Showing posts with label ராமகிருஷ்ணர். Show all posts
Showing posts with label ராமகிருஷ்ணர். Show all posts

Sunday, April 22, 2012

கொக்கு என்று நினைத்தீரோ கொங்கனரே ?


 இந்த கதை மிகப் பழைய கதைதான், கர்ண பரம்பரைக் கதை என்று சொல்வார்கள். அதாவது எந்த குறிப்பிட்ட இலக்கியத்திலும் இல்லாத கதை வாய்வழியாக பல தலைமுறைக் காலமாக சாதாரண மக்களிடையே வழங்கி வரும் கதை

 ஒரு துறவி காட்டின் அருகில் ஓடும் நதிக்கரையில் நீண்ட நேரம் தவ நிலையில் இருந்தார், சில மணி நேரம் கழித்து தவ நிலையிலிருந்து எழுந்தார். அந்த துறவி நல்ல உயரம், கம்பீரமான உருவம், தலையில் அடர்த்தியான முடி,முகத்தில் தவ யோகிகளுக்கு உரிய நீண்ட தாடி, காவி உடை, உலக வாழ்க்கையின் ஆசாபாசங்களிலிருந்து விடுபட்டதை அறிவிப்பது போன்ற பார்வை, அகன்ற கண்கள்.

நிஷ்டையிலிருந்து எழுந்த கொங்கன முனிவர் அருகே உள்ள நதியில் நீராடினார்தன் உடைகளை  உலரவைத்துவிட்டு நதிக் கரையில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நல்ல பசி, குளித்த பிறகு பசி மேலும் அதிகமானது. உடையை அணிந்து கொண்டு அருகில் உள்ள கிராமத்திற்கு போய் உணவு  தேடலாம் என்று நினைத்தார்.

 அந்த நேரம்ஒரு கொக்கு ஒரு மீனை கொத்தி தன் அலகில்வைத்துக் கொண்டிருந்தது.  அது  பறக்கத் தொடங்கியதும் ஏற்பட்ட சலசலப்பை கேட்ட துறவி திரும்பிப் பார்த்தார். அப்பொழுது அவருடைய தலைக்கு மேல் பறந்த கொக்கு  இட்ட  எச்சம் துறவியின் தோளில் விழுந்தது. கடுமையான கோபம் கொண்ட முனிவர் மேலேபறந்துகொண்டிருந்தகொக்கை தன் அகன்ற கண்களால் முறைத்துப் பார்த்தார்.

 திடீரென்று அந்த கொக்கு தீப்பிழம்பாக மாறி கருகி சாம்பலாகி ஓடும் நதியில் விழுந்தது.

முறைத்துப் பார்த்த மாத்திரத்தில் தன் கோபத்துக்கு உள்ளான கொக்கு எரிந்து சாம்பலாகிப் போனதைக் கண்ட முனிவருக்கு ஒரே ஆச்சரியம். என்னே என் தவ வலிமை என்று எண்ணிக்கொண்டு தனக்குள் பரவசப் பட்டார்.

 கொக்கு இட்ட எச்சத்தை துடைத்துவிட்டு திரும்பவும் நதியில்
நீராடினார். உலர்ந்தகாவி உடையை உடுத்திக்கொண்டு அருகில் இருந்த கிராமத்தை  நோக்கி நடந்தார் நடக்கும்போது முனிவருக்கு ஒரே சிந்தனை. தன்னுடைய  விடாமுயற்சியாலும் தொடர்ந்து வாழ்ந்த தவ வாழ்க்கையாலும் வளர்ந்துவிட்ட தன்  தவ வலிமையைப் பற்றி பெருமிதமான எண்ணத்துடன் நடந்தார்புராண காலத்து முனிவர்கள் வாய் விட்டு சாபம் கொடுத்தால்தான் கேடு நேரும் நான் கோபத்தில் முறைத்துப் பார்த்தாலே கேடு நேரும் என்று நினைத்தபோது முனிவருக்கு  உலகத்தையேவென்றுவிட்ட பெருமை.

 இப்படி பலவகையான சிந்தனையுடன் ஊரை அடைந்த துறவி ஒரு வீட்டின் முன்னால் நின்று  "அம்மா துறவி வந்திருக்கிறேன், ஏதாவது உணவு இருந்தால்கொடுங்கள்”, என்று குரல் கொடுத்தார்.

 பதில் இல்லை

 திரும்பவும்  "அம்மா  தாயே “, என்றார். பதில் இல்லை

அம்மா தாயே ".

