வாசன் ஐ கேர்
இது இப்போது ஒரு பெரிய நிருவனமாக வியாபிக்க ஆரம்பித்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர் செய்வதிலிருந்து பலப் பல வழிகளில் முன்னேற ஆரம்பித்திருக்கிறது. எனது தாயாரின் கண் பார்வையை பரிசொதிக்க வழக்கமாக செல்லும் மருத்துவரை விடுத்து இவர்களை போய் பார்க்கலாம் என்று முடிவெடுத்து குரோம்பேட்டையிலேயே இருக்கும் இவர்களது கிளைக்கு போயிருந்தேன். சற்று நச நசவென்று மழை பெய்து கொண்டிருந்தது. ஆட்டோவிலிருந்து இறங்கி உள்ளே நுழைய எத்தனிக்கையில், ஒருவர்
“சார் செருப்பை வாசலிலேயே விட்டுட்டு உள்ளே வாங்க” என்றார்
“ஏன்”
“ரூல்ஸ் சார்”
“நீங்க ஷு போட்டிருக்கீங்களே”
“எங்களுக்கு அலொவுட் சார்”
வேண்டா வெருப்பாக செருப்பை கழட்டி விட்டு உள்ளே நுழைந்தால், ஹொட்டல் ரிசப்ஷன் போல இருக்கும் கவுண்டரில் இருந்த நாலு பெண்மணிகளில் ஒருவர் “முதல் தடவையா வரீங்களா”
“ஆமா”
“இந்த படிவத்தை நிரப்பி ரூ.100 கொடுங்க”
“எதுக்கு, செக்கப் ப்ரீன்னு போட்டு இருக்கீங்க”
“அது இந்த கிளையில இல்லைங்க”
“ஹூம்.”
“சார்”
“என்னப்பா”
“காபியா, டீயா என்ன வேணும்”
“சூடா ஒரு ப்ளேட் பக்கோடாவும், மசால டீ”யும் சொல்லாம் என்று நினைத்த போது இது மருத்துவமனை என்ற நினைவு வந்தது.
இந்த இத்யாதிகள் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம், மருந்து விற்பனையாளர் (அதாங்க மெடிகல் ரெப்ரசென்டேடிவ்) ஷூ எல்லாம் சகதியாக உள்ளே வர எனக்கு தலையில் கொம்பு முளைத்தது.
“ஏங்க நான் செருப்பை கழட்டி விட்டு வரனும்னு சொன்னீங்க இப்போ உள்ளே சகதியோட ஒருத்தர் போறாரே அது பரவாயில்லையா?” என்று கேட்கலாம் என்று நினைக்கையில் எங்களை வரச்சொன்னார்கள்.
நாங்கள் இருந்தது தரை மட்டத்தில். எங்களை வரச்சொன்னது முதல் மாடிக்கு, மிந்தூக்கி (எலிவேட்டர்) இல்லாமல் படிகளும் செங்குத்தாக இருந்தது. 5 நிமிட மெதுவான படியேற்றத்திற்கு பிறகு முதல் மாடிக்கு வந்தால், அங்கே ஒரு 40 சேர் போட்டு டீவியில் இந்தியா இலங்கை ஒரு நாள் மேட்ச் காட்டிக் கொண்டிருந்தார்கள். உட்கார்ந்த 5 நிமிடத்தில் சுவரோரமாக ஒரே மாதிரி சேலை உடுத்திக் கொண்டு நின்றிருந்த 20-30 பெண்மணிகளில் ஒருவர் எங்களை அழைத்து ஒரு அறைக்குள் அனுப்பினார் அங்கு 10 நிமிடம் சில பரிசோதனைகள், பிறகு மீண்டும் 10-15 நிமிடம் காத்திருப்பு, வேறு ஒரு அறையில் 15 நிமிடம் பரிசோதனை, கண்களில் மருந்து, பிறகு 30-50 நிமிடம் காத்திருப்பு, நடு நடுவே ஒரு காபி, பிறகு ஒரு டீ, பிறகு 5 நிமிடம் ஒரு மருத்துவரின் தரிசனம், மீண்டும் 20 நிமிடம் காத்திருப்பு, பிறகு இன்னொரு மருத்துவரின் 3-4 நிமிட தரிசனம், பிறகு கவுன்சிலிங் (இது எதுக்கு?).
“சார் உங்க அம்மாவுக்கு கண்ல காடராக்ட் ஆபரேஷன் செய்யனும், அதை நீங்க இங்க தைரியமா செய்துக்கலாம். நாங்க தினம் ஒரு 30-40 காடராக்ட் ஆபரேஷன் செய்யறோம். ஏறக்குறைய ஒரு 35 ஆயிரம் செலவாகும் அவ்வளவுதான், என்னிக்கு பண்ணிக்கரீங்கன்னு சொல்லுங்க நான் உங்களுக்கு தியேட்டர் புக் பண்ணிடறேன்” என்று என்னவோ புதுசா ரிலீசான படத்துக்கு டிக்கெட் புக் பண்றது மாதிரி சொன்னார்கள்.
வாசனில் எனக்கு புரியாத பல விஷயங்கள்:
1. சிப்பந்திகள் அனைவரும் ஒரே மாதிரி சீருடை போட்டுக் கொண்டு சரவணா ஸ்டோர்ஸில் அலுமினிய/பித்தளை பாத்திரம் எடுத்துக் கொடுப்பவர்கள் போல இருக்கிறார்கள்
2. ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வரவில்லை (வடிவேலு போல சுட்டதுக்கு அப்பரம் எப்படியா ஆங்கிலம் வரும் என்று கடிக்காதீர்கள்) ஆனால், அவர்கள் நவீன உபகரணங்கள் வைத்து கண்களை பரிசோதித்து ஒரு முடிவு எடுக்கிறார்கள், எத்தனைப் பேர் கண்களை நோண்டப் போகிறார்களோ.
3. மருத்துவர் அறைக்குள் சிப்பந்திகள் சர்வ சாதாரணமாக நுழைகிறார்கள், நோயாளி இருக்கிறார் என்ற ப்ரக்ஞயே இல்லை. நோயாளி இல்லை என்றால் 4-5 சிப்பந்திகளாக (பெண்களும் அடக்கம்), சுதந்திரமாக மருத்துவர் அறையில் சிரித்து சிரித்து விளையாடியபடி இருக்கிறார்கள்.
4. சிப்பந்திகள் நோயாளிகளின் நிலையை அவர்களிடம் மற்ற நோயாளிகள் காத்திருக்கும் இடத்திலேயே உரத்த குரலில் விவாதிக்கிறார்கள், இதில் நோயாளிகளின் பணவசதியும் அடக்கம்.
5. எல்லா சிப்பந்திகளும், பார்க்கின்ற எந்த சின்ன குழந்தையையும் முதலில் அவர்கள் கன்னத்தைக் கிள்ளிவிட்டுத்தான் பெயர் கேட்கிறார்கள். இது வாசனில் மட்டும் இல்லை எந்த கடைக்கு போனாலும் இதே நிலைதான்.
6. இங்கும் கூட்டம் அலை மோதுகிறது. எப்படி என்பதுதான் தெரியவில்லை.
தொடரும்