Thursday, September 29, 2011

கடிலக்கரையினிலே...

நவராத்திரி ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில்  சற்று விவரம் தெரிந்தவர்களுக்கு - ரொம்ப வயதானவர்களுக்கு என்றும் சொல்லலாம் - நினைவுக்கு வரும் ஒரு ஊர் பண்ருட்டி.  இப்போதெல்லாம் பண்ருட்டி என்றால் பலாப்பழமும், முந்திரியும், மின்சார அமைச்சர் ராமச்சந்திரனும், கூடவே கொஞ்சூண்டு நாகுவும்தான் உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஒரு காலத்தில் மண் பொம்மைகளுக்கு புகழ் பெற்றது பண்ருட்டி. உண்மையான கொலு (எங்களூர்) மண்பொம்மையில்தான் வைக்க வேண்டும் தெரியுமா? சந்தேகமிருந்தால் இங்கே படித்துக் கொள்ளுங்கள் நவராத்திரி கொலு பொம்மை தத்துவம். நான் அடுத்த வாரம் கொலுவலம் வரும்போது இந்தப் படிக்கணக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போகிறேன்.


சரி - பண்ருட்டிக்குப் போவோம். பண்ருட்டி பெயர் காரணம் பற்றி எனக்குத் தெரிந்தது. பண்ருட்டியின் சரியான பெயர் பண்ணுருட்டி. அந்தக் காலத்தில் பாணர்கள் வாழ்ந்து பண் உருட்டி, உருட்டி ஊருக்கு பண்ணுருட்டி என்ற பெயர் வந்ததாம். அவற்றில் இருந்து ஒரு சில பண் எடுத்து விடு என்று சிலர் கேட்கலாம். அடுத்த மாதம் இங்கே ஒரு இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதில் ஒரு அரைமணி நேரம் கேட்டிருக்கிறேன். அது கிடைத்தால் நீங்களே எங்களூர் பண்ணின் பெருமையை அனுபவிக்கலாம்.

பண்ருட்டி ஒன்றும் அவ்வளவு பெரிய ஊர் இல்லை. ஊரைச் சுற்றி கடில நதி ஓடுகிறது. சரி - ஒரு காலத்தில் ஓடியது. இப்போது போனால் விவசாயிகள் ஆக்கிரமித்து ஆக்கிரமித்து ஆறையே காணோம். சென்ற முறை போனபோது என் பிள்ளை கேட்கிறான்  ஏனப்பா விவசாய நிலங்கள் மேலே உங்களூரில் பாலம் போட்டிருக்கிறீர்கள் என்று. அதுதானடா பண்ருட்டியில் விசேஷம் என்று சொல்லி வைத்தேன். ஊரின் வடக்கே வெண்ணை உருகும் முன் பெருகிய தென் பெண்ணையாறு. அதில் இப்போது மண்தான் பெருகுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் ஆற்று மண்கூட இருக்காது என நினைக்கிறேன்.

ஊரின் கிழக்கிலும் வடக்கிலும் செம்மண் படிந்த நிலம். அதனால்தான் மா, பலா, முந்திரி அமர்க்களமாக வளர்ந்திருக்கும். அதுவும் தரையில் குடை விரித்து உட்கார்ந்திருக்கும் முந்திரியின் அழகே அழகு.

நான்  துவக்கப் பள்ளியில் படிக்கும்போது பள்ளிக்கருகே இருக்கும் வீதிகளில் எல்லாம் வசித்தவர்கள் பொம்மை செய்யும் கலைஞர்கள். வீதிகளின் இருபுறமும் களிமண் பொம்மைகள் காய்ந்து கொண்டிருக்கும். நான் உயர்நிலைப்பள்ளி போகும்போதே அதெல்லாம் மாயமாகி விட்டது. நான் படித்தது முத்தையர் பள்ளி. நம் வெங்கட் செட்டியாரின் மாமனார் படித்ததும் அந்தப் பள்ளிதான். நான் மூணாப்பு படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி போன வாரம் என் நினைவுக்கு வந்தது.

அந்த நாட்களில் அணி பிரித்து விளையாடும்போது இருவர் இருவராக 'குழு பிரிந்து' கொண்டு வருவோம். இரண்டு பேர் தனியாகப் போய் ஆளுக்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டு வந்து நிற்கும் அணித் தலைவர்களை கேட்போம். முக்கால்வாசி - சிவாஜி வேணுமா, எம்ஜியார் வேணுமா.  சிவாஜி.  சரி நான் உன் பக்கம். இவன் எதிர் பக்கம். எனக்கு சிவாஜி, எம்ஜியார் போரடித்து விட்டது. நானும் இன்னொருவனும்  போய் 'குழு பிரிந்தோம்'.

