அறிவிப்பு - இது வழக்கம் போலான நகைச்சுவை பதிவு அல்ல. மனிதத்தோல் போர்த்திய சில மிருகங்களின் அரக்கத்தனத்தில் மனமொடிந்து நான் எழுதிய பதிவு தான் இது. ஆரோக்யமான இருதயம் இருந்தால் மட்டுமே இதை படிக்கவும்.
-------------------------------
அரக்கத்தனமும் அசுரத்தனமும் உலகத்தில் தலைவிரித்து ஆடும் போது கடவுள் அவதாரம் எடுத்து உலகத்தை காப்பார் என்பது நம் புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்தி சொல்கிற ஒரு விஷயம். இன்டர்நெட் வலைப்பூ மூலமாக இத்தனை நாட்களாக இனிமையான விஷயங்களை மட்டுமே பொழுது போக்குக்காக படித்து கொண்டிருந்த எனக்கு நேற்று ஒரு பலமான சாட்டை அடி. மனிதாபிமானம், மனித நேயம் - இதெல்லாம் வெறும் பைத்தியக்கார கனவுகளோ என்று எண்ண வைக்கும் அதிபயங்கரமான அசுரத்தனம் ஒன்றை நேற்று வலைப்பூ மூலம் முதல் தடவையாக பார்த்து தெரிந்து கொண்ட எனக்குள் ஏதோ உறைந்து போன மாதிரியான உணர்வு.
பாசமான உறவுகள், இனிமையான நண்பர்கள் மற்றும் அருமையான சமூக தோழமைகள் - இது தான் நான் சாதாரணமாக வாழும் ஒரு dettol போட்டு அலம்பிய உலகம். நான் பார்க்க உதித்து, அஸ்தமிக்கும் அதே சூரியனின் கீழ் மனிதத்தோல் போர்த்திய பல அசுரர்கள் நடமாடுவது நம்ப விரும்பாமல் நான் இத்தனை நாட்கள் மறுத்திருந்த ஒரு உண்மை. ஆனால் இன்று கண்கட்டவிழ்ந்து ஒரு முட்டாளின் சொர்கத்திலிருந்து வெளியே வந்து விட்ட நான் அதிகம் உணர்வது சீற்றமா, துக்கமா, அருவருப்பா, வெறுமையா? எனக்கு சொல்ல தெரியவில்லை.
பெண்களுக்கு சுதந்திரமும், கல்வியும், வேலை வாய்ப்புக்களும் பெருகி இருக்கும் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் பல இடங்களில் இன்னும் பல இளம் பெண்கள் செக்ஸ் அடிமைகளாக விற்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு பின்பு தூக்கி எறியப்படுகிறார்கள் என்ற செய்தியை ஜீரணிக்க முடியாமல் கஷ்டப்படுவது முட்டாள்தனமென்றால் ஆமாம், நான் முட்டாள் ராஜ்யத்தின் மகாராணி தான். அதிலும் மூன்று, நாலு, ஐந்து வயது பச்சிளம் குழந்தைகளை அவர்களோட தாய் தந்தை மற்றும் உறவினர்களே சிகப்பு விளக்கு பகுதிகளில் ஒரு சில நூறு ரூபாய் தாட்களுக்காக விற்று விடுவதை கேட்டு இதயக்கூடு காலியாகி ஸ்தம்பித்து நிற்பது பைத்தியக்காரத்தனமென்றால் ஆமாம் நான் சட்டையை கிழித்து கொண்டு அலையாத ஒரு பைத்தியக்காரி தான்.
மூக்கில் சளி வந்தால் தானாக துடைக்க தெரியாத மூன்று வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தார் ரோட்டில் தடுக்கி விழுந்தால் சராய்த்து ரத்தம் வரும் கால் முட்டியை பார்த்து பயத்தில் வீறிடும் நாலு வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தன் பெயரையே முழுசாக இன்னும் எழுத தெரியாத ஒரு பச்சிளம் ஐந்து வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? குண்டு திராட்சை கண்களால் பீதியுடன் ஏறிட்டு பார்க்கும் குழந்தையை பலாத்காரம் பண்ணக் கூட ஒரு மனிதனுக்கு மனம் வருமா? சிவன் தலையில் ஊற்றெடுத்து பொங்கி ஓடும் கங்கை நதியில் சாக்கடை நீரை கொட்டக் கூட ஒரு மனிதனால் முடியுமா?
