posts with label தவளை. Show all posts

Saturday, July 18, 2009

தவளை நேர்த்திக் கடன்

சமீபத்தில் பிள்ளையாண்டான் ஏதாவது ஊர்வதையோ நீர்நில வாழ்வியையோ ( reptile or amphibian) ஒரு மாதம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நேர்ந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு ஊர்வன என்றால் கொள்ளைப் பிரியம். நீங்களே பாருங்கள் ஒரு பாம்பை வைத்துக் கொண்டு பு(ள்)ளகாங்கிதம் அடைவதை...



அந்தப் பாம்புக்கும் இவனை ரொம்பப் பிடித்து விட்டது.



சரி ஒரு பாம்பு வளர்க்கலாம் என்று பார்த்தான். சரி வாடா மேலிடத்தில் சொல்லி வாங்கித் தருகிறேன் என்றேன். இந்த சோளப் பாம்பு (corn snakeகுங்க) ரொம்ப அழகு.  ஆபத்தும் கிடையாதாம். மேலிடத்தில்  வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆபத்து இல்லாத பாம்பு என்ன வேண்டிக்கிடக்கிறது....

அவனுடைய நண்பன் ஒரு பல்லியையோ தவளையையோ தருகிறேன் என்றான்.  ஒரு மாதம் நேர்த்திக் கடன் முடிந்தவுடன் திரும்ப கொடுத்துவிடலாம் என்று மேலிடத்தில் சிபாரிசு பண்ணி வைத்தேன். நண்பனிடம் கேட்டு வைத்துக் கொள்ளடா என்ன எல்லாம் வேண்டும் என்று சொல்லியிருந்தேன். நமக்கு எல்லாம் கடைசி நிமிஷ ஆயத்தம்தானே. ஒன்றும் கேட்டு வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் வீட்டில் இல்லாததால் தொலைபேசியில் தகவல் வைத்திருக்கிறேன் என்றான். நண்பனின் தந்தைக்கு நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்கள் வெளியூருக்குப் போயிருப்பதாகவும் திரும்பும் நாள் வந்து தவளை எடுத்துக் கொள்ளலாம் என்று பதில் வந்தது.

ஒரு நாள் காலை அவர் அழைத்தார். ஊரிலிருந்து வந்து கொண்டிருக்கிறாராம். ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவோம், நீங்கள் இரவு சுமார் எட்டு எட்டரைக்கு வந்து எடுத்துக் கொள்ளலாம் என்றார். அவ்வளவு நேரம் கழித்து வந்தால் பரவாயில்லையா என்றேன். இல்லை ஒரு எட்டு எட்டரைக்குத்தான் தவளை எல்லாம் வெளியே வர ஆரம்பிக்கும் என்றார்.

என்னது!!?? வெளியே வர ஆரம்பிக்குமா?

எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடாஇது என்றேன் பிள்ளையாண்டானிடம். தெரியாது என்று வழக்கமான தோள்குலுக்கல் பதில் வந்தது.

தொலைபேசியில் அவரிடம் நான் என்ன கொண்டு வரலாம் என்று கேட்டேன். ஏதாவது பாட்டிலோ டப்பாவோ கொண்டு வாருங்கள், உங்களுக்கு வேண்டிய மட்டும் பிடித்துக் கொண்டு போங்கள் என்றார். நான் ஏதோ அந்தப் பையன் வளர்க்கும் செல்லப் பிராணியை ஒரு மாதம் கடன் கொடுக்கிறான், நாம் போய் அவன் வைத்திருக்கும் டெரேரியம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் வீடு ஒரு பண்ணைநிலத்தில் இருக்கிறது. வீட்டு பின்னால் ஒரு குளம், ஆறு என்று இயற்கையோடு ஒன்றிப் போயிருக்கிறவர்கள். அவர்களிடம் போய் எனக்கு ஒரு பல்லியோ, தவளையோ வேண்டும் என்று கேட்டால்?  என்ன சொல்வார்கள் - வந்து எத்தனை வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு போங்கள்.

அன்று மாலை போய் அவர்களின் அழகான வீட்டின் பின்னால் ஒரு அழகான செயற்கைக் குளம். அதில் என் பிள்ளை சைஸுக்கு அழகான ஒரு koi மீன். குளத்தில் எல்லாம் குளிக்க மறுத்துவிட்டு அவர்கள் பிடித்துக் கொடுத்த  நான்கு மரத்தவளைகளை (tree frog) கொண்டு வந்து அவைகளுக்கு நித்தம் நீர் தெளிப்பது, இலை,கிளை வைப்பது, கிரிக்கெட்பூச்சித்தீனி வைப்பது என்று விரதம் போய்க்கொண்டு இருக்கிறது.  ஒரு மாதம் தாங்குமாடா என்றேன். இவை செத்து விட்டால் என்ன, போய் இன்னும் நாலு பிடித்துக் கொண்டு வந்தால் போச்சு என்றான். ஒரு மாதம் தவளை பார்த்துக் கொள்வதுதான் கணக்காம். அதே தவளைகளை என்று சொல்லவில்லையே.... :-)