Thursday, December 07, 2023

பாக்கியம்



முதல் முறையாக ஒரு குழந்தைகள் காப்பக வளாகத்தில். பல வருடங்களாக அன்னதானம் செய்தாலும், இதுவே நேரில் முதன்முறை. உள்ளே சென்ற சிறிது நேரத்தில் என் கண்ணீர் அணை உடைந்து, ஆறு பெருக்கெடுத்தது.

வெளியில் ஓடி வந்து வளாகத்தின் திண்ணையில் அமர்ந்தேன், எனக்கு கடவுள் அளித்திருந்த செளபாக்கியங்களுக்காக நன்றி சொல்லி கண்ணீரா? இல்லை, அங்கிருந்த பிள்ளைகளுக்கு கடவுள் இன்னும் செளபாக்கியங்கள் அளிக்க வணங்கி கண்ணீரா?

தெரியவில்லை, ஒன்றுமே ஓடவில்லை. என் மேல்சட்டை இப்போது முழுவதுமாக நனைந்திருந்தது. சன்னல் வழியாக அந்த சிறு பிள்ளைகள் என்னை இனம் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குடும்பத்தோடு சென்றிருந்தோம். என் பாட்டி, பாக்கியம் என் அருகில் வந்தாள், கரங்களை மெதுவாக பற்றினாள், அவள் தோளில் என் தலையை சாய்த்தாள், மென்மையாக நெற்றியை வருடினாள், முதன்முறை அல்லவா, சரியாகி விடும் என்றாள்.

என்னை வெளிப்படுத்த, ஒரு வார்த்தை பேசவில்லை, ஆனால் அந்த புரிதல் எனக்கு வலுவை தந்தது. என் பாட்டி, பாக்கியம் தவிர யாருக்கும் சூழ்நிலை முழுவதுமாக புரியவில்லை. அவளை அணைத்து முத்தமிட்டு, என்னை ஒருங்கிணைத்துக் கொண்டு மீண்டும் உள்ளே சென்றேன், பிள்ளைகளோடு விளையாடி, உண்டு பொழுது கழிந்தது.

அந்த தருணத்திலிருந்து வாழ்க்கையை நான் பார்க்கும் விதம் மாறியே போனது. அன்பு பாராட்ட உறவும், அடிப்படை தேவைகளும், அதை அலங்கரிக்க ஆடம்பரச் சலுகைகளையும் பெரும் பொருட்டாக மதிக்காமல் இருக்கிறோம் என்ற உணர்வும் என்னுடைய கண்ணீருக்கும் காரணமாக இருக்குமெனப் புலப்பட, கண்ணோட்டம் மாறியது.

கடவுளுக்கு நன்றி தெரிவித்து, கண்களை மூடி மெல்ல உறங்க, கனவில் பாக்கியங்கள் மட்டுமே. குழந்தைகள் காப்பகத்தில் இருந்த பிள்ளைகள் அனைவரும் செளபாக்கியங்களில் தழைப்பதாகக் கனவு முடிந்தது. கனவை நனவாக்க நானும் முடிவு செய்தேன்.

அன்புடன்
சுனிதா