ஒரு மனிதன் அல்ல, பல மனிதர்களால் முடியும் என்பதை நேற்று பார்த்த செய்தியில் தெரிந்து கொண்டேன். ஒரு மூன்று வயது பெண் குழந்தையை gang rape செய்து, குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கி ரயில் தண்டவாளத்தில் குப்பை போல தூக்கி விட்டெறிந்து விட்டு போன மனிதர்கள் எந்த நரகத்திலிருந்து தப்பி வந்த அசுரர்கள்? இவர்கள் வாழும் இந்த பூமியில் இன்னும் மழை எப்படி பெய்கிறது? சுனாமி இவர்களை எல்லாம் இழுத்து கடலில் மூழ்கடிக்காமல் ஏன் இன்னும் விட்டு வைத்தது? அந்த குழந்தையை பெற்று விற்ற தாய் தந்தை ஏன் இன்னும் பஸ்பமாகவில்லை? ஆஸ்பத்ரியில் உயிருக்கு அந்த குழந்தை போராடும் போது பச்சிளம் குழந்தைகளிடம் தங்கள் ஆண்மையை காண்பிக்கும் இந்த அராஜகர்களேல்லாம் எப்படி உயிரோடு நடமாடலாம்? இந்த அவலைப் பெண்கள் சுவாசிக்கும் அதே காற்றை இந்த அரக்கர்களும் எப்படி சுவாசிக்கலாம்?
என் கேள்விகளுக்கு பதில் எங்கே? நம் புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் சொல்படி பார்த்தால் இந்த அசுரர்களை அழிக்க கடவுள் அவதாரம் எடுத்து வந்திருக்க வேண்டும். அவர் எங்கே? ஒ மறந்து விட்டேன். அரசன் அன்று கொல்லுவான் ஆனால் தெய்வம் நின்று தான் கொல்லுமோ? என்னால் முடியாது. எனக்கு அந்த பக்குவமும் இல்லை, பொறுமையும் இல்லை. இதோ என் கற்பனை உலகத்தில் நான் இன்றே வழங்கும் தீர்ப்புகள்.
நான் - சித்ரகுப்தா, விலகிக்கொள். இன்று ஒரு நாள் உன் லெட்ஜர் மற்றும் நாற்காலி என் கையில்.
சித்ரகுப்தன் - அப்பாடி! ஒரு நாள் எனன, ஒரு மாசம் வேணும்னாலும் நீயே இந்த வேலையை பாரு. (ஓட்டமாய் ஓடுகிறார்)
சித்ரகுப்தன் நாற்காலியில் நான் - யமதர்மா, இன்று பூமியில் ஒரு சில மனிதர்களின் அராஜகம் அதிகமாகி விட்டது. நீங்களே பயந்து எருமையில் ஏறி ஓட்டம்பிடிக்கும் அளவு அசுரத்தனம் எல்லாம் அங்கு நடக்கிறது. அவர்கள் முன் சூரபத்மனும், நரகாசுரனும் கமர்கட் திருடிய சிறு பிள்ளைகளாக தோன்றுகிறார்கள்.
யமதர்மன் - உனது பரிவுரை எனன மீனா?
நான் - பெண்களையும், சிறு குழந்தைகளையும் சொல்லொணா கொடுமை செய்யும் மானிடப் பதர்கள் அனைவருக்கும் இந்த நரகம் பற்றாது. புதுசாக ஒன்று நிர்மாணிக்க ஏற்பாடு செய்யுங்கள். எண்ணைக் கொப்பரைக்கு பதில் அங்கு கொதிக்கும் எண்ணைக் கடல் ஒன்றை நிறுவுங்கள். இந்தப் பாவிகளை அந்த கரையோரம் நிறுத்தி, கொதிக்கும் எண்ணை அலை அலையாய் பொங்கி அடித்து அதில் அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெந்து, புண்பட்டு, கதறி சாக வேண்டும். பெண்களையும், குழந்தைகளையும் அசுரத்தனமாய் தீண்டிய அவர்கள் கைகளை வெட்டி விட்டு பின்பு தான் எண்ணை கடல் கரையோரம் நிற்க வைக்க வேண்டும்.
யமதர்மன் - செய்து விடுகிறேன் மீனா. வேறெதாவது கோரிக்கை உண்டா?
நான் - இன்னும் ஒன்றே ஒன்று மன்னா. இவர்களிடம் கொடுமைப்பட்ட அனைவரின் மனத்திலும் அந்த கொடூரமான நினைவுகளை அகற்றி அவர்கள் மகிழ்ச்சியோடு மற்ற நாட்களை பூமியில் கழிக்க நீங்கள் அருள வேண்டும்.
யமதர்மன் - இல்லை. அது எனக்கு அப்பாற்பட்டது மீனா. நினைவுகளை அகற்றி மகிழ்ச்சியோடு வாழ்வது அவரவர் கையில் தான் இருக்கிறது. உனது பரிவுரைகளை உடனே அமுலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன். இனி, நீ போய் சித்ரகுப்தனை சபைக்கு அனுப்பு.
நான் - அப்படியே ஆகட்டும் காலனே. (வெளியேறுகிறேன்)
-மீனா சங்கரன்