Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Saturday, June 04, 2022

கடிலக்கரையினிலே - பண்ருட்டி பலாச்சுளைகள் - 2

பண்ருட்டியில் எங்கள் வீட்டில் எப்போதும் நண்பர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். பக்கத்து ஊர்களான கடலூர், விழுப்புரத்தில் கலைக்கல்லூரிகள் இருந்தன. தினமும் மாணவர்கள் ரயிலில் போவார்கள். விழுப்புரத்திலாவது கல்லூரி ரயில்நிலையத்துக்கு அருகில் இருந்தது. கடலூரில் ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு பேருந்தில் வேறு போகவேண்டும். இருந்தாலும் மாணவர்களுக்கு ரயில் சீசன் பாஸ் சலுகையில் கிடைப்பதால் அனைவரும் ரயிலில்தான் போவார்கள். பண்ருட்டியில் இருந்து தினமும் சிதம்பரத்தில் இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கு போன மாணவர்களும் உண்டு.


அண்ணன்கள் வீட்டில் இருக்கும்போது கடலூர் மாணவர்கள் காலையில் வீட்டுக்கு வந்துவிட்டு ரயிலடிக்குப் போவார்கள். அதில் ஒருவர்தான்…


ராஜா!


ராஜா என்கிற முருகன். வீட்டிற்கு ஒரே பிள்ளை. அம்மா செல்லம் என்று நினைவு. என்னுடைய நினைவுகளில் தங்கியது இவரின் ஒரு வினோத பழக்கம். நடந்து வரும்போதும், உட்கார்ந்திருக்கும்போதும் கைவிரல்களை நீட்டி மடக்கிக் கொண்டே இருப்பார். நான் சிலநாள் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏன் அப்படி செய்கிறார் என்று மண்டையை உடைத்துக் கொண்டேன். ஒரு நாள் அவரிடமே கேட்டு விட்டேன். என்ன செய்கிறீர்கள் விரல்களை? 


டைப் அடிக்கறேண்டா!


டைப்பா!!!???


ஆமாம்! அப்போதுதான் டைப்ரைட்டிங் வகுப்பில் சேர்ந்திருந்தார். எழுத்துக்கள் இடம் பழகும்வரை மனசுக்குள்ளே ஏதாவது  வார்த்தை சொல்லி அதை எப்படி டைப் செய்வது என்று பழகிக் கொள் என்று டைப்பிங் வாத்தியார் உபதேசம் செய்தாராம். இவர் அதற்கு ஒரு படி மேலே போய், நாமெல்லாம் சிறுவயதில் காற்றில் கிடார் வாசிப்போமே, அது மாதிரி காற்றில் டைப் அடித்துக் கொண்டிருந்தார். நடக்கும்போது, உட்கார்ந்திருக்கும்போது  காதிலோ கண்ணிலோ விழும் சொற்களை காற்றில் டைப் அடித்துக் கொண்டே இருப்பார். 


ராஜா என்றதும் அடுத்து நினைவுக்கு வருவது சங்கராபரணம். அதில் ஆண்டாளு என்ற சிறுமி திண்ணையில் ஒரு பாட்டு வாத்தியாரிடம் பாட்டு கற்றுக் கொள்ளும் காட்சி வரும். அந்த வாத்தியார் கர்நாடகமாக இன்னும் பாடிக் கொண்டிராமல் நவீனமாக பாடவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். அப்போது வீதியில் வரும் சங்கர சாஸ்திரி வாத்தியாரை திட்டிவிட்டுப் போவார். அந்த காட்சி ராஜாவுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. எப்போது வந்தாலும் சங்கராபரணம் கேஸட்டில் அந்த இடத்திற்கு தள்ளி கேட்போம். அதை கேட்பதைவிட அந்தக் காட்சியை ராஜா ரசிப்பதைக் காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் முதல் முறை கேட்பது போல் ஒரு பரவசத்தில் இருப்பார். சிரிப்பை அடக்க முயல்வார். அதுவும் அந்த "ராக்கெட்லு ஜாக்கெட்லு ஜெட்லு" வரும்போது அடக்கவே முடியாது. அப்படி சிரிப்பார்.  பிறகு வாத்தியார் "புரோச்சேவா ரெவருரா"வை பிரித்து மேயும்போதும் தாங்க முடியாமல் சிரிப்பார். அந்த காட்சி முடிந்தவுடன் கேஸட்டை நிறுத்தி விடுவோம். அடுத்த சில நிமிஷங்கள் ராஜா தெரிந்தவரை அந்த டயலாக் எல்லாம் சொல்லிச் சொல்லி சிரிப்பார். தவறாமல் "ராக்கெட்லு ஜாக்கெட்லு" உண்டு. வீடே அதிரும்.


