Monday, April 30, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 12

அடையாளத் திருட்டு:

நமது வங்கி கணக்கின் பெயர், மற்றும் பாஸ்வேர்டுகளை திருடி அதன்மூலமாக நம் வங்கிகணக்கிலிருந்து பணத்தைத் திருடுதல்.

இன்னும் சிலர் ஒருவருடைய அடையாளங்களைத் தெரிந்துக் கொண்டு வங்கிக் கடன் அட்டைக்கு முயல்வர் . சில காலம் நல்ல முறையாக பரிவர்த்தனைகள் செய்து கடன் எல்லையை அதிகரித்து காலம் ஒத்துழைக்கையில் பெரும் தொகையை கணக்கில் ஏற்றி விட்டு காணாமல் போய்விடுவர் .

இந்தியாவில் இவை அதிகம் பிரபலம் இல்லை. ஏனென்றால் நாம் கணிணி மூலமாக பணப் பரிவர்த்தனைகள் அதிகம் செய்வதில்லை.

பாதுகாப்பு வழிமுறைகள்:(வெளிநாடுகளில் உள்ளவரையும் கணக்கில் எடுக்கப்பட்டது.)


நமது ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் விபரம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் சோசியல் செக்யூரிட்டி எண்(இருப்பின்) பாதுகாப்பாக வைக்கவும். இவற்றில் சிலவற்றைக் கொண்டு நம்மைப் போல் இன்னொருவர் கணக்கு துவங்க இயலும் .

இவற்றினை உரிய நபர்களிடம் மட்டும் தேவைப்படும் பொழுதுக் காட்டவும் .

இந்த விபரங்கள் அடங்கிய மின்னஞ்சல் மற்றும் பைல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை அழிக்கும் பொழுது இலவச ஸ்ரெட்டர் புரோகிராம் ஏதேனும் கொண்டு அழிக்கவும் .

கூடுமானவரை ஒன்று அல்லது இரண்டு கடன் அட்டைகளை வைத்திருத்தல் நலம் . அப்பொழுதுதான் அவ்வப் பொழுது அவற்றினைச் சரிபார்க்க இயலும்.

மின்னஞ்சல் மூலமாக கடன் அட்டை விபரங்களை யாருக்கும் தெரிவிக்காதீர்கள் .

இது பற்றி மேலும் விபரங்களுக்கு. http://www.idtheftcenter.org

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Friday, April 27, 2007

தமிழ் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு இசைவிழா!

ரிச்மண்ட் தமிழ் சங்கம் இந்த தமிழ் புத்தாண்டை ஒரு இசைவிழாவாக கொண்டாடுகிறது. சிறுவர், சிறுமியர் தீந்தமிழில் பாரதியார் பாடல்களையும் மற்ற சில பாடல்களையும் பாடவிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மூத்தோர்களின் திரையிசையும் அரங்கேறவிருக்கிறது.

மற்ற விவரங்கள் இங்கே தமிழில். In English here.

இரண்டு பாடல்கள் சிறிது கேட்க வேண்டுமா? இதோ...

Wednesday, April 25, 2007

திருவாசகம்

"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்". இது நம்மில் பலருக்கும் தெரிந்த வாசகம்.

அதை சிம்பொனி இசையோடு மிக அற்புதமாய் வெளியிட்டார் இளையராஜா என்பதும் எல்லோருக்கும் தெரியும். நான்கு வருட உழைப்பு. 250 இசைக் கலைஞர்களைக் கொண்டு 2 வாரங்களில் முடித்த இசைப் பதிவு.

எல்லோருக்கும் தெரிஞ்சதையே சொல்லிகிட்டிருந்தா எப்படி-னு கேக்கறீங்களா ? சரி விசயத்துக்கு வரேன் ...

சமீபத்தில இசைத் திருவாசகத்தைப் பற்றி பணியிடத்தில், சக அமெரிக்கர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் பேச ஆரம்பிச்சது, அந்த CD-ல English Translation-ம் இருக்கு-னு. அவருக்கு கொஞ்சம் இசை பற்றி தெரியும். Bass-u, Treble-u னு நம்மல ட்ரபிள் பன்ன ஆரம்பிச்சிட்டாரு. நாம தான் ஞானசூனியமாச்சே. இந்தா புடிங்க-னு ராஜாவோட CD-ய கொடுத்து அப்போதைக்குத் தப்பிச்சிக்கிட்டேன்.

அவர் அதை கொஞ்ச நாட்கள் வரை கேக்கவே இல்லை. கேக்கலைனாலும் பரவாயில்லை, CD-ய திருப்பிக் கொடுங்க-னு சொல்ற நெலைமை. திடீர்னு ஒரு நாள் headphone மாட்டி கேக்க ஆரம்பிச்சார். சற்று நேரத்தில், நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை என்றார். அவருக்கு எங்கே தெரியும் நம்ம ராஜாவைப் பத்தி. அத பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு அமெரிக்கர், எங்கே உங்க headphone கொடுங்க-னு வாங்கிக் கேக்க ஆரம்பிச்சார்.

கொஞ்ச நேரத்தில, கண்மூடி, விரல் சொடுக்கி, தோள்களை அசைத்து ... நாம சொல்றோமே 'மெய்மறந்து', அந்த நிலைக்கு ரெண்டே நொடியில போய்ட்டாரு.

அவர் கேட்கின்ற முதல் இந்திய இசை என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லத் தேவையில்லை தமிழும் தெரியாது.

"Awesome, நான் இத இன்னிக்கு வீட்டுக்கு எடுத்திட்டு போறேன். நாளைக்குத் திருப்பித் தர்ரேனே" என்றார் கெஞ்சலாக.

"ஏன்னா என் கணவர் ஒரு பள்ளியில் இசை ஆசிரியர். கண்டிப்பா இந்த இசை அவருக்கு புடிக்கும் அதான்" என்றார். சரி என்றேன்.

மறுநாள் வழக்கம் போல வேலைக்கு வந்த போது, CD எனது தட்டச்சுப் பலகையின் அருகில் இருந்தது. என்னைக் கண்டவுடன் அருகில் வந்தார் அந்த அம்மையார். "நான் சொன்ன மாதிரியே என் கணவர் மிகவும் ரசிச்சார். சில கேள்விகள் கேக்கலாமா" என்றார்.

மீண்டும், இசை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றேன் அப்பாவியாக. இல்லை பொதுவான கேள்விகள் தான் என்று ஆரம்பித்தார்.

"பல நாடுகளின் ஏராளமான இசைகளை என் கணவர் கேட்டிருக்கார். முக்கியமானவற்றை சேகரித்தும் வைக்கிறார். அப்படி ஐநூறுக்கும் மேல் CD-க்கள் சேகரித்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு இசையை இது வரை அவர் கேட்டதேயில்லை. அவரு கேட்ட கேள்விகளைத் தான் நான் உங்கிட்ட கேக்கறேன்" என்றார். அவரின் கேள்விகள் "இந்த CDயின் composer யாரு, notes-லாம் எழுதினது யாரு, notes கெடைக்குமா ?". இசை பற்றி கேக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இசை பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார்.

