Tuesday, March 01, 2011

பஹாமாஸ் விஜயம் - 1

“எங்கள் பஹாமாஸ் விஜயம் (பாமா விஜயம் இல்லைங்க, தமிழ் ரொம்ப நுணுக்கமான மொழி அதனால நல்லா பார்த்து படிங்க) முதலில் பஹாமாஸுக்கு என்று ஆரம்பிக்கவில்லை. சும்மா ஒரு ரவுண்டு க்ரூய்ஸ் அதாங்க சொகுசு கப்பல்ல போய்ட்டு வரலாம்னு ஆரம்பிச்சது.”

“கோடிவீட்டு கோமளா மாமி போயிட்டு வந்துட்டாஹ, பக்கத்து தெரு பரிமளா மாமி போயிட்டு வந்துட்டாஹ, எனக்கும் அவங்க மாதிரி நாலு எடம் போய் பார்க்கனும்னு ஆசை இருக்காதா, எல்லாம் என் தலையெளுத்து, என்னை நல்லா ஆசை ஆசையா வளர்த்து இப்படி ஒரு களிமண் பொம்மைகிட்ட மாட்டி விட்டுட்டாங்களே” ன்னு உங்க வீட்டுல சொல்ற மாதிரி என் வீட்டிலயும் சொன்னாங்கன்னு நீங்க நினைச்சா “சாரி அப்படி எந்த பிட்டும் போடாம, என் நண்பன் போன வருஷம் இப்படி ஒரு ப்ரயாணம் போயிட்டு வந்து எப்படி இருந்ததுன்னு சொன்னதும் எனக்கே அப்படி ஒரு ப்ரயாணம் போயிட்டு வரணும்னு தீ பிடித்துக் கொண்டது.”

ரிச்மண்ட்டில் சிலரிடம் பேசியபோது “அதுவா, அது ஒன்னும் காசு அதிகமான விஷயம் இல்லை, ஒரு 800$ல் எல்லோரும் போயிட்டு வந்துடலாம், சும்மா சூப்பரா இருக்கும்” என்று அவர்கள் பங்கிற்கு கொஞ்சம் விசிறிவிட்டார்கள். தீ கணன்று கணன்று எரிந்து, எந்த க்ரூய்ஸ் நல்லது, எதில் என்ன கிடைக்கிறது, நம் ப்ளானுக்கு எந்த க்ரூய்ஸ் ஒத்து வரும், என்றெல்லாம் பார்த்து பிறகு ஒன்றை முடிவு பண்ணினோம். அதுவரை இது கொஞ்சம் விலை அதிகமான ஒரு சமாச்சாரம் என்பது டிக்கெட் விலையை பார்க்கும் வரை உறைக்கவில்லை. பார்த்ததும் திடீர்ன்னு ஒரு பக்கெட் பச்சை தண்ணியை தலைமேல ஊத்தினா மாதிரி ஆயிடுச்சு. இதுக்குள்ள என் பெண்கள் ரெண்டு பேரும் அவங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லோருக்கும் இப்படி க்ரூயிஸ் போகப் போவதாக சொல்லிட்டதாக சொல்லவும், சரி நாமதான் முன் வெச்ச காலை பின் வெக்க மாட்டோமேன்னு எங்களை சமாதானம் செய்து கொண்டுடோம் (வேற வழி). அதிலேயும் பால்கனி இருக்கனும், ரெண்டு கிங் பெட் இருக்கனும், அது இருக்கனும், இது இருக்கனும்னு வீட்டில எல்லோரும் பலப் பல கண்டிஷன்ஸ் போட்டு அதெல்லாம் இருக்கரமாதிரி ஒரு நல்ல சுப மூஹூர்த்த தினத்தில் டிக்கெட் புக் பண்ணினோம்.

என்னய்யா ஒரு ப்ரயாணத்திற்கு டிக்கெட் வாங்கிட்டு இப்படி அலுத்துகரான் இவன்னு சீப்பா நினைக்காதீங்க. டிக்கெட் வாங்கினதும்தான் தெரிஞ்சது பஹாமாஸ்ல சுத்தரதுக்கு தோதா நல்ல அரைநிஜார் இல்லை, அது இல்லை இது இல்லைன்னு சொல்லி ஒரு டப்பா சினிமால தனுஷ் பாடின மாதிரி ‘துண்ட காணோம் துணிய காணோம், தூங்கும் போது துட்ட காணோம்”ங்கர கதையா செலவுமேல செலவு செய்து ஒரு வழியா ப்ரயாணத்துக்கு தயாரானோம். இதர செலவுகளை கணக்கு பண்ணினா, ஆனை அரை காசு, அங்குசம் ஆறு காசுங்கர கதையானது ஒரு தனிப் பதிவே போடக்கூடிய சமாச்சாரம்.

