Showing posts with label யூத்ஃபுல் விகடன். Show all posts
Showing posts with label யூத்ஃபுல் விகடன். Show all posts

Friday, August 28, 2009

அடை மழை !


Photo Credit: fineartamerica.com

நமக்கெல்லாம் மிக்ஸர் படி அளக்கும் மீனா அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி, பலத்த வேலைப் பளுவிற்கு இடையிலும் (நாம சொல்லிக்காம வேற யாரு சொல்லறதாம் :)), இந்த அரைபக்கக் கதை.

-----

கருமுகில் போர்த்திய அடர்த்தியில் கனன்று கொண்டிருந்த வானம் சற்றைக்கெல்லாம் வெண் மழை தூவ ஆரம்பித்திருந்தது.

இழுத்துப் போர்த்திய கம்பளியுள், கால்கள் சுறுக்கி, கைகள் பிணைத்து கருப்பைக் குழந்தையாய் இருக்க முடியாமல், இன்றும் வேலைக்குப் போவது மாதிரி ஆன‌தே என வருந்தினாள் நந்தினி.

பஸ் ஸ்டாப்பிலிருந்து வீட்டுக்குப் பத்துப் பதினைந்து நிமிடம் நடக்க வேண்டும். பாராசூட்டையும் விட சிறிதான குடை கொண்ட பஸ்டாப்பில், அண்டிய ஆட்டுக் குட்டிகளாய் அப்பிய ஜனத்திரளுடன் சில நிமிடங்கள் ஒண்டி நின்றாள். மழை நின்றபின் வீட்டுக்குப் போய், முதல் வேலையாய் இழுத்துப் போர்த்திப் படுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். அடைம‌ழையாய் விடாது பெய்த‌து ம‌ழை.

வழக்கம் போல இன்றும் குடை எடுத்துவர மறந்திருந்தாள். அரை மணி நேரத்தில் பொறுமை இழந்து, சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். சொட்டுச் சொட்டாய் விழுந்த மழை நீர், தலை முடியின் வழி பல கிளைகள் கொண்ட நீர்வீழ்ச்சிகளாய் கொட்டியது.

நேற்றும் இதனால் தான் அம்மாவுடன் சண்டை. "மழை நாளா இருக்கு. ரெண்டு நாள் லீவ‌ப் போட்டு வீட்டுல‌ இரேண்டி. அப்ப‌டி என்ன‌ ஆபிஸ‌க் க‌ட்டி அழுக‌றே ! பாக்குறது என்னவோ தையல் வேலை தான‌" என்று த‌வித்தார். "பெரிய குடை எடுத்துப் போகத் தான் கூச்சமா இருக்கு. ஹேன்பேக்கில் ஒரு சின்னக் குடையாவ‌து வ‌ச்சிக்க‌ வேண்டாமா ?" என்றும் திட்டினார். அத்தோடு அம்மாவுட‌ன் பேச்சை நிறுத்தி இப்போ, இருபத்தி மூணு ம‌ணி, ப‌தினைந்து நிமிட‌ம், (வாட்ச்சைப் பார்த்துக் கொண்டாள்) ஏழு நொடிக‌ள் ஆகியிருந்த‌து.

ச‌ர் ச‌ர்ரென்று க‌ட‌ந்து செல்லும் வாக‌ன‌ங்க‌ள். சாலைக் க‌ழிவோடு இர‌ண்ட‌ற‌க் க‌லந்திருந்தது ம‌ழை நீர். ச‌க‌தியாய் போன தெருக்கள் ஸ்கேட்டிங்க் போர்ட் இல்லாமலேயே வழுக்கியது. வெள்ளிக் கம்பியாய் மின்னல் கீற்றுக்கள் வேறு நடைக்குத் தடையாய் இருந்தது. 'இன்னும் கொஞ்சம் நேரம் பஸ்ஸாட்ப்பிலேயே நின்றிருக்கலாமோ ?' என‌ யோசித்தாள். 'நின்றிருந்தால் நின்று கொண்டே தான் இருப்போம். ந‌ல்ல‌ வேளை. இதோ இன்னும் சில‌ நிமிட‌ங்க‌ளில் வீட்டை அடைந்து விட‌லாம் !' என்று அடிமேல் அடிவைத்து ந‌ட‌ந்தாள்.

தொப்ப‌லாய் ந‌னைந்து வீட்டுப் ப‌டியேறி, காலிங் பெல்லை அடித்துக் காத்திருந்தாள். அம்மா வ‌ந்து திற‌ப்பதற்கான‌ அறிகுறி எதுவும் தென்ப‌ட‌வில்லை. 'இன்னும் அம்மாவுக்குக் கோப‌ம் த‌னிய‌ல‌ போல‌ !' என‌ நினைத்து, ஹேன்பேக்கில் முன் பக்கம், கையை விட்டுத் த‌ன்னிட‌ம் இருக்கும் சாவியைத் தேடினாள். அக‌ப்ப‌ட‌வில்லை, 'சாவியையும் ம‌றந்து விட்டோமா ? என்ன‌திது சோத‌னை' என்று சுவ‌ற்றில் சாய்ந்தாள். ஏதோ நினைவில் மீண்டும் ஹேன்ட்பேக்கின் மைய‌ப் ப‌குதிக்குள் கையை விட‌, ரிமோட் க‌ண்ட்ரோல் போல எட்டிப் பார்த்தது, தன் குழந்தையின் குணம் அறிந்து அவளது ஹேன்ட்பேக்கில் அம்மா நேற்றிரவே போட்டு வைத்த‌ அந்த அழகிய‌ குட்டிக் குடை !

ஆகஸ்ட் 31, யூத்ஃபுல் விகடனில்