"தென்னரசு -  பட்டாடி வேணுமா, லாயிட் வேணுமா"
"பட்டாசு."
பட்டாசு இல்லடா, பட்டாடி!. மன்சூர் அலிகான் பட்டாடி!!

பக்கத்தில் அரைத் தூக்கத்தில் இருந்த கண்ணம்மா டீச்சருக்கு ஒரே ஆச்சரியம். டேய் - இங்க வா. என்ன பேர்லாம் சொன்னே?

பட்டாடி, லாயிட் டீச்சர்.

ஏன்டா - அவங்க யாருன்னு உனக்குத் தெரியுமா?
பட்டாடி இந்திய கிரிக்கெட் கேப்டன். லாயிட் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கேப்டன் டீச்சர்.

சென்ற வாரம் பட்டாடி இறந்து போனார். எனக்கு கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு தெரிந்த நாட்களில் கேப்டனாக இருந்தவர். கேப்டன் என்றால் பட்டாடிதான் என்று இருந்த நாட்கள் அவை.     (தொடரும்)





Friday, September 23, 2011

முதல் பெண் எழுத்தாளர்





                 சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கிய மன்றத்தில்  பழம்பெரும் பெண் எழுத்தாளர்   வை. மு. கோதைநாயகியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடினார்கள். விழாவையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் பங்கு கொண்டு பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
           இன்றைய தலைமுறை நாவல் ரசிகர்களுக்கு வை. மு. கோதைநாயகி பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ் நாவல் தரம் அதிக வளர்ச்சி பெறாத நிலையில் நிறைய நாவல்களை எழுதிய நாவல் ஆசிரியர்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமல்லாமல் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெருமையும் இவருக்கு உண்டு. மாதம் தோறும் ஒரு நாவலை வெளியிடுவதற்காக ஒரு மாதப் பத்திரிகையை நடத்திய துணிச்சல்காரப் பெண் இவர்.
     அன்றைய காலகட்டத்தில் நாவல்களில் பல வகையான ரசனைக்கும் இடமளிக்கும் வகையில் நாவல் எழுதி வெளியிட்டனர்.  துப்பறியும் கதைகள் சமூக அவலங்களை விளக்கியும் பெண்கள் துயரத்தைப் பற்றியும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை குழப்பங்களை பற்றிய  எழுத்துக்களை ஒரே நாவலில் படிக்கமுடியும்.
       அன்றைய நாவல்களில் சமூகப் பிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை என்ற சிலருடைய விமர்சனம்
சரியானதல்ல. அன்றைய தமிழ்ச்சமுகத்தில் குறிப்பாக குடும்ப வாழ்க்கையை பெரிதும் பாதித்தது பெண்கள் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துயரமும்தான். கூட்டுக்குடும்ப வாழ்வில் பெண்கள் பட்ட வேதனையை கோதைநாயகியினுடைய நாவல்களில் அதிகம் காணலாம்.

        இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெரும் அளவில் வழக்கத்திலிருந்த பாலிய விவாஹம், அதன் காரணமாக ஏற்பட்ட இளம் விதவைகள், தாய் வீட்டுக்கு விதவையாக திரும்பி வந்த பெண்கள் அங்கே சந்தித்த புறக்கணிப்பு இவையெல்லாம் அன்றைய நாவல்களில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. 1921 ம ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பத்து வயதுக்குக்
குறைந்த விதவைப்பெண்கள் எண்ணிக்கை பத்து லக்ஷத்திற்கு மேல் இருந்ததாக ஒரு செய்தி உண்டு.

       சிறு வயது பெண்கள் திருமண வாழ்க்கை தொடங்கியவுடன் கருத் தரிப்பதும் அதனால் ஏற்பட்ட பிரசவ கால சிக்கல்கள். அதிகமாக ஏற்பட்ட பிரசவகால மரணங்கள் அந்த நாட்களில் சகஜமான செய்திகளாக இருந்தன. மருத்துவ வசதி அதிகம் இல்லாத அந்த நாட்களில் கிராமப்புறங்களில் செய்யப்பட்ட அரைகுறை மருத்துவம் பல இளம் தாய்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலைப்பாட்டின் சமூக மற்றும் குடும்ப விளைவுகள் மிக மோசமாக இருந்தன.

