Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, August 28, 2009

அடை மழை !


Photo Credit: fineartamerica.com

நமக்கெல்லாம் மிக்ஸர் படி அளக்கும் மீனா அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி, பலத்த வேலைப் பளுவிற்கு இடையிலும் (நாம சொல்லிக்காம வேற யாரு சொல்லறதாம் :)), இந்த அரைபக்கக் கதை.

-----

கருமுகில் போர்த்திய அடர்த்தியில் கனன்று கொண்டிருந்த வானம் சற்றைக்கெல்லாம் வெண் மழை தூவ ஆரம்பித்திருந்தது.

இழுத்துப் போர்த்திய கம்பளியுள், கால்கள் சுறுக்கி, கைகள் பிணைத்து கருப்பைக் குழந்தையாய் இருக்க முடியாமல், இன்றும் வேலைக்குப் போவது மாதிரி ஆன‌தே என வருந்தினாள் நந்தினி.

பஸ் ஸ்டாப்பிலிருந்து வீட்டுக்குப் பத்துப் பதினைந்து நிமிடம் நடக்க வேண்டும். பாராசூட்டையும் விட சிறிதான குடை கொண்ட பஸ்டாப்பில், அண்டிய ஆட்டுக் குட்டிகளாய் அப்பிய ஜனத்திரளுடன் சில நிமிடங்கள் ஒண்டி நின்றாள். மழை நின்றபின் வீட்டுக்குப் போய், முதல் வேலையாய் இழுத்துப் போர்த்திப் படுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். அடைம‌ழையாய் விடாது பெய்த‌து ம‌ழை.

வழக்கம் போல இன்றும் குடை எடுத்துவர மறந்திருந்தாள். அரை மணி நேரத்தில் பொறுமை இழந்து, சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். சொட்டுச் சொட்டாய் விழுந்த மழை நீர், தலை முடியின் வழி பல கிளைகள் கொண்ட நீர்வீழ்ச்சிகளாய் கொட்டியது.

நேற்றும் இதனால் தான் அம்மாவுடன் சண்டை. "மழை நாளா இருக்கு. ரெண்டு நாள் லீவ‌ப் போட்டு வீட்டுல‌ இரேண்டி. அப்ப‌டி என்ன‌ ஆபிஸ‌க் க‌ட்டி அழுக‌றே ! பாக்குறது என்னவோ தையல் வேலை தான‌" என்று த‌வித்தார். "பெரிய குடை எடுத்துப் போகத் தான் கூச்சமா இருக்கு. ஹேன்பேக்கில் ஒரு சின்னக் குடையாவ‌து வ‌ச்சிக்க‌ வேண்டாமா ?" என்றும் திட்டினார். அத்தோடு அம்மாவுட‌ன் பேச்சை நிறுத்தி இப்போ, இருபத்தி மூணு ம‌ணி, ப‌தினைந்து நிமிட‌ம், (வாட்ச்சைப் பார்த்துக் கொண்டாள்) ஏழு நொடிக‌ள் ஆகியிருந்த‌து.

ச‌ர் ச‌ர்ரென்று க‌ட‌ந்து செல்லும் வாக‌ன‌ங்க‌ள். சாலைக் க‌ழிவோடு இர‌ண்ட‌ற‌க் க‌லந்திருந்தது ம‌ழை நீர். ச‌க‌தியாய் போன தெருக்கள் ஸ்கேட்டிங்க் போர்ட் இல்லாமலேயே வழுக்கியது. வெள்ளிக் கம்பியாய் மின்னல் கீற்றுக்கள் வேறு நடைக்குத் தடையாய் இருந்தது. 'இன்னும் கொஞ்சம் நேரம் பஸ்ஸாட்ப்பிலேயே நின்றிருக்கலாமோ ?' என‌ யோசித்தாள். 'நின்றிருந்தால் நின்று கொண்டே தான் இருப்போம். ந‌ல்ல‌ வேளை. இதோ இன்னும் சில‌ நிமிட‌ங்க‌ளில் வீட்டை அடைந்து விட‌லாம் !' என்று அடிமேல் அடிவைத்து ந‌ட‌ந்தாள்.

