Friday, February 01, 2013

விஸ்வரூபம் தடை விமர்சனம்




எடைக்கு எடை கேள்விப் பட்டிருக்கிறோம்.  அதென்ன, தடைக்குத் தடை ?  ஒரு அனுபவம் மிக்க படைப்பாளியின் திறமையை மதிக்காத, அதுவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக (என்று நாம் எல்லோரும் கருதும்) நாடு நமது நாடு.  உண்மையை உரக்கச் சொன்ன பாரதியை என்ன செய்தோம் ?  வெள்ளையனின் உதவியோடு புதுவைக்குத் துரத்தினோம்.  இன்று 'உலகநாயகன்' என்று நம்மால் போற்றப்பட்டு, சொந்த தமிழ்நாட்டை விட்டு துரத்தக் கிளம்பிவிட்டோம்.

தடைக்கு தடை பின்னனியின் பக்கபலம், அரசியல் தான் என்று பலகோடி மக்களும் நம்பியிருக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சமீபத்திய காணொளி உரை இதைத் தகர்த்தெரிந்தது.  இந்தப் படத்தைத் வெளியிடாமல் கு,றுக்கே நிற்பது தாமல்ல என்றும், "சட்டம் ஒழுங்கு எனது மாநிலத்துக்கு முக்கியம், இஸ்லாமிய அமைப்புக்கள் முறையீடு வைத்திருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மனது புண்படும் காட்சிகளை நீக்குவது தொர்பாக,  கமலை அவர்களுடன் சமரசம் பேசுமாறு சொல்லியிருக்கிறேன்." என்று முடித்துக் கொண்டார்.

தமிழக இஸ்லாமியர்கள் அமைப்பைப் பயன்படுத்தி  தடை போடும் அளவிற்கு, என்ன என்ன காட்சிகள் என்று இருதரப்பினர் (எழுத்தாளர், இயக்குநர் ஒருபுறம்.  இஸ்லாம் அமைப்பின் தலைவர்கள் இருவர் மறுபுறம்) சன்டிவி விவாதமேடையில் தூள்கிளப்பியதை பலரும் பார்த்திருக்கலாம் சமீபத்தில்.

பள்ளிக்குச் செல்லும் எட்டு வயது சிறுவனின் கையில் இருக்கும் நோட்டுப்புத்தகங்களைப் பிடுங்கி, கையில் துப்பாக்கியைத் திணித்தல்.

உலகத் தீவிரவாதிகளான முல்லா உம்மர், மற்றும் ஒருவர், மதுரையில் பதுங்கி சதி செய்தல்.

குர்ரான் ஓதி எதிராளியின் தலையறுத்தல்

குர்ரான் ஓதி வெடிகுண்டு வெடித்தல்

பெண்களைப் பயன்படுத்துதல்

இஸ்லாத்தை மையப்படுத்தி பணம் பண்ணப் பார்க்கிறார்

இவையெல்லாம், தமிழக இஸ்லாம் அமைப்பினரின் பிரதான குற்றச்சாட்டுக்கள்.  அத்தனைக்கும் சான்றுகள் இருக்கின்றன என்கிறார் கமல்.  'இப்படி அவர் சொல்வதைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்' என்கிறார்கள் இஸ்லாமிய அமைப்பினர்.

இந்தப் படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும்.  மீசையின்றி தாடி வைத்து வெண் அங்கியில் தெருவில் சென்றால், ஏதோ தீவிரவாதிகள் போல எங்களைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள் என்கின்றனர்.  ஏற்கனவே எங்களுக்கு பல இடங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது.  எங்கள் இளைஞர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.  வீடு வாடகைக்குக் கிடைப்பதில்லை, பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. என்றெல்லாம் அடுக்கினர்.  எற்கனவே இவை மறுக்கப்படுவதாக அவர்கள் நினைப்பதற்கும், தமிழகத்தில் திரையிடப்படாத விஸ்வரூபம் திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம்?  பல நாடுகளில், அதுவும் முழுக்க இஸ்லாமியர்களான மலேஷிய நாட்டில் கூட படம் வெளிவந்து, எதுவும் அசம்பாவிதம் நடந்ததாக இன்று வரை செய்தி இல்லை !

பல வருடங்கள் முன்னர், தாலிபான்கள் மந்திரம் சொல்லி,அமெரிக்கர்களின் தலை அறுத்ததை உலகமே பார்த்து அதிர்ந்தது, அப்போது எங்கே போனார்கள் தமிழக இஸ்லாமிய அமைப்புக்களைத் தூண்டி விடுபவர்கள்?

