Tuesday, December 26, 2006

வலைவலம்

எந்தரோ ப்ளாகிகளு அந்தரிகி மா வந்தனமு

வலைப்பதிவு எழுதுவோர் எல்லாரும் வெட்டியல்ல. சமீபத்தில் வலைப்பதிவர்கள்(ப்ளாகிகள்) சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள். செய்கிறார்கள். தேசிகன் என்பவரின் பதிவில் பார்த்த சிறுவன் ஆதித்யா இப்போது பிட்ஸ்பர்க் குழந்தை மருத்துவகத்தில் இருக்கிறான். அவன் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதில் வலைப்பதிவர்களின் பங்கு பெரிது. ஆதித்யா வேலூர் CMCயில் இருந்தபோது அங்கு சிகிச்சை பெற்று வந்த என் நண்பன் சொன்னான் - அந்த வார்டு முழுவதும் ஆதித்யா போல நிறைய குழந்தைகள். அங்கு போவதற்கே கஷ்டமாக இருந்தது.

இப்போது பிட்ஸ்பர்கில் இருக்கும் ஆதித்யாவுக்கு ஒரு பொம்மைகடை வைக்கும் அளவுக்கு பொம்மைகள் வந்து குவிந்திருக்கின்றன என்கிறார்கள் அவன் பெற்றோர்கள்.

ஆதித்யாவுக்கு நீங்களும் உதவலாம். விவரங்கள் இதோ.

Residents of USA and US citizens who would like to contribute thro US$ Check can draw it payable to "Children's Hospital of Pittsburgh" and mail it to the address mentioned below. Please make sure you write "For Aditya Kumar - Visit # 1022726762" in the memo part of the check.

Nandita & Mahesh
5701 Governors Pond Circle
Alexandria, VA 22310
(703) 960-6615

After mailing the check, please send the check details to kumarsang@gmail.com , ravi2604@gmail.com and nandita999@yahoo.com




ஆதித்யா போன்ற புற்றுநோயாளிகளுக்கு உதவ இந்தியாவில் ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பிற்கு அவ்வப்போது நிதி உதவி செய்தால் உங்களுக்கு எல்லா நலங்களும் வந்து சேரும்.

இனி வலைப்பதிவர்களின் இன்னொரு முயற்சியை பார்ப்போம்.

ஏழைப்பெண் மகாலட்சுமியின் தடைப்பட்ட கல்விக்கு
உதவ முயல்கிறார் செந்தழல் ரவி என்ற பெயரில் பெங்களூரில் இருந்து எழுதும் ரவி. திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெயர் ஆர்.மகாலட்சுமி..தந்தையார் பெயர் ராமன்..படித்தது எம்.எஸ்.ஸி / காந்திகிராமம் கல்லூரியில்...எம்.எஸ்.ஸி அப்ளைடு பயாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவரது மதிப்பெண் ( 1978 / 2750 ). இப்போது பி.எட்: ஆர்.வி.எஸ் எஞ்சினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது பணம் கட்டமுடியாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

தந்தையார் கடைகளில் எண்ணையை வாங்கி வீடுவீடாக விற்கும் பணியை செய்து சொற்ப வருமானம் பெறுகிறார்...ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்..தம்பி படிக்காததால் ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைசெய்கிறார்...தங்கை ஐ.டி.ஐ படிக்கிறாராம்... இவள் முன்னுக்கு வந்தால்தான் குடும்பம் வாழமுடியும் என்னும் நிலை....மிகுந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது கல்விக்கண் திறந்தால் வாழுமே ஒரு குடும்பம்...

மேலே விவரங்களுக்கு செந்தழல் ரவியின் பதிவை படியுங்கள். அவரது பள்ளிக்கூட நண்பன் எழிலரசன் பற்றி தெரிந்தாலும் அவருக்கு தெரிவிக்கவும்.

வலைவலம் வராமலே இந்த பதிவு நீண்டுவிட்டது. ஆகவே - RTP (ராகம் தானம் பல்லவி) பற்றி கேட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு வருந்தி வருந்தி விக்கிபசங்க சொல்லியதை நான் மறுபடியும் எழுதப் போவதில்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

ப்ளாகிகளே - சற்றே மௌனம் கலைந்து உங்கள் லொள்ளையும், எதிரொலியையும், பித்து மொழிகளையும் நமக்கு அருளவும்.

