Tuesday, September 26, 2017

மீனாவுடன் மிக்சர் 31 - {நவராத்திரி நினைவலைகள் - 2017}

வழக்கம் போல ரிச்மண்டில் இந்த வருஷமும் கொலு சீசன் களை கட்ட ஆரம்பித்து இன்னியோட நாள் ஆறு.  வாசல்  கதவை திறந்து வெளியே வந்தாலே  தாளித்த சுண்டல் வாசனைல ஊரே மணக்குது.  அடுத்தடுத்து வடையும், கேசரியும், சு ண்டலும், சர்க்கரைப் பொங்கலுமா வீட்டுல மணத்ததுல எங்க வீட்டு நாய்கள் திடீர் உண்ணாவிரதம். இந்த அச்சுபிச்சு pedigree உணவு அவங்களுக்கு இனி வேண்டாமாம். எங்களுக்கு மட்டும் இதென்ன நாய் பொழப்புன்னு அவங்க வருத்தப் படறதுலயும் ஒரு நியாயம் இருப்பதை மறுக்க முடியலை.

எங்க ஊரை பத்தி இங்க ஒண்ணு சொல்லியே ஆகணும்.  பத்து வருஷத்துக்கு முன்னாடி,  கல்யாண வீட்டு வாசல்ல சும்மா பாவ்லா காட்டி தெளிப்பாங்களே, அந்த பன்னீர் துளி மாதிரி இங்கொண்ணு அங்கொண்ணுன்னு  தான் இருந்தது இந்திய குடும்பங்கள்.   தெரியாம ரெண்டு கூமான்  (Kumon) சென்டர் திறந்தாலும் திறந்தாங்க, அவ்வளவு தான் அமெரிக்காவுல கூமான் இல்லாத ஊரிலிருந்து நம்ம மக்கள் எல்லோரும் அடிச்சு பிடிச்சு ரிச்மண்டுக்கு ஓடி வந்துட்டாங்க.  களை எடுக்காம விட்டத் தோட்டத்துல கட்டுக்கடங்காம வளருமே காட்டுச்செடி அந்த மாதிரி இந்திய மக்கள் தொகை இன்னிக்கு ரிச்மண்டில் பெருகிட்டு வருது. 

ஊர்ல எந்த வீடு விலைக்கு வந்தாலும் அத வாங்கறது ஒரு இந்தியக் குடும்பம் தான்னு bet வைக்கலாம் வரியான்னு கூப்பிட்டா  ஒரு சின்னக் குழந்தை கூட அந்த ஆட்டத்துக்கு வர மாட்டேங்குது. இவ்வளவு புத்திசாலியா நானும் சின்ன வயசுல இருந்திருக்கேனாம்மான்னு  எங்க அம்மா கிட்ட கேட்டா  சந்தோஷத்துல (?) எங்க அம்மாவுக்கு தொண்டை அடைச்சு பேச்சே வர மாட்டேங்குது. 

இந்த பெருகி வரும் இந்திய குடும்பங்களை பார்த்து யார் அதிகமா சந்தோஷப்படறாங்கன்னா அது அமெரிக்க வியாபாரிகள் தான்.   நவராத்திரி சீசன்ல தூக்கி விட்டெரியும் உணவு தட்டுக்கள் மற்றும் டம்பளர்களை   வண்டியோட அள்ளிக்கொண்டு போகும் இந்திய பெண்களை குலதெய்வமாவே  இவங்க கொண்டாடறாங்கன்னு  ஊர்ல பேசிக்கறாங்க. .  நாயகன் ஸ்டைல்ல சொல்லணும்னா நாலு பேருக்கு உதவும்னா இன்னும் நாலு தட்டை எடுத்து போட்டு சாப்பிட்டு விட்டெறிய  ஒரு இந்தியன் என்னைக்குமே தயங்க மாட்டான். புல்லரிக்க வைக்கக்கூடிய புள்ளி விவரங்களில் இதுவும் ஒன்று.

