Showing posts with label ஓல்ட் ரேக். Show all posts
Showing posts with label ஓல்ட் ரேக். Show all posts

Monday, May 18, 2009

ஓல்ட் ரேக் மலை

சென்ற வார இறுதியில் சாரணப் படையுடன் ஒரு முகாமுக்கு சென்றிருந்தேன். வெறும் முகாம் அல்ல. சொர்க்கபுரி! சந்தேகமிருந்தால் கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.


அப்பலேச்சியன் மலைத்தொடரில் ஒரு பாகமான ஷேனன்டோவா தேசியப்பூங்காவில் இருக்கிறது ஓல்ட் ரேக் மலை (Old Rag Mountain).
ரிச்மண்டில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை கிளம்பி இரவு ஒன்பதரை மணிக்கு ஓல்ட் ரேக் மலையடிவாரத்தை அடைந்தோம். பார்க்கிங் லாட் காலியாக இருந்தது. எங்கள் சாரணப்படையைச் சேர்ந்த புண்ணியவான்கள் இருவர் முதலிலேயே போய் கூடாரங்கள் அமைக்க இடத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

கும்மிருட்டில் மரங்களூடே தடவிக் கொண்டே போய் எங்கள் கூடாரங்களை அமைத்தோம். ஒரே பாறைகளும், மரக்கிளைகளும் நிறைந்த தரையில் அதிர்ஷடவசமாக சமதரை கிடைத்தது எனக்கு. தலையில் கட்டிக்கொள்ளும் லைட் இல்லையென்றால் அதோகதிதான் இந்த முகாம்களில். கூடாரம் அமைத்துவிட்டு வாசனாதி பண்டங்களை ஒரு கரடிப்பையில் போட்டு கட்டி மரத்தில் தூக்கிக் கட்டினோம். வாசனாதி பண்டங்களை கூடாரத்தில் வைத்துக்கொண்டால் கரடி வரும் என்று கரடி விட்டார்கள்.

காலையில் எழுந்து பார்த்தால் உலகமே பாலுமகேந்திரா காமிராவில் பிடித்த மாதிரி இருந்தது.



நான் கொஞ்சம் உலாத்திவிட்டு ஆற்றில் இறங்கி விளையாடிவிட்டு மேலே இருக்கும் வீடியோவை எடுத்துவிட்டு வருவதற்குள் உள்ளங்கையில் அடங்கும் கேஸ் அடுப்பை வைத்து தண்ணீர் சுடவைத்து டீ,காப்பி எல்லாம் தயாராய் இருந்தது. அதையும் ஓட் மீல்-ஐயும் ஒரு கைப்பார்த்துவிட்டு மதிய உணவுக்கு சான்ட்விச் செய்துகொண்டு கிளம்பினோம்.

முதல் நாள் ஈயடித்துக் கொண்டிருந்த பார்க்கிங் லாட்டில் சைக்கிள் நிறுத்தக்கூட இடம் இல்லை. அவ்வளவு கும்பல். காலையிலிருந்தே திருவிழா கூட்டம் போல மக்கள் வரிசையாக போய்க் கொண்டிருந்தார்கள். எங்களைத் தவிர இரண்டு சாரணர்படைகள், நிறைய கல்லூரி மாணவர்கள், மலையேறும் வீராதி வீரர்கள், சூராதி சூரர்களும் வந்து குவிந்திருந்தார்கள். ஓல்ட் ரேக் மிகவும் பிரசித்தமாம். கடினமான பாதைகளும், பாதையிலேயே கடும்பாறைகளும் கொண்டு ரொம்ப சேலஞ்சிங் மலையேற்றம் இது என்று வயிற்றில் புளியைக் கறைத்தார்கள் கூடவந்த மகானுபாவர்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் ஆரம்பித்தது. மூடுபனியும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி பக்கத்து மலை தரிசனங்கள் கிடைக்க ஆரம்பித்தன. மேலே போகப்போக பாறைகள் பாதையிலே பாறைகள் அதிகம். சில இடங்களில் வெறும் பாறைதான். பாறைகளுக்கு நடுவே குறுகலான பாதை, நெருங்கிய பாறைகளின் இடையே குறுகலான பாதை என்று பலவிதம். சில இடங்களில் பாறைகளுக்கு அடியே தவழ்ந்தும் போக வேண்டியிருந்தது. இங்கே பாருங்கள் கோவர்தன கிரிதாரி!




