Showing posts with label விஞ்ஞானம். Show all posts
Showing posts with label விஞ்ஞானம். Show all posts

Wednesday, May 20, 2009

விஞ்ஞானத்த வளக்க போறேண்டி

அலுவலகத்திலிருந்து வந்தவுடன் கவனித்தேன் தொலைபேசி மின்னிக் கொண்டிருந்தது. வீட்டுக்கு உடனே வரும்படி கோமதி மாமி தகவல் வைத்திருந்தார். ஒரு வாரமாக வேலையில் வெளியூர் சென்றிருந்ததால், கோமதி மாமி வீட்டுக்கு போகவில்லை. வாரத்திற்கு மூன்று, நான்கு முறையாவது அங்கே போய்விடுவேன். என்னுடன் வேலை செய்யும் குமாரின் தாயார்தான் கோமதி மாமி.

போன உடனே குழந்தை மாதிரி குதித்து வந்து என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குப் போனார்.

இந்த வேடிக்கைய பாருடா'

நம்ம ஊர் டீக்கடை பாய்லருக்கு கை கால் முளைத்த மாதிரி ஒரு வஸ்து சக்கரங்களுடன் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தது.
என்ன மாமி இது என்றேன்.
"இருடா அவரசப் படாதே. இப்ப பாரு. ஏ மாது யாரு வந்திருக்கா பாரு", என்றார் அந்த பாய்லரிடம்.

பாய்லர் என் பக்கம் திரும்பி, "யாரு அம்பி, நீதான் செல்வமா. உன்னப் பத்திதான் மாமி ஓயாம பேசிண்டே இருக்கா" என்றது. சுத்தமாக இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. "என்னது மாதுவா", என்றேன். இதுக்கே வாய பெளக்கறியாடா. இன்னும் பாரு வேடிக்கய என்றார் மாமி. ஏ மாது. செல்வத்துக்கு போண்டான்னா உசுரு. போட்டுத் தரியா.
"அதுக்கென்ன. போட்டுட்டா போச்சு. சித்த மாமி கிட்ட பேசிண்டு இருங்கோ அரநாழில பண்ணிட்றேன்", என்றது.

போண்டா போடும் பாய்லரா?

பாய்லர்/மாது சுறுசுறுப்பாக போண்டா தயாரிப்பில் மும்முரமானது. மாமியைப் பார்த்தேன் கேள்வியுடன். "சமையக்கார மிஷின்டா, இது. ஐ.நா.சபையோட எக்ஸ்பெரிமெண்டாம். குமார் ஏதோ வெப் சைட்ல பேர போட்டானாம். ரெண்டு நாள் முன்ன கொண்டாந்து வெச்சுட்டா. ஒரே கூத்துதான் போ", என்றார் மாமி.
"நான் மாதுன்னு பேரு வச்சுட்டேன். எல்லா பாஷையும் பேசும்டா. எல்லா ஊர் சமையலும் அத்துபடி இதுக்கு தெரியுமோ. உனக்கு கன்னடம் தெரியுமில்ல. இப்ப பாரு", என்று ஒரு ரிமோட்டை எடுத்து சில எண்களை அமுக்கினார் கோமதி மாமி. சமையல் அறையில் இருந்து, "நாளே ஹோலிகே மாடுபோதா" என்றார் பாய்லர் ராயர். அத விட வேடிக்கய பாரு என்று வேறு சில எண்களை அனுப்பினார். "இன்னா நைனா, போண்டா கூட ஒரு டீயும் அடிக்கிறியா". மாமி திரும்ப மாதுவுக்கே மாற்ற, மாது சொன்னது - "மாமி - அந்த ஜக்குவ கொஞ்சம் சும்மா விட்றேளா - எனக்கு தாங்கலே". ஃபீலிங்க்ஸ் வேறயா இதுக்கு!

"நம்ம ஊர் மட்டும் இல்லேடா. ஃப்ரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோன்னு எல்லாம் தெரியுது இதுக்கு."

"பாத்து மாமி, ஜாக்கிரதையா இருங்கோ. அப்புறம் ஆடு, மாடுன்னு ஏதாவது பண்ணிடப் போவுது. ஆமாம் அது என்ன பாய்லர் மாதிரி இருக்கு".
"சும்மா ட்ரயல்தானேடா. அவா நிஜமா விக்கும்போது இன்னும் நல்லா மனுஷா மாதிரியே பண்ணுவாளாம்".

போண்டா சூடு பறக்க வந்தது. மாது என்னிடம் கொடுத்துவிட்டு, "உப்பு எல்லாம் நல்லா வந்துருக்கா பாருடா அம்பி" என்றது. மாமிக்கு பெருமை தாங்கவில்லை. "பார்டா பேசறதுகூட என்ன மாதிரியே காப்பி அடிக்கறது".

"போண்டா சூப்பர்தான் மாது. மாமி - என்ன இருந்தாலும் உங்க போண்டா மாதிரி வருமா", என்றேன். "நீ சும்மா வழியாதேடா. உனக்கும், குமாருக்கும் செஞ்சு போட்டே எனக்கு கை ஓஞ்சு போச்சு. நான் இனிமே ஃபுல் ரெஸ்ட்லதான்", என்றார் மாமி.


"சரி, குமார் உள்ள இருக்கான். நீ போயி பேசிண்டு இரு. ராத்திரி மாதுவ பெசரட்டு பண்ண சொல்றேன். போயிடாதே......"

"ஏங்க - ஏந்திரிச்சி சாப்பிட வரீங்களா", என்ற சகதர்மிணியின் குரல் என்னை எழுப்பியது. எல்லாம் நேற்று ரொம்ப நாளுக்கப்புறம் கேட்ட என்.எஸ்.கே, டி.ஏ. மதுரம் பாடலின் விளைவு - "பட்டன தட்டி விட்டா ரெண்டு தட்டுல இட்டிலியும், காபி நம்ம பக்கத்துல வந்துடனும்". சாப்பிட உட்கார்ந்தால், தட்டில் பெசரட்டு. காலைக்கனவு பலிக்காமல் போகவில்லை.