நல்ல வேலையா இங்கிருந்து ஃப்ளோரிடாவில் கேப் கானவரல்ங்கர இடத்துக்கு எங்களோட வேனிலேயே போகலாம்னு முடிவு செய்தோம். இந்த இடத்தில இருந்துதான் அமெரிக்க விண்வெளி ராக்கெட்கள் செலுத்தப் படுகிறது. இவர்களுக்கும் நமக்கும் (இந்தியாவிற்கும்) என்ன வித்தியாசம்ன்னா இவங்க விண்வெளி ராக்கெட்கள் எப்போதாவது வெடிக்கிறது, நம்மூரில் எப்போதாவது வெடிக்காமல் விண்வெளிக்கு போகிறது. இதிலிருந்து தெரியும் உண்மை, இந்தியாவில்தான் நல்ல வெடிக்கும் ராக்கெட்டுகள் இருக்கிறது, பின்ன என்னங்க எத்தனை வருஷமா நாம தீபாவளிக்கு வெடிக்கர ராக்கெட், பூவாண ராக்கெட்ன்னு விட்டுகிட்டு இருக்கோம். இவ்ளோ செலவு பண்ணி ஒரு ராக்கெட் வெடிக்காம சும்மா மேல போனா, பாக்கரவன்லாம் என்ன கேணையங்களா.

எல்லா ஏற்பாடுகளும் செய்யரதுக்கு முன்னாடி, என் மனைவியும் குழந்தைகளும் ஒரு கவுண்ட் டவுன் காலெண்டர் தயாரித்து தினம் ஒரு நாளை அடித்து அடித்து அவங்க பங்கிற்கு எதிர்பார்ப்பை அதிகப் படுத்திக் கொண்டே வந்தார்கள். இதுக்கு நடுவில நானும் கோபால் பல்பொடி விக்கரவன் மாதிரி வாரா வாரம் ஊர் ஊரா போய் வாரக் கடைசியில் வீட்டிற்கு வந்ததும் முதலில் அந்த காலெண்டரைப் பார்த்து இன்னும் எத்தனை நாள் இருக்கு என்று என் பங்கிற்கு கொஞ்சம் ப்ரெஷர் ஏத்தி விட்டேன்.

இதற்கு நடுவில் நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேலை ஒரு வாரம் முன்னாடியே முடிந்துவிட என்னை ப்ரயாணம் போக இருந்த வாரம் தலைநகரத்தில் வேலை செய்ய சொல்லி அனுப்பிவிட்டார்கள். வேலை ஒன்னும் பெரிசில்லை பிடிங்கின ஆணிகள் சரியா வந்து சேர்ந்ததா, ஆணி கணக்கு சரியா இருக்கா, சேதாரம் எவ்வளவு, செய்கூலி எவ்வளவுன்னு கணக்கு போட்டு கணக்கு போட்டு எல்லாம் சரியா இருக்கா, இல்லைன்னா என்ன ஆச்சுன்னு கதை விட்டு காதுல பூசுத்தர வேலை. காலைல 8:30க்கு ஆஃபீஸ் உள்ள போனா ஹோட்டலுக்கு திரும்பி போக இரவு 10-10:30 ஆகிடும். இதுக்கு நடுவில அந்த வாரம் பனி மழை பொழியப் போகுதுன்னு சொல்லப்பட வீட்டுல எல்லாரும் கவலைப்பட ஆரம்பித்தார்கள் - அது என்ன எதுக்கெடுத்தாலும் எல்லாரும் சொல்றாங்க, சொன்னாங்க ன்னு எல்லாரும் சொல்றாப்பல நீயும் எல்லாரும்னு சொல்ல வரேன்னு நீங்களும் சொல்லாதீங்க, அப்புறம் யார் அந்த எல்லாரும்னு, எல்லாரும் கேக்கர மாதிரி நானும் கேட்பேன். மேல என்ன எழுதினேன்னு எனக்கே புரியலை உங்களுக்கும் புரியலைன்னா கவலைப் படாதீங்க. அடுத்து படிங்க.

