Showing posts with label பதினாறு வயதினிலே. Show all posts
Showing posts with label பதினாறு வயதினிலே. Show all posts

Friday, June 17, 2011

நம்மைக் கவர்ந்த தமிழ் திரையுலகம்

நம்மைக் கவர்ந்த தமிழ் திரையுலகம்.

எழுபதுகளின் கடைசியில் தொடங்கி தொண்ணூறுகளின் ஆரம்பங்களில் வந்த சில தமிழ் படங்களின் கதைகளை மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன். பல படங்கள் இப்போது செயற்கையாகவும் , சிறு பிள்ளைத்தனமாக தோன்றினாலும், நன்றாக யோசித்து பார்த்தால், ஏறக்குறைய எல்லா திரை படங்களும் அந்தந்த காலத்து ரசிகர்களின் ரசனைக்குத் தகுந்தவாறே எடுக்கப்பட்டு இருக்கும் என்று விளங்கும்.

எண்பதுகளில் மன்னர் கால கதைகளில் நாயகர்கள் தூய தமிழில் பேசுவது கேலிக்கூத்தாக மாறி, படங்கள் மக்களின் சராசரி வாழ்க்கையை பிரதிபலிக்குமாறு எடுக்கப்பட்டன. பாடல்களும், சண்டைகளும் சராசரி வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது என்பது எல்லா கால கட்டத்துக்கும் பொருந்தும். எண்பதுகளில், பழி வாங்குதல், சந்தர்ப்ப வாதம், குடும்ப சுமைகளை தாங்குதல், ஓரளவு காதல் போன்ற விஷயங்களை மையமாக வைத்து படங்கள் வந்தன.

இந்த தொடர் வரிசையில், நாம் இந்த கால கட்டத்தில் வந்த திரைப்படங்களை அலசவும், மக்கள் ரசனை மற்றும் திரை துறையில் வந்த பல் வேறு மாற்றங்களையும் அசை போடலாம்.

முதலாவதாக நாம் அலசப் போகும் திரைப்படம் "பதினாறு வயதினிலே". நாம் பாரதி ராஜாவை அலசினாலே போதும், தமிழ் திரை உலகை எளிதாக பின் தொடரலாம்.

பதினாறு வயதினிலே

ஸ்டுடியோக்களின் உள்ளே மட்டும் இருந்த தமிழ் படங்களை வெளி உலகத்துக்கு அழைத்து வந்து கதா பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் பாரதி ராஜா. தமிழ் திரை உலகத்துக்கு ஒரு ஆலமரம் போல இருந்த படம் பதினாறு வயதினிலே. இந்த திரை படத்தில் பங்கு பெற்ற பெரும்பாலான கலைஞர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள். (கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கௌண்டமணி, இளையராஜா, பாரதி ராஜா, பாக்யராஜ், காந்திமதி, மலேசியா வாசுதேவன்)

கதா பாத்திரங்கள்

ஸ்ரீதேவி - மயிலு, காந்திமதியோட 16 வயது மகள். பருவ வயது உணர்ச்சிகளில் தவிக்கின்றவள். அந்த கிராமத்திலே பத்து படித்த ஒரே பெண். அழகுச் சிலை.

கமல் - சப்பாணி - சிறு வயதிலேயே காந்திமதியுடன் வசிக்கும் அனாதை இளைஞன். மயிலு மேல் ஆசை உண்டு. கூட உள்ளவர்கள் இவன் தான் மயிலை கட்ட போகிறான் என்று விளையாட்டுக்கு சொல்லும்போது, அதை உண்மை என்று நினைத்து புளகாங்கிதம் அடையும் ஒரு வெகுளி.

ரஜினி - பரட்டை. ஊரில் வேலை வெட்டி இல்லாத ஒரு முரடன். கூட கௌண்டமணி மற்றும் சில கைத்தடிகளை வைத்துக்கொண்டு மற்றவர்களை நையாண்டி செய்வதே தொழில்.

கதை

சப்பாணி பல்வேறு வழிகளில் மயிலின் மேலுள்ள பிரியத்தைக் காண்பிக்கிறான். அனால் அவளோ அவனை உதாசீனப் படுத்துகிறாள். சப்பாணி அவமானங்களைத் தாங்கிக்கொண்டு நம்பிக்கையோடு இருக்கிறான்.

பரட்டை அவ்வப்போது மயிலை வம்புக்கு இழுக்கிறான். சப்பாணி அவ்வப்போது பரட்டைக்கு எண்ணை தேய்த்து விடுவது போன்ற சிறு வேலைகள் செய்து காசு வாங்குவது வழக்கம்.

