Sunday, July 29, 2007

பிடிவாதம்

அரண்டு புரண்டு அழுது சாதிப்பது குழந்தையின் பிடிவாதம்
படிப்பதைவிட வேறெதாவது செய்வது பிள்ளையின் பிடிவாதம்
பரிட்சைக்கு படி படி என்று பாட்டு பாடுவது தந்தையின் பிடிவாதம்
சாப்பிடு சாப்பிடு என்று சமைத்து தொந்தரவு செய்வது தாயின் பிடிவாதம்
கணனியில் பொழுதைக் கழிப்பேன் கடைக்கு வரமாட்டேன் என்று கணவனின் பிடிவாதம்
கோடி கொடுத்தாலும் கொல்லையில் புல் வெட்ட மாட்டேன் என்று மனைவியின் பிடிவாதம்
படத்துக்கு போகலாம் என்றால் சாக்கு சொல்வது நண்பனின் பிடிவாதம்
தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று தோழியின் பிடிவாதம்
காதலுக்கு பச்சைகொடி காட்டும்வரை கவிதைமழை பொழிவது காதலனின் பிடிவாதம்
கல்யாணம் செய்தால் காதலனுடந்தான் என்று காதலியின் பிடிவாதம்
பட்டு சட்டை போடவில்லையா என் பேராண்டி என்று தாத்தாவின் பிடிவாதம்
பொன்சங்கிலி பூட்டவில்லையா என் பேத்தி என்று பாட்டியின் பிடிவாதம்
மருமகள் சொல்வதை கேட்கவேண்டுமா என்று மாமியாரின் பிடிவாதம்
மாப்பிள்ளைக்கு தன் கையால் கூட பரிமாறவேண்டுமென்று மாமானாரின் பிடிவாதம்

பிடிவாதம், பிடிவாதம், பிடிவாதம் உலகில் இன்னும் பல பிடிவாதம்

Wednesday, July 25, 2007

மரங்கள்

சிறுவயதிலிருந்தே மரங்களின் மேல் ஒரு பாசம். தொடக்கப்பள்ளியின் மைதானம் ஒரு மாந்தோப்பு. அதற்கு குத்தகைதாரர், காவலாளி எல்லாம் சோவை என்றழைக்கப்பட்ட பெயருக்கேத்த மாதிரி ஒரு பெண்மணி. அவளுக்கு பயந்து கைக்கெட்டிய மாங்காய்களைக்கூட பறிக்கமாட்டோம். மாமரங்களின் நிழலில் நிறைய வகுப்புகள் நடக்கும்.

அடுத்த பள்ளியில் நிறைய தூங்குமூஞ்சி மரங்களும், வேப்பமரங்களும் ஒரு பெரிய ஆலமரமும். தூங்குமூஞ்சிமரத்தின் காய்ந்துபோன காய்களை வைத்து கத்திச்சண்டை போடுவோம். அந்த மரத்தடியில் உட்கார்ந்தால் தூக்கம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் ஒரே ஒரு டீச்சர்தான் தூங்குவார்கள். அவங்க பெயரே தூங்குமூஞ்சி டீச்சர். (ஆசிரியர்களின் பட்டப்பெயர் வைத்து நிறைய பதிவு எழுதலாம்). வேப்பமரம் எனக்குப் பிடித்த மரங்களில் ஒன்று. தூரத்தில் இருந்து பார்த்தால் மற்ற மரங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான வெளிர்ப் பச்சையில் பந்து பந்தாக தெரியும். நிறைய வேப்பம்பழங்களையும் துளிர்இலைகளையும் தின்றிருக்கிறேன் பள்ளிநாட்களில். ராஜபுதனத்து வறண்ட பிரதேசத்திலும் எங்கள் கல்லூரி ஒரு பாலைவனச்சோலையாக இருந்ததற்கும் காரணம் வேப்பமரங்கள்தாம். பள்ளியில் நாங்கள் நட்டுவைத்த சில அலங்காரக் கொன்னை மரங்கள் இன்று பெரிதாக வளர்ந்து பிரேயர் க்ரௌண்டிற்கு நிழல் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி.