ஆனா உதவிக்கரம் நீட்டறதுல துளி கூட பாரபட்சம் பார்க்காதவங்க நம்ப இந்திய பெண்கள்.   Racial  discrimination அப்படிங்கற வார்த்தையை இந்த ஊர்ல அடிக்கடி கேட்டு காது புளிச்சு போய் தான் அவங்க இப்படி ஆயிட்டாங்க அப்படிங்கறது என்னோட அனுமானம்.  இந்திய வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் எங்க அருள் உண்டு அப்படீன்னு இந்த மாசம் இந்திய  மளிகை கடைல உள்ள பயத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, பச்சை பயறு, வேர்க்கடலை போன்ற தானியங்களை ஒரு பாக்கெட் விடாம வழிச்செடுத்து  வாங்கி வந்து சுண்டலுக்கு ஊற வச்சிட்டாங்க ன்னு நினைக்கறச்ச பெருமை படாம இருக்க முடியலை.

அதென்னவோ இந்த வருஷம் சொல்லி வெச்சா மாதிரி பெண்கள் எல்லோரும்  ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலர் புடவைகளை தான் விரும்பி இந்த சீசனுக்கு உடுத்தியிருக்காங்க.  புடவைக் கலர்ல தான் மாற்றம் இருக்கே தவிர அவங்க போடும் அகல ஜன்னல் போட்ட  காத்தோட்டமான ஜாக்கெட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லைங்கறது விசேஷம்.

ஒரு பெண் எவ்வளவு வீட்டு கொலுவுக்கு போகிறாள் அப்படிங்கறதை அவ சுண்டல் கலெக்ஷனுக்காக எடுத்துப் போகும் பையை வைத்தே சுலபமா சொல்லிடலாம்.  IIT காலேஜ் பசங்க தூக்கிட்டு போற ஜோல்னா பை மாதிரி இருந்தா, அவள்  ஒரு ஐந்தாறு வீட்டுக்கு கிளம்பி இருக்கிறாள்னு அர்த்தம்.  நம்மூர் வண்ணாத்தி சைக்கிளுக்கு பின்னாடி கட்டியிருக்கும்  சலவை துணி பை  சைசில் இருந்தால் அவளுக்கு ஒரு பத்து வீட்டில் அழைப்பு இருக்குன்னு அர்த்தம்.  கோயம்பேடு காய்கறி சந்தைல வந்திறங்கும் கோணிப் பை ரேஞ்சுல பார்த்தீங்கன்னா சர்வ நிச்சயமா அவள் அன்று  நடுராத்திரி வரைக்கும் தெருத்தெருவா சுண்டலுக்கு சுத்தப் போகிறாள் அப்படீங்கறதுல சந்தேகம் இல்லை. 

போன வருஷம் நவராத்திரி blog ல நான் புலம்பினதை ஞாபகம் வச்சிருந்த சில நல்ல மனங்கள் சுண்டலோட இந்த முறை பக்கோடா, உருளைக்கிழங்கு போண்டா மற்றும் அருமையான டீ போட்டு கொடுத்து என் மனசை குளிர வச்சிட்டாங்க.  தெருத்தெருவா சுத்தறதுக்கும் ஒரு தெம்பு வேண்டாமா? நன்றி தோழிகளே. 

இந்த கணவர்கள் சங்கம் தான் என் குரலுக்கு இன்னும் செவி சாய்க்க மாட்டேங்கறாங்க.  மனைவிகள் கஷ்டப்பட்டு வீடு வீடா போய் வாங்கி வர்ற சுண்டல்ல சரி பாதி பங்குக்கு மட்டும் கேக்காமயே வர்றவங்க கொலு அழைப்புக்களை வரிசைப்படுத்தி கொடுக்க ஒரு app  எழுதிக் கொடுக்க கூடாதா?  தெரியாம தான் கேக்கறேன்.  இந்த உலகத்துல கருணை கபடி ஆட போயிருக்கா?  இல்ல நியாயம் தான் கிரிக்கெட் விளையாட போயிருக்கா?  

காலம் இந்தக் கேள்விக்கு நல்ல ஒரு பதிலை சொல்லும்னு நம்பிக்கையோட  எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன். 

