இப்படி நடந்துகிட்டா எல்லோருக்கும் நல்லது எனும் பொது விதிகள் சில:
1. உங்கள் தொலைபேசி அழைப்பை அடுத்த முனையில் ஏற்காத போது, இரு முறைக்கு மேல் அடுத்தடுத்து அழைக்காதீர்கள். அவர்கள் ஏதேனும் அவசர வேலையில் இருக்கலாம். கலவரப்படுத்தாதீர்.
2. உணவைத் தவறுதலாக எவரும் சிந்தி விட்டால் முறைக்காதீர்கள். தவறுகள் இயல்பு. மேசை / முள் கரண்டியைப் பயன் படுத்தத் தடுமாறினால் ஏளனப் பார்வை பார்க்காதீர்கள். நாம மட்டும் கற்றுக் கொண்டா பிறந்தோம்?
3. அடக்க முடியாமல் தும்மல், இருமல், ஏப்பம் (மேலேயோ/கீழேயோ) எவருக்கும் வந்து விட்டால் லார்டு லபக்கு தாசாட்டம் சிரிக்கக் கூடாது. அடக்க முடியாம தடுமாறிட்டாங்க, எவருக்கும் நடக்கக்கூடிய இயற்கையான நிகழ்வு -ன்னு கண்டும் காணது விட்டு விடுங்கள்.
4. பொதுக் கழிப்பிடங்களில் ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அறைக்கு பக்கத்து அறையை முடிந்த வரை தவிருங்கள். இருவருக்கும் நிம்மதி கெடாது.
5. வாங்கிய கடனை, கொடுத்தவர் கேட்கும் முன் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அது மிகச் சிறிய தொகையாகவோ, பேனா, குடை போன்ற எளிய பொருளாகவோ இருந்தாலும் சரி. உங்கள் நாணயம் அந்தக் கடனை, பொருளை விட மதிப்பானது. அதற்கு இழப்பு வராமல் பார்த்துக் கொள்ளணும்.
6. ஏதாவது கொண்டாட்டத்துக்காக நண்பர் சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் போது, "மாட்னியா" -ன்னு அந்த உணவு விடுதியிலேயே விலை உயர்ந்ததை வாங்காதீர்கள். முடிந்தால் நண்பரையே உங்களுக்கும் சேர்த்துத் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். அவரே நல்லதா வாங்கித் தருவார்.
7. நெளிய வைக்கும் கேள்விகளை கேட்கவே கேட்காதீர். "நீ இன்னும் மணம் முடிக்கலியா", "இன்னும் குழந்தை வெச்சுக்கலையா", "ஏன் இன்னும் வீடு வாங்காம இருக்க".
உண்மையாச் சொல்லுங்க, இந்தக் கேள்வியெல்லாம் தேவையா? உங்களைக் கண்டாலே அடுத்த முறை ஓடிடமாட்டார் உங்க நண்பர்?
8. உங்களுக்குப் பின் வர்றவங்க மூஞ்சில அடிக்காம கதவை அவர்களுக்காக திறந்து பிடியுங்கள். அவர்கள் முகம் தப்பிப்பது மட்டுமல்ல புன்னகையும் கூட வரும்.
9. சேர்ந்து போகும் வாடகை வண்டிக்கு நண்பர் வாடகை கொடுத்தால் மறுமுறை சேர்ந்து போகும் போது மறக்காமல் நீங்கள் வாடகை கொடுங்கள்.
10. மற்றவர்களின் அரசியல் பார்வை/ நிலைப்பாட்டையும் மதியுங்கள். தங்கள் அளவில் எல்லோரும் சரியே.
11. மிகத் தேவை என்றால் ஒழிய, இரவில் நேரம் கழித்து யாருக்கும் தொலைபேசி அழைப்பு வேண்டாம்.
12. குறுக்கே பேசாதீர். சொல்லி முடிக்கட்டும்.
13. கிண்டல் செய்வது எல்லோர் மகிழ்ச்சிக்காகவும்தான். நம் கிண்டல் பேச்சு எவரையும் காயப்படுத்தக்கூடாது.
14. உதவி செய்தவர்களுக்கு, உடனே நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
15. பாராட்டும் போது, பலர் முன்னால் தாராளமாக பாராட்டுங்கள். குறைகளைத் தனிமையில் சுட்டிக் காட்டுங்கள்.
16. உடல் எடையைப் பற்றி கேட்கவே கேட்காதீர்கள். எடைக் குறைப்பு பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்றால் அவர்களாகவே கேட்பார்கள்.
