Wednesday, March 20, 2024

ஆடு பாம்பே, நீ விளையாடு பாம்பே!


ஆடு பாம்பே, நீ விளையாடு பாம்பே!



சின்ன வயசிலிருந்தே நம்ம ஊர்ல நஞ்சு கொண்ட நாகப்பாம்புகளா பார்த்ததனாலயே, பாம்புன்னு யாராவது சொன்னாலே சும்மா உடம்புல ஒரு பயம் உண்டாகும். அது போதாதுன்னு, நம்ம தமிழ் சினிமால பாம்பு பழி  வாங்குறத பார்த்து அது மேல ஒரு பயம் குறையவே இல்லை. ஒரு பாம்ப அடிச்சா அதோட துணைப்பாம்பு வீடு தேடி வந்து போட்டுரும், 25 ஆண்டுக்கு ஒரு முறை விலை மதிப்பில்லாத மாணிக்கக்கல் கக்கும், பாம்பு(!) புத்துல வெள்ளிக்கிழமையானா பால் ஊத்தணும், முட்டை கொடுக்கணும்னு பல கதையக் கேட்டிருக்கோம்.  இந்த ஊரிலும் பல கதைகள் உண்டு -  குக்கும்பர் (வெள்ளரி) மணம் இருந்தால் அருகே செப்புத்தலையன் (CopperHead) பாம்பு இருக்கலாம், காட்டன் மவுத் (Cottonmouth) உங்களை துரத்தி வந்து கடிக்கக்கூடும்!  இதெல்லாமே டுபாக்கூர் கதைன்னு ரொம்ப காலம் கழிச்சு தான் தெரிஞ்சிகிட்டேன்! சரி, கதை எது உண்மை எது ன்னு பார்க்கறதுக்கு முன்னாடி, எந்த பாம்ப கண்டா கொஞ்சம் ஒதுங்கி இருக்கணும், ஏன் பாம்ப பார்த்து பயப்பட வேண்டிய தேவையில்லன்னும், அது நம் இயற்கை உணவு சங்கிலியில் எவ்வளவு இன்றியமையாத கண்ணின்னும் பார்க்கலாம். நானும் எல்லாரையும் போல பயந்து இருந்தவன், நண்பர் நாகுவின் புதல்வன் ஹரி பரசு’வை ஒருமுறை அருகாமை வீட்டுக்காரர் வீட்டுக்கு வந்த பாம்பை அகற்ற கூப்பிட்டேன், அவர் வெளியூரில் இருந்ததால் “இது சாதாரண எலி பாம்பு, தைரியமாக ஒரு குப்பை பையில் போட்டு அருகே உள்ள காட்டுப்பகுதியில் விட்டுவிடிங்கள்” என தைரியம் கொடுத்தார். இன்னும் 10 நிமிடம் விட்டால் அந்த வீட்டுக்காரர் அதை கொன்று விடுவார் என்பதால் தைரியத்தை வரவழைத்து (முகத்தில் மட்டும்!) நானே அகற்றினேன்! அதன் பின் பாம்புகளை அடையாளம் காண்பது , மற்றும் பாதுகாப்பாக எப்படி அப்புறப்படுத்துவது என கற்றுக்கொண்டேன். 


உங்க வீட்டில் பாம்பு வந்துவிட்டால் (ரிச்மண்டில் மட்டும்!), அதை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த என்னை அணுகலாம் (ஜெயகாந்தன் 804-200-9350) அல்லது என்ரைகோ கவுண்டியை அணுகவும் (804- 646-5573). பாம்பு கடித்தால் உடனே அந்த பாம்பின் அடையாளத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அல்லது கைபேசியில் படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவமனையில் தகுந்த சிகிச்சைக்கு இது உதவும். இதுவரை வெர்சீனியால பாம்பு கடிபட்டு உயிர் போனவர்கள் எவ்வளவு தெரியுமா? (விடை கட்டுரையின் இறுதியில்)!


பாம்புகள் இல்லன்னா, நம்ம வீடு, விளைநிலம், மற்றும் கடைகள்ல எலித் தொல்லை அதிகமாயிடும். சின்னத் தவளை, மூஞ்சூரு, எலி, நத்தை வகையிலிருந்து வயல்கள்ல அழிவை உண்டாக்கும் பெரும் பெருச்சாளி வரை பல வகை விலங்குகள் அதன் உணவுப் பட்டியலில் இருக்கு! ஒரு சில பாம்பு வகைகளின் நஞ்சிலிருந்து புற்றுநோய் போன்ற நோய்களுக்கான அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!  மனிதர்களுக்கு பாம்பாலான நன்மைகள் எனப் பட்டியலிட நிறைய உண்டு.