வீட்டுப் பின்னாலிருந்த ஒரு வீட்டில் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களில் ஒன்று பார்க்க கம்பீரமாக ராஜதோரணையுடன் இருக்கும். தென்னைக்கென்ன ராஜ தோரணை என்றெல்லாம் கேட்காதீர்கள். சுற்றி கொஞ்சம் குட்டையான தென்னைகளுக்கு நடுவே உயரமாக அந்த தென்னைகளுக்கெல்லாம் ராஜா மாதிரி நிற்கும். வீட்டருகில் விளையாடும் மைதானத்தில் பூவரச மரங்களும், புளிய மரங்களும், புளியமரத்தைப்போலவே தோன்றும் வாதநாராயண மரங்களும் இருக்கும். வாதநாராயண மரத்தை ரொம்ப நாள் வாழ்நார் மரம் என்றுதான் தெரியும்.
பூவரச மர இலைகளை சுருட்டி பீப்பீ ஊதுவான் மாரிமுத்து. எனக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் காற்றுதான் வரும். மாரியை பார்த்து பொறாமையாக இருக்கும். இன்னொரு வீட்டில் இருந்த கொய்யா மரத்தில் மணிக்கணக்காக விளையாடுவோம். கொய்யாமரத்தின் கிளைகள் வலுவானவை. மெல்லிய கிளைகள் கூட எங்கள் கனத்தைத் தாங்கும்.
இளம் புளியங்காய்களையும் புளியங்கொழுந்துகளையும் ஞாபகத்துக்கு கொண்டுவர வேண்டாம்.

அமெரிக்கா வந்த பிறகு எனக்கு என்ன குறை என்றால், இங்கு நிறைய மரங்களின் இலைகள் முழுவதாகவே இல்லை. மேபிள் மரங்களும், ஓக் மரங்களும்தான் இங்கு நிறைய. அவற்றின் இலைகள் முழுமையாகவே இல்லை. ஒரு பூவரச இலைப்போலவோ ஆல, அரச இலை போலவோ முழுமையில்லை. அதனாலேயே எனக்கு அரச இலையை போல தோன்றும் ப்ராட்ஃபோர்ட் பியர் மரத்தைப் பிடிக்கும்.
அது சரி. முழுமையாக இல்லாமலே இலையுதிர்காலத்தில் இவ்வளவு இலை அள்ளும் வேலை. முழுதாக இருந்தால் என்னாவது என்கிறீர்களா?


இந்த ஊர் மரங்களிலும் சில வித்தியாசமான இலைகள் கொண்டவை இருக்கின்றன. ட்யூலிப் பாப்லரின் இலை சீராக கத்திரிகோல் கொண்டு வெட்டியது போலிருக்கும்.


ஒரே மரத்தில் மூன்று விதமான இலைகள் கொண்ட மரம் ஸாஸ்ஸஃப்ராஸ் மரம். இதைப்பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இதுவரை கண்ணில் படவில்லை.