 இப்பொழுதும் பதில் இல்லை

 சில  நேரத்துக்கு பிறகு, கதவை திறந்து கொண்டு தலையைக் காட்டிய ஒரு பெண்சற்று பொறுத்து இருங்கள் "என்று கூறிவிட்டு உள்ளே போனாள்.
 உள்ளே சென்ற பெண் உணவு அருந்திக் கொண்டிருந்த நோய்வாய்ப் பட்ட தன் முதிய கணவனை கை பிடித்துஅழைத்து வந்தாள். கை, கால்களை கழுவ அவருக்கு உதவி செய்துவிட்டு திரும்பவும் உள்ளே சென்றாள்.
 ஒரு பாத்திரத்தில் உணவுடன் வாசல் பக்கம் வந்தாள் பசியுடன் இருக்கும் அந்த துறவிக்கு நல்ல கோபம். காலதாமதமாக வந்த அந்த பெண்ணைப் முறைத்துப் பார்த்தார்.  அதே கோபம் நிறைந்த  பார்வை. கொக்கைப் பார்த்த அதே பார்வை

தன்னை முறைத்துப் பார்த்த துறவியின் கோபத்தைப் புரிந்து கொண்ட அந்த பெண் “கொக்கு என்று நினைத்தீரோ, கொங்கனரே”, என்றாள்.

 துறவிக்கு ஒரே அதிர்ச்சி.திகைத்துப் போய் ஒரு அடி பின்னால் நகர்ந்தார். அந்த பெண் கொண்டு வந்த உணவைவாங்கக் கூட தயங்கினார். அவருக்கு ஒரே குழப்பம்.

சற்று நேரத்துக்கு முன் காட்டில்,நதிக் கரையில் நடந்த சம்பவம் வீட்டில் இருக்கும் இந்த பெண்ணுக்கு எப்படி தெரிய வந்தது? இவளுக்கு ஞான திருஷ்டியா? தயக்கத்துடன் உணவை வங்கிக் கொண்ட துறவிக்கு இப்பொழுது பசி போய் விட்டது.

உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க வாயைத் திறந்தார்அதற்கு முன் அந்த பெண் கேட்டாள் எனக்கு எப்படி தெரியும் என்று  கேட்கிறீர்களா ?என்றாள்.

 நான் கேட்க  நினைத்ததைக் கூட சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறாள். இந்த பெண் யாராக இருக்க முடியும் ? உள்ளே இருக்கும் இவளுடைய கணவர் முனிவரா? முக்காலமும் அறிந்த ஞானிகளாக  இருப்பர்களோ? என்றெல்லாம் நினைத்து குழம்பிப் போனார். தணிந்த குரலில் ஆமாம் என்று முணுமுணுத்துக் கொண்டு தலையை ஆட்டினர்.

 அந்த பெண் சொன்னாள்  உள்ளே உடல் நலமில்லாத என் கணவருக்கு உதவி செய்ய வேண்டியிருப்பதால்உங்களோடு பேச நேரமில்லை. நான்காவது தெருவில் ராமன் இருக்கிறான், அவனிடத்தில் போய் கேளுங்கள், அவன் சொல்வான் என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

 பசிக் களைப்பும் எதிர்பாராத விதமாக ஒரு குடும்பப் பெண் ஞானதிருஷ்டியோடு  பேசுவதும் கேள்வி கேட்பதும் அவரை சோர்வடையச் செய்தது. ஊர் சிறியதுதான். நான்காவது தெரு எங்கே இருக்கிறது எப்படி போக வேண்டும் என்று விசாரித்துக் கொண்டு போகலாம் என்று  புறப்பட்டார். அவருக்கு இப்பொழுது பசி இல்லை. வருந்திப் பெற்ற தன்னுடைய தவ வலிமைக்கு ஏதோ சவால்வந்து விட்ட தாக நினைத்தார்.

 ராமனுடைய வீட்டைதேடிபோய் கண்டுபிடித்துவிட்டார். ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் ஒரு குடிசை தான் ராமனுடைய வீடு. வீட்டை நெருங்கிப் போனதும் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடு ஒரு கசாப்புக் கடை. விற்பனை செய்து முடித்த பிறகு மீதமிருந்த மாமிசத் துண்டங்களை வாங்க யாராவது வருவார்கள் என்று காத்திருந்தான்

 அங்கே போன துறவியைப் பார்த்து ராமன் வரவேற்றான். "வாங்க சாமி அம்மா அனுப்பி வைச்சாங்களா?" என்றான்.இப்பொழுது துறவிக்கு மயக்கம் வராத  குறைதான். அந்த பெண் அனுப்பித்தான் நான் வருகிறேன் இவனுக்கு எப்படி தெரிந்தது? இவனுக்கும் ஞானதிருஷ்டியோ?

