Showing posts with label ஜனநாயகம். Show all posts
Showing posts with label ஜனநாயகம். Show all posts

Saturday, April 09, 2011

இந்தியாவிலும் வெடித்தது புரட்சி

(இணையத்தில் பல தளங்களில் காணப்படும்  இதை எழுதியவர் இவரோ... - ஜன்லோக்பால் பற்றி ஒரு அறிமுகத்துக்காக இங்கே.. என்னுடைய கருத்துக்கள் கீழே... சற்றுமுன்: கோரிக்கைகளை அரசு ஏற்றதால் உண்ணாவிரதம் முடித்தார் அன்னா )

இந்தியாவிலும் வெடித்தது புரட்சி – ஊழலுக்கு எதிராக – ஒன்று திரள்வோம் வாரீர் !


இந்தியாவிலும் வெடித்தது புரட்சி -  ஊழலுக்கு எதிராக -  ஒன்று திரள்வோம் வாரீர் !

ஊழலுக்கு எதிராக சமுதாய நல ஆர்வலர்
அன்னா ஹஜாரே (விவரங்கள்
கீழே)எழுப்பிய தீ  கொழுந்து விட்டு
எரிய ஆரம்பித்து விட்டது.

"முதல் சட்ட மசோதா பாராளுமன்றத்தில்
கொண்டு வரப்பட்டு 42 ஆண்டுகள் ஆகி விட்டன.
இது வரை 8 முறை மசோதாக்கள் கொண்டு
வந்தாகி விட்டது. ஆனால் ஒன்றும்
செயல்பாட்டிற்கு வரவில்லை. ஊழல் விஷம் போல்
பரவி விட்டது.எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்.

கடைசி எச்சரிக்கையாக இன்னும் ஒரு மாத
அவகாசம்  கொடுக்கிறோம்.
ஊழலுக்கு எதிரான "ஜன் லோக் பால்"மசோதாவை
மத்திய அரசாங்கம் உடனடியாக இயற்றாவிட்டால் –
ஏப்ரல் 5ஆம் தேதி முதல்,நான் சாகும் வரை
உண்ணாவிரத நோன்பு மேற்கொள்வேன்"
- என்கிற இவரது அறிவிப்பை முதலில்
துச்சமாக நினைத்த மத்திய அரசு இன்று
திகைத்து நிற்கிறது.

சட்டென்று செயலில் இறங்கி விட்டார் மனிதர் !
டில்லியில் இந்தியா கேட் அருகே நேற்று முதல்
உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஜாரே
மூட்டிய தீ  நாடெங்கும் பரபர வென்று பரவ
ஆரம்பித்து விட்டது.

காங்கிரஸ் அமைச்சர் வீரப்ப மொய்லி,
சட்டம் இயற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு.
வெளி மனிதர்கள் அந்த வேலையில்
ஈடுபடத் தேவை இல்லை என்று
கூறியதற்கு, அன்னா பொங்கி எழுந்து பதில்
கொடுத்தது பிரமாதம்.

"யாரய்யா வெளி மனிதர்?
இந்த நாட்டு மக்கள் தான் இந்த அரசாங்கத்தின்
எஜமானர்கள். நீ அவர்களின் ஊழியன்.
வேலைக்காரன். அவர்களாகப் பார்த்து தான்
உன்னை உள்ளே வைத்திருக்கிறார்கள்.
- வேலைக்காரர் எஜமானரைப்
பார்த்து வெளியே போ என்பதா ?
மக்கள் விரும்பும் வரை தான் நீ அங்கே
இருக்க முடியும். மக்கள் நினைத்தால்
உன்னை வெளி ஆள்  ஆக்க எத்தனை
நேரம் பிடிக்கும் " என்கிறார்.

இந்தியாவெங்கும் மக்கள்,குறிப்பாக இளைஞர்களும்
நடு வயதினரும், முக்கிய நகரங்களில் -
அன்னாவுக்கும், அவர் எழுப்பிய கோரிக்கைக்கும்
ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில்
இறங்க ஆரம்பித்து விட்டனர்.
ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில்,
எமெர்ஜென்சியின் போது கிளம்பிய எழுச்சியை
இப்போது தான் மீண்டும் காண முடிகிறது.
மக்களின் பங்கெடுப்போடும்,
பேராதரவோடும், ஒரு மகத்தான போர் -
ஊழலுக்கு எதிரான போர் -துவங்கியுள்ளது.
நம் மக்களை ஒருங்கிணைக்கவும்,
லஞ்ச ஊழலைஅடியோடு ஒழித்துக் கட்டவும் -
ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்கவும் -
அருமையான ஒரு வாய்ப்பு உருவாகி வருகிறது.

உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஜாரே
பேசும் பேச்சுக்கள் மக்களிடையே எழுச்சியை
உண்டு பண்ணுகின்றன.அவரது உரை
இந்தியில் இருப்பதால் தமிழ் மக்களை இன்னும்
சென்றடையவில்லை !
தமிழ் தொலைக்காட்சிகளோ வடிவேலு, குஷ்பு
பேச்சுக்களை காட்டுவதிலேயே குறியாக
இருக்கின்றன.

யார் இந்த அன்னா ஹஜாரே ?-
72 வயது காந்தீயவாதி.
மராட்டியர். மஹாராஷ்டிராவில் அற்புதமான
பல சமுதாயப் பணிகளில் ஈடுபட்டவர்.
நாம் அனைவரும் இன்று பயன்பெற்றுக்
கொண்டிருக்கும்  (RTI)
Right to Information
தகவல் பெறும் உரிமை -க்கான காரணகர்த்தா.
பத்மபூஷண் பதக்கம் பெற்ற பெருமைக்குரியவர்.

முக்கியமான விஷயம் -
இவர் ஒரு அரசியல்வாதி அல்ல.
எந்த கட்சியையும் சேர்ந்தவரும் அல்ல.
மரியாதைக்குரிய சமுதாய ஆர்வலர்.
"ஜன் லோக் பால்" என்றால் என்ன ?
(இந்தி பெயர் – பயமுறுத்துகின்றதோ ?)
ஊழலை நம் நாட்டிலிருந்து
வேரோடு அழிக்கவல்ல  அருமையான ஒரு
மாதிரி சட்ட வடிவம் தான் "ஜன் லோக் பால்"

இதன் சில முக்கிய அம்சங்கள் -
சமுதாய அக்கறையுள்ள சில முக்கிய மனிதர்கள்
(கிரண் பேடி, சந்தோஷ் ஹெக்டே,
பிரசாந்த் பூஷன் போன்ற இன்னும் சிலர் )
சேர்ந்து கலந்து ஆலோசித்து தயாரித்துள்ள -
ஊழலுக்கு எதிரான -சட்ட முன்வடிவம் இது.
மாநிலங்களிலும்(லோக் ஆயுக்தா),
மத்தியிலும்(லோக்பால்) செயல்பட தனித்தனி
அமைப்புகள்.

லஞ்சம்,ஊழல், மற்றும் குற்றச்செயல்களில்
ஈடுபடும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள்,
நீதிபதிகள், உயர்அதிகாரிகள்,(போலீசார் உட்பட) –
ஆகியோர் மீது -
பொதுமக்கள் யார் வேண்டுமானாலும்
இந்த அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம்.
புகார் கிடைத்த ஒரு வருடத்திற்குள் இது குறித்த
சகல விவரங்களும் தனிபட்ட அமைப்பால்
விசாரிக்கப்பட்டு, சாட்சியங்களும் ஆவணங்களும்
திரட்டப்படும்.

முதல் வருடம் முடிவடைவதற்குள் வழக்கு
பதிவு செய்யப்பட்டாக வேண்டும்.
அடுத்த ஒரு வருடம் முடிவதற்குள்ளாக
வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டாக
வேண்டும். எத்தகைய ஒரு வழக்கும் இரண்டு
வருடங்களுக்குள் முடிக்கக்ப்பட்டே ஆக வேண்டும் !
இதன் மூலம் – எத்தகைய உயர்ந்த பதவி வகிக்கும்
நபரானாலும் சரி – அவர் மீதான ஊழல் வழக்கு
இரண்டு வருடங்களுக்குள் முடிவடைந்து
தீர்ப்பு/தண்டனை  அளிக்கப்பட்டாக வேண்டும்.
குற்றவாளி நிச்சயமாக 2 ஆண்டுகளுக்குள்
சிறையில் தள்ளப்பட வேண்டும்.


லஞ்ச ஊழல் வழக்குகளில் – தண்டனையோடு
நின்று விடாமல் – சம்பந்தப்பட்ட தொகை முழுதும்
குற்றவாளியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட
வேண்டும்.

இந்த அமைப்புகள் எப்படி இயங்கும் என்று கேட்கலாம்.
தற்போதுள்ள, சிபிஐ, விஜிலன்ஸ் கமிஷன் போன்ற
அமைப்புகள் லோக்பாலுடன் இணைக்கப்பட்டு,
அவற்றின் அத்தனை செயல்பாடுகளும்,
சகல அதிகாரங்கள் கொண்ட
இந்த லோக்பால் அமைப்பின் கீழ் வந்து விடும்.
தேர்தல் கமிஷன் போல், சுப்ரீம் கோர்ட் போல் -
சுதந்திரமான அமைப்பாக இது இயங்கும்.