இளையராஜாவைப் பற்றி ஒரு intro கொடுத்தும், அவர் அசந்து போன அழகைச் சொல்ல வார்த்தையில்லை. இதைத் தவிர "no kidding, he was a street musician ?!!!!"

என்ன தான் பல முறை (மெய்மறந்து) கேட்டிருந்தாலும் இவரு சொன்னதுக்கப்புறம், 'பொல்லா வினையேன் நின் பெருஞ்சீர்' என்ற இரண்டாவது track-ல, மடை திறந்த வெள்ளமென கசியற வயலின்களோட இசை, அப்பப்பா ... தேகமெல்லாம் அப்படி ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது உண்மை.

கேட்டுக் கொண்டிருக்கும் போதே மற்றொருவர் வந்து, "if you don't mind, I borrow the CD" என்று, சுழன்று கொண்டிருந்த CD-யை எடுத்துச் சென்றுவிட்டார்.

ராஜா சார் நீங்க அமெரிக்காவுலயும் திருவாசகம் CD வெளியிடறதா ரொம்ப நாள் முன்னாடி செய்தி படிச்சேன். அப்படிப் பன்னலையா ?

என்னோட CD சுத்திக்கிட்டே இருக்கு. எப்போ என் கைக்கு வருமோ ? இக்கட்டுரையின் முதல் வாக்கியத்தை இங்கே நினைத்தால் பயமாக இருக்கிறது. அதுவும் இசை கலந்த திருவாசகம்.

-----

பிழை இருப்பின் வழக்கம் போலத் தெரியப்படுத்தவும். உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டம் இடுங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா.

Tuesday, April 24, 2007

அன்பு

வறண்ட நிலத்தின் மேல்
வான் பொழியும் பூச்சொரியல்
கனத்த மனதிற்கு
மருந்திடும் மென் மயிலிறகு
துன்பத்தின் சாயலையும்
துரத்தி விடும் தேவதை
இன்பத்தை வரவழைத்து
இதம் தரும் இன்னிசை
சுட்டெரிக்கும் வெயிலினிலே
சுகந் தரும் ஆலமரம்
அலைக்கழியும் மனதிற்கு
அமைதி தரும் நந்தவனம்

அன்பு –
அது ஒரு அதிசயம்
அன்பு ஒரு அக்ஷய பாத்திரம்
எடுக்க எடுக்க நிறையும்
கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!

--கவிநயா

Sunday, April 22, 2007

பனி

வாராயோ என்றிருந்து வந்துவிட்டாய் நாள்கடந்து
பாராயோ என்னும்படி பாந்தமுடன் -- சீராக
இரவிலே புல்தரைப் போர்வையா யெங்கும்
பரவி விழுந்தாய் பனி

வெண் தொப்பி வாகனங்கள் விரையும்
வெண் தண்டவாளத் தார்ச்சாலை -- கண்படும்
வெண் பஞ்சுப் புல்தரை உச்சிமர
வெண் கிளைகளாய்ப் பனி

துள்ளி யோடுஞ் சிறார் கைநிறைய
அள்ளி யெடுத் தெறிய -- முள்ளைத்
தள்ளி விரையும் மாந்தர்மேல் விழும்
புள்ளி புள்ளியாய்ப் பனி

குஷியாகக் குழந்தைகளும் களமிறங்கிக் கவனமாய்
வீசியடித்த வெண் குவியல் -- பேசியே
பூசிமுடித்த பனிமனிதன் சூரியன் வரவாலே
கசிந்தோடிக் கரைந்த பனி

மீண்டும் எப்போது வருவாயோ சற்று
நீண்ட நாட்கள் உறைவாயோ -- என்றேங்கியே
உன்வரவு காணக் கண்விழித்துக் காத்திருப்பது
சின்னஞ் சிறாரின் பணி

-----

வெண்பா எழுதும் ஆசை என்னையும் தொற்றிக்கொண்டது, அதன் விளைவாய் எழுதியது, சற்று காலதாமதாய் வெளியிடுகிறேன். நிறையோ, குறையோ உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா

மனசு

வானம் போல விரிஞ்சிருக்கும்
வண்டு போலச் சுத்தி வரும்
கானங் கேட்டுக் கனிஞ்சிருக்கும்
கனவுக் குள்ள கத படிக்கும்

வெள் ளந்திப் புள்ள போல
சொல்லுக் கேக்க வாடிப் போகும்
மறுகி உருகி மாஞ்சு போகும்
மாத்துத் தேடி ஏங்கிப் போகும்

அன்பக் கண்டா அசந்து போகும்
ஆவல் மீற ஆட்டம் போடும்
காட்டு மல்லிப் பூவப் போல
காடும் மேடும் வாசம் வீசும்

--கவிநயா

'அன்புடன்' குழுமம் - கவிதைப் போட்டி - தேதி நீட்டிப்பு

வணக்கம் நண்பர்களே.கவிதைப் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்த அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.


காட்சிக்கவிதைக்கு மட்டும் ஏப்ரல் 30, 2007 நள்ளிரவு 12 மணி வரை கால அவகாசம் தர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிலரின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க, இதற்கான தொழில்நுட்பக் காரணத்தால் இதற்கு மட்டும் அவகாசம் அளிக்கப்படுகிறது.எனவே காட்சிக்கவிதைக்கும் நீங்கள் 4 படைப்புகள் வரை அனுப்பலாம்.

இந்தப் பிரிவிலும் பங்கேற்க இது ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி காட்சிக்கவிதை படைக்க ஊக்கப்படுத்தவும். கவிதைப் போட்டி அறிவிப்பை இங்கே காணலாம்:
http://priyan4u.blogspot.com/2007/03/2.html
http://groups.google.com/group/anbudan/web