தடயம் - அத்தியாயம் - 3.

தடயம் மர்மத்தொடரின் மூன்றாவது அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக்கவும்:

http://kalaichcholai.blogspot.com/2006/12/3.html

- முரளி.

Saturday, December 16, 2006

தடயம் - அத்தியாயம் - 2

தடயம் மர்மத்தொடரின் இரண்டாவது அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக்கவும்:

http://kalaichcholai.blogspot.com/2006/12/2.html


- முரளி.

Friday, December 08, 2006

நிறம்

அன்னை வயிற்றின் கதகதப்பில்
அன்புக் குடிலின் அரவணைப்பில்
கண்கள் மூடி அருந்தவத்தில்
காத்திருந்தாய், அன்று நிறங்களில்லை

ஈரைந்து மாதங்கள் கரைந்த பின்னே
உறக்கம் கலைந்து எழுந்த பின்னே
உலகைக் கண்ணால் கண்ட பின்னே
உன் சிரிப்பினில் மலர்ந்தது வெள்ளை நிறம்

தத்தித் தவழ்ந்து நடை பயின்றாய்
மழலைப் பேச்சால் மயங்க வைத்தாய்
கள்ளம் இல்லாப் பிள்ளை நெஞ்சில்
இன்னும் இருந்தது வெள்ளை நிறம்

செல்லக் கோபம் காட்டக் கற்றாய்
ஒன்று கிடைக்காவிடில் பிடிவாதம் செய்தாய்
கண்ணீர் சிந்தி அடம்பிடிக்கையிலே
லேசாய் மாறுது வெள்ளை நிறம்

பாகுபாடுகள் பார்க்கக் கற்றாய்
ஏற்றத் தாழ்வையும் ஏற்றுக் கொண்டாய்
நம்பிக்கையின்றி வாழக் கற்றாய்
அன்பைக்கூட அளந்து வைத்தாய்
ஆளைப் பார்த்து ஆடை பார்த்து
ஆதாயம் பார்த்து நடக்கும் பொழுதினில்
தானாய் மறையுது வெள்ளை நிறம்…

--கவிநயா

Tuesday, December 05, 2006

தடயம் - மர்மத்தொடர்

தடயம் மர்மத்தொடரைப் படிக்க இங்கே க்ளிக்கவும்:

http://kalaichcholai.blogspot.com/2006/12/1.html

- முரளி.