பத்தாவது பாஸ் செய்தவுடன் டீச்சர் ஆவது போல கனவு காண்கிறாள் மயிலு. அப்போது அந்த ஊருக்கு விலங்குகளுக்கு மருத்துவம் செய்ய ஒரு புதிய மருத்துவர் நல்ல டிப்-டாப் - ஆக வருகிறார். மயிலுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு. அடிக்கடி அவர்கள் சந்திக்கிறார்கள். மயிலுக்கு அவர் அவளை கல்யாணம் செய்து கொள்வார் என்ற ஒரு எதிர் பார்ப்பு. ஆனால் அந்த ஆளோ, மயிலுடன் தகாத முறையில் நடக்க முயற்சி செய்கிறான். மயிலு சுதாரித்து தப்பித்து விடுகிறாள்.

தன்னை கல்யாணம் செய்யுமாறு அவனைக் கேட்கும்போது, அவன் கேலியோடு சிரித்து, எனக்கு பிடித்தது எல்லாம் உன் பதினாறு வயதுதான், உன்னை கல்யாணம் பண்ணுவதா என்று ஏளனம் செய்கிறான். மயிலு துவண்டு விடுகிறாள். பக்கத்துக்கு வீட்டில் உள்ள சில பெண்கள் இவர்களது தொடர்பை அறிந்து கொண்டு, மயிலைப் பற்றி ஊரில் கட்டு கதைகள் கட்டி விடுகிறார்கள்.

இந்த சமயம், காந்திமதி மயிலின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறாள். பெண் பார்க்க வரும் குடும்பத்தினரை பரட்டை வழி மறித்து, மருத்துவருக்கும் மயிலுக்கும் தொடர்புள்ளதாக கூறி அவர்களின் மனதை மாற்றி விடுகிறான். பெண் பார்க்க வந்த கும்பல், காந்திமதியை அவமானப்படுத்தி விட்டு போகிறார்கள். காந்திமதி தற்கொலை செய்து கொள்கிறார். மயில் அநாதை போல ஆகி, சப்பாணி மட்டுமே துணை ஆகிறான். சப்பாணி கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனதில் இடம் பிடிக்கிறான்.

மயில் சப்பாணியோடு - அவனை யாரும் சப்பாணி-ன்னு சொன்ன கன்னத்தில் பளார்-ன்னு அடிக்குமாறு கூறுகிறாள். சப்பாணி வெளியே போகும்போது பரட்டை அவனை சப்பாணி என்று கூப்பிடுகிறான். சப்பாணி அவன் கன்னத்தில் பளார் என்று அறைகிறான். அருகில் இருக்கும் மருத்துவருக்கும் அடி விழுகிறது. பரட்டை பழி வாங்க ஒருநாள் சப்பாணியை அடித்து விடுகிறான். மயில் அப்போது ஒரு அப்பிராணியை அடிக்க வெட்கமாக இல்லையா என்று கேட்டு பரட்டை மேலே காரித் துப்புகிறாள். அவன் அடி பட்ட பாம்பாக வன்மத்தோடு செல்கிறான்.

ஒரு நாள் யாரும் இல்லாத நேரத்தில், பரட்டை மயிலை கற்பழித்து விடுகிறான். சப்பாணி பரட்டையை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறான். மயில் அவனுக்காக காத்து இருக்கிறாள்.

படத்தின் சிறப்புகள்

ஸ்டுடியோக்களுக்கு உள்ளே செயற்கையாக இருந்த சினிமா வசனங்களை விட்டு விலகி வந்து, யதார்த்தத்தை நம் முன் கொண்டு வந்த சிறப்பு பாரதி ராஜாவை சாரும். கதா பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து அவர்களின் இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தி பாரதி ராஜா உடனடியாக ரசிகர்களின் மனதை பிடித்து டிரெண்ட் செட்டர் என்ற பெயரையும் பெற்றார்.

இசையில் இந்த படத்தில் இளையராஜா சரித்திரம் படைத்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. "செந்தூரப் பூவே" பாடல் தமிழ் நாட்டு மக்கள் மனதில் அழியாத ஒரு இடத்தை பிடித்தது. கங்கை அமரனும், ஜானகியும் தேசிய விருது பெற்றார்கள். பின்னணி இசை படத்தின் உயிர் நாடியாக அமைந்தது. மலேசியா வாசுதேவன் "செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா" பாடலில் அறிமுகம் ஆனார்.

ரஜினிகாந்த் தன்னுடைய வித்தியாசமான ஸ்டைல் மூலம் முத்திரையை பதித்து எல்லோருடைய வரவேற்பையும் பெற்றார். அவருடைய "இது எப்படி இருக்கு" வசனம் புகழ் பெற்று இன்றும் அவரின் அடையாளமாக அறியப்படுகிறது.

கமலஹாசன் பல்வேறு காட்சிகளில் தன நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.

உதவி இயக்குனரான பாக்யராஜ் "மஞ்ச குளிச்சு" பாடலில் தலை காட்டுகிறார்.

மொத்தத்தில் பதினாறு வயதினிலே படம் தமிழ் திரை உலகில் ஒரு மைல் கல்.

மீண்டும் இன்னொரு திரைப் பட விமர்சனத்தோடு சந்திப்போம்.