Saturday, April 21, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 10

காலம் கலிகாலம்
நீதித்துறை எல்லை தாண்டக் கூடாது
நாடாளுமன்றம், அரசின் நிர்வாக செயல்பாடுகளில் நீதிமன்றங்கள் குறுக்கிடக் கூடாது. தனது எல்லையிலிருந்து நீதித்துறை விலகக் கூடாது என ஒருவர் எச்சரித்துள்ளார். டெல்லியில், மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அவர் - அரசியல் சட்டத்தின் முக்கியத் தூண்களாக நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை உள்ளன. இதில் ஒரு அமைப்பு இன்னொன்றின் செயல்பாடுகளில் தலையிடுவது சரியாக இருக்காது. ஒவ்வொரு அமைப்புக்கும் சில எல்லைகள் உள்ளன, கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றிலிருந்து மீறி நடக்க யாரும் முயற்சிக்கக் கூடாது. குறிப்பாக நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் குறுக்கிட நீதித்துறை முயலக் கூடாது. நீதித்துறை தனது எல்லையைத் தாண்டி போகக் கூடாது. அரசியல் சட்டத்தை மதித்து அதை நிறைவேற்ற வேண்டிய முக்கியக் கடமை நீதித்துறைக்கு உள்ளது. மூன்று அமைப்புகளும் தங்களது எல்லையை மீறி நடந்து கொண்டால் அது மக்களுக்கு விரோதமானதாக மாறி விடும். ஒன்றுக்கொன்று நல்லிணக்கத்துடன், தங்களது அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
இப்படி சொன்னது தமிழ்நாட்டில் நீதிபதிகளை மிரட்டும் மாநில அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ, அவருடைய கருத்தை ஆதரிக்கும் தமிழக முதல்வரோ இல்லை. இப்படி பேசியிருப்பது இந்தியாவில் அதிகம் படிததவர், இந்திய வங்கிகளுக்கெல்லாம் தாயகமான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரும், இந்தியாவின் தற்போதைய பிரதமருமான டாக்டர். மன்மோகன் சிங்.'
இது நம்ம ஆளு' என்ற பாக்யராஜின் படத்தில் சங்கீதம் நன்கு தெரிந்த!!! ஷோபனாவிற்கும், அது சிகப்பா கருப்பா என்றுகூடத் தெரியாத பாக்யராஜுக்கும் நடக்கும் போட்டியில் பாக்யராஜ் வெற்றி பெற்றவுடன், போட்டியின் தலைவர் (ஷோபனாவின் தாத்தா) சொல்லும் ஒரு வசனம்:
'பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் எனறு சொல்வார்கள், இங்கு நாரோடு சேர்ந்த பூவும் நாறிவிட்டது' என்று. பிரதமர் இப்படி பேசியதை சூர்ய தொலைக்காடசியில் பார்த்தவுடன், அதுதான் ஞாபகத்திற்கு வந்தது.
இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதே மேடையில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் தலையிட நீதித்துறைக்கு அதிகாரம் உண்டு என்று வலியுறுத்திப் பேசி, நீதித்துறைக்கு சுந்திரமாக செயல்படும் அதிகாரம் உள்ளது. அதேபோல நாடாளுமன்றம், சட்டமன்றங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்யும் அதிகாரமும் நீதித்துறைக்கு உண்டு. நீதித்துறை எடுக்கும் சில நடவடிக்கைகள், நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. இது இயற்கையானது என்று சரியான பதிலடி தந்துள்ளார், ஆனால், மன்மோகன் சிங் போன்றவர்களே இப்படி பேச ஆரம்பித்திருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
எளியோரை வலியோர் வாட்டப் போகின்றனர்
இதை எப்படி இந்திய குடி மக்களாகிய நாம் தாங்கிக் கொள்ளப் போகிறோம்? இதை தவிர்க்க இந்திய அரசு ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை. நம் நாடு இன்று இருக்கும் நிலையில் இது தேவையா? இதனால் ஏற்பட இருக்கும் விளைவுகளை நம் நாடு தாங்குமா?
திருவள்ளுவர் நட்பியல் - பகைமாட்சியில் இப்படி பாடுகிறார்.
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
மெலியோரை விடுத்து வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும். இப்படி சொன்ன வள்ளுவர் வலியறிதல் அதிகாரத்தில் இப்படி பாடுகிறார்.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
அதாவது, செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாரருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபடவேண்டும். தோல்வி நிச்சயம், இழப்பு நிச்சயம் என்று கண்கூடாக தெரிந்த பிறகு இப்படி ஒரு பெரிய தற்கொலைக்கு இந்திய அரசு எப்படி ஒப்புக் கொண்டது? இதன் காரணமாக நம் நாட்டு வெட்டி ஆபீசர்களுக்கு அடுத்த வேலை வந்து விட்டது. மாரியம்மன் கோயில் தீ மிதிக்க வேண்டும், மண் சோறு சாப்பிட வேண்டும், அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும், அப்புறம் நாம் தோற்று விட்டால், தோற்ற வீரர்கள்(?) வீட்டை இடிக்க மண் வெட்டி, கடப்பாறை வாங்க வேண்டும், எவ்வளவு பணச்செலவு, கால விரயம்.
அட போங்கப்பா இவன் இப்படி ஒரு விஷயமும் சொல்லாம ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்கரானேன்னு திட்டரதுக்கு முன்னாடி சொல்லிடறேன். இந்திய கிரிகெட் அணி நம்மை விட பலம் வாய்ந்த, தென் ஆப்ரிக்காவையே தோற்கடித்த வங்கதேச அணியுடன் 3 ஒரு நாள் ஆட்டங்களும், 2 - 5 நாட்கள் ஆட்டங்களும் ஆட அடுத்த மாதம் அவர்கள் நாட்டிற்கு போகிறார்கள். அதைப் பற்றிதான் கவலைப் பட்டு எழுதி விட்டேன். தயவு செய்து கோபிக்காமல் எல்லோரும் உங்கள் வீட்டில், நீங்கள் வணங்கும் சாமிக்கு ஒரு ரூபாய் (அ) டாலர் முடிந்து வைக்கவும். எந்த சாமி அருள் தரும் என்று தெரியாததால், எந்த சாமியையும் விட்டுடாதீங்க.
இந்த வள்ளுவரை நினைத்தால் ரொம்ப கோபம் கோபமா வருது, நட்பியல் - பகைமாட்சியில் இப்படியும் பாடியுள்ளார்.
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
போர்முறை கற்றறியாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.
இது இந்திய அணிக்குன்னு அவர் பாடினதா நீங்க நெனச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை. அது சரி, நாம அதெல்லாம் எங்க படிக்கப் போறோம், அப்படி படிச்சாலும், அதை சீரியசா எடுத்துக்க போறோமான்னு நீங்க கேக்கரது காதுல விழுது, என்ன, இன்னும் ஒரு 10-15 தலைமுறைக்கு இந்தியா, பெர்மூடாவை உலகக் கோப்பை 2007-ல பின்னி, பெடலெடுத்து, பிரிச்சு மேஞ்சதையே சொல்லிட்டிருப்போமில்ல.
கடைசீயா இந்திய நன் மக்களுக்கு ஒரு சின்ன அறிவுரை, கடப்பாறை நல்லதா வாங்குங்க, டோனி வீடு நல்லா ஸ்ட்ராங்கா இருக்காம், அவரு இந்தத் தொடர்ல எல்லா நாளும் விளையாடப் போறாராம்.
-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்

Thursday, April 19, 2007

போராட்டம்

உன்னை மாதிரி அனைவரும் நினைத்தால்
உலகம் அன்றே அழிந்திருக்கும்

விருப்போ வெறுப்போ இவ் வுலகில்
சேர்ந்திருக்கத் தவறி விட்டாய்

உன்னைத் தாழ்த்திக் கொண்ட தனால்
தன்னந் தனியனாகி நின்றாய்

உன்னைத் தாழ்வாய் நினைத் ததாலே
உதிர்த்தாய் முப்பதிர்க்கு மேலுயிரை

தனிமை கொண்டது உன் குற்றம்
வஞ்சகம் வளர்த்ததும் உன்குற்றம்

வஞ்சகம் வளர்த்துக் கொண்டவனே பிறர்
நெஞ்சம் குமுறுவதைக் கேட்ப்பாயா ?