        பிரசவ பிற்கால நோய்களும் பெரிய அளவுக்கு பெண்களை பாதித்தன. பல பெண்கள் திருமண வாழ்க்கைக்கு தகுதி  இல்லாதவர்களாக பலஹீனப்பட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல ஆண்கள் முதல் மனைவி இருக்கும்போதே  இரண்டாம் தாரமாக  வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். அன்று ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் இருந்தது. பிற்காலத்தில் பலதாரமண தடைச்சட்டம் வந்தது.  இந்த சட்டமும் மதத்தலைவர்கள் உள்பட பல செல்வாக்குள்ள  மனிதர்களுடைய எதிர்ப்புக்கு இடையில்தான் கொண்டுவர வேண்டியிருந்தது.

         நோய்வாய்ப்பட்ட முதல்மனைவி ஒரு புறமும் வீட்டை ஆளும் இன்னொரு இளம் மனைவி மறுபுறமுமாக உள்ள குடும்பத்தில் எவ்வளவு குழப்பம் ஏற்படும் என்பதை  நாமே கற்பனை செய்து கொள்ளவேண்டியதுதான்.  முதல் மனைவிக்கு குழந்தைகள் இருக்க நேர்ந்தால் அந்த குழந்தைகளும் கடுமையான சோதனைகளை சந்திக்க நேர்ந்தது. மனைவி  இறந்த பிறகு திருமணம் செய்து கொண்ட கணவர்கள் புதிய மனைவியின் மயக்கத்தில் முதல்தாரத்து பிள்ளைகளை   கவனிக்காமல் உதாசீனம் செய்ததால் ஏற்பட்ட குடும்ப பிரச்னைகளும் இளம் பிள்ளைகளின் மனபாதிப்புகளும் அதிகமாகவே இருந்தன.

          ஆகையால் சென்ற நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் வெளியான பெரும்பான குடும்ப நாவல்களின் கதைக்கான கரு சிற்றன்னை கொடுமையாகவே  இருந்ததை பார்க்கலாம். ஆரம்ப கால திரைப்படங்களும் சமூகப்பிரச்னைகளை கொண்ட தாக அமைந்தால் அநேகமாக சிற்றன்னை கொடுமையை பின்னணியாகக் கொண்டிருக்கும். மற்ற  படங்கள் அந்தநாட்களில் புராண படங்களாகவே அமைந்திருந்தன.

          இரு மனைவிகளின் மத்தியில் அல்லல்பட்ட ஆண்கள் நெறி தவறி வாழ்க்கையில் தடம் புரண்ட சம்பவங்களும் உண்டு. 
  இரண்டாம் தாரமாக அமைந்த இளம் மனைவியின் வயது வித்தியாசம் காரணமாக கணவர்களின் மனதில் எழுந்த சந்தேகம் பல பெண்களின் குடும்ப வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது.  இது போன்ற சூழ்நிலையில் இருபது வயதுக்குள், உலக ஞானமும் அதிகமில்லாமல் கல்வி அறிவும் அதிகமில்லாமல் வாழ்க்கையைத் தொடங்கிய பெண்களின் வாழ்வு பரிதாபமாகவே அமைந்திருந்தது. மன உளைச்சலைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட பெண்கள் பலர்.

       இது போன்ற பிரச்னைகளும் அன்றைய நாவல்களில் நிறையவே கையாளப்பட்டிருக்கின்றன. நான் நாவல் படிக்கத் தொடங்கிய காலத்தில் வை. மு. கோதைநாயகியின் நாவல்கள் பிரபலமாக இருந்தன. அன்றைய நாளில் மற்ற பிரபல நாவலாசிரியர்கள்  வடுவூர் துரைசாமி அய்யங்கார்,ஆரணி குப்புசாமி முதலியார், ஜெ. ஆர். ரெங்கராசு போன்றவர்கள்.
      