ஒரே குழப்பம்.

 ராமன் அவருக்கு ஒரு இருக்கைகொடுத்து உட்காரச் சொன்னான். "சாமி ரொம்ப களைப்பாக இருக்கீங்க போலிருக்கு என் வீட்டில் ஏதாவது சாப்பிடுவீங்களாஎன்றான்.

" அந்த அம்மா கொடுத்த உணவு இருக்கிறது நான் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன்"என்று கூறிய துறவி சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தொடர்ந்தார்.

 எனக்கு ஒரு விஷயம் தெரிந்தாக வேண்டும். அந்த அம்மா யார்? அவருடைய கணவர் யார்? அவர்கள் மேதைகளா முனிவர்களா?என்று அடுக்கிக் கொண்டே போனார்.

 ராமன் சாவகாசமாக துறவிக்கு பதில் சொன்னான். அந்த அம்மா சாதாரண குடும்பப் பெண்தான் அதிகம் படித்தவர் கூட இல்லை. வயது முதிர்ந்த தன் நோயாளிக் கணவனை சரியாக, ஜாக்கிரதை யாக கவனித்துக் கொள்ளவே அந்த அம்மாவுக்கு நேரம் சரியாகப் போய்விடும் வேறு எதுவும் அவர்களைப் பற்றி சொல்லுவதற்கில்லை" என்றான்.

 துறவிக்கு ஒன்றுமே புரியவில்லை. “நீங்கள் யார்" என்று ராமனிடம் கேட்டார்.  நான் பல வருடங்களாக இந்த கசாப்புக் கடைவைத்து வியாபாரம் செய்கிறேன். வரும் சொற்ப வருமானத்தை வைத்து என்னுடைய முதிய பெற்றோர்களையும் இரண்டு குழந்தைகளையும் கண் கலங்காமல் காப்பாற்றி வருகிறேன். நானும் அதிகம் படிக்கவில்லை நான் உண்டு என் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன் " என்றான் துறவி வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தார்.

வீட்டில் இரு முதியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள், குழந்தைகளின் கூச்சலும் விளையாடும் குரலும் கேட்டது.

 துறவி திரும்பவும் கேட்டார். "நீங்கள்  வேறு எதுவும் செய்வதில்லையா? என்று. அவருடைய குரலில் ஒரு பரிதாபம் தெரிந்தது. ராமன் கொடுத்த பதிலில் அவர் திருப்தி அடையவில்லை என்பதும் தெரிந்தது. "ஆமாம் சாமி எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் திருப்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றான் ராமன்

 அந்த தவசிரேஷ்டர் சோர்ந்த முகத்தோடு, குழம்பிய மனத்தோடு நடையைக் கட்டினார்.

 கதை இங்கே முடிந்து விடுகிறது. சில பல மாற்றங்களோடு இந்த கதை பல பகுதிகளில் வழங்கி வருகிறது. இந்த கதை என்ன செய்தியை சொல்லுகிறது.

 தவம் என்றுகாட்டில் போய் செய்வதற்கு எதுவும் இல்லை. சாதாரண மனிதன் தன் கடமையைச் செய்து சுற்றத்தாருக்கும், சமுதாயத்துக்கும், பயனுள்ள வாழ்க்கை நடத்துவதுதான் உண்மை தவம். என்று சொல்லாமல் சொல்லுகிறது. காட்டிற்கு போய் தவம் என்பது ஒரு வகையில் சமுதாயப் பிரச்னைகளிலிருந்து ஒதுங்கி வாழ்வதாகும். சக மனிதர்களிடம் அன்பு செலுத்தாத வாழ்க்கை, அந்த வாழ்க்கை. சராசரி மனிதனின் சாதாரணத்தை விட எந்த வகையிலும் உயர்ந்ததல்ல என்று இந்த கதை கூறுகிறது.

 துளி அளவு கூட அடக்கம்இல்லாமல் தன் தவ வலிமையைப் பற்றி பெருமைப் பட்டுக் கொண்டு அதை எல்லா இடத்திலும் தவறாகப் பயன்படுத்த முயன்ற கேவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது

 நாயை கல்லால் அடித்துவிட்டு, அந்த நாய் வலியில்குரைத்துக்கொண்டே ஓடுவதைப் பார்த்து, குறி தப்பாமல் அடித்த தன் திறமையைப் பற்றி நினைத்து சிரித்து மகிழும் சிறுவனுடைய சிறுபிள்ளைத் தனத்தை விட இந்த சாமியாரின் செயல் எந்த வகையிலும் உயர்ந்ததல்ல. அறியாச் சிறுவன் நாயை கல்லால் அடித்தான், அதன் உயிரைப் பறிக்கவில்லை. அவனை மன்னிக்கலாம்.