சென்ற வருடம் சென்ற நியுயார்க் மிருகக்காட்சிசாலையில் நம்ப ஊர் தட்பவெப்பநிலையில் ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதில் ஒரு பெரிய வேப்பமரம்! நைஸாக ஒரு வேப்பிலையை பிய்த்து தின்றுகூட பார்த்தேன் உறுதிப்படுத்திக்கொள்ள. கண்ணில் நீர் கலங்கிவிட்டது. அதிலிருந்து எனக்கு இங்கே ரிச்மண்டில் வேப்பமரம் வளர்க்க வேண்டும் என்று ஒரு ஆசையில் ஆரம்பித்து வெறியாகியது. வலையில் மேய்ந்து பார்த்ததில் தெரிந்தது, அமெரிக்காவில் தென் ஃப்ளோரிடாவில் மட்டும்தான் வேப்பமரம் வெளியே வளர்க்கமுடியுமாம். அந்த ஆசையில் மண். அப்புறம் வீட்டுக்கு உள்ளே வளர்த்தால் என்ன என்று ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பித்தேன். இங்கே ஃளோரிடாவில் டாம்பா நகருக்கு அருகே ஒரு வேப்பம்பண்ணையே வைத்திருக்கிறார்கள். வேப்ப மரங்களை எப்படி வளர்ப்பது என்று சொல்லித் தருகிறார்கள். உங்களுக்கு வளர்க்க முடியாவிட்டால், அவர்களிடமிருந்து வேப்பங்குச்சி முதல் கொண்டு வேப்ப எண்ணெய், வேப்பங்கன்று எல்லாம் வாங்கலாம். வேப்பங்கொட்டைக்கு முப்பது நாள்தான் ஆயுளாம். அதைப் படித்ததிலிருந்து கோடையில் ஊருக்குப் போகும் சிலரிடம் மரத்திலிருந்து பறித்த வேப்பங்கொட்டை கொண்டு வாருங்களென்றேன். சிலர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்கள். சிலர் ஒரு மாதிரி பார்த்தார்கள். ஆனால் இன்னும் சிலர் கொண்டுவந்து கொடுத்து அவர்களும் வளர்த்து வருகிறார்கள். போன வருடம் ஆரம்பித்தது, குளிர்காலத்தில் உள்ளே வைத்திருந்து நிறைய போய் இப்போது ஒரு நான்கைந்து பிழைத்திருக்கின்றன. படம் போட்டால் நீங்கள் கண் போட்டு விடுவீர்கள் என்பதால் போடவில்லை. படத்தில் பார்த்தாலும் தெரியாது. அவ்வளவு சிறிசு. நம்ம ஊர் மரங்கள் பட்டியல் பார்க்கவேண்டுமா? இதோ!

ரிச்மண்டில் சில வருடங்களுக்கு முன்னால் சூறாவளி வீசியதில் நிறைய மரங்கள் விழுந்தன. அப்போது பார்த்தால் பெரிய பெரிய ஓக் மரங்களுக்கும் ஆணிவேரே இல்லை. கொஞ்சம் பரந்துவிரிந்த வேர்கொத்துதான் இருந்தது. ஒருசில வகைமரங்களுக்கு ஆணிவேர் கிடையாதாம். அதுதான் காற்றில் சுலபமாக விழுந்துவிட்டன. அப்படி விழுந்த மரத்தை தூக்கி நட்டுவைத்து என்னை ஆச்சரியப்படுத்தினார் நம் சேகர் வீரப்பன்.

Tuesday, July 24, 2007

வாழ்த்துச் சொல்ல வாங்க

ஒரு ரோட்டுல நடந்து போனா, நம்ம கண்ணுக்குக் என்ன தெரியும் ? ரோட்டுல போர நாலு பேரு தெரியும், அங்க ஓடிக்கிட்டிருக்கிற நாய் தெரியும். ஒரு ஓரமா பூச்செடி இருந்தா, ஓ பூச்செடி இருக்கா என்று ஒரு 'ஓ' வோடு நம் பார்வையோட்டம் நின்று கொள்ளும்.

எதுக்கு இத்தன built-up னு கேக்கறீங்களா ... மேலும் படிங்க !

நம் தமிழ் வலைப் பதிவர்கள் சமீபத்தில் ஒரு புகைப்படப் போட்டி நடத்தினார்கள். நாம் சாதாரணமாய்ப் பார்க்கும் ஒரு பூச்செடியை, அதைவிட, தனியாய் ஒரு பூவை, அதனுள் இருக்கும் details-ஐ macro உத்தியோடு நம்ம 'வெப் மாஸ்டர்' ஜெயகாந்தன் அவர்கள் க்ளிக்கி, அதற்கு மூன்றாம் பரிசும் வாங்கியிருக்காரு. மேலும் விபரங்களுக்கு இந்தச் சுட்டியை அழுத்துங்கள்.