             கருத்தரங்கத்தில் பேசுவதற்காக அன்றைய மக்களின் சமூக வாழ்க்கை யதார்த்தத்தை சற்று கூர்ந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

        அன்றைய நாவல்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதையத்தொடங்கிய நிலையை பல நாவலாசிரியர்கள் சித்தரிக்க முயன்றார்கள். பெண் கல்வி அதிகமில்லாத அன்றைய நாட்களில் மத்தியதரக் குடும்ப வாழ்க்கை, ஓரளவு வசதியோடு கிராமங்களில் வாழ்ந்த நிலப்பிர்புத்வ மக்கள், அவர்களுடைய குடும்ப வாழ்க்கை ,நகரங்களுக்கு குடிபெயர்ந்து கொண்டிருந்த மக்களின் வாழ்க்கை இவைகளே நாவல்களில் காட்சிப்படுத்தப்பட்டன.  குறிப்பாக மேல்சாதி மக்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றிய விவாதமாகவே  அன்றைய நாவல்கள் அமைந்திருந்தன என்ற குற்றச்சாட்டை இன்று பல விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். . இந்த குறைபாடு ஓரளவு உண்மையே. ஆனால் இந்த விமர்சகர்கள் ஒரு பெரிய உண்மையை மறந்துவிடுகிறார்கள்.

       அன்றைய நிலையில் நாவலை படிக்கும் வாசகர்களும் இந்த குறுகிய பகுதியிலிருந்துதான் வந்தார்கள்.  நாவல்களைப் படிக்க நேரத்தை ஒதுக்கவும்  நாவல்களை வாங்க பணம் செலவு செய்யவும் அன்று இந்த குறுகிய சமூகப் பகுதியிலிருந்த மக்களால்தான் முடிந்தது. எழுத்தாளன் எப்பொழுதும் தன்னுடைய வாசகனுக்கு தக்க முறையில்தான் சொல்ல வந்த செய்திகளையும் சொல்லும் முறையையும் தேர்ந்து எடுக்கிறான்.

l அன்றைய படித்த மத்தியதர வர்க்கம் பத்திரிகைகளின் வழியாகவும்  நாவல்களின் மூலமாகவே தன்னை சுற்றியுள்ள உலகியல் மற்றும் சமூக வாழ்க்கையை புரிந்து கொண்டனர்..           
       பேராசிரியர் ஏ. ஆர். வெங்கடாசலபதி என்ற அறிஞர் இந்த வாசகர்களுடைய வாழ்க்கை முறை மற்றும் வர்க்க
மற்றும் சாதி பின்னணி பற்றி ஒரு ஆய்வு செய்து ஒரு நூல் எழுதியிருக்கிறார். 1930 களில் வெளியாகிக்கொண்டிருந்த ஆனந்தவிகடன் வாசகர்கள் பற்றி ஆராய்ந்து அவர்களுடைய வாழ்க்கை முறை, கல்விநிலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

    ஆகவே எந்த ஒரு காலத்திலும் வெளியான நாவல்கள் தோன்றிய காலத்தின் பிரச்னைகளை விவாதிக்கவே இல்லை என்று அறுதியிட்டு கூறமுடியாது. விவாதித்துவிட்டு தவறான மாற்று காட்டிய எழுத்தாளர்கள் உண்டு. நடப்பதை சொல்லிவிட்டு எல்லாம் காலத்தின் கோலம் என்று அங்கலாய்ப்பை வெளியிட்ட எழுத்தாளர்கள் உண்டு. கதைப்போக்கில் பிரச்னைகளை விவாதித்து விட்டு மாற்றம் காண வேண்டும் என்று சொல்லாமல் வாசகர்களை உணர வைத்த எழுத்தாளர்கள் உண்டு.
         வை.மு. கோதைநாயகி கடைசியாக குறிப்பிட்ட முறையை பின்பற்றி நாவல்கள் எழுதினர்.

                                                                        - மு.கோபாலகிருஷ்ணன்

Tuesday, September 20, 2011

மீனாவுடன் மிக்சர் - 24 {ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 2}

(ஒரு பிரஜையின் பிரயாணம் - முதல் பாகம் இங்கே)


என் அமெரிக்க பிரஜை பிரயாணத்தின் இரண்டாவது பாகத்தை கட்டுரைக்கு பதில் ஒரு நாடக வடிவில் எழுதி இருக்கிறேன்.  99.9 % கற்பனை, 0.1 % மட்டுமே உண்மை. உங்க காதுல ஒரு அஞ்சு முழம் பூவுக்கு குறையாமல் இன்னிக்கு சுத்தறதுன்னு கங்கணம் கட்டி நான் எழுதிய நாடகம் இதோ. :-)

இடம் - இமிக்ரேஷன் ஆபீஸ் வரவேற்புக் கூடம், அமெரிக்கா


நாற்காலியில் அமர்ந்திருப்போர் - திருவள்ளுவர், பாஞ்சாலி, மீனா சங்கரன், மீனாவின் தாயார் "அம்புஜம்", MLA அராஜகசத்ரு மற்றும் குஞ்சம்மா.