2011ல் மந்திரம் ஓதி அமெர்க்க உலக வர்த்தக மையத்தை தகர்த்து எள்ளி நகையாடினார்கள்.  அப்போது எங்கே போனார்கள் தமிழக இஸ்லாமிய அமைப்புக்களைத் தூண்டி விடுபவர்கள்?

2008ல் மும்பை புகைவண்டி நிலையத் துப்பாக்கி சூட்டின் போது எங்கே போனார்கள் தமிழக இஸ்லாமிய அமைப்புக்களைத் தூண்டி விடுபவர்கள்?

எடுத்தேன் கவிழ்த்தேன் பேர்வழி அல்ல, முதிர்ந்த அனுபவம் உள்ளவர் கமல்ஹாசன்.  அவர் எப்படி ஒரு (சிறுபாண்மையினர் ?) இனத்தைக் கேலி செய்து, 90 கோடி சொந்த செலவில் படமாக்குவார் ?!  இன்றைக்கு நான் நிற்கும் வீடே நாளை எனதல்ல என்று புன்னகைத்துக் கொண்டே சொல்வதில் பொய்மை இருப்பதாய்த் தோன்றவில்லை.

"கமல் இதில் நல்ல விளம்பரம் பார்க்கிறார்.  பார்த்துக் கொண்டே இருங்கள், படாரென்று சர்ச்சைக்குள்ளானதாகக் கருதப்படும் காட்சிகளை வெட்டிவிட்டு, மன்னிப்பு கேட்டு படத்தை வெளியிடுவார் என்று பலர் சொல்கிறார்கள்.".  அதுவும் படித்தவர்கள் !!!  இது மிகவும் மனவேதனையே.  90 கோடி செலவிட்டு விளம்பரம் தேடுகிறார் கமல்.  இருக்கட்டுமே !  நமக்கு என்ன கேடு.  நாம் ஏன் இது பற்றி விவாதித்து விளம்பரம் தேடவேண்டும். மிஞ்சிப்போனால் இதற்கான செலவிடும் ஒரு சிலமணித்துளிகள் தவிர வேறு என்ன செய்கிறோம் ?

அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது பழமொழி.  அவனே அப்படி இருக்கையில், திறமையான ஒருவன் திமிராக இருப்பதில் என்ன தவறு ?  கமல் செய்த ஒரே தவறு.  'என் படைப்பு உண்மை, வெறும் திரிப்பு இல்லை' என்பதில் நிதானமாக, கவனமாக, யாருக்கும் அடிபணியாமல் நீதி மன்றம் படி ஏறியது தான்.

இதைச் அவர் செய்யாமல் விட்டதில், யாருக்கு லாபம் என்றும், யாருக்கு அதிக விளம்பரம் கிடைத்தது என்றும், இந்த உலகு அறியும். !  ரசிகர் மன்றம் புகழ் பரவிக் கிடந்த தமிழகத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் கமல்.  நற்பணி மன்றம் என்று மாற்றி, போஸ்டர் ஒட்டி புகழ்பாடும் ரசிகர்களுக்கு, ரத்த தானம், உடல் உறுப்பு தானம் என்று தன்னை முதல் உதாரணமாக்கிக் காட்டியவர்.  மதமோ, பணமோ முக்கியமல்ல என்று தன் உறுதியில் இருந்து சற்றும் மனம் தளாரதவர்.  இவையெல்லம் இஸ்லாம் அமைப்புக்களைத் தூண்டி விடுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

மதச் சாயம் பூசி, அரசியல் செய்து, ஒரு தனிமனிதனின் படைப்புக்கு 'தடைக்குத் தடை' செய்வது எல்லாம் அகன்று, விரைவில் விஸ்வரூபம் தமிழகத்தில் தன் வடிவம் காட்டட்டும். !!!

---

விஸ்வரூபம் பாடல் வரிகள் பற்றிய சிறு சிந்தனை.

எனக்குத் தெரிந்து பாரதிக்குப் பின், கவிதைக்கு பொய் அழகில்லை, உண்மை தான் அழகு என நிற்பவர் கமல்ஹாசன்.  படித்த அடுத்த நிமிடம் ஒட்டிக் கொண்ட 'தேடிச் சோறு நிதந்தின்று' என்ற 'பாரதியின் பல கவிதைகளைப் போலவே, கமலின் விஸ்வரூபம் கவிதைகளும் எனலாம்.  'யாரென்று புரிகிறதா ?'வும், 'விழுந்தால் விதையாக விழுவேன்' என்ற கவிதையும் ஒருமுறை படிக்கையில் நம்மோடு ஒட்டிக் கொள்பவை.