முதலில் Poisonous - Venomous இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்று பார்க்கலாம். Poisonous என்றால், அதைத் தவறி உண்டால்  ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் நிகழ வாய்ப்பு உண்டு - எடுத்துக்காட்டாக, அரளி விதை, ஒரு சில வகை காளான் போன்றவை.  Venomous என்றால்,  இரத்தத்தில் நஞ்சினைச் செலுத்தி செயலிழக்கச் செய்வது, சில நேரங்களில் மரணத்தில் முடியும் வாய்ப்புகள் அதிகம்! பாம்பு நஞ்சை நீங்கள் தவறி உண்டாலும் அதனால் பாதிப்பு அடையும் வாய்ப்பு குறைவே! (உங்கள் உணவு குழாய் மற்றும் உட்புற காயங்கள் இல்லாவிட்டால், நஞ்சைச் செரித்து விடுவீர்கள். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் நலமே, நஞ்சு கூட!) 


எந்த பாம்பைக் கண்டால் படை நடுங்கலைன்னாலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவைன்னு பார்க்கலாம்.  நம்ம வெர்சீனியால 3 வகை நச்சுப் பாம்புகள் உள - செப்புத்தலையன் எனும் Copper Head, காட்டன் மவுத் / வாட்டர் மொகாசின் (Cotton Mouth / Water Moccasin), மற்றும் கேன் பிரேக் / டிம்டர் ராட்டில் (Timber Rattle Snake / Canebreak).  இந்த 3 வகை பாம்புகளில் ஏதாவது மனிதர்களைக் கடித்தாலும் விரைவாக மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் பெரிய பாதிப்புல்லாமல் காப்பாற்றி விடலாம்! 


நம் இரிச்மண்டில் செப்புத்தலையர்கள் மட்டும் தான் உலாவுகிறார்கள். மற்ற நஞ்சப்பர்களுக்கு இங்கே அனுமதி இல்லை போல. செட்டர்பீல்ட் பகுதியில் காட்டன் மவுத் சிலதும் வெர்சீனியா பீச் பகுதியில் காட்டன் மவுத் மற்றும் டிம்டர் ராட்டிலும் ஊர்கின்றன. கீழே உள்ள வரைபடத்தில் அவை எங்கே வாழ்கின்றன என பார்க்கலாம். 





Pics from Virginia herpetological society



பொதுவாக நம் வீடுகளில் காணப்படும் பாம்புகள் நஞ்சில்லாதவை தான். இதில், அதிகம் காணப்படுவது கருப்புப் பாம்பு - Black Racer, கார்ட்டர் பாம்பு (Garter Snake),எலிப் பாம்பு (Rat Snake), டீகேயின் காக்கி பாம்பு  (Dekays Brown Snake), தண்ணீர் பாம்பு ( Northern Water Snake) மட்டுமே! இவை கடித்தாலும் மனிதர்களை பெரிதாக பாதிக்காது, மிஞ்சி போனால் ஒவ்வாமை வரலாம்! இவை சிறிய எலி, நத்தை, தவளை, பூச்சிகள் போன்றவற்றை உண்டு வாழ்பவை! இவற்றை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என வேறொரு பதிவில் பார்க்கலாம்!



பாம்புகள் பொதுவாக குளிர் காலத்தில் (செப்டெம்பர்-ஏப்ரல் வரை)  புரூமேசன் (Brumation) என்னும் மந்த நிலையில் இருக்கும். புரூமேசன்  என்பது காலநிலை குளிர்ச்சியடையும் போது பாம்புகள் அடையும் ஒரு நிலை, அவை சாப்பிடுவதை நிறுத்தி, வேகத்தை குறைத்து, ஒளிந்து கொள்ள இடம் தேடுகின்றன. இது உறக்கநிலையைப் போன்றது, ஆனால் பாம்புகளுக்கு புரூமேசன் போது அதிக தூக்கம் தேவையில்லை, சில சமயம் அவை உறங்கி எழுந்து உணவு மற்றும் தண்ணீருக்காக சிறிய தூரம் போய்த்தேடும். பொதுவாக பாம்புகள் புரூமேசன் காலத்தில் பல வாரங்களுக்கு சாப்பிடவோ, குடிக்கவோ, மலம் கழிக்கவோ நகராது. சில ஊர்வன இனங்கள் உயிர்வாழ்வதற்கு புரூமேசன் இன்றியமையாதது. வானிலை மாறும்போது அவற்றின் உடல் வெப்பநிலையை உயர்த்த முடியாது. நீண்ட மந்தத்தன்மை பாம்புகள் போன்ற ஊர்வனவற்றின் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது.