Announcement:

Immigration Officer calling out loud: We now invite the following people to get ready for their interview next. Ti.....ti.....tizhu......tizhuvalvan, pen chali, mina san kaaren, Ambaajam, MLA (gives up after a while) and kunjamma. Please have all the necessary documentation ready and bring with you when your names are called again.


Translator - இப்பொழுது நாங்கள் டி டி டீழு ....டீழுவல்வன், பேன் சளி, மீனா சன் காரேன், அம்பாஜம், MLA (சொல்ல இயலாததால் விட்டு விட்டார்), மற்றும் குஞ்சம்மா - இவர்களை தேவையான பத்திரங்களோடு நேர்முகத் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டு கொள்கிறோம்.

திருவள்ளுவர் - டீழுவல்வனா? வாசுகியின் வாயில் அல்வாவாய் இனித்த என் பெயருக்கு உம்மோடு வாயில் இப்படி ஒரு இடியா? வயதில் முதியவனான எனக்கு இந்த நாட்டில் இவ்வளவு தான் மதிப்பா?

'பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.'

என்ற என் குறளை மறந்தே விட்டீரா?

குஞ்சம்மா - யோவ் பெருசு, உன்னோட ஆனாலும் ரோதனையா போச்சுய்யா. ஆ வூன்னா ஒரு ரெண்டு வரி அணு குண்டை நீ பாட்டுக்கு எங்க மண்டைல போட்டுட்டு போயிரு. உன்னால ஊர்ல சின்ன பசங்க கனவுல எல்லாம் ராத்திரி பல்லவன் பஸ்ஸோட பின் பக்கம் வந்து பயமுடுத்துதாம். சும்மா முறுக்கிக்காம அந்தம்மா கூப்பிட்டா போவியா, என்னமோ ரொம்ப தான்....


அம்புஜம் - வள்ளுவர் மாமா, இதுக்கெல்லாம் கோவிச்சுக்காதீங்கோ. வந்த காரியம் நல்ல படியா முடியணும், அது தானே இப்போ முக்கியம். இந்த நேர்முக பரிட்சைல பாஸ் பண்ணி நல்லபடியா அமெரிக்க பிரஜை ஆகணுமேன்னு ஒரு மாசமா தினமும் நான் சுந்தர காண்டம் படிச்சிண்டு இருக்கேன்..இருந்தாலும் இன்னிக்கு அந்த பகவான் எனன நினைக்கிறானோ, தெரியலையே. ஏம்மா பாஞ்சாலி, பிரஜை ஆயிடுவோம்னு நீ மனசுல நம்பிக்கையோட இருக்கியா? ஆமாம், அது எனன உன் தலையில பச்சையா அசிங்கமா ஏதோ பூசிண்டு வந்திருக்க? அச்சச்சோ, புருவம் பக்கத்துல வேற லேசா ஒழுகறதே!


பாஞ்சாலி - (புடவை நுனியில் துடைத்தபடியே) அது ஒன்றும் இல்லை அம்மா. கொஞ்சம் நாளாகவே தலையில் பொடுகு பிரச்சனை அதிகமாக இருக்கு. அந்த துச்சாதனன் கம்னாட்டியின் ரத்தத்தை என் கூந்தலில் என்று பூசினேனோ அன்றிலிருந்தே இந்த தொல்லை தான். அதோடு இவ்வுலகம் மெச்ச ஒரு சபதம் எடுத்து வேறு கொஞ்சம் நாளாகி விட்டது. சரி ஒரே அம்பில் இரு கௌரவர்களாய் இருக்கட்டுமே என்று தான் 'அமெரிக்க பிரஜை ஆகாமல் இந்த கூந்தலை நீராட மாட்டேன்' என்று சபதம் போட்டு அதே கையோடு ஒரு பிடி வெந்தயத்தை வேப்பிலையோடு அரைத்து என் கூந்தலில் தடவிக்கொண்டேன். பிரஜை ஆகா விட்டாலும், பொடுகாவது தொலையுமே?