ஆனால் இந்த துறவி?

 புராணங்களில் வரம் சாபம் என்று அடிக்கடி குறிப்பிடப்படுவதெல்லாம் பல சமயங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பொழுதெல்லாம் வரமே சாபமாக மாறிப் போவதைப் பார்க்கிறோம். தன்னை நோக்கி தவம் இருந்த பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவபெருமான் பட்ட பாடு எல்லோருக்கும் தெரியும். அவர் கொடுத்த வரம் அவருக்கே சாபமாக இருந்தது. நல்ல வேளை. கடவுளாக இருந்ததால் சிவன் தப்பினார். ஆனால் தசரதன் தப்ப முடியவில்லை. கைகேயிக்கு அவன் கொடுத்த இரண்டு வரங்கள் அவனுக்கே சாபமாகி அவனுடைய உயிரைக் குடித்தது. இதை எல்லாம் பார்க்கும்போது கொங்கன முனிவர் பாடு எவ்வளவோ தேவலாம் என்றுசொல்லத் தோன்றுகிறது. ஒரு குடும்பப் பெண்ணிடமும், ஒரு கசாப்புக் கடைக்காரனிடமும் தலை குனிந்து நின்றார். அவ்வளவுதான்.

 ஒரு துறவியின் கதையில் தொடங்கி இன்னொரு துறவியின் கதையோடு முடிக்கலாம்.

 ராமகிருஷ்ண பரமஹம்சர் அமைதியாக கங்கை நதிக் கரையில் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஒரு துறவி அந்த பக்கம் வந்தார் அதே காவி உடை.சடைமுடி,நீண்ட தாடி. கையில் கமண்டலம். ஒரு அலட்சியமான பார்வை

பரமஹம்சருக்கு அருகில் வந்த துறவி, அவருடைய கவனத்தைப் பெறுவதற்காக மெதுவாக கனைத்தார், பரமஹம்சர்திரும்பிப் பார்க்கவில்லை.
 துறவி சற்று பெரிய குரலில் கனைத்தார். இப்பொழுது பரமஹம்சர் அந்த துறவியை நிமிர்ந்து பார்த்தார். அவர்" நீர்தான் பரமஹம்சரோ" என்று மிடுக்காகக் கேட்டார்.

 அப்படித்தான் மக்கள் என்னை அழைக்கிறார்கள்.என்று பரமஹம்சர் அமைதியாக பதில் அளித்தார்.

 நான் யார் தெரியுமா?என்றார் துறவி. நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன் என்றார் ராம கிருஷ்ணர். துறவி தொடர்ந்தார். நான் பெரிய தவயோகி.எல்லா யோகமும் எனக்குத் தெரியும் சகல சாஸ்திரங்களும் எனக்கு அத்துபடி. என்று கூறிக் கொண்டே போனார்.

 பரமஹம்சர் அமைதியாக கேட்டு கொண்டிருந்தார்.

 நான் அறியாத வித்தை இல்லை இமயமலையில் முப்பது வருடங்கள் தங்கி எல்லா  யோகங்களையும் கற்றுக் கொண்டுவிட்டேன். நான் நினைத்தால் இந்த கங்கை நதி  வெள்ளத்தில் நடந்தே அந்த கரைக்கு போக என்னால் முடியும் என்றார் அந்த துறவி.

 அடாடா, வீணாக்கிவிட்டீரே சுவாமி என்றார் பரமஹம்சர்.

துறவிக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சொல்கிறீர் என்றார்.

 ஒரு பைசா கொடுத்தால் அந்த பரிசல்காரன் உங்களை அந்த கரையில் கொண்டு சேர்த்து  விடுவானே. அதற்குப் போய் முப்பது வருடங்களை வீணாக்கி விட்டீரே சுவாமி என்றார் பரமஹம்சர்.
  
துறவி திகைத்துப் போய் நின்றார் யாரோ தலையில் சம்மட்டியால் அடித்த உணர்வு. இந்த சாமியார்கள் எந்த காலத்திலும் திருந்த மாட்டார்கள் போலிருக்கிறது.

 - மு. கோபாலகிருஷ்ணன்