17. நீண்ட தூரப் பயணம் புறப்படும் போது குளித்து, பல்துலக்கி பின்னர் கிளம்புங்கள். பக்கத்துல உட்காருபவர் நண்பர் ஆகலைன்னாலும் எதிரி ஆகாமல் இருப்பார்.
18. தொலைபேசியில இருக்கும் ஒரு புகைப்படத்தை உங்களிடம் காண்பித்தால் அதை மட்டும் பாருங்கள். முன், பின் நகர்த்தி அடுத்த படத்தை பார்த்து நீங்களோ / நண்பரோ "பகீர்" ஆகக் கூடாதுல்ல?
19. உடன் பணிபுரிபவர், மருத்துவரை பார்க்கப் போறேன் -ன்னு சொன்னா, "ஏதாவது உதவி வேணும்னா சொல்லு" அப்படிங்கறதோட நிறுத்திக்குங்க. "என்னாச்சு, எதுக்கு, எந்த மருத்துவமனைக்கு போற, எங்க பாட்டிக்கு ஒரு நாளு இப்படித்தான் " -ன்னு எதுவும் தேவையில்லை. தேவைன்னா அவரே சொல்வார்/கேட்பார்.
20. எளிய மனிதர்களிடமும் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். அலுவலகக் காவலாளிக்கு புன்னகையோட பதில் வணக்கம் வெக்கறதுக்காக சம்பள உயர்வு கிடைக்காதுதான்; ஆனா நம்முடைய நாளை இன்னும் கொஞ்சம் நல்ல மனநிலையோட துவக்கலாம், முடிக்கலாம்.
21. நம்மிடம், நம் கண்களைப் பார்த்து ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது நாம் கைபேசியை நோண்டுவதற்குப் பெயர்: திமிர், ஆணவம், ஏளனம், லூசுத்தனம், அல்லது இது எல்லாம் சேர்த்து.
22. உங்களிடம் வந்து கேட்காதவரை அறிவுரை சொல்லாதீர்.
23. Headphoneல பாட்டு கேட்டுகிட்டு இருக்கறவங்கள உலுப்பி கேள்வி கேட்காதீர். ஒன்னு, பதில் வராது அல்லது சரியான பதில் வராது.
24. நீண்ட நாள் கழிச்சு சந்திக்கும் போது படால்ன்னு வயசு, சம்பளம் போன்றவற்றை கேட்காதீர்.
25. தொலைபேசி உரையாடல் என்பது இருவருக்கு இடையேதான். தொலைபேசி இல்லாமலே பக்கத்து ஊர்க்காரருக்கு கேட்பது போல பெருங் குரல் பேச்சு வேண்டாம்.
26. ஏதாவது சாப்பிடக் கொடுக்கும் போது வேண்டாம் எனில் முதல்லயே சொல்லிடுங்க. முகர்ந்து பார்த்துட்டோ, நாக்குல கொஞ்சம் வெச்சுப் பார்த்துட்டோ வேண்டாம் என்பது அவமானப்படுத்துவது போல.
27. தங்கள் உடலில் உள்ள தொந்தரவைப் பற்றி பேசினால் உடனே, "எனக்கும் இது மாதிரி தான்" என உங்க கதையை ஆரம்பிக்காதீர்கள்.
28. உடலில் மாற்றங்கள் (முடி உதிர்வு, உடல் எடை கூடி/குறைந்து, முகப்பரு போல மாற்றங்கள்) ஏற்பட்ட ஒருவரை பார்க்கும் போது அதைப் பற்றி பேசாதீர்கள். என்ன ஆகி இருக்குன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும், நீங்க விளக்க வேண்டிய தேவை இருக்காது. அது பற்றி உங்களிடம் பேசணும்னா அவர்களே பேசுவார்கள், அதுவரை அதைப் பற்றி பேசாதீர்.
29. மற்றவர் குழந்தையை முத்தமிடாதீர்.
30. வாட்சப், முகநூல், கீச்சு என எங்கே வாய்ப்பு கிடைத்தாலும் சண்டைக்கு போகாதீர்.
~~~~~~~~~~
* இங்கு "அவர்" என்பது ஆண், பெண் என இரு பாலருக்கும் பொருந்தும்.
* இது கைபேசியில் ஒரு ஆங்கிலச் செய்தியாக வந்தது. நண்பன் கேட்டுக் கொண்டதற்காக, நடுநடுவே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு மொழிபெயர்த்தது.
~~~~~~~~~~~