பாதையில் பாதி அடைத்துக் கொண்டிருக்கும் பாறை.



அடுத்தது பார்த்தால் ஒரு பெரிய கும்பலே தர்ம தரிசனத்திற்கு நிற்கிறது. நான் கியூவைப் பார்த்துவிட்டு சரிதான் இங்கேதான் லட்டு கிடைக்கும் என நினைத்துக் கொண்டேன்.ஆனால் அங்கே கிடைப்பது அல்வா. ஒரு குறுகலான பாதையில், இரண்டு பாறைகளைக் கடந்து செல்லவேண்டும் - அதுதான் இந்த பாதையிலேயே கடினமான இடம்.



அம்மாடி! அதை ஒரு வழியாக கடந்து ஒரு குகையில் புகுந்து வெளியேறி இரண்டு பாறைகளுக்கு இடையே இறங்கி சிக்கிக்கொள்ளாமல், கணுக்காலை சுளுக்கிக் கொள்ளாமல் தப்பித்து உச்சியை அடைவதற்குள் அம்மாடி - களைத்துவிட்டது. உச்சியில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு சுற்றிப் பார்த்தால் - பச்சைப்பசேல் என்று எங்கும் பச்சைப்போர்வை போர்த்திய உலகம்.



திருவண்ணாமலை ஞாபகம்தான் வந்தது மேலே இருக்கும் மலையைப் பார்த்தபோது. அங்கிருந்து இறங்குமுகம்தான். சிறிது இறங்கியபிறகு மழை பிடித்துக் கொண்டது. எல்லோரும் பாஞ்சோ எனப்படும் மேலாடையை அணிந்து கொண்டு அடைமழையிலும் விடாது நடந்தோம். எங்கள் குழுவில் இருந்த சிறுவர்கள் இருவரும் மிகவும் சோர்ந்து விட்டார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு என்ற பேரில் நானும் அவர்களுடன் மெதுவாக நடந்து வந்து அழகழகான பாலங்களைக் கடந்து முகாமை அடைந்தேன். மொத்த நடை ஏழு மைல்.

வந்து இளைப்பாறிவிட்டு அடுப்பு மூட்டி தண்ணீர் கொதிக்கவைத்தோம். இரவு உணவு நூடுல்ஸ். திடீரென மழை திரும்ப ஆரம்பித்தது. போட்டதை போட்டபடி கூடாரங்களுக்குள் பாய்ந்தோம். சமயோசிதமாக கொதித்துக் கொண்டிருந்த நீரை கோப்பையில் கொட்டிக்கொண்டு கூடாரத்துக்குள்....



Maggi cuppa mania saves the day!

பிறகு மழையிலே சமையல்பாறை மேல் ஒரு கூடாரம் கட்டி மற்றவர்களுக்கு சமைத்து பரிமாறி கூடாரத்துக்குள் கட்டையை சாய்த்ததுதான். காலையில் பறவை ஒலிக்குதான் எழுந்தேன். காலை உணவுக்கு பேகில், டீ! கூடாரங்களைப் பிரித்து, இடத்தை சுத்தம் செய்துவிட்டு (Leave No Trace), வீட்டுக்கு கிளம்பினோம். இன்னொரு அற்புதமான முகாம் இனிதே முடிந்தது.

மற்ற படங்களை இங்கே பார்க்கலாம்.