ராஜா சில தெலுங்கு ஜோக்குகள் சொல்வார். ஒரு தமிழன் ஆந்திராவில் ரயிலில் போய்க் கொண்டிருந்தானாம். ஒரு இடத்தில் ரயில் நின்றவுடன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனிடம் தமிழில் "இது என்ன ஊர்" என்று கேட்டானாம். அவன் கேட்டது புரியாமல் "ஏமண்டி" என்றானாம். ஓஹோ அப்படியா, நன்றி! அடுத்த ஊர் வந்தவுடன், அதே கேள்வி. அவனும் "ஏமண்டி" என்று பதில். சரி அது மேல் ஏமண்டி, இது கீழ் ஏமண்டி போல இருக்கும் என்று அமைதியாகி விட்டான். அடுத்த ஊரில் அதே நடந்தது. தமிழனுக்கு வந்ததே கொலைவெறி. என்னடா நானும் பாக்கறேன், ஒவ்வொரு ஊரிலும் ஒரே பெயரை சொல்லி ஏமாத்தற, என்ன பாத்தா நக்கலா தெரியுதான்னு அடிக்கப் போனானாம். பதறிப் போன தெலுங்கன் கொட்டகா, கொட்டகா என்றானாம். ஓ - இந்த ஊர் கொட்டகாவா - ஒழுங்கா சொல்ல வேண்டியதுதானே என்று அமைதியானானாம்.


ராஜாவின் வீட்டருகில் ஒரு இளம் தம்பதி குடியிருந்தார்கள். அந்த தம்பதிகளின் சண்டை தெருவில் பிரசித்தம். ஒவ்வொரு முறை வரும்போதும் அன்றைய சண்டை குறித்து ராஜா கதை சொல்வார். அதில் ஒரு நாள் நினைவில் நிற்கிறது. அன்று சண்டை அதிகமாகி ஒரே களபரம். சாமான்கள் எல்லாம் உருண்டது. திடீரென கதவைத் திறந்து கணவன் எடுத்தார் ஓட்டம். யாரோ எதோ காரணம் சொல்லி உள்ளே போய் பார்த்தால். நிறைய தட்டு பாத்திரம் எல்லாம் இரைந்து கிடந்தன. அனைத்துக்கும் மேலே - சுவற்றில் டால்டாவோடு ஒட்டிக் கொண்டிருந்த கரண்டி! 


இப்போது பண்ருட்டி வாட்சப் குழுவிலும் ராஜா கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Sunday, May 01, 2022

பண்ருட்டி பலாச்சுளைகள் - 1

 

பண்ருட்டியில் எங்கள் வீட்டைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் எழுதியதில் இருந்து ஒரு யோசனை. நண்பர்களைப் பற்றி எழுதினால் என்ன? தேவதைகள் என்ற தலைப்பில் ஒரு ஶ்ரீரங்கத்துக்காரர் எழுதிவிட்டார். அங்கு கோவில்கள் அதிகம் என்பதால் இருக்கலாம். எனக்கு பண்ருட்டியில் பலா, முந்திரியைத் தாண்டி வேறு என்ன தோன்றப் போகிறது. "பண்ருட்டி பலாச்சுளைகள்" என்கிற தலைப்பில் பண்ருட்டி நண்பர்களைக் குறித்து தொடரப் போகிறேன்!