அரங்கேற்றம்

அவங்க ஐந்து பேரும் அந்த கட்டிடத்தை வந்து அடைந்த போது அவங்களுக்கு முன்பே பலர் வந்து சேர்ந்திருப்பது அங்கு நிறுத்தி வைக்கப் பட்ட கார்களைப் பார்த்து தெரிந்தது.
அவர்களுள் முதலில் நடந்து சென்றவர் நடுத்தர வயது, நல்ல வாட்ட சாட்டமாக, ஆஜானுபாகுவாக இருந்தார். நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, நல்ல பொன்னை ஒத்த நிறம், கரிய விழிகள், அடர்ந்த கேசம். அவரை தொடர்ந்தது அவருடைய மனைவி. யாராவது முதல் தடவையா பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே அம்மான்னு அவங்க கால்ல விழக்கூடிய ஒரு கருணை அவங்க முகத்தில கொட்டி கிடந்தது. சற்று குண்டா ஒரு இளைஞன், அவனுடைய கண்களே அவன் மிக மிக அறிவாளி என்று சொல்லும்படி களையாக இருந்தான். அவனோடு அவனுடைய தம்பி போல ஒரு சிறுவன், துருதுரு என அலை பாயும் கண்களோடு என்ன விஷமம் செய்யலாம் என அலைபவன் போல கொள்ளை அழகோடு வந்தான். இவங்க நாலு பேரையும் தொடர்ந்து சற்று தள்ளி அவங்க உதவியாளர் போல ஒருத்தர் வந்தார். அவருக்கும் நடுத்தர வயது, அவருடைய திரட்சியான மார்பும், வலுவான கைகளும், கால்களும் அவர் அவர்களின் பாதுகாப்பாளர் என்பதை சொல்லாமலே தெரிந்தது.
அந்த கட்டிடத்தின் வாயிலில் சற்றுத் தயங்கி அவர்கள் நின்றார்கள். அப்போது சிறுவன் "அப்பா, இந்த இடம்தானா" என்றான்.
"இந்த இடம்தான், அதோ அங்க அவங்க தயாராயிட்டு இருக்காங்க, இப்போ நிகழ்ச்சி ஆரம்பிச்சுடும், வாங்க உள்ளே போகலாம்"
அப்போது பாதுகாப்பாளர், "ஐயா, நானும் உள்ளே வரலாமா?"
"ஏன் என்ன தயக்கம், கண்டிப்பாக வரலாம்"
"இல்லை அழைப்பு உங்களுக்கு மட்டும்தான் அதனால் கேட்டேன்."
"நல்ல வேடிக்கை, நீ இல்லாமல் நான் என் குடும்பத்துடன் எங்கயாவது போனதுண்டா, எப்போ இப்படி பேச கத்துக்கிட்ட?"
"மன்னிச்சிடுங்க, நீங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கனும்னு உற்சாகமாக வந்தீங்க, அதை நான் கேள்வி கேட்டு கெடுத்துட்டேன்."
அப்போது இளைஞன், "அப்பா, உள்ள போய் நிகழ்ச்சியைப் பார்க்கலாமா அல்லது, இங்கேயே பேசிண்டு இருக்கலாமா என்பதை சீக்கிரம் முடிவு பண்ணுங்க" என்றான்.
பெரியவர் பாதுகாப்பாளர் பக்கம் திரும்பி ஒரு சிறிய புன்முறுவல் செய்தார், அதன் அர்த்தம் தெரிந்த பாதுகாப்பாளர் ஓடிச் சென்று இரட்டைக் கண்ணாடிக் கதவுகளைத் திறந்து அவர்களை அழைத்துச் சென்றார்.
அவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்கள் கண்ணில் பட்டது கம்பீரமான நடராஜர் சிலை. அதைப் பார்த்ததும், பெரியவரும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்போது அவருடைய சிறிய மகன் "அப்பா, நாம கொஞ்சம் உட்காரலாமா" என்றான்.
அதற்கு அவனுடைய அம்மா, "இருப்பா, அப்பா சொல்லுவார் அப்பரம் உட்காரலாம்" என்றார்.
"கொஞ்சம் இருப்பா, அவங்க இப்போ ஆசீர்வாதம் வாங்க வருவாங்க அதுக்கு அப்பரம் நாம உட்காரலாம்" என்றார் அப்பா.
அவர் சொல்லி முடித்த போது, ரெண்டு சிறுமிகள் மேடையில் தோன்றினார்கள்.
"போனவருடம் இவங்க அரங்கேற்றம் பாக்கத்தானே நாம இங்க வந்தோம்!" என்றார் அந்த அம்மா.
அதற்கு அந்தப் பெரியவர் ஆம் என தலையசைத்தார்.
அந்த ரெண்டு சிறுமிகளும் மைக் முன்னாடி வந்து பேசத் துவங்கினார்கள்.
அப்போது பாதுகாப்பாளர், "ஐயா இவங்களா! நீங்க சொன்ன அந்த ரெண்டு பேர்"
"மலர்கள் பேசும் போது இடைஞ்சல் செய்யாதே" என்றார் அம்மா.
இல்லை என தலையசைத்தார் அந்தப் பெரியவர்.
தெளிவாக அவர்கள் பேசத் துவங்கினார்கள்.
"திருமதி. உமா செட்டி அவர்களுடைய மாணவிகளாகிய மீனா வீரப்பன் மற்றும் ப்ரீதி பாடில் இருவருக்கும் நடக்கும் இந்த நடன அரங்கேற்றத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்......."
"தத்தோம் தகதோம், தத்தீத் ......" கணீரென ஜதியின் சப்தம் அந்த அரங்கத்தை நிரப்பியது. அந்த ஐந்து பேரும் கண்மூடி மௌனமாக நின்றனர்.