பள்ளியில் உன்னை ஒதுக்கினால் பயந்து (?!)
பதுங்கி வளர்ந்ததும் உன்குற்றம்

வாழ்வின் முதல் விதி போராட்டமே
வாழத் தவறிய சிறியவனே

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
எங்கள் கவிஞன் பாடியது

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
என்றும் அவன்வரி சொல்லியது

பார்த்ததில்லையா சோமாலியா போன்ற நாடுகளை
பசிக்கும் நீருக்கும் அலைவதை

அங்கும் சிரிப்பு இருக்கிறது மேலும்
அவர்கள் வாழ்வும் நிலைக்கிறது

போராட்டமே வாழ்வன்று அதன் விளைவாய்
நிச்சயம் கிடைக்கும் வாழ்வொன்று

எவரது வாழ்வும் போரட்டமே பின்பு
எஞ்சி நிலைப்பது ஆனந்தமே

போராடி வெல்பவன் மனிதனடா அதையன்றி
ஏங்கிக் கொள்பவன் கோழையடா.

Wednesday, April 18, 2007

வெர்ஜீனியா டெக் சம்பவத்தில் உயிரிழந்தோருக்காக பிரார்த்தனைகள்

வெர்ஜீனியா டெக் சம்பவத்தில் உயிரிழந்தோருக்காக.....அவர்தம் ஆத்மா சாந்தியடையவும், அவர் குடும்பத்தோர் இந்தத் துயரத்தை எதிர்கொள்ளத் தேவையான மனதைரியத்தை இறைவன் அவர்களுக்கு அளிக்கவும்...


கண்களிலே கனவுகளுடன்
கல்லூரியில் கால்வைத்தாய்
ஏதோஓர் கொடுமைக்கு
எதனாலோ பலியானாய்

உயிர்விலகும் நேரத்தில்
உன்மனதின் நினைவெதுவோ
உன்வாழ்வின் லட்சியங்கள்
(உன்)உயிருடனே புதைந்தனவோ

அன்பூற்றி உனைவளர்த்த
அன்னை என்செய்வாளோ
அரவணைத்துப் போற்றிய
உன்தந்தை என்செய்வானோ

தருமங்கள் நியாயங்கள்
புரியாத மாயங்கள்
ஏதேதோ கேள்விகள்
விடைதெரியா வினோதங்கள்

மிதமிஞ்சிய அன்பாலே
இறைவன் உன்னைச்
சேர்த்துக் கொண்டான்
என்றே நம்பிடுவோம்
நம்பித் தொழுதிடுவோம்


பிரார்த்தனைகளுடன்...
கவிநயா.

Tuesday, April 17, 2007

வெறி

நன்னண்பர் கூட்டம்வேண்டும்
நாலுபேரைத் தெரியவேண்டும்

நயம்பட விவாதிக்க
நல்லவார்த்தை பேசவேண்டும்

ஏதுமின்றித் திரிந்ததாலே
ஏந்தினாயோ துப்பாக்கி

பட்டுப் பட்டென்று
சுட்டு வீழ்த்தினாய்

ஆம்புலன்ஸ் சத்தத்தையும்
அலறல்கள் மீறியதே

பயிலும் உலகையே
பீதியில் ஆழ்த்தினாய்

உள்ளிருக்கும் எல்லோரையும்
மரணபயம் தொற்றியதே

மடிந்தாய் ஒருவழியாய்
மறுபடியும் வராதே

வந்தாலும்,

நன்னண்பர் கூட்டம்வளர்
நாலுபேரைத் தெரிந்துகொள்

நயம்பட விவாதிக்க
நல்லவார்த்தை கற்றுக்கொள்

ஏதுமின்றித் திரியாததால்
ஏந்தவேண்டாம் துப்பாக்கி ...

Monday, April 16, 2007

குறிஞ்சிப்பூ

மாலை மணி 6.30 இருக்கும், அமைதியான ரிச்மண்ட் க்லென்ன் அலென் சாலையில் இருந்த "லேக் வியு" வட்டாரத்தில் ஒரு கருப்பு காம்ரி வந்து நின்றது.

கடும் மழையில் நனைந்தபடி தெருமுனையில் இருந்த 10 ஆம் நம்பர் வீட்டை அவசரமாய் நெருங்கி கதவை தட்டியது ஒரு உருவம். கதவைத் திறந்து, மின்னல் வெளிச்சத்தில் அந்த உருவத்தை பார்த்த மலர்விழி, "ரவி நீயா??" என்று திடுக்கிட்டாள்.


12 வருடங்களுக்கு முன்பு.........


யமஹா பைக் ஒன்று மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்து நின்றது.
வண்டியை சைடு ஸ்டான்ட் போட்டு நிப்பாட்டிய ரவி, "என்ன மச்சான் ரவுசு விட ரெடியா?" என்றபடி தன்னுடைய கலைந்த தலைமுடியை சீவினான்.

"என்ன மச்சான் இன்னிக்கும் லேட்டா? அந்த நாரை மண்டையன் உள்ள விடாம அசிங்கப்படுத்த போறான்டா", என்று கொக்கரித்தான் சுரேஷ்.

"விடு மாமு. நம்ம மச்சான் ரவிய பாத்தா, இந்த காலேஜே கிடுகிடுக்கும். இந்த எலெக்ட்ரானிக்ஸ் ப்ரொபசர் எம்மாத்தரம்; ஏன் சும்மா டென்சன் ஆவுர, கூல் மச்சி..." என்று சொல்லியபடி முதுகில் இருந்த நோட்டை ஸ்டெயிலாக உருவினான் கார்த்திக்.

தடதட வென்று சத்தம் கேட்டதை அடுத்து வாசலை பார்த்தார் ப்ரொபசர் ரங்கனாத்

"ஏன் லேட்?" என்று நெத்தியை சுருக்கியபடி கரகரப்பான குரலில் கேட்டார்.

அதற்கு ரவி, "உங்க பெண்ண ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு வர கொஞ்சம் டயம் ஆச்சு, இப்ப என்னான்றீங்க?" என்று நக்கலாக பதில் சொன்னான்.