குலாம்!


இந்தப் பெயரைக் கேட்டாலே என் நண்பர்கள் அனைவர்கள் முகத்திலும் ஒரு புன்சிரிப்பாவது வராமல் இருக்காது. அந்த அளவுக்கு அனைவருக்கும் நண்பன், சிரிக்க வைப்பவன். எப்போதும் முகத்தில் சிரிப்புதான். வகுப்பின் கோமாளி! அவனை கோபமாகவோ, வருத்தமாகவோ பார்த்ததாக நினைவே இல்லை. 


எல்லா ஆசிரியர்களையும் வம்புக்கிழுப்பான். சட்டையின் மேல் பித்தான்கள் போட்டிருக்கவேண்டும் என்று வலியுறுத்திய ஒரு ஆசிரியர் பித்தான்களை திறந்து போட்டிருக்கும் மாணவர்களை அடித்து பித்தான்களை போடச் சொல்லுவார். அவரே இவனை அருகில் அழைத்து பித்தான்களை போட்டுவிட்டிருக்கிறார். ஆங்கில வழியில் படித்துவிட்டு வந்த மாணவர்கள் தமிழ் பாடம் வராமல் ததிங்கணத்தோம் போடுவது சகஜம். ஆனால் இவன் ஒன்பதாம் வகுப்பில் ஆசிரியரிடம் ஏழாவது எட்டாவது வகுப்பிற்குமேல் தமிழ் பாடம் தேவையில்லை என்று ஒரு நாள் வாதம் செய்தான். எங்களுக்குத்தான் தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமே இனிமேல் எதற்கு என்று. ஆசிரியரும் ஏதேதோ சொல்லிப் பார்த்தார். கடைசியில் உனக்கு தமிழ் நன்றாகத் தெரியும்தானே. ஞமலி என்றால் என்ன என்று கேட்டார். இவன் தெரியாது சார், அப்படி என்றால் என்ன என்றான். நாய் என்றார். இவன் - நான் நாய் என்று சொல்லிவிட்டுப் போகிறேன், எதற்கு ஞமலி, கிமலி எல்லாம் என்றான். வகுப்பே அதிர்ந்தது. ஆசிரியருக்கு என்ன சொல்வதே என்று தெரியவில்லை.


ஒன்பதாவது படிக்கும்போது ஒரு நாள் ஆங்கில ஆசிரியரை ரொம்பவே சீண்டிவிட்டான். கோபம் வந்து வேப்ப மரத்தில் ஒரு குச்சியை ஒடித்து இவனை போட்டு விளாசி விட்டார். இவனுக்கு நீண்ட காது - புத்தர் காதன் என்று ஒரு பெயர்கூட உண்டு - அதை பிடித்து இழுத்து அடித்ததால், காதே கொஞ்சம் பிய்ந்தமாதிரி ரத்தம் வேறு. பையை எடுத்துக் கொண்டு உங்களை பாத்துக்கறேன் சார் என்று சவால்விட்டு கிளம்பி போய்விட்டான். ஆசிரியர் சினம் தணிந்து உட்கார்ந்தார். குலாம் என்ன பண்ணப் போகிறானோ என்று கொஞ்சம் பயந்துவிட்டார். பையன்கள் வேறு - சார், அவனுக்கு பனங்காட்டுத் தெருவில் நிறைய நண்பர்கள் உண்டு என்று அவர் பீதியை இன்னும் கொஞ்சம் கிளப்பிவிட்டார்கள். "வீரர்கள்" நிறைந்த தெரு, அவன் வீட்டருகில் இருக்கும் பனங்காட்டுத் தெரு. அவர் அமைதியாக பாடம் நடத்தத் தொடங்கினாலும், புத்தகத்தை பிடித்திருந்த கை நடுங்கிக் கொண்டிருந்தது. நாங்களெல்லாம் என்ன ஆகப் போகிறதோ என்று காத்திருந்தோம். மதிய உணவு இடைவேளைப் பிறகு அழகாக மாப்பிள்ளை மாதிரி முகம் கழுவி பவுடர் எல்லாம் போட்டுக்கொண்டு வந்தான். எங்கடா போனே என்று கேட்டோம். நான் வீட்டுக்குப் போய் ஒரு தூக்கம் போட்டு, மதியம் சாப்பிட்டு வந்தேன் என்று சிரித்தான். சும்மா உதார் விட்டிருக்கிறான்.  


