Photo Courtesy: Internet
ஒலி குறைக்கும் கருவி (silencer) பொருத்தி வரும் போலும். நம் காதுகளுக்கு வெகு அருகில் பறந்தாலும் ரீங்காரமெல்லாம் கேட்பதேயில்லை. நமது டமாரம் தான் காலி என்று பயந்து, சுற்றும் முற்றும் புள்ளினங்களின் ஓசை கேட்ட பின் தான் நிம்மதி.
மேலும் குத்தூசி முறை (acupuncture) கற்றிருக்கும் போல. அவைகளுக்குள்ளும் சந்தைப்படுத்துதல் (marketing), பயிற்சிக்கூடங்கள் (training), எல்லாம் இருக்குமோ என்னவோ? ஏனெனில் தொழிலில் அத்தனை துல்லியம், கடிப்பதே தெரிவதில்லை.
சிறிது நேரம் கழித்து, என்னடா கால் பக்கம் சுர்க்குன்ற மாதிரி இருக்கிறதே என சுர்க்கிய இடத்தில் பட்டென அடித்தால், உள்ளங்கை விரல்களில் ரத்தம். அட கொசு! அப்பாடா ஒன்றை அடித்தாயிற்று என கூர்ந்து கவனித்தால், ஒரு ரெண்டு மூன்று கொசுக்கள் எனது கால்களை வட்டமடித்துக் கொண்டிருந்தன, எங்கே எப்படி தரையிறங்கலாம் என.
இவை, நான் செய்யும் செயலுக்கு மிக்க இடைஞ்சலாய்ப் போனது. ஆப்பக்கட ஆயா மாதிரி ஈ ஓட்டினால் நம்மை விட்டு போவதாய்த் தெரியவில்லை. அப்பொழுது, ஆரம்பித்தது எனது அபிநயங்கள். ஏனெனில், ஆரம்பித்த செயலை செவ்வனே செய்து முடிக்க வேண்டும். பாதியில் விட்டுவிட்டு வரவும் முடியாது, வந்தால் அந்த நாள் தொலைந்தது. பரதநாட்டியம் முதல் பரோட்டா மாஸ்டர் வரை அத்தனை கலைஞர்களும் தோற்றனர் என் அபிநயத்தில்.
ஓர் அடியில் உயிர் போய்விடும் எனத் தெரிந்தும், அவற்றின் உருவத்தை விட பன்மடங்கு பெரிய விலங்கான மனிதர்களையே மிரட்டுவதை எண்ணி வியந்து, இன்றைய அதிகாலைப் பல் துலக்கலை வெற்றிகரமாக முடித்துக் கிணற்றங்கரையை விட்டு வெளியேறினேன்!