மொத்த வகுப்பும் சிரிப்பலையில் மூழ்கியது. ஆனால் முதல் பெஞ்சில் இருந்த மலர் கடும் கோபத்தில் முணுமுணுத்தாள்.

இதைப் பார்த்த ரவி, "என்ன மலர் உன்ன பிக்கப் பண்ணலன்னு கோவமா? விடு ஈவனிங் நானே உங்க வீட்ல ட்ராப் பண்றேன், இப்போ சந்தோஷம் தானே?" என்று சொல்லி சிரித்தான்.

"செருப்பு பிஞ்சிடும் பொறுக்கி ராஸ்கல்", என்று கூறிய படி முகத்தை திருப்பிக் கொண்டாள் மலர்.

"அதுக்கென்ன புதுசா ஒண்ணு வாங்கிட்டா போச்சு", என்று கண்ணடித்தான் ரவி.
எரிச்சலோடு ப்ரொபசர் ரங்கனாத்,"சரி சரி உள்ள வாங்கப்பா எடஞ்சல் பண்ணாம, இனிமேலாச்சும் நேரத்துக்கு வாங்க, திஸ் இஸ் த லாஸ்ட் வார்னிங்", என்று எழுதிக் கொண்டிருந்த கணக்கை முடித்தார்.

உடனே சுரேஷ் கார்த்திக்கிடம், "இவரு சீக்கிரமா வந்துட்டு நமக்கு வார்னிங் குடுக்கறாரு, மச்சான் இது எத்தனாவது லாஸ்ட் வார்னிங்னு" கேட்க,

அதற்கு கார்த்திக் "100 ஆச்சு மச்சான், ஈவனிங் பார்ட்டி வச்சர வேண்டியதுதான்", என்று சொல்ல, மொத்த வகுப்பும் மீண்டும் சிரிப்பலையில் மூழ்கியது.

இன்று ரிச்மண்டில்.....


"இந்த அட்ரெஸ்ல பேஸ்மண்ட் வாடகைக்குனு சுலேகால பாத்தேன். அதான் பாக்கலாம்னு வந்தேன்", என்ற ரவி, "சாரி, இது சரிவரும்னு தோனல", என்று சொல்லியபடி தன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

தயக்கத்தோடு "உள்ள வரலாமே", என்று குழப்பமான முகத்தோடு கூப்பிட்டாள் மலர்.

மஞ்சள் விளக்கில் மின்னியது ஹார்ட்வுட் தரை. மிகவும் கவனத்தோடு அமைக்கப்பட்டிருந்த லிவிங் ரூமில் ஒய்யாரமாக மூலையில் இருந்த லெதர் சோபாவைக் காட்டி, "உக்காருங்க. குடிக்க எனிதிங் ஹாட் ஆர் கோல்ட்" என்று கேட்டாள் மலர்.

"காபி கெடைக்குமா", என்று கூறிய படி வீட்டை அவன் கண்கள் நோட்டம் விட்டன.

"கண்டிப்பா", என்று சொல்லியபடி உள்ளே சென்ற மலரின் மனதில் பல கேள்விகள் எழுந்தன.


தொடரும்.............

Saturday, April 14, 2007

பித்தனின் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சர்வஜித் வருடத்தில் எல்லோரும் எல்லா நலங்களும் பெற்று இனிது வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

பித்தன்.

Friday, April 13, 2007

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

பத்து ஆண்டுகளுக்கு முன்

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் பினாத்திக் கொண்டு புரண்டு படுத்த சங்கர் அதிர்ந்து எழுந்தான். மிக முக்கிய காரணம், இன்று அவன் வேலைக்குச் செல்லும் முதல் நாள்.

டேய் இந்டெர்வியூ கெடைக்கறதே கஷ்டம். அதும் கெடச்சு, ரெண்டு மூனு round தாண்டி வேலையும் கெடச்சிருச்சு, இன்னும் என்னடா பெனாத்தல். பேசாம படு, ஒரு ஏழரை மணிக்கா எழுந்திருக்கலாம். ஹிஸ்ஸித்தான் ஜீவா.

(a+b)2, இது எந்த விதத்தில் நமக்கு வாழ்க்கையில் உதவும் ? பள்ளி நாட்களில் அம்மாவிடம் பல முறை சங்கர் கேட்ட கேள்வி. அம்மாவின் ஆச்சரியம் குறையுமுன், நமக்கெதற்கு அதெல்லாம். நமக்குத் தேவை ராங்க். அட்டை to அட்டை படிக்கனும்டா. நிறைய முறை அப்பா சொன்ன வாக்கியம்.

சங்கரின் கணக்குகள் பாலாராய் பெருகி, மன்னிக்கவும், இந்த ஆறும் இப்ப பிரச்சினையில் இருக்கோ ! சிறு நதியாய் ஓடியது. வேலை எந்த மாதிரி இருக்கும். அங்கே இருப்பவர்கள் எப்படி நம்மை நடத்துவார்கள் ?

ஏதோ ஜாலியா போய்க்கொண்டிருந்த வாழ்க்கை கல்லூரி முடிந்தவுடன் பாலைவனம் போலானது. அடுத்தது என்ன ? என்ற கேள்வி பூதாகரமாய் உருவெடுத்தது. ஆரக்கல், விஸுவல் பேசிக், சி++ எல்லாம் படித்தான், அட்டை to அட்டை. பல வேதனைகள், சோதனைகள் கடந்தது. கல்லூரி நாட்களில் பரீட்சைக்குப் படித்ததை விட அதிகம் படித்து, முட்டி, மோதி, கிடைத்தது இந்த வேலை.


தற்போது - April 2007

விடியுமுன்பே எழுந்த சங்கர், குழந்தைகளின் விலகிய போர்வைகளை சரி செய்து, லேசாக தலை கோதுகையில், என்னங்க அவசரம், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்களேன் என்றாள் சுமதி.

வார இறுதியில் ... Spring break க்கு எங்கேப்பா கூட்டிட்டுப் போறே என்றான் ஆறு வயது அபிஷேக். சுமதியின் கொஞ்ச்சலில், சரிம்மா, சரிம்மா என்றது தான் கேட்டது. தங்கை அனுக்ஷாவுடன் backyard-ல் விளையாட ஓடிவிட்டான்.

(a+b)2, இங்கு வந்த போது ஒரு முறை ஜீவா சன்னமாய்ச் சொன்னது ஞாபகம் வந்தது. அது ஒன்னுமில்லேடா சங்கரு, andhra 2 + babu 2 + whole andhra டா babu, குறிப்பா சொல்லனும்னா இந்த testing துறை.