மார்ச் மாதம் குளிர் காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பிக்கும் போது வெய்யில் படுவதற்கு வெளியே வருகின்றன. அவை உண்ணும் உணவு செரிக்க வெயில் தேவை! 


சரி இனி இவற்றை நம் வீடு மற்றும் தோட்டத்திற்குள் பாம்புகள் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். பாம்புகள் வீட்டிற்கு வராமல் இருக்க எந்த வகை மருந்து/பொடிகளும் உதவாது! இவற்றை வாங்கி ஏமாறாதீர்!


  • தோட்டத்தில், புல்லை அடிக்கடி வெட்டி, குட்டையாக வைக்கவும். பாம்புகள் குட்டையான புல்வெளிகள் வழியாக வெளியே தொங்குவதும், நகர்வதும் குறைவு, ஏனெனில் அவை வேட்டையாடிகளின் (எ.கா., பருந்துகள்) கண்களில் பட்டுவிடும். குட்டையான புல்வெளி பாம்புகளைக் காட்டிக் கொடுத்துவிடும். எனவே பாம்புகள் அவற்றை விரும்புவதில்லை.

  • மரங்கள் மற்றும் புதர்களை ஒழுங்கமைக்க வேண்டும். உங்கள் வீடு மற்றும் வண்டி நிறுத்துமிடம் அருகே மரங்கள் மற்றும் புதர்கள் இருந்தால் அவற்றை நெருக்கமாக வெட்டி, கிளைகள் தரையைத் தொடராதவாறு வெட்டி வைக்கவும். மரங்கள் மற்றும் புதர்களுக்கு அடியில் 2-3 அடி இடைவெளியை உருவாக்குவது பாம்புகளின் நடமாட்டத்தைக் குறைக்கும் மற்றும் பாம்புகள் இருந்தால் அவற்றைக் கண்டறிவதை எளிதாக்கும். 

  • பறவைகளுக்கு உணவு வைத்தால், அவற்றை வீட்டிலிருந்து முடிந்தவரை தூரத்தில் வைக்கவும். பறவைகள் உண்ணும்போது, உணவை கீழே சிதறி விடுகின்றன. தரையில் உள்ள உணவுத்துணுக்குகள் மூஞ்சுரு போன்ற கொறித்துண்ணிகளை ஈர்க்கின்றன, மூஞ்சுரு & Co பாம்புகளின் உணவு. பாம்பு ஈர்க்கப்படும். பறவைகளின் உணவை அதன் சேமிப்புப் பெட்டியில் இறுக்கமாக மூடி வையுங்கள்.

  • ஒரு பெர்ச் கம்பத்தை (அமர்ந்து நோட்டம் விட வேட்டையாடிப் பறவைகள் பயன்படுத்தும் கம்பம்) நிறுவவும். பருந்துகள் மற்றும் ஆந்தைகள் இயற்கையான பாம்பு தின்னிகள், அவை நன்கு அமைக்கப்பட்ட பெர்ச் கம்பத்தை விரும்பி வந்து அமரும். அவை அங்கு அடிக்கடி வருவதால், எதுக்கு வம்பு என பாம்புகள் வேறு இடத்திற்கு நகர்ந்து விடுகின்றன. கம்பங்கள் நல்ல பார்வை படும்படி திறந்த பகுதிகளில் வைக்கப்பட வேண்டும்.

  • மேலும், செல்ல விலங்குகளுக்கு வீட்டின் உள்ளேயே உணவளிக்கவும். செல்ல விலங்குகளுக்கு வெளியில் உணவளிப்பதால் பாம்புகளை ஈர்க்கும் பூச்சிகள் மற்றும் கொறித்துண்ணிகளை வரும். பின்னாலேயே பாம்பும் வரும். வெளியில் உணவளிப்பது தேவை என்றால், உண்ணாத / எஞ்சிய உணவை உடனே நீக்கிவிடுங்கள். 