கொசுறு: நாமலும் போட்டியில பங்கேத்துக்கிட்டோம்ல. ஜெய்-க்கு பரிசு கிடைக்கனும்னுட்டு சாதாரணமா ரெண்டு படம் அனுப்பிச்சோம். ஹி.ஹி. விழுந்தாலும் மண் ஒட்டுமா நமக்கெல்லாம் ;-) மேல்க்கண்ட் சுட்டியில், இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு போட்டிருக்கற படத்துல ரெண்டாவது 'போகஹண்டாஸ் ஏரி' நம்மதுங்க.

ஜெய்யின் பதிவிற்குச் சென்று உங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

அவரின் பரிசு பெற்ற படம்

Monday, July 23, 2007

Apurva Pande's fund-raiser for St.Jude's Hospital

Apurva Pande, a rising sophomore at Henrico High School, is inviting everyone to participate in the Swim-For-Life Marathon on Sunday August 5, 2007 at the Shady Grove YMCA, Glen Allen, VA. Here is the personal invitation from her seeking your participation.

You can learn more about sponsorship details here.

I encourage everyone to participate and contribute to this noble cause.

Sunday, July 22, 2007

கோடை பிக்னிக் 2007

ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் கோடை பிக்னிக் ஹென்ரைகோ கௌண்டியிலுள்ள டோரி பார்க்கில் நடைபெற்றது. பெரியவர்கள், சிறுவர்கள் அனைவரும் கிரிக்கெட், உறியடி, கயிற்றிழு(அதாங்க டக் ஆஃப் வார்) போட்டிகளில் கலந்து கொண்டு களித்தார்கள்.

இவற்றில் சில படங்களை இங்கே காணலாம். இதில் சில வீடியோக்களும் இருக்கின்றன.

Thursday, July 19, 2007

வாழ்வில் பெறுவது எது ?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டென்பது அறிவியல் பூர்வமான உண்மை. இதையே நம் முன்னோர்கள் பல பழமொழிகள் மூலமா நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

உதாரணமா, மிகப் பிரபலமான பழமொழிகள் :

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
நெல் போட்டா நெல் முளைக்கும்; சொல் போட்டா ?
(நாவை அடக்கி வாசி என்று நாசுக்காவும் சொன்னார்கள்)

கொடுத்தால் தான் பெறமுடியும் என்பதை உணர்ந்த பிறகு, என்னெல்லாம் கொடுத்தா, என்னெல்லாம் கிடைக்கும் என்று யோசித்தவை கீழே :

கேட்டுப் பெறுவது யாசகம்
கேளாமல் பெறுவது பாசம்

தட்டிப் பெறுவது தண்டல்
முட்டிப் பெறுவது மூர்க்கம்

விட்டுப் பெறுவது சுவாசம்
விடாமல் பெறுவது கோள்சொல்

ஒட்டிப் பெறுவது உறவு
வெட்டிப் பெறுவது தனிமை

கட்டிப் பெறுவது மகவு
கொட்டிப் பெறுவது அன்பு

Sunday, July 15, 2007

கொஞ்சும் மழலை


குழலும் உன்குரல் இனிமையில்
குழலும் யாழும் கீழே

மருளும் உந்தன் விழிகள்
பிறமாந்தரைக் காண்கையிலே

சுற்றிச்சுற்றி வந்தே காலைக்
கட்டிக் கொள்ளுவாயே

அள்ளி அணைக்கத் தந்தை
சொல்லித்தர அன்னை

சொந்த பந்தம் எல்லாம்
நண்பர் குழுக்களோடே

பொழுதும் வந்து உதவி - வீட்டைத்
தலை கீழாக்குவாயே

நாளும் சண்டை கொண்டு
நாடக மாடிடுவாயே

அறுசுவை அமுது உண்பாய்
விளையாட்டி லென்விரல்களாலே

அயற்சி யின்றி நீயும்
ஓடிஆடும் போதே

தத்தித் தவழும் என்மனம்
உன்அழகு மழலையாலே

சட்டை



சட்டையின் கை குட்டை
காபி நிற பட்டை
அணிவது சின்ன மொட்டை
கால்சட்டை ஜோபியில் ஒரு ஓட்டை
அதன் வழியே விழுந்தது புளியாங் கொட்டை
கையிலொரு கைக்குட்டை
அதில் சுமப்பதொரு கொடுக்காப்புளிக்காய் மூட்டை
ஆற்றில் சிறுவன் கட்டுவது ஒரு மணல் கோட்டை

Saturday, July 14, 2007

தனிமை




உன்னைப் போல் ஆயிரம் இருக்கையில்
நீ மட்டும் துணையில்லாமல்
தன்னந்தனியே மின்சாரக் கம்பியில் உட்கார்ந்திருப்பது ஏனோ?