-மீனா சங்கரன் 

Monday, September 25, 2017

கொடுந்தமிழ். ​அப்படின்னா?

​செந்தமிழ் தெரியும், பைந்தமிழ் கூட தெரியும், அதென்ன கொடுந்தமிழ்?
கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் சரியான பொருளில் பயன்படுத்தப்பட்டிருந்ததா எனப் பார்த்து விடுவோம்.

Spoiler: அது எதிர்மறைச் (negative) சொல் அல்ல.

இலக்கண விதிகள் வழுவாமல் சொற்கள் அப்படியே இருத்தல் நலமே. ஆனால் மக்கள் பல திசைகளுக்கு பணி நிமித்தமாகவும் வேறு பல காரணங்களுக்காகவும் போய் வரும்போது அந்தந்த வட்டாரங்களின் தன்மைக்கேற்ப தமிழையும் வளைத்து பேசுவர். அது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தவிர்க்கத் தேவை இல்லாததும் கூட.

மேலே  உள்ள பத்தியில் 2 விசைச் சொற்கள் (keywords) உள்ளன. திசை, வளைத்து ஆகியன. வேண்டுமென்றேதான் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. எதற்காக என பார்ப்போம்.

தமிழ் பேசப்பட்ட நிலம் செந்தமிழ்-நிலம் (Mainland). அதைச் சுற்றி அமைந்த மற்ற நாடுகளில் இருந்து வந்து போகும் மக்கள் மூலமாக தமிழுக்குள் வரும் சொற்களை திசைச்சொற்கள் என்கிறார் தொல்காப்பியர். அதாவது, ஒரு பொருளைக் குறிக்க வழக்கமான சொல்லைத் தவிர்த்து வேறு புதிய ஒரு சொல்லை பயன்படுத்துவது. எகா: சிறுகுளம் என்பதை கேணி என்று ஆற்காடு பக்கம் சொல்வது.

இப்படி மொழியை வளைத்து, ஒரு பொருளை வேறு ஒரு திசையில் இருந்து வந்த சொல்லின் வழியாக குறிக்கும் போது அந்தச் சொல் "திசைச்சொல்".

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொ.கா)


ஆச்சா..
இப்போ, ஏன் "கொடுந்தமிழ்"?
கொடு என்றால் வளைதல்.

எகா:
கொடுவாள் (வளைந்த வாள்), கொடுங்கோல் (வளைந்த அரசு - அறத்தில் இருந்து வளைந்த அரசு), கொடுக்காப்புளி, கொடுக்கு..

அதன்படியே, வளைந்த தமிழ் = கொடுந்தமிழ்.

​நன்னூல் வரை திசைச்சொல் என்றே சொல்லி வந்திருக்கிறார்கள். நன்னூலுக்கு உரை எழுதும்போது தான் "வளைந்திருக்கிறது".​

​இப்போது அதையே நாம் வட்டார வழக்கு என்று சொல்கிறோம்.​

​வீட்டுப்பாடம்:
உங்களுக்கு தெரிந்த கொடுந்தமிழ்/திசைச்சொல்/வட்டார வழக்குகளை குறிப்பிடுங்கள்.​

Monday, September 18, 2017

​தமிழின் மிக நீண்ட சொல்


ஆங்கிலத்தில் மிகப் பெரிய (நீண்ட) சொல் எது எனக் கேட்டால் நம்மில் சிலர் கூகுளை கேட்காமலேகூட சொன்னாலும் சொல்லி விடுவோம்.

தமிழில்?

தமிழின் எளிமை அப்படி நீண்ட தனிச் சொற்களை ஊக்குவிப்பதில்லை. எது "சொல்" என்பதற்கே நாம் தெளிவான வரைமுறை வைத்திருக்கிறோம்.
பெயர், வினை. அவ்வளவுதான் வகைகள்.
இடைச்சொல், உரிச்சொல் எல்லாம் பெயர், வினைச் சொற்களைச் சார்ந்தது.

இதிலும்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொ.கா) 
என்ற கட்டுப்பாடு வேறு ​உண்டு.