இந்த testing என்ன பாடு படுத்துகிறது. ஆந்திரப் பெண்மணிகள், மனைவிமணிகள் அதிகமாயினும், பொதுவாக இந்தியப் பெண்மணிகள் ஐந்தாண்டு அனுபவம் பெறுவது ஐந்தே நாட்களில்.

ஆந்திராவில் இதுக்கும் கூட Certificate அடிச்சுக் கொடுக்கறாங்களாம்டா, வியந்தான் ஜீவா செல்பேசியில்.

ஜீவா, எப்போடா Richmond வர்ரே ?

நீ எப்போ Denver வர்ரேனு சொல்லு ? மறந்திட்டேன் பாரு, "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்டா'.

o.k. ஜீவா, உனக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். வீட்டில கேட்டதாச் சொல்.

அலுவலகத்தில், சங்கர், நீங்க சொன்ன மாதிரியே உங்க Code (a+b)2 test செஞ்சா, andhra 2 + babu 2 + whole andhra டி baby னு வருது. Great ! testing is passed. Code Release க்கு அனுப்பலாம் என்றார் மூன்றே மாதத்தில் மாறிய பதினோறாம் tester.

Wednesday, April 11, 2007

முந்தானை முடிச்சு

தலைப்பைப்பார்த்துவிட்டு என்னவோ ஏதோவென்று எதிர்பார்த்து வந்தவர்களுக்கு என் அனுதாபங்கள். இது பாக்கியராஜ் படத்தின் விமர்சனமும் அல்ல.

பெண்கள் முந்தானையில் சாவி முடிவதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். முந்தானையில் புருஷனை முடிந்து வைத்திருக்கும் பெண்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் முந்தானையில் 'பார்முலாக்களை' முடிந்து வைத்து மாட்டிய ஒரு மாணவிப்பெண்மணியைப்பற்றி இன்று படித்தேன்.

பீகாரில், பாட்னாவில் கணித பட்டப்படிப்புத்தேர்வு மையத்தில் நடந்த விஷயம் இது. காப்பியடிப்பது அதிகமானதால், அந்தத்தேர்வு மையத்தை கண்காணிக்க அதிகாரிகள் படை சூழ சென்றுள்ளனர். அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒரு மாணவியின் செய்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை உன்னிப்பாக கண்காணித்தனர். அடிக்கடி புடவையால் முகத்தை துடைப்பதும், மூக்கைத்துடைப்பதுமாக இருந்த அம்மாணவி அருகில் சென்று நைஸாக கண்காணித்தபோது அவர் தந்திரம் வெட்டவெளிச்சம் ஆனது. மாணவியின் புடவை ஓரங்களில் பல கட்டங்கள் புடவை டிஸைன் போல வரையப்பட்டிருந்தன. கட்டங்களுக்குள் கணித பார்முலாக்கள் வண்ணங்களில் எழுதப்பட்டிருந்தன. இதைக்கண்ட அதிகாரிகளுக்கு 'பகீர்' என்றது. அவரை மேலும் சோதித்ததில் அவர் புடவை ஓரங்கள் மட்டுமல்லாமல் புடவை மடிப்புகளிலும் பலவித 'பார்முலாக்கள்' வரையப்பட்டிருந்தது தெரிந்தது. பிறகென்ன? மாணவியை தேர்வு எழுத விடாமல் விசாரணைக்கு அழைத்துச்சென்றுவிட்டனர்.

இது போல் 'நூதன பிட்' அடித்தல் வியக்கத்தக்கது. இம்மாதிரி பிட் அடிப்பதைத்தடுக்க பீகார் அரசாங்கம்/இந்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால் நம் லாலுஜியிடம் இந்த அதிகாரத்தை கொடுத்தால் "இனிமேல் மாணவர்கள் கோவணத்துடன் தான் தேர்வு எழுதவேண்டும்" என்று சட்டம் கொண்டுவந்தாலும் வருவார். அப்போது தேர்வு எழுதுபவர்களை விட எழுத வருபவர்களைப்பார்க்க வருபவர்கள் கூட்டம் அதிகமாகிவிடும்.

வலைவலம்

உலக வரைப்படத்தை ஒரே மாதிரி பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு இந்த தளம் பிடிக்கும். ஏஷியட் போட்டிகளில் எதை சேர்த்தால் தங்கம் கிடைக்கும் என்று யோசித்து கபடியை சேர்த்த மாதிரி, ஹை நம்ம ஊர் எவ்ளாம் பெருசு என்று வியக்கும் வண்ணம் இந்தியாவை பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாக காட்டும் மக்கள்தொகை அடிப்படையிலான வரைப்படம்! இந்தியத்தாய் இன்னொரு குழந்தை பெறுவதற்கு தயாராக உள்ளது போன்றிருக்கிறாள். அமெரிக்கர்கள் செல்வத்திலும், உணவுத் தானத்திலும் மட்டுமில்லாது, வேக உணவு(அதாங்க fastfood) வகையிலும் கொழித்திருக்கிறார்கள்(super size me!). இந்தியா மக்கள்தொகையில் கொழுத்ததுபோல் இந்த வகையிலும் கொழுத்திருப்பது ஒரு irony! ஆனால் படிப்பில் கொழுத்திருப்பது ஒரு நல்ல விஷயம். பெண்கல்வியில்லாமையில் கொழுத்திருப்பது இன்னொரு irony!

குழந்தை பெறுவதற்கு தயாராக இருக்கும் இந்தியத்தாய் என்றதும் நினைவுக்கு வருகிறது. குழந்தை பெறும் நிலையில் இருக்கும் இந்தியத் தாயார்களின் கூட்டு வலைப்பதிவு இது. நம் வலைப்பதிவில் உள்ள ஜனத்தொகையைவிட மிக அதிகம். ஆனால் நம் படையைப்போல அமைதி காப்பதில்லை. வயற்றிலுள்ள குழந்தை உதைக்கிறமாதிரி எழுதித் தள்ளுகிறார்கள். பெங்களூரில் ஒரு கர்ப்பிணியின் அனுபவங்கள் போன்ற பதிவுகள், இதை நம்ம ஊர் வெப் எம்டி அளவுக்கு கொண்டு போனாலும் போகலாம்.

என்னதான் நம்ம ஊர் படங்களை கிண்டல் அடித்தாலும், நம்ம ஊர் படங்கள் கம்ப்யூட்டரை காட்டுவதில் அமெரிக்க படங்களைவிட் எவ்வளவோ மேல். இங்கே ஒரு பயல் ஆப்பிள் லேப்டாப் பெண்ணே என்று எழுதினானா? ஹாலிவுட் படங்களில் கம்ப்யூட்டரை இன்னும் எவ்வள்வு கேலிக்கூத்தாக காண்பிக்கிறார்கள் என்று பட்டியலிட்டிருக்கிறார்கள் இங்கே.