சுகமோ அல்லது சோகமோ
எந்த நிலையில் நீ இருக்கின்றாய்?

தனிமையில் துயரமும் உண்டு
தெளிவும் உண்டு.

Friday, July 13, 2007

வந்துட்டான்யா வந்துட்டான்

வந்துட்டான்யா வந்துட்டான்! பரதேசி வந்துட்டான்.
சக ப்ளாகிகளே வணக்கம்!
மூன்று வார விடுமுறைக்குப்பிறகு சென்ற ஞாயிறன்று பிறந்த நாட்டிலிருந்து புகுந்த நாட்டிற்குத்திரும்பினோம். என் பயணம் மிக அருமை. பல உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்ப்போல் என் உடன் படித்த நண்பன் ஒருவனை 30 வருடங்களுக்கிப்பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பல பழங்கதைகள் பேசினோம். பிறகு விலாவாரியாக எல்லாவற்றையும் விவரிக்கிறேன். வாக்கு கொடுத்தபடி சரவணபவனில் வயிறு புடைக்க புசித்தேன் (சாம்பார் வடை, புரோட்டா குருமா, குழிப்பணியாரம் முதல் 'முக்கனி' ஐஸ்க்ரீம் வரை). நீங்கள் ஜொள்ளு விட்டு கீபோர்டையும் மௌஸையும் ஈரமாக்குவது தெரிகிறது. 7 வருடங்களுக்கு முன் நான் பார்த்த சென்னையும், மும்பாயும் தலைகீழாக மாறிவிட்டன. என்ன ஜனநெருக்கம்! என்ன பணப்பெருக்கம்! நான் வாழ்ந்த காலத்தில் 10 ரூ நோட்டே ரொம்ப பெரியது. இப்போது அவ அவன் 500 ரூ நோட்டுக்களள சர்வசாதாரணமாக எடுத்து வீசுகிறான். கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி என்று 'அவன்'களும் 'அவள்'களும் சல்லென்று பறக்கின்றனர். பீட்ஸா ஹட், டாமினோஸ்,
பீட்ஸா கார்னர், காபி டே, கபே காபி என்று விதவிதமான தீனிகள் வேறு. போதாதற்கு, சரவணபவன், சங்கீதா, க்ராண்ட் ஸ்வீட்ஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்று வேறு.

கட்டுரை தொடரும் வரை......
ஸாம்பிளுக்கு சில படங்கள்:


டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பீட்சா ஹட்



மெரினா பீச்சில் கண்ட மாங்காய் பத்தைகள்



திருமயிலை கபாலீஸ்வரர் கோவில்


டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி செண்டரின் முகப்பு


திருமயிலை கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் (நிரம்பியுள்ளது)

அடையார் ரோட்டோரம் கண்ட ஒரு டிபன் கடை

Tuesday, July 10, 2007

இமேஜை வென்ற கதாபாத்திரங்கள் - மாயன்

சமீபத்தில் வெளியான ஒரு ப்ரமாண்ட திரைப்படம், திரைத்துறை வட்டாரத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தியதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அதில் ஈடுபட்டவர்கள் எல்லாம் பெரிய தலைகளும் அவர்களது இமேஜும் தான். சலசலப்பில் ஈடுபட்டவர்கள் திறமை மிக்கவர்களாக இருந்தும் புகைச்சலோடு நிறுத்திக் கொண்டார்கள்.