அம்புஜம்: ஆனாலும் நீ புத்திசாலி பாஞ்சாலி. இல்லேன்னா பாண்டவா மாதிரி ஒரு கூட்டு குடும்பத்துல வாக்கப்பட்டு உன்னால பிழைக்க முடியுமா? எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்மா. உங்க மாமியார் குந்தி தேவி..(மீனாவின் முறைப்பில் கேள்வியை நிறுத்துகிறார்)

மீனா: ஏம்மா பொடுகையும் குந்தி தேவியையும் பத்தி வாதம் பண்ண இது தான் நேரமா? அமெரிக்க வரலாறு பத்தின தேர்வுக்கு நீ ரெடியா? அமெரிக்காவோட கொடியில் ஏன் பதிமூணு கோடு போட்டிருக்கு, சொல்லு பார்ப்போம்?

அம்புஜம்: பத்து மாசம் சுமந்து பெத்த தாயை நிக்க வச்சு கேள்வி கேக்கறியே, இது சரியா மீனா? அதோட 13 ராசி இல்லாத நம்பர். பேசாம கொடியில 12 கோடு போட்டா போதும்னு நானே ஒபாமாவுக்கு எழுதி போடலாம்னு இருக்கேன். எப்படி என் ஐடியா? (மீனாவின் கண்ணில் கிலோ கணக்கில் நிராசை)

MLA அராஜகசத்ரு: இந்திய வரலாற்று பரிட்சைக்கே தில்லா கோனார் உரை நூல் கூட படிக்காம போய் எழுதி அஞ்சு மார்க் மட்டுமே எடுத்து பெயிலானவன் நான். அமெரிக்க வரலாறுன்னா மட்டும் என்ன கொம்பா? உடனே படிச்சிரணுமா? எவன்டா அவன் என்னை படிக்க சொல்லறது இங்கே? டாய்.................


அம்புஜம்: வேண்டாம்பா MLA! அமெரிக்காவுக்கு வந்த இடத்துல இப்படி வேட்டியை தூக்கி கட்டினா நல்லாவா இருக்கு. இறக்கி விட்டுடு. அது சரி, உள்ள போட்டிருக்கியே அழுக்கா ஒரு கட்டம் போட்ட அரை நிஜார், அது என்ன போன வருஷம் ஆளும் கட்சி உன்னை ஒரு மாசம் ஜெயிலுக்குள்ள போட்டாங்களே, அப்ப குடுத்ததா? சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இந்த கலர் ரொம்ப சுமாரா இருக்கு. அடுத்த முறை போனீன்னா நல்லா ராமர் நீலத்துல கேட்டு வாங்கி போட்டுக்கோப்பா. உன் நிறத்துக்கு அட்டகாசமா இருக்கும்.

மீனா: ஷ்....அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா.

-------------------------------
In the interview room:

Officer - Will you raise your right hand and promise to tell the truth, the whole truth and nothing but the truth today?

Translator - உங்கள் வலது கையை உயர்த்தி உண்மை, முழு உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் சொல்ல மாட்டேனென்று சூளுரைக்க முடியுமா?


திருவள்ளுவர் -

"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல்"

என்று சொன்ன என் வாய்மையின் மேலா சந்தேகம்? (உக்ரமாக) நக்கீரா என்னை நன்றாக பார்!

Translator - Nakkeeraa, look at him.

Officer - Who, for the love of Mary and Joseph, is Nakkeeraa?

Translator - மேரி மற்றும் ஜோசப் மேல் உள்ள அன்பினால் கேட்கிறேன், யார் அந்த நக்கீரா?


திருவள்ளுவர் - அது ஒரு பெரிய கதை. வேண்டுமானால் 'திருவிளையாடல்' படம் வாங்கி தருகிறேன், போட்டு பார்த்து கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.


Translator - That is a big story. If you want..

Officer - No, no, no, no....... I don't want a big story. For that matter, I don't want a small story either. (groaning) Just 2 minutes in to the interview and I already have the mother of all headaches. ( at the translator) Please take this man outside and bring "Ambujam" in for the interview. (Looking at திருவள்ளுவர்) I will get back to you Mr. Theruvalvan. Please step outside and take a seat until you are called in again.

---------------------
(இந்த பிரஜையின் பிரயாணம் தொடரும்)

- மீனா சங்கரன்

Sunday, September 18, 2011

தடயம் - மர்மத்தொடர்



தடயம் மர்மத்தொடரின் பன்னிரெண்டாவது அத்தியாயத்தை இங்கே படிக்கலாம்.


முரளி.