நான் தமிழில் வலைவலம் வருவது இருக்கட்டும். பாருங்கள் யாரெல்லாம், தமிழில் செய்தி தருகிறார்கள் என்று. யாஹு பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது MSNனும் தமிழ் ஜோதியில் கலந்திருக்கிறார். நான் அன்றாடம் வழிபடும் கூகுளாண்டவர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். ஊஹும்... இப்போதுதான் ஹிந்தியில் அவதாரமெடுத்திருக்கிறார். ஹிந்தி எதிர்ப்புக்காரர்களை கூப்பிட்டு அந்த வலைத்தளத்தில் கறுப்பு மை பூச சொல்ல வேண்டும்.

Monday, April 09, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 11

மென்பொருளால் ஆன நெருப்புச்சுவர்:

இல்லத்துக் கணிணிகளுக்காக வரும் இத்தகைய மென்பொருள்கள்

நிரவுவதற்கு எளிதாக இருக்கும், குறைந்த அளவு இடம் போதும், நம்மை அடிக்கடித் தொந்தரவு செய்யாது.

விண்டோஸ் எக்ஸ்பியுடன் வரும் நெருப்புச்சுவர்:

உங்கள் எக்ஸ்பி இயக்கத்தில் இது இல்லையெனில் சர்வீஸ்பேக் 2ல் இருக்கிறது. இறக்கி உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

இதை இயக்கிவிட்டால் போதும். அமைதியாகத் தன் பணியை தொடங்கிவிடும் . இதனால் கணிணியின் வேகத்தில் எந்த மாறுதலும் நமக்குத் தெரியாது.

பிற இலவச நெருப்புச்சுவர்கள்:

ஜோன்அலார்ம் www.zonelabs.com

சைகேட் www.sygate.com


ஹார்ட்வேர் நெருப்புசுவர்கள்:

நெட்வொர்க் அட்ரஸ் டிரான்ஸ்லேட்டர் நெருப்புசுவர்கள் (NAT Firewalls) இதில் பிரசித்தம் . சிஸ்கோ, ஜுனிபர் நெட்வொர்க்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் கணிணி நெட்ஒர்க்குகளை பாதுகாக்கும் நெருப்புச் சுவர்களைத் தயாரிக்கிறார்கள் .

ஹேக்கர் தாக்குதலின் அறிகுறிகள் :

நமது கணிணியில் நமக்கே புரியாத வண்ணம் சில தகவல்கள் சேமிக்கப் பட்டிருக்கும். இந்த தகவல்கள் ஹேக்கரின் கைவரிசையாயிருக்கலாம்.

நமது வங்கி கணக்கில் பணம் குறைதலும் தாக்குதலின் அறிகுறி. நாம் நம் கணிணியில் நம் வங்கி கணக்கு விபரங்களை சேமித்து வைத்திருந்தோமானால் இம்மாதிரி நடக்க வாய்ப்புண்டு . ஆனால் இதற்கு ஹேக்கர் மட்டுமே காரணமாயிருக்க குடியாது. பிஷிங், கீலாக்கர் போன்றவையும் காரணமாக இருக்கலாம் .

ஹேக்கர் தாக்குதல் தெரிந்தால் செய்யவேண்டியது :


முதலில் இணையத்தில் இருந்து துண்டியுங்கள்.

நெருப்புசுவரை இயக்குங்கள்.

அன்று மாற்றப்பட்ட பைல்களை சர்ச் ஆப்சன் மூலமாகத் தேடுங்கள். சந்தேகத்திற்கு இடமாயுள்ள பைல்களை அழித்து விடுங்கள் .

இன்னும் சந்தேகமாயிருந்தால் கணிணியில் உள்ள அனைத்தையும் அழித்துவிட்டு புதிதாகத் துவங்குங்கள்.

பொதுவாக 2 நெருப்புச்சுவர்களை உங்கள் கணிணியில் நிறுவுதல் நலம் .

வாய்ப்பு இருப்பின் ஹார்டுவேர் நெருப்புச்சுவரும் நிறுவலாம். சில

டிலிங்க் www.dlink.com ,

நெட்கீர் www.netgear.com ,

லின்க்சிஸ் www.linksys.com ,

பெல்கின் www.belkin.com ,

எஸ்எம்சி www.smc.com

ஆப்பிள் www.apple.com javascript:void(0)
Publish


அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Saturday, April 07, 2007

சார் பேப்பர் - Question பேப்பர்

சமீபத்தில் தமிழகத்தில் தேனியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த SSLC சமூக அறிவியல் தேர்வு வினைத்தாள்களை ஒரு ப்ளஸ் 1 மாணவன் திருடி தன் ஹீரோயிசத்தைக் காட்டியிருக்கிறான்.
பிடிபட்ட அவன் சக மாணவர்களிடம் தன்னை ஒரு ஹீரோவாகக்காட்டவே இச்செயலைச்செய்ததாக போலீசிடம் கூறியுள்ளான்.
இதில் அபத்தம் என்னவென்றால் இத்திருட்டு பட்டப்பகலில் நடந்திருக்கிறது. கேள்வித்தாள்கள் வைத்திருக்கும் அறையின் பின்புறம் இருக்கும் ஜன்னலின் கம்பிகளை அறுத்து, உள்ளே சென்று, பீரோவின் பூட்டையும் அறுத்து கேள்வித்தாள்களை திருடிச்சென்றுள்ளான். பகலில் போலீசார் பாதுகாப்பு அறையில் இருப்பதில்லையாம். இரவில் தான் டூட்டியாம்.

இந்த அபத்தத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட அபத்தம் இது தான் - கேள்வித்தாள்களைக்காப்பாற்ற முடியாத போலீசார், திருடிய மாணவனிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டால் போலீஸ் வேலை வாங்கித்தருவதாகப்பேசி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்துள்ளனர்.

இது போல் அவலங்கள் பல முறை இந்தியாவில் பல இடங்களில் நடந்திருக்கின்றன - மேலும் நடந்துகொண்டே இருக்கின்றன. இதனால் தேர்வுகளை ஒத்திப்போட்டு கஷ்டப்பட்டு, வினைத்தாள்களை திருத்தி எழுதி படித்து தேர்வுக்கு தயாராக இருந்த பல மாணவ மாணவிகளின் டென்ஷனை அதிகமாவது தான் அவலம்.

ஒரு பேப்பரை காப்பாற்ற முடியாத அளவுக்கு இருக்கும் இந்த நிலமை அவலத்திலும் அவலம். இந்த வினைத்தாள் திருட்டைத்தடுக்க அரசாங்கம் ஏதாவது புது யுக்தியைக்கண்டுபிடிக்க வேண்டும். இதில் என்ன கஷ்டமென்றால் வினைத்தாள் மாஸ்டர் காப்பியையோ அல்லது அச்சடித்த வினைத்தாள்களையோ எங்கு வைத்தாலும் திருடு போய்விடுகிறது. சில சமயம் அச்சகத்திலிருந்தே திருடு போய்விடுகிறது.