  • உங்கள் தோட்டத்தில் விறகுக் குவியல் இருப்பின் அவற்றை உடனே அப்புறப்படுத்தவும். விறகு, அதிகப்படியான மரக்கட்டைகள் மற்றும் பிற குப்பைகளை உங்கள் வீட்டிலிருந்து ஒதுக்கி வையுங்கள். மரக்கட்டைகள் மற்றும் விறகுகளின் அடுக்குகள், மற்றும் பிற குப்பைகள் ஆகியவை பாம்புகள் மறைவாக வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும்.

  • உங்கள் தோட்ட நிலப்பரப்பில் தழைக்கூளம் மற்றும் பெரிய பாறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை பாம்புகள் மற்றும் அவற்றின் இரையை ஈர்க்கின்றன, இனப்பெருக்கம் செய்ய நல்ல வாழ்விடமாக அமைத்துக் கொள்ள பாம்புகளுக்கு வசதியாகிவிடும். அதற்கு பதிலாக, சரளை அல்லது கூழங்கற்கள் போன்ற சிறிய இறுக்கமான கற்களைப் பயன்படுத்தவும். நீர் நிலைகள் பாம்புகளைக் கவரும் என்பதால் நீர்த்தோட்டம் மற்றும் வண்ணமீன் (கோய்) குளங்களை தவிர்க்கவும்.

  • உங்கள் வீட்டின் அடித்தளத்தில் விரிசல்கள் இருப்பின் அவற்றை உடனே அடைத்திடுங்கள். பாம்புகள் இந்தப் பகுதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க வீடு, நடைபாதைகள் மற்றும் அடித்தளங்களில் விரிசல் மற்றும் பிளவுகளை அடைக்கவும்.  குளிர்சாதன மற்றும்/அல்லது வெப்பம் வீட்டில் இருந்து கசியும் விரிசல் மற்றும் பிளவுகளை கண்டறிய ஆற்றல்-தணிக்கை (Energy Audit) ஒரு சிறந்த வழி - இதே விரிசல்கள் மற்றும் பிளவுகள்தான் பாம்புகள் மற்றும் பிற சிறிய உயிரினங்களால் பயன்படுத்தப்படக்கூடும்.

  • பாம்புகளை விலக்கி வைக்க 100% பயனளிக்கும் வழிகள் என எதுவும் இல்லை, மேலே பரிந்துரைத்த எல்லா முயற்சிகளும் தோல்வியுற்றால், வேலி அமைப்பது பற்றி கருத்தில் கொள்ளலாம். வேலியைத் தரைக்குள் சில அங்குலங்கள் புதைத்து, 1/4" அல்லது சிறிய திடமான கண்ணி அல்லது திடமான தாள்களைப் பயன்படுத்தி கட்டப்பட வேண்டும். மேலும், பாம்புகள் மேலே ஏறுவதைத் தடுக்க அதன் மீது ஒரு வளைவைச் சேர்க்க வேண்டும். பல நிறுவனங்கள் காட்டுவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவென்றே சிறப்பு வேலிகளை உருவாக்குகின்றன, தேடிப்பாருங்கள்.


முன் பத்தியில் கேட்ட பாம்பு கடிக்கான விடை:

இதுவரை வெர்சீனியால பாம்பு கடிபட்டு உயிர் போனவர்கள் எண்ணிக்கை - 0! 


மனிதர்கள் கண்பட்டு உயிர்போன அப்பாவிப் பாம்புகள் எவ்வளவு இருக்கும் என யோசிச்சுப் பாருங்கள். எல்லாப்பாம்பும் கெட்ட பாம்பல்ல, நாம் தொல்லை கொடுக்காத வரை எல்லாமே "நல்லபாம்பு" தான், செப்புத்தலையன் உட்பட. மாற வேண்டியது நம் மனமும் கண்ணோட்டமும்தான். இயற்கையோடு இயைந்து வாழ்வோம்.



நா. ஜெயகாந்தன் 

(கட்டுரையை மேம்படுத்தியமைக்கு நன்றி கார்த்தி அங்கமுத்து!)


Wednesday, March 06, 2024

மாயை




        இசைஞானியின் “ராஜ ராஜ சோழன் நான்” பாடல் முடிவதற்குள் செவ்வானம் கலைந்தது, என் நினைவலைகளும் கலைந்தன, 

            தெளிந்த நீல வானம் கண்முன், எண்ணங்களும் இப்போது தெளிந்தது, 


            வாழ்க்கை ஒரு மாயாஜாலம், எதுவும் நிரந்தரமல்ல,  தருணம் பொன்னானது, 


             இயற்கை இவற்றை ஒரு வர்ணக்கோட்டில் அழகாக தீட்டிச் சென்றது