Tuesday, September 06, 2011

பஹாமாஸ் விஜயம் - 5



இந்த பதிவுல பஹாமாஸ் பத்தி எழுத அதிகம் இல்லை.  இப்படி ஒரு சொகுசு கப்பல் பயணம் போனா மறக்காம தினமும் இரவு நடக்கர சில பல விஷயங்களை பாருங்க.  நான் போகல, அதுக்கு தாக சாந்தி பழக்கம் இருக்கரவங்க போனா பலன் அதிகம் அதோட கல்யாணம் ஆகாதவங்களுக்கும் விசேஷமோ விசேஷம் அம்புட்டுதேன்.

5ம் நாள் கப்பல்ல இருக்கர இஞ்சின் ரூம் போய் பார்க்க எங்களுக்கு ஒரு சிறப்பு அழைப்பு தந்தாங்க சரின்னு காதுமடலெல்லாம் ஜிவ்வுன்னு ஆகி புளகாங்கிதமடைஞ்சு போனா எங்கள மாதிரி 5 குடும்பம் வந்திருந்தது. 

முதல்ல போனது கண்ட்ரோல் ரூம்.  அதுதான் கப்பலோட தலைமைச் செயலகம்.  அங்க என்ன ஒரு ஒழுங்கு அப்படி ஒரு ஒழுங்கான ரூமை எங்க வீட்டுல ஒரே ஒரு தடவை வீடு வாங்கினப்ப பார்த்தது, வீட்டுக்குள்ள சாமான் செட்டெல்லாம் வந்ததுக்கு பிறகு பார்க்கல.  என் வீட்டு கதை எதுக்கு இப்ப, கப்பல் கதைக்கு வருவோம். 

அந்த ரூமில் 4-5 இஞ்ஜினியர்கள் எப்போதும் இருக்காங்க.  எங்க என்ன கப்பல் வருதுன்னு தெரிஞ்சுக்க ஒரு ராடார் கருவி அதை பார்த்துக்கரதுக்கு ஒரு இஞ்ஜினியர், ஒரு பைனாகுளர் வெச்சுக்கிட்டு ராடாரில் தெரியாத கப்பல்களையும், ராடாரில் தெரியும் கப்பல்களையும் கண்காணிக்க ஒரு இஞ்ஜினியர், கப்பல் கடலில் எங்க இருக்குன்னு ஜி.பி.எஸ் கருவி மற்றும் ராடாரை வெச்சு கவனமா குறிக்கர ஒரு இஞ்ஜினியர், கம்ப்யூட்டரில் குறிக்கப்பட்ட இடத்தை ஒரு பெரிய வரைபடத்தில் குறிக்க இன்னொரு இஞ்ஜினியர். இவங்களை மேற்பார்வை பாக்கர 2 இஞ்ஜினியர்கள்ன்னு ஒரு கூட்டமே இருக்கு.  இவங்களை மாதிரி இன்னும் ரெண்டு குழு இருக்காம் அது எதுக்குன்னா 24 மணி நேரமும் கப்பலை பார்த்து ஓட்டனுமே அதுக்காகத்தான். 

நாமதான் உடனே கேள்வி கேப்பமில்ல, “ராத்திரில எப்படி பைனாகுளர் வெச்சுகிட்டு பாப்பீங்க பக்கத்துல வர கப்பல் தெரியாதே அப்ப என்ன பண்ணுவீங்க?”

“அது ஒன்னும் கஷ்டமில்லை, அந்த கப்பல்கள்ள ஒரு விளக்கு இருக்கும் அதை வெச்சு கண்டு பிடிச்சுடுவோம்.  பெரிய கப்பலா இருந்தா கண்டிப்பா ராடார் இருக்கும், சின்னதா இருந்தா கண்டிப்பா லைட் இருக்கும்”

“லைட் சரியா வேலை செய்யலைன்னா?”

“கவலைப் படாதீங்க.  எல்லா கப்பலும் தரையில் இருக்கர கண்ட்ரோல் டவரோட தொடர்பு வெச்சுகிட்டே இருக்கணும் அவங்க எங்களுக்கு தொடர்ந்து தகவல் தருவாங்க அதை கண்காணிக்க தனியா ஒரு இஞ்ஜினியர் இருக்கார்”

இப்படி பேசிகிட்டே வெளியில ஒரு சின்ன பால்கனி மாதிரி இருந்த இடத்துக்கு கூட்டிகிட்டு போனாங்க.  கப்பல்ல கண்ட்ரோல் ரூமுக்கு ரெண்டு பக்கமும் பால்கனி இருக்கு அதுல ஒரு சின்ன ரிமோட் எஞ்ஜின் கண்ட்ரோல் இருக்கு அது மூலமா கப்பலை இயக்க முடியும்.  அதை கூடுமான வரைக்கும் கப்பலை துறைமுகத்தில ஒழுங்கா பார்க் பண்ண மட்டுமே யூஸ் பண்றாங்க.  இன்னொரு உபரித் தகவல், இந்த மாதிரி சொகுசு கப்பல்கள் நின்ற இடத்திலேயே 360 டிகிரி திரும்பும், அதை துறைமுகத்தில் பார்க் செய்யும் போது ரிவர்ஸில் வந்து பார்க் செய்ய ரொம்ப வசதியாம். 