என்ன சொல்லிகிட்டு இருந்தேன், வீட்டுல கவலைப் பட ஆரம்பிச்சாங்கன்னுதானே, கரெக்ட், ஆனா அவங்க கவலைப் பட்டது நான் எப்படி தலைநகரத்தில இருந்து கொட்டர பனில வீடுவருவேன்னு இல்லை, எப்படி ப்ரச்சனை இல்லாம கப்பல்ல போகப் போறோம்ன்னு. என்ன, எல்லா வீட்டிலயும் இதே கதைதானா. சரி சரி அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம். ஒருவழியா ஒரு 8 மணிநேரம் ப்ரயாணம் செய்து தலைநகரத்தில இருந்து ஃப்ளோரிடா போக இருந்த தினத்திற்கு முன் தினம் வீடு வந்து சேர்ந்தேன். மட மட வென்று எல்லா ஏற்பாடுகளும் செய்து மறுதினம் மதியம் கிளம்பி மேளதாளங்கள் எதுவும் இல்லாமல், நான் எப்போது ஊருக்கு போனாலும் வீடு வரை வந்து கண்டிப்பாக இவன் ஊருக்கு போகிறானா, குறைந்த பட்சம் 10 நாளாவது இவன் தொல்லை இல்லாமல் இருக்கலாமா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் என் ‘ஆத்மார்த்த’ நண்பர்களும் வழியனுப்பாமல் ஃப்ளோரிடா நோக்கி எங்களது ரதத்தை செலுத்தினோம்.

மறுதினம் மதியம் சொகுசு கப்பல் கிளம்பர போர்ட்டுக்கு பக்கத்திலேயே ஒரு நல்ல தங்கும் இடம் போய் சேர்ந்தோம்.

பக்கத்தில் இருந்த பீச்சில் காலார நடக்கும் போது ஒரு ஸ்டிங் ரே கிடக்க, அதை தொட்டால் ‘கதை கந்தலாயிடும்’ என்று மனைவியும் குழந்தைகளும் பயப்பட, அதி பயங்கர தைரியசாலியான நான் அவர்களுக்காக என் தைரியத்தை மறைத்துக் கொண்டு ஒரு புகைப் படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். ஒரு சின்ன நடுக்கம் கூட இல்லாமல் எப்படி துல்லியமாக படமெடுத்திருக்கிறேன், என்னை பார்த்து பயம் பயந்து ஓடிடும்.
இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட்டமாக இருந்து விட்டு மூன்றாம் நாள் மதியம் மேலே இருக்கும் கப்பலுக்கு போய் சேர்ந்தோம்.

மீதி அடுத்த பதிவில்.

முரளி இராமச்சந்திரன்.

3 comments:

  1. கொஞ்சம் டைட்டில் சாங், கொஞ்சம் விளம்பரங்கள்லாம் சேத்துட்டிங்கன்னா அப்படியே மெகா சீரியல் ரேஞ்சுக்கு போயிடலாம். :-)

    அவ்ளாம் பெரிய பில்ட்- அப் குடுத்து இன்னும் கப்பல்லயே கால வைக்கல...

    அப்படியே அந்த பில்ல பாத்து நீங்க ஒரு அழுவாச்சி பண்ற மாதிரி ஒரு ஆங்கிள் குடுத்தா அப்படியே ஒரு மெகா சீரியல் ஜோதில கலந்துடலாம்.

    யாரும் இந்திய சாப்பாடு பத்தி விசாரிச்சி புக் பண்ணி வெச்சுக்கோங்கன்னு அட்வைஸ் பண்ணலயா?

    ReplyDelete
  2. :) ம்... அப்புறம்?

    ReplyDelete
  3. நாகு,
    என்ன சும்மா அலுத்துக்கரீங்க. பதிவு எழுதினாலும் தப்பு, எழுதாட்டியும் தப்பு. சும்மா நானும் ஜம்பமா சொல்லிட்டேன் மாசா மாசம் ஒரு பதிவாவது போடரேன்னு, சரக்குக்கு நான் என்ன மு.கோ வா இல்லை மீனா வீரப்பனா. அதான் இருக்கர சரக்கை இஸ்த்து இஸ்த்து ஒரு நாள் கப்பல் சவாரிக்கு ஒரு பதிவுன்னு 4 பதிவா போட்டிடலாம்ன்னு ஒரு கணக்கு.
    முரளி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!