இந்தத் (தொடர் ?) கட்டுரையின் நோக்கம் சினிமாவில் தங்கள் இமேஜை மறைத்து அந்தக் கதாபாத்திரங்களாகவே நம் கண்முன்னே வலம் வந்தவர்களைப் பற்றியது அன்றி விவாதம் பண்ண அல்ல.

1992ம் ஆண்டு வெளியான படம் 'தேவர்மகன்'. இதில் கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் பலரோடு மாயனும் நடித்தது நம்மில் பலருக்குத் தெரியும். ஆமாங்க, படத்தில் வில்லனான 'மாயன்' நாசர் தான் இங்க நமக்கு ஹீரோ !

கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் இவர்கள் மூவரும் எவ்வளவு பெரிய கலைஞர்கள் என்று நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. அதற்காக மாயனும் சளைத்தவர் அல்ல. இவர்களுக்கும் மேல் தேவர்மகனில் மாயனின் ஆளுமை நிறைந்திருந்தது எனலாம். கமலும், சிவாஜியும் அவர்களாகவே தான் தோன்றினார்கள். அவர்களால் அவர்களது இமேஜை மறைக்க முடியவில்லை. ஆனால் மாயன் ...

கொத்து மீசையும், பொட்டிட்ட அகன்ற நெற்றியும், வெள்ளை உடுப்பும், உறுமும் குரலும் அப்படியே ஒரு கிராமத்துக் கோபக்காரராய் மாயன் இன்றும் நம் நினைவில் நிற்பவர்.

கீழே உள்ள youtube-ல் பஞ்சாயத்துக் காட்சியில் மாயனைக் காணுங்கள்.



சமீபத்தில் சலசலத்த திறமைமிக்கவர்களுள் ஒருவர் என்பது தான் இந்த நேரத்தில் நாசரைப் பற்றி சிந்திக்க வைத்தது.

நாம் என்ன தான் திட்டினாலும், விலக்கினாலும் சினிமாவைத் தவிர்க்க முடியாது தான் வாழ்கிறோம். நம்ம blogலேயே சிலர் அங்கலாய்த்திருந்தார்கள். ஒரு நான்கு பேர் சேர்ந்தால், என்ன தான் வேறு வேறு தலைப்புகளில் அரட்டை அடித்தாலும் கண்டிப்பாக சினிமாவைப் பற்றிய பேச்சு இருக்கும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பது என் எண்ணம்.

காலத்தால் வெற்றி பெறுவது கதையின் கதாபாத்திரமே அன்றி, எட்டும் இமேஜோ, கொட்டும் கோடிகளோ அல்ல. இதை உணர்ந்து, நல்ல கதாபாத்திரங்களை சிருஷ்டிக்க, சிந்திப்பார்களா நமது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்!

Sunday, July 08, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 13

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.




- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

கடல்

பொங்கும் நுரைதள்ளி
எங்கும் கரைதொடுவாய்

சங்கும் சிப்பிகளும்
தங்கும் சிறார்கைகள்

...

மருளும் புள்ளிமானின்
மயக்கத் துள்ளலையும்

சீறிப்பாயும் சிங்கத்தின்
சிறப்பான வேகத்தையும்

சிறகடிக்கும் பறவையின்
சீரான படபடப்பையும்

...

கொண்ட உந்தனலை
ஊர்முழுக்க அறிந்திருக்க

உன்னோடு நான்நடக்க
உள்ளம் களிப்படையுமே

சற்றே உள்ளிறங்கி
சில்லென்று மேனிசிலிர்க்க

ஆடும் உன்மீது மிதந்தே
பாடும் என்மனம் அலைபோலே

-----

இந்தக் கவிதைய ஆரம்பிக்கும்போதும், 'ங்' முதல் நான்கு அடிகளுக்கு வரவே. சூப்பர் அப்படியே continue பண்ணலாம் என்று நினைத்தேன்.

அப்புறம் தான் புத்தி சொல்லியது, அடே மடயா, போன பாட்ட போட்டது அங்கே குற்றம்னு சொல்றாங்க என்று. யாரும் சூப்பரா இருக்குனு சும்மா எல்லாம் comment போட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உண்மையைச் சொல்லுங்க அது போதும்.