பத்தாவது படிக்கும்போது தமிழ் ஆசிரியரை படாத பாடு படுத்தினான். இவனை ஏதோ கேள்வி கேட்டு இவன் பதில் தப்பாகச் சொன்னான். இவன் அருகில் வரலாம் என்று இருக்கையில் இருந்து ஆசிரியர் எழுந்தார். கிட்ட வராதீங்க சார், வந்தா அடிப்பீங்க என்றான். இல்லடா, நான் வந்து நீசொன்னதை திருத்தி சொல்லித் தறேன் என்றார். அதற்கு குலாமின் பதில்: அங்கிருந்தே திருத்துங்க சார்! மேஜை மேல் ஏறி தாவித் தாவி அடிக்கு தப்புவதெல்லாம் சகஜமாக நடக்கும். பத்தாவது பரீட்சையில் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்தான். ஒவ்வொரு நாளும் வரும் கண்காணிப்பாளரிடம் எங்களுக்கு இந்தப் பாடம் நடத்த ஆசிரியரே இல்லை, அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்று தயங்காமல் ரீல் விடுவான். கொஞ்சம் சம்மதம் மாதிரி தெரிந்த அன்றெல்லாம் அவ்வளவுதான் - அப்படியே என் பதில்களை ஜெராக்ஸ் எடுத்தான். ஒரே சிரிப்பும், கும்மாளமும். பத்தாவது பரீட்சை மாதிரியே இருந்ததில்லை இவன் செய்த கலாட்டாவினால்.


பள்ளியில் இவ்வளவு வால்தனம் பண்ணுகிறவனை அவர்கள் கடையில் பார்த்தால் நம்பவே முடியாது. அண்ணனுக்கு பயந்தவன். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் அப்பாவி போல் பவ்யமாக உட்கார்ந்திருப்பான். மாலையில் மளிகை பாக்கி வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப் போவான். எதாவது ஒரு சினிமாவில் நுழைந்து கொஞ்சம் நேரம் படம் பார்ப்பான். "அலைகள் ஓய்வதில்லை" ஓடும்போது இது தினம் நடந்தது.  எங்கள் வீட்டுப் பக்கம் வசூலிக்க வந்தால் எங்கள் வீட்டுக்கு வருவான். என்னவோ என் ஒரு அண்ணன் மேல் அதீத பாசம். அவனை அடித்துக் கொண்டோ கிள்ளிக்கொண்டேதான் இருப்பான். அண்ணனும் பொறுத்துக் கொள்வான். இவனை கோபித்து அடிக்கக்கூட மனம் வராது. செய்வதை எல்லாம் சிரித்துக் கொண்டே செய்பவன்.  இவன் அடிக்கும் லூட்டியைப் பார்த்து ரொம்பவே அதிர்பவர் எங்கள் அப்பாதான். ஏனென்றால் அவனை அவர்கள் கடையில் எப்படி இருப்பான் என்று பார்த்தவர். 


இவன் பயன்படுத்தும் சில பல சொற்றொடர்கள் என் நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம். இன்றும் பள்ளி நண்பர்களுடன் பேசினால், குலாமின் சொற்கள் இல்லாமல் பேச்சு முடியாது.


அப்படி இருந்த குலாம் எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி கொடுத்தான். "குலாம் போயிட்டாண்டா" என்று சிங்கப்பூரில் இருந்து அழைத்து  ரஃபி அழுதுகொண்டே சொன்னதை என்றும் மறக்க முடியாது.