தொப்ப‌லாய் ந‌னைந்து வீட்டுப் ப‌டியேறி, காலிங் பெல்லை அடித்துக் காத்திருந்தாள். அம்மா வ‌ந்து திற‌ப்பதற்கான‌ அறிகுறி எதுவும் தென்ப‌ட‌வில்லை. 'இன்னும் அம்மாவுக்குக் கோப‌ம் த‌னிய‌ல‌ போல‌ !' என‌ நினைத்து, ஹேன்பேக்கில் முன் பக்கம், கையை விட்டுத் த‌ன்னிட‌ம் இருக்கும் சாவியைத் தேடினாள். அக‌ப்ப‌ட‌வில்லை, 'சாவியையும் ம‌றந்து விட்டோமா ? என்ன‌திது சோத‌னை' என்று சுவ‌ற்றில் சாய்ந்தாள். ஏதோ நினைவில் மீண்டும் ஹேன்ட்பேக்கின் மைய‌ப் ப‌குதிக்குள் கையை விட‌, ரிமோட் க‌ண்ட்ரோல் போல எட்டிப் பார்த்தது, தன் குழந்தையின் குணம் அறிந்து அவளது ஹேன்ட்பேக்கில் அம்மா நேற்றிரவே போட்டு வைத்த‌ அந்த அழகிய‌ குட்டிக் குடை !

ஆகஸ்ட் 31, யூத்ஃபுல் விகடனில்

Tuesday, June 02, 2009

சப்தம் வரும் நேரம் (அரைப் ப‌க்க‌க் க‌தை)

வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான்.

இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்டிருந்தது. ச‌மைய‌ல‌றையின் பின்ப‌க்கம் இருந்த அறையில் ட‌க், ட‌க் என்று அந்த ச‌ப்த‌ம். ரொம்ப‌ நாட்க‌ளாக‌வே அந்த‌ அறையைப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை. ச‌மீப‌ கால‌மாக‌, அந்த‌ அறையில் ஆள்ந‌ட‌மாட்ட‌ம் இருப்ப‌து கேட்டு அதிர்ச்சியுற்றான்.

"ஏங்க, ஏதாவ‌து காத்து க‌ருப்பா இருக்குமோ ?" என்று ப‌ய‌ந்த‌ ம‌னைவியை, "எதுக்கும் கொஞ்ச‌ நாளைக்கு உங்க‌ அம்மா வீட்டில் இரு" என்று அனுப்பினான்.

'எப்படியும் இந்த முறை மிஸ் பண்ணிடக்கூடாது. இருக்கும் நேரமும் மிகக் குறைவே. ஒரே அடி, அடி துல்லியமா தலையில் விழணும்... காத்தாவது கருப்பாவது ...' மனதைத் தயார் படுத்திக் கொண்டான் ந‌ரேன்.

பக்கத்து அறைக்குச் சென்று, சமயலறைக் கதவை மெல்ல சாத்தினான். இரண்டு வழிகள் இந்த அறைக்கு. ஒரு வழியை அடைத்தாயிற்று, மற்றொன்று அந்த அறையில் மற்றொரு புற‌ம் இருந்தது. அங்கு கதவு காற்றில் மெல்ல ஆடிக் கொண்டிருந்தது. கீற்று போன்ற‌ வெளிச்ச‌ம் க‌த‌விடுக்கில் தெரிந்த‌து.

'காத்தாவ‌து க‌ருப்பாவ‌து என்று சொல்லிகிட்டாலும், நெஞ்சுக்குழி அடைத்துக் கொண்ட‌து' ந‌ரேனுக்கு. டொக் டொக் என்ற‌ சப்த‌ம் மேலும் அதிக‌ரித்த‌து. மிக‌வும் க‌வ‌ன்த்துட‌ன், சிறிய‌ சப்த‌ம் கூட தான் எழுப்பாம‌ல், ச‌ப்த‌ம் வ‌ந்த‌ திசையை நோக்கி முன்னேறினான்.

கிட்டே நெருங்கி, ஒரே போடு ... சில நொடிகளில் ச‌ப்த‌ம் அட‌ங்கி விட்டிருந்த‌து.

"ரொம்ப‌ நாளா டார்ச்ச‌ர் ப‌ண்ணுச்சே அந்த‌ எலி, அது காலி. நீ தைரியமா புற‌ப்ப‌ட்டு வ‌ர‌லாம்" என்று ம‌னைவிக்கு ஃபோன் செய்தான் நரேன்.

Friday, May 22, 2009

செவிச் செல்வம்.