இந்த அமைப்பு எந்த விதத்திலும் மாநில அல்லது
மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,நடுநிலையான,
சமூகப் பொறுப்புள்ள, சமுதாய
நல அமைப்புகள்  -ஆகியவை சேர்ந்து
இதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த அமைப்பின் உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்தின் எந்தவிதத்
தலையீடும் இருக்கக்கூடாது.
இன்று உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்.
நாட்கள் செல்ல செல்ல மத்திய அரசுக்கு
இதன் உக்கிரம் உரைக்க ஆரம்பிக்கும்.

இந்த "தீ" – ஊழலை ஒழிக்க உண்டாக்கப்பட்டிருக்கும் – இந்த தீ பரவட்டும். வேகமாகப் பரவட்டும் .

----------------------------------------------------------------------------------------------------
மேலே இருப்பது மின்னஞ்சல் மூலமாக எனக்கு வந்தது.  நிறைய வலைப்பதிவுகளில் இதைப் பார்க்கலாம். இதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.

முதலாக - இந்த ஜன்லோக்பால் உறுப்பினர்களை யார் தேர்ந்தெடுப்பது? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரி - சமுதாய நல அமைப்புகள்? நாளையே நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அப்படி ஒரு போர்ட் மாட்டிக் கொள்ளாதா?  மறுபடியும் திருடனே திருடனை நியமிக்கும் கதை நடக்கும்...

ஒரு ஆண்டுக்குள் விசாரணை ஆரம்பித்து, அடுத்த ஆண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். நியாயமாக ஒழுங்காக நடக்க வேண்டிய ஒரு விஷயத்திற்கு சட்டம் கொண்டு வரவேண்டிய நிலையில் இருக்கிறது இந்தியா!

இருக்கும் அரசியல்வாதிகளை கொஞ்ச்ச்ச்ச்ச்ச்ச்சசசம்ம்ம்ம்  திருத்த எனக்கு இரண்டு யோசனைகள் தோன்றுகின்றன.  ஒன்று - பதவி உச்சவரம்பு.  அமெரிக்காவில் ஜனாதிபதி பதவி இரண்டு முறை மட்டும்தான் வகிக்கலாம்.  மாநில கவர்னர் பதவியும் இரண்டு முறை மட்டும்தான் என்று நினைக்கிறேன். அப்படி செய்தால், என் வாழ்நாள் முழுவதும் ஒருவர் முதல்வராக இருப்பது நடக்காது. அவ்வளவு புத்திசாலிகள் நிறைந்த மேற்கு வங்காளத்திலும், தமிழகத்திலும் ஜோதிபாசுவையும், கலைஞரையும் தவிர ஆளுவதற்கு யாருக்கும் தெரியாதா? இது எந்த அரசியல்வாதிக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அன்பழகனுக்கும்,  பன்னீர் செல்வத்திற்கும் மிகவும் பிடிக்கும் :-)

இரண்டாவது - அந்தந்த தொகுதியில் வசிக்கும் மக்கள்தான் அந்தந்த தொகுதியில் போட்டியிட வேண்டும். சிக்மகளூருக்கும் இந்திராவுக்கும், சீரங்கத்துக்கும் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் ரிஷிவந்தியத்துக்கும்  என்ன சம்மந்தம்? அந்தந்த ஊர் மக்களுக்குத்தானே அந்தந்த ஊர்களுக்கான தொகுதியில் நிற்க உரிமை இருக்கவேண்டும். அதுதானே ஜனநாயகத்தின் அடிப்படை?  அரசாங்கத்தில் மக்களின் பிரதிநிதி அந்தந்த மக்களிடையே இருந்துதானே வரவேண்டும்?? பண்ருட்டியில் பாட்னாவில் வாழும் ஒருவர் தேர்தலுக்கு நின்றால் கேலிக்கூத்தாகத்தானே இருக்கும்.

அப்படி செய்தால் ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் மற்றொரு ஜனநாயக மோசடியையும் தவிர்க்கலாம். எப்படியும் கொள்ளையடிக்கிறார்கள்.  கொள்ளையில் பங்கு அந்தந்த தொகுதியைச் சேர்ந்த கொள்ளையருக்கு போவதுதானே உண்மையான ஜனநாயகக் கொள்ளை?

ஆனால் இந்த இரண்டும் சட்டங்களாகும் வாய்ப்பு?  எந்தப் பூனை அதுவே தானாக மணியைக் கட்டிக் கொள்ளும்??

மத்திய அரசு அன்னா ஹஸாரேவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் அவர் உண்ணாவிரதத்தை முடித்தார் என்று சற்றுமுன் வந்த செய்திகள் கூறுகின்றன. பார்ப்போம் என்ன ஆகிறதென்று.----------------------------------------