சுழன்று சுழன்று ஆடியபடி மீனாவும், ப்ரீதியும், மேடையின் நடுவில் வந்து பிறகு, நடராஜர் சிலையை நோக்கி ஆடத்துவங்கினர். இருவரும் ஒருவித மயக்கத்தில் இருப்பது போல இருந்தது, அது ஒரு தவ நிலை என்பது அந்த ஐந்து பேருக்கும் புரிந்தது. கலையுடன் அவர்கள் உணர்வு ஒன்றாமல் இந்த நிலை வராது என்பது தெளிவாகத் தெரிந்தது.
மீனாவும், ப்ரீதியும் நடராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவருடைய ஆசீர்வாதத்தை வேண்டி நின்ற போது, பெரியவர் புன்சிரிப்புடன் தன் மனைவியைப் பார்த்தார்.
"என்ன அவங்களுக்கு ஆசீர்வாதம் செய்யலையா"
"தேவி, இவருடைய ஆசீர்வாதம் இல்லாமல் இவர்களால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு தயாராகியிருக்க முடியுமா?" என்றார் பாதுகாப்பாளர்.
"நந்தியம்பதி, நம் குழந்தைகளை நாம் ஆசீர்வதிக்காமல் வேறு யார் ஆசீர்வதிப்பது"
"சரியாகச் சொன்னாய் தேவி, நாம் அனைவருமே அவர்களை ஆசீர்வதிப்போம்" என்ற பரமன் கண்மூடி ஓம் என ஜெபித்து தன் வலக்கையை தூக்கி ஆசீர்வதித்தார். தேவியும், இளைஞன் விநாயகனும், சிறுவன் கந்தனும், பாதுகாப்பாளர் நந்தி தேவரும் ஆசீர்வதித்தனர்.
மீனாவுக்கும், ப்ரீதிக்கும் ஒரு கண நேரம் சில்லென்ற ஒரு உணர்வு உடல் முழுதும் பரவி பளிச்சென்று விலகியது. உடலில் இருந்து அத்தனை சொர்வும், வலியும், களைப்பும், மனதில் இருந்த தயக்கம் எல்லாம் பட்டென்று விலகியது போல இருந்தது. பளிச்சென்று இருவரும் சிரித்த படி நடனமாடத் துவங்கினர்.
முருகனின் லீலைகளைச் சொல்லி நடனமாடியபோது, பரமன் முருகனைப் பார்த்து, "என்னப்பா, வள்ளியுடன் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறதா" என்றார்.
"நான் இன்று உங்களுடன் இங்கு வரப்போவது தெரிந்தவுடன் அவளும், தெய்வயானையும் நமக்கு முன்பே வந்து நடனத்தை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்" என்றார் கந்தன். "
"அதுதானே பார்த்தேன் வா என்று சொன்னதும் நீ ஒன்றும் சொல்லாமல் என்னுடன் வந்ததின் காரணம் என்னவாக இருக்கும் என்று"
"தந்தையே, என்ன இது விளையாட்டு, உங்களுக்குத் தெரியாமல் இந்த உலகில் ஏதும் நடக்குமா?"
"அப்பாவும் மகனும் பரஸ்பரம் பாராட்டிக் கொள்வது இருக்கட்டும் நாட்டியத்தை கவனியுங்கள்" என்றார் தேவி.
சிறிது நேரம் கழித்து பலர் மேடைக்கு வந்து மீனாவையும், ப்ரீதியையும் பாராட்டி பேசினார்கள், பரமன் புன்சிரிப்புடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
விநாயகன் பரமனைப் பார்த்து, "தந்தையே, எல்லா அரங்கேற்றத்திற்கும் சென்று அனைத்து கலைஞர்களையும் ஆசீர்வதிக்கின்றீர்கள், உங்கள் எண்ணம் என்ன?"
"விநாயகா, இந்த உலகில் தருமம் தழைக்க, பகை, துவேஷம் அழிய, போர் முற்றிலும் நிற்க ஒரே வழி கலை வளர்வதுதான். கலையில் தன்னை அர்ப்பணித்த எவருக்கும், உலகில் எதையும் வெறுக்கவும் தெரியாது, அழிக்கவும் முடியாது. கலை ஒருவரை பண்படுத்தும், பலப்படுத்தும், அன்பைப் பெருக்கும்"
"தெரியும் தந்தையே, இதை நீங்கள் கூறக் கேட்பதில் எனக்கு ஒரு ஆனந்தம், அவ்வளவுதான்."
அப்போது நந்தியம்பதி, "பெரும, மேடையில் பலர் அந்த இரு பெண்மணிகளையும் பாராட்டிப் பேசியபோது நீங்கள் எதற்காகச் சிரித்தீர்கள்"
"அது வேறொன்றும் இல்லை, அவர்களைப் பாராட்டிப் பேசியவர்கள் இந்த அரங்கேற்றத்துடன் இவர்களது கடின உழைப்பு முடிந்து விட்டது போல பேசினார்களே அதை நினைத்து சிரித்தேன். இந்த அரங்கேற்றம் ஒரு துவக்கம்தான், இவர்கள் இத்தனை வருடங்கள் பெற்ற பயிற்சியின் பலன் இந்த அரங்கேற்றம் இல்லை, இந்தப் பயிற்சியின் பலன் இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பேருக்கு இவர்கள் இந்தக் கலையை கற்பித்து இந்தக் கலையை வளர்ப்பதுதான். "
"அவர்களுக்கு துவக்கத்தில் என்ன ஆசீர்வாதம் செய்தீர்கள்"
"நந்தி உன் கேள்விகளுக்கு முடிவே இல்லையா? நான் அவர்களுக்கு ஆசீர்வாதமாக, இந்தக் கலையை பலருக்கு கற்பித்து, வளர்க்க அவர்கள் மனதில் ஒரு விதையை தூவி விட்டிருக்கிறேன்"
மங்களம் பாடி முடித்து மீனாவும், ப்ரீதியும் அனைவரையும் வணங்கி நிற்க, பரமன் மீண்டும் ஒருமுறை தன் வலக்கையை தூக்கி ஆசீர்வதித்து விட்டு ஒரு புன்முறுவலுடன் அனைவருடன் மறைந்தார்.
- முரளி.

