ஒருவனுக்கு சாப்பிட மீனைக் கொடுத்தால் அவன் அன்று மட்டும்தான் சாப்பிடுவான். அதைவிட அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுதும் சாப்பிடுவான் என்கிறது ஒரு சீனப்(?) பழமொழி. அந்த பழமொழியைச் செயல்படுத்தும் இரண்டு பொதுப்பணி நிறுவனங்களைப் பற்றி பார்க்கலாம்.
முதலாவது கிவா! கிவா'வின் திட்டம் மிக எளிது. சுயமாகத் தொழில் செய்ய விரும்பும் ஏழைமக்களுக்கு தேவையான சிறுகடன்(மைக்ரோக்ரெடிட்) கொடுப்பது. நீங்கள் உங்கள் கணணியில் இவர்களைப் பற்றி படித்துவிட்டு இருபத்தைந்து டாலரில் இருந்து தேவைப்பட்ட அளவு கொடுக்கலாம். அவர்கள் அந்த கடனை அடைக்கும்போது நீங்கள் மீண்டும் வேறு யாருக்காவது கடன் கொடுக்கலாம் அல்லது உங்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். கிவா நிறுவனம் பல நாடுகளில் உள்ள சேவை நிறுவனங்கள், மற்றும் மைக்ரோகிரெடிட் நிறுவனங்களுடன் சேர்ந்து உங்கள் கடனை அப்படியே தேவைப்படும் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது. இன்னும் விளக்கமாக தெரிந்து கொள்ள கிவா தளத்தில் படியுங்கள். நியுயார்க் டைம்ஸின் இந்த வீடியோவும் சுவாரசியமானது.
PBS-ன் செய்தித் தொகுப்பை இங்கே பாருங்கள்.
நான் கிவாவைப் பற்றி கேள்விப்பட்டது இந்த பதிவின் மூலம்.
ஆனால என்ன ஒரு வேடிக்கை என்றால், அண்மையில் கிவாவுக்கு ஆப்ரா வின்ஃப்ரி மூலம் நல்ல விளம்பரம் கிடைத்ததால், அனைத்து கடன்களுக்கும் பண உதவி கிடைத்துவிட்டது. நீங்கள் கடன் கொடுக்க இப்போது ஆளில்லை. ஆனால் தளத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருங்கள். கிவா நிறுவனம் கடன் கொடுக்க தகுதியானவர்களை மும்முரமாக தேடி தளத்தில் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. ஒரு உபகதையாக ஆப்ராவுக்கு நன்கொடை செய்ய ஐடியா கொடுத்த ஒரு சிறுமியின் கதையையும் படியுங்கள்.
இரண்டாவது நிறுவனம் ரூம் டு ரீட். இந்த நிறுவனத்தை ஜான் வுட் ஆரம்பித்த கதை ரொம்ப சுவாரசியமானது. மைக்ரோசாஃப்டில் ஒரு நல்ல வேலையில் இருந்த ஜான் வுட் நேபாளத்தில் ஒரு முறை மலையேற்றம் செய்யப் போயிருந்தபோது ஒரு சின்னஞ்சிறு பள்ளிக்கூடத்தை பார்க்கிறார். அங்கு இருக்கும் புத்தகங்களெல்லாம் இவர் மாதிரி மலையேறும் மக்கள் போட்டுவிட்டுப்போன புத்தகங்கள், வார இதழ்கள். அவற்றுள் பல குழந்தைகளுக்கு உகந்ததுமல்ல. ஆசிரியர்களோ குழந்தைகளுக்கு படிப்பு சொல்லத் துடிக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி உதவலாம் என்று ஜான் யோசித்துக்கொண்டிருக்கும்போது அந்த தலைமை ஆசிரியர் சொன்ன ஒரு வாக்கியம் தன் வாழ்க்கையையே திசை திருப்பிவிட்டது என்கிறார் ஜான். அந்த தலைமை ஆசிரியர் சொன்னது இதுதான்:
"Perhaps, Sir, you will some day come back with books".
அந்த கதையை அவர் சொல்லியே கேளுங்கள்.
அந்த பள்ளிக்கு சில புத்தகங்கள் கொடுக்கலாம் என்று ஆரம்பித்த முயற்சி இன்று ஒரு மிகப் பெரிய பொதுச்சேவை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் நீங்களே அதன் முதல் அத்தியாயத்தைப் படித்துப் பாருங்களேன்.
ஜான் வுட்'டின் நிறுவனம் இன்று பள்ளிக்கூடங்களில் நூலகம் நிறுவுவதில் இருந்து நூதனமான முறையில் பள்ளிக்கூடங்களே கட்டிக் கொடுப்பதும் பெண் குழந்தைகளுக்கு படிக்க பண உதவி தருவதுமாக கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஒரு சிறு கிராமத்தில் உங்கள் பெயர் போட்ட நூலகம் நிறுவத் தயாரா?