Friday, July 06, 2007

மற்றும் ஒரு சிறு உதவி: [Richmond/Virginia/DC/MaryLand Area India/Chennai Travellers]

வைத்தியா சுந்தர்:

"எனது தாயாருக்கு தமிழ்/ஆங்கிலம் பேசக்கூடிய வழித்துணை தேவை. அவர்
வாசிங்டன் டி.சி.(IAD) இருந்து சென்னைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக ஆகஸ்ட் 20ம் தேதி வாக்கில் (*செப்டெம்பர் வரை வேறு தேதிக்கு மாற்ற இயலும்) பயணம் செய்யவிருக்கிறார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது, ஆனால் நல்ல உடல் நலம் உள்ளவர். உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரேனும் இந்த வழித்தடத்தில்/விமானத்தில் பயணம் செய்யவிருந்தால், தயவு செய்து உதவவும். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
EMAIL : vaidyasundar AT yahoo.com"

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி!

கல்விக்கு உதவுங்கள்

சமீபத்தில் செந்தழல் ரவி மூலமாக இன்னொரு இளைஞருக்கு கல்விக்கு உதவி தேவைப்படுகிறது என்று தெரியவந்தது. மேல் விவரங்களுக்கு வரவணையான் பதிவில் படித்துக் கொள்ளுங்கள்.

வரவணை பதிவில் இருந்து ஒரு பகுதி இதோ:

அந்த தம்பியின் பெயர் கௌதம் ( ராஜா முகமது) சென்னை திரைப்படக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறார். தந்தை இவர் பிறந்த சில ஆண்டுகளில் தவறிவிட்டார். இவரையும் இவரின் தங்கையும் தாயார் சித்தாள் வேலை செய்து படிக்க வைத்தார். மேற்படிப்புக்கு சென்னை வந்த இந்த தம்பி பகுதி நேரம் உழைத்துக்கொண்டெ படித்துக்கொண்டிருக்கிறார் , அதில் வரும் வருமானம் அன்றாட செலவுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். இந்த ஆண்டு தன் கல்லூரிகட்டணத்தை செலுத்த இயலாத காரணத்தால் தன் படிப்பை நிறுத்துவதாக தெரிவித்தார் என்னிடமும் சுகுணா திவாகரிடமும்.

உங்களால் முடிந்த உதவி செய்யலாம்.

Thursday, July 05, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 12

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.



http://pkirukkalgal.blogspot.com/2007/07/12.html



- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

piththanp@gmail.com

Tuesday, July 03, 2007

ஞ்...ஞ்...ஞ்சிருங்கோ...



வஞ்சி உனைக்
கொஞ்ச வருமென்
பிஞ்சு மனம்

மஞ்சம் அதில்
தஞ்சம் தரஉனைக்
கெஞ்சி நிற்கும்

வாஞ்சை கொண்டு
நெஞ்சம் குலாவித்தரும்
கஞ்சமிலா முத்தம்

இஞ்சி இடுப்பினில்
மிஞ்சி விளையாடுமென்
அஞ்சு விரல்(கள்)

அஞ்சி அஞ்சிப்
பஞ்சுப் பாவைஉனை
விஞ்சுமென் வீரம்

பஞ்சம் தீர
எஞ்சி நிற்கும்
நஞ்சமிலா நம்காதல்

-----

இந்தக் கவிதையில் (???), எல்லா முதல் சொல்லிலும் இரண்டாம் எழுத்து 'ஞ்' வருகிற மாதிரி எழுதியிருக்கிறேன். உங்களுக்கும் இது போல் ஏதாவது தோன்றினால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலக்கணப்படி எதுலயாவது இது சேருமா என்று தெரியவில்லை. "கவிதையானு நாங்கள் சொல்லனும், அதுகுள்ள இலக்கணத்துக்கு வேற போயாச்சா" என்று திட்டாதீர்கள் ;-)

என்றும் அன்புடன்
சதங்கா