இதுக்கு பிறகு எஞ்ஜின் ரூம் போய் பார்த்தாதான் தெரியுது ஒரு கப்பலை ஓட்டரது எவ்வளவு கஷ்டம்ன்னு.  ஏறக்குறைய 250 சிப்பந்திகள் கப்பலை ஓட்ட மட்டும் இருக்காங்க, கப்பல்ல 1000 சின்னச் சின்ன எஞ்ஜின்கள் இருக்கு அதுல ஒன்னு பழுதடைஞ்சாலும் உடனே ஒரு ஹார்ன் சப்தம் இவங்களுக்கு எஞ்ஜின் ரூமில் கேட்கிறது, உடனே அதைச் சரி செய்ய ஒரு குழு தயாராக ஓடுகிறது. ஆனால் யாரும் எதுக்கு அலுத்துக் கொள்ள வில்லை.  சிரித்தபடி இருக்கிறார்கள்.  எப்புடி!

இனி சில டிப்ஸ்:

நாங்க போனது ராயல் கரீபியன் கப்பல், என்னை மாதிரி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கின சாப்பாட்டு ராமன்களுக்கு இந்தக் கப்பல்ல அதிக பட்சமா ஊத்தப்பம், கிச்சடி, ரவா உப்புமா, சாம்பார், சப்பாத்தி, சப்ஜி கிடைக்கும்,  இதுக்கு பதிலா கார்னிவல் கப்பல்ல போனா சரவணபவன் ரேஞ்ஜில் சாப்பாடு கிடைக்குமாம்.  மத்தபடி வேறு என்ன வித்யாசம்ன்னு எனக்குத் தெரியலை. 

டிக்கெட்டை காஸ்ட்கோ வழியா வாங்கினோம்.  அதனால டிக்கெட் விலையில 10 பர்செண்ட் நமக்கு க்ரெடிட் கொடுதாங்க அதனால ஒரு 300$ கிட்ட நமக்குக் கிடைச்சுது.  அதை வெச்சு 10-15 ஃபோட்டோ வாங்க முடியும், 30 டி-சர்ட் வாங்க முடியும், நல்லா தாக சாந்தி பண்ண முடியும். 

பஹாமாஸ் - நஸாவு ல இருக்கர அட்லாண்டிஸ்ஸில் 4 பேருக்கு ஒரு நாள் எண்ட்ரிக்கு காசு ஏறக்குறைய 720$ ஆகும் அதை தவிர்க்க ஒரு ஐடியா எங்க வீட்டம்மா கண்டு பிடிச்சாங்க அதுனால ஒரு 410$ மிச்சபிடிச்சாங்க.  விஷயம் இவ்வளவுதான்.  நஸாவுல Comfort Suites Paradise Island ஹோட்டல்ல ஒரு நாள் தங்க சார்ஜ் வரியோட 310$ ஆகுது, அதுக்கு அவங்க அட்லாண்டிஸ் சுத்தி பாக்க 4 ஒரு நாள் பாஸ் தராங்க அதனால எங்களுக்கு 410$ மிச்சம். 

கப்பல்ல லாப்டாப் கொண்டு போறது வேஸ்ட், wifi கிடையாது, கடலுக்கு நடுவில செல்ஃப்போன் சிக்னல் இல்லாம சும்மாதான் இருக்கும் அதனால அதை ஆஃப் பண்ணி வெச்சா பாட்டரி சார்ஜ் குறையாம கரைக்கு வந்ததும் உபயோகமா இருக்கும். 

கப்பல் பயணத்தை நல்லா என்ஜாய் பண்ணுங்க, கடல்ல போகும் போது நமக்கு ஒரு விஷயம் புரியும், இயற்கைக்கு முன்னாடி நாமெல்லாம் வெறும் தூசுன்னு.

 முந்தைய பதிவுகள்:






-முரளி இராமச்சந்திரன்.