Monday, December 04, 2006

தமிழா, ஹிந்தியா?

நாம் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். இதைப் பாருங்கள். தமிழ்நாட்டிலேயே பள்ளிக்கூடத்தில் தமிழுக்கு பதில் ஹிந்தி படித்திருக்க வேண்டும் என்கிறார் திருச்சியில் வளர்ந்த, தமிழ் படித்த தேசிகன்.

இதில் எனக்கு உடன்பாடில்லை. தேசிகன் கேட்கிறார்: சுஜாதாவையும் பிரபந்தத்தையும் சொல்லிக் கொடுத்த அப்பா தமிழை சொல்லிக் கொடுத்திருக்க மாட்டாரா என்று? தமிழ் தெரிந்திருக்காவிட்டால் எங்கேயிருந்து சுஜாதாவையும், பிரபந்தத்தையும் சொல்லிக் கொடுப்பது. ஆளை விடுடா சாமி என்று மலைக்கோட்டைக்கு நடையை கட்டியிருப்பார் அப்பா.

வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது ஹிந்தி தெரியாதிருப்பது கேவலமா, திருச்சியில் உட்கார்ந்துகொண்டு தமிழ் தெரியாமலிருப்பது கேவலமா? என் கல்லூரியில் ஒருவன் சீரங்கத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்காமலிருந்தான். அதை பெருமையாக வேறு சொல்லிக் கொள்வான். எத்தனை பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஒரு மொழியை சொல்லிக் கொடுக்க முடிகிறது. அது கட்டாயம், கடமை என்று எல்லாம் பட்டி மன்றத்தில் பேசலாம். நடைமுறையில் பத்தில் ஒருவராவது கற்றுத் தருகிறார்களா?

பள்ளியில் மும்மொழித்திட்டம் இல்லா நிலையில், தமிழ் கற்காவிட்டால், வீட்டில் தமிழ் கற்பது கடினம். அதானால் முன்னேறுவார்களா இல்லையா என்பது தேசிகன் சொல்வதுபோல விவாதத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். தமிழ் அழியும் என்று நான் வசனம் பேசவும் இல்லை. அந்த மாணவர்களுக்கு பள்ளிக்கு வெளியே தமிழ் கற்கமுடியாது என்பதே என் கருத்து. அதுவும் வெளியே தமிழ் கற்றால், பிரபந்தமும் படிப்பது கஷ்டம். குமுதம், விகடன் படிக்கலாம். ஆனால் நாராய், நாராய் செங்கால் நாராய் எல்லாம் தெரியாது.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில்(comment) இடவும்.

Saturday, December 02, 2006

டிசம்பர் மாத லொள்ளு மொழிகள்

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்
காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்
ஏன் ஜேம்ஸ் ஆத்துல கூட மீன் பிடிக்கலாம்
ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

கோல மாவுல கோலம் போடலாம்
கடலை மாவுல கடலை போட முடியுமா?