இப்படி அமையும் சொற்களைப் பிரிக்க (பகுக்க) முடிந்தால் அவை தனிச் சொற்கள் அல்ல. கூட்டுச் சொற்கள்.

அதன் Grammatical terms: பகுபதம், பகாபதம்.
பகும் (பிரியும்) சொற்கள் (பதம்) - பகுபதம்.
பகாச் சொற்கள் - பகாபதம்.

எகா:
படித்தான் = படி + ஆன். இது பகுபதம் (பிரியும் சொல்).
படி என்பதை மேலும் பகுக்க முடியாது​. எனவே பகாபதம். (பிரியாச் சொல்)

ஆச்சா?
இப்போ வருது நன்னூல் உதவி:
பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் 
எழுத்தீ றாகத் தொடரு மென்ப

அதன்படி உயர் அளவாக,
பகாபதம்: 7 எழுத்துக்கள்.
பகுபதம் : 9 எழுத்துக்கள்.

ஆக, technically உயர்ந்த அளவாக 9 எழுத்துக்களே இந்தச் சொல்லிலும் வர முடியும். இதைக் காட்டிலும் நீண்ட சொற்கள் எல்லாம் பல சொற்களை நாமாக சேர்த்து எழுதியதாகத்தான் இருக்கும் என்கிறார்கள். மறுப்போரும் உண்டு. ஆனால் நன்னூல் சொல்வது மேலே குறிப்பிட்டது போலத்தான்.

எதற்காக இவ்வளவு கட்டுப்பாடுகள்?
புதிய சொற்களை ஆக்கும் போது அவை பயனுள்ளதாக மட்டுமின்றி எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே.

Wednesday, September 06, 2017

இது உனக்கான பயணம்...!!!

இது உனக்கான பயணம்...!!!

பயணம் தொடர நேரம் வந்தாயிற்று
எத்தனை நேரம்  என் கைகளுக்குள் 
உனது கைகளைப் பொதித்து 
கொள்வது!!

சத்தியமாக உனக்கான பிடி
இங்கு இல்லை அதோ
அங்குள்ளது!
அதைப் பிடித்துக்கொள்வாயாக...!!

நான் உன் ஒரு கையைப் 
பிடித்து இருந்தாலும் 
நீ உன் இன்னொரு கையால் இந்த 
உலகத்தின் கைகளை பற்று!!

உனக்கான நேரத்தில் 
உன் கால்கள் உலகத்தின் மடியில் பட்ட  
மறுநொடி உனக்கான தேடல் ஆரம்பிக்கும்...
உனக்கான பாதுகாப்பை  
நீயே விரைந்து
உறுதி செய்துகொள்....!!

உன் கரம் பிடிக்க நாங்கள் இருந்தாலும் 
சுற்றி உன்னை அறியா பலர் 
உன்பால் அறிந்து அன்பால் உன்னை
மறிக்க கூடும் ...
நீ உன் தேவையறிந்து
இருகப்பற்று 
உனக்கான வாய்ப்பை !!

பல இன்ப துன்பங்கள் கடக்க 
இருக்கும் நீ...
எந்த நிலையிலும் உனை நீயே 
நலம் காக்க கற்றுக்கொள்!!

இவ்வுலகு உனக்கு எதை தர காத்திருக்கிறதோ...
அதை துணிவுடன் எதிர்கொள்!!

அச்சம் உன்னை பின்னுக்கு தள்ளும் 
தைரியம் துணிவுடன் உன்னை 
வெற்றி மேடை ஏற்றும் ...!!

அரசே கூட உனக்கெதிராக சட்டம் 
அமைக்க கூடும்....
அநீ(ட்)திக்கு எதிராக போராடு 
பதில் வரும் வரை...!!

பூக்கள் தேவைப்படாது ஆனால் 
சாட்டை தேவைப்படும்
சில நேரத்தில்...!!

வா உன்னை வரவேற்க 
காத்திருக்கிறது 
சவாலான பயணம்...!!!
  • ப்ரியன்