இதற்கெல்லாம் முடிவு கட்ட பரதேசியின் சில யோசனைகள்:

1. அச்சடித்த வினைத்தாள்களையெல்லாம் ராக்கெட்டில் ஏற்றி வானத்தில் விட்டு Satellite ல் பறக்கவிடலாம். பிறகு தேர்வு தினத்தன்று பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையங்களின் வாசலில் இறக்கி உள்ளே கொண்டு சென்று தேர்வுக்கு வினியோகம் செய்யலாம். Satellite ஐ யாரும் ஹை-ஜாக் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. அதிகாரமில்லாதவர்கள் திறந்தால் வெடித்துச்சிதறும் வகையில் safe கள் உருவாக்கலாம்

3. கேள்வித்தாள் மாஸ்டர் காப்பியை நானோசிப்பில் (Nanochip) பதிவு செய்து உயர் அதிகாரியின் கையிலோ, காலிலோ, உடம்பிலோ இம்ப்ளாண்ட் செய்து விடலாம். பிறகு தேர்வு நாளன்று தேர்வு மையத்திலேயே வெளியெடுத்து ப்ரிண்ட் அடிக்கலாம். ஆனால் அதிகாரியை யாராவது கடத்தாமலிருக்க பாதுகாப்பு தேவை.

4. Special ink ல் கேள்வித்தாள்களை அச்சடித்து தேர்வு மையத்தில் ப்ரத்யேக இயந்திரத்தில் expose செய்து அச்சடித்து வினியோகம் செய்யலாம். இந்த இயந்திரம் Wal-mart ல் விற்கக்கூடாது என்ற ரூல் போட வேண்டும்.

5. இதெல்லாம் முடிகிற காரியங்களாகத்தோன்றாவிட்டால் தேர்வே இல்லாமல் எல்லோரும் 'பாஸ்' என்று சொல்லிவிடலாம். மாணவர்களுக்குக்கொண்டாட்டம். கல்லூரிகளுக்கு கூட்டம்.

Thursday, April 05, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 10

ஹேக்கர்ஸ் உபயோகப்படுத்தும் கருவிகள்:

டிரோஜன் குதிரைகள் - உபயோகமாகவும், பாதுகாப்பானதாகவும் கருதும் படி , வடிவமைக்கப் பட்ட மென்பொருள்கள். ஆனால் உள்ளே சில தீங்கு தரக்கூடிய நிரலிகள் மறைந்திருக்கும் .

வைரஸ்கள் - பொதுவாக வைரஸ் செயலிகளை எழுதுபவர் அனைவரும் ஹேக்கர் அல்லர் , இருப்பினும் வைரஸின் வரிகள் ஹேக்கருக்கு உபயோகமாயிருக்கும்.

வார்ம்க்ள் - மனித எத்தனம் இல்லாமல் தானாக பரவும் நிரலிகள்.

வல்நரிபிலிட்டி ஸ்கேனர் - கணிணியில் உள்ள செயலிகளின் பலவீனங்களை ( நிரலிகளின் வடிவாக்கப்பிழைகள், பாதுகாப்பு குறைபாடுகள்) ஆராயும் நிரலிகள்.

ஸ்னிஃப்பர் - மற்றவரின் ஐடி, சங்கேத குறியீடு ( பாஸ்வேர்டு) இவற்றைத் தேடும் நிரலிகள்.

சமூக ஆர்வலர் வேடம் - ஒருவர் உதவுவது போல் நடித்து நம் கணிணியில் விசமத் தனமான நிரலிகளை நிரவுதல் .

ரூட்கிட் - செக்யூரிட்டி புரோகாராம் களிடமிருந்து விசமத்தனமான நிரலிகளை தப்பவைக்கும் வண்ணமாக எழுதப் படும் நிரலி .

எக்ஸ்பிளாயிட் - கணிணியில் உள்ள தெரிந்த பாதுகாப்பு பலவீனங்களை உபயோகப் படுத்திக் கொள்ளல் .

நெருப்புச் சுவர் (Fire wall);


நெருப்புச் சுவரானது நமது கணிணிக்கும், இணையத்திற்கும் இடையே மின்னணு தடுப்புச்சுவராக பணியாற்றுகிறது . இதில் கதவுகளை ஒத்த அமைப்பாக போர்ட்க்ள் இருக்கும். போர்ட்களை நிரலிகள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் . இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரௌசர்கள் போர்ட் 80ஐ உபயோகிக்கும். மின்னஞ்சல் அனுப்ப 25 உபயோகமாகும், எம்எஸ்என் 1863, 6891-6900, மற்றும் 6901ஐ உபயோகிக்கும்.

முறையாக நெருப்புச் சுவரை இயங்க வைத்திருந்தோம் ஆனால் பெரும்பாலான பாதிப்புகள் தவிர்க்கப்படும்.

நெருப்புச் சுவர்கள் அடிப்படையில் இரண்டு வகைப் படும். அவை மென்பொருளால் ஆன நெருப்புச்சுவர் , ஹார்ட்வேர் நெருப்புச்சுவர் ஆகும்.

விண்டோஸ் எக்ஸ்பி இலவச நெருப்புச்சுவருடனே வருகிறது.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Sunday, April 01, 2007

இலவச இன்டெர்நெட்

வரப்போகிறது, வரப்போகிறது என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கூகுளின் இலவச இன்டெர்நெட் சேவை வந்தே விட்டது. Project Teaspoon வழக்கம்போல அனைவரும் பயன்படுத்துமாறு மிகவும் எளிதாக்கப்பட்டிருக்கிறது. இலவசமாக router ரும், எப்படி நிறுவுவது என்ற விவரங்களும் மிக அருமையாக விளக்கப்பட்டிருக்கின்றன. சிறு குழந்தைகூட - மன்னிக்கவும் - இந்த விஷயங்களில் அவர்கள்தான் சூரர்களாயிற்றே... - எல்லா அம்மா, அப்பாக்களுக்கு கூட புரியும் வண்ணம் என்று சொல்லவேண்டும். வழக்கம்போல ஒவ்வொரு கூகுள் செயலிகளைப் பார்த்து வரும் அதே கேள்விதான். ஏன் இது இத்தனை நாள் மற்றவர்களுக்கு தோன்றவில்லை?

ஏப்ரல் மாத லொள்ளு மொழிகள்

என்ன தான் கௌரவமா நடித்தாலும் ஒரு காமெடியன் நடிப்பை பார்த்து நாலு பேர் நாலு விதமா சிரிக்கத்தான் செய்வாங்க

பித்தனின் கிறுக்கல்கள் - 9

பித்தனின் ஒன்பதாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/03/9.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com