மே 26, 2009 விகடன் முகப்பில்

சிங்கப்பூர் முஸ்தாஃபாவிற்குள் நுழைகையில், ஏதோ ஃப்ரீசருக்குள் நுழைந்தது போலிருந்தது. அந்த அளவிற்கு வெய்யிலின் உக்கிரம் வெளியே. முதுகுத் தண்டில், ஒற்றை நீர்வீழ்ச்சியாய் வழிந்தோடிய வியர்வையில், மேனி சிலிர்த்தது.

வேலை நாட்களில் போனால் சற்று கூட்டம் குறைவாய் இருக்கும் என்று எண்ணியது, மாபெரும் குற்றமாகப் பட்டது. ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, குறுகலான பாதைகளில் முன்னேறி செல்வது, சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தால் ரம்மியமாக இருக்குமோ ? என்னவோ !! ஆனால், நாமும் அதற்குள் ஐக்கியமாகி செல்லும்போது தான் தெரிந்தது வலி.

"வேர் கேன் ஐ கெட் ஹியரிங் எய்ட் ?" என்று தேடிய என்னை, "செவிட்டு மெஷினத் தான தேடுற, அதுக்குக் கூட அலப்பரை தாங்கலேயேடா ராசா" என்று தோள்களில் தட்டினான் நண்பன் ஸ்ரீதர்.

ஐபாட் மாதிரி இருக்கும் சிலவற்றை எடுத்து மேசையில் வைத்தார், சிரிப்பென்றால் என்னவென்று கேட்கும், சிரிப்பை மறந்த இந்திய ஊழியர்.

'டேய் நந்து, எனக்கு இந்தப் பெரிசு பெரிசா இருக்க மெஷினெல்லாம் வேண்டான்டா. வெளிய‌ எடுப்பாத் தெரியும் வேற‌ ! இப்ப‌ல்லாம் ப‌ட்ட‌ன் சைஸ்ல‌ வ‌ருதாமே. அதைவிட‌க் குட்டியா இருந்தா வாங்கிட்டு வாடா' என்ற‌ தாத்தாவின் குர‌ல் மாட‌ர்னாய் ஒலித்த‌து.

"அதெல்லாம் எக்ஸ்பென்சிவா இருக்கும் !" என்றார் ஊழிய‌ர். ப‌ர‌வாயில்லை எடுங்க‌ என்ற‌த‌ற்கு, வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காண்பித்தார்.

'ரெண்டு ட‌மார‌மும் அவுட்டு. ஒன்னு வ‌ச்சாக் கூட‌ ச‌ரியா வ‌ராது. அத‌னால‌ ரெண்டா வாங்கிட்டு வ‌ந்திருப்பா' என்றிருந்தார் அம்மா.

நானூறு வெள்ளி * 2 க்கு பிங்க் பில் கொடுத்தார். ஏனைய சாமான்க‌ளும், வ‌ழ‌க்க‌ம் போல‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு பாடி ஸ்ப்ரே, வீட்டுக்கு த‌லைவ‌லித் தைல‌ பாட்டில்க‌ள், டைக‌ர் பாம், சில டி.ஷ‌ர்ட்க‌ள், சாக்லேட் வ‌கைய‌றாக்க‌ள். அப்பாடா ஷாப்பிங் முடிச்சாச்சு என்று நிம்ம‌திப் பெருமூச்சு விட்டேன்.

அன்றிர‌வே சென்னை வ‌ந்த‌டைந்து, நேரே ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்று தாத்தாவைப் பார்த்தேன். 'விவேகானந்தன்' என்றவுடன், வேறு கேள்வி கேட்காமல் அவரது அறையில் விட்டனர் என்னை. அவ‌ரை அந்த‌ நிலையில் பார்க்க‌வே பாவ‌மாய் இருந்த‌து. எழுபதுகளின் மத்தியில் இருந்தாலும், சில‌ நாட்க‌ள் வ‌ரை திட‌மாக‌ இருந்த‌வ‌ர். சமீபத்தில் சாலையில் ந‌ட‌ந்து செல்கையில், பின்னால் மிதிவ‌ண்டியில் வ‌ந்த‌ சிறுவ‌ன் மோத‌, கீழே விழுந்து, விலா எலும்பு முறிந்துவிட்ட‌து. மிதிவ‌ண்டியின் ம‌ணியை அடித்துக் கொண்டே வ‌ந்த‌ அவ‌ன், எப்ப‌டியாவ‌து இவ‌ர் வில‌கிக் கொள்வார் என‌ நினைத்து, அவ‌ர் ப‌க்க‌ம் வ‌ரை வ‌ந்து, மோதிவிட்டான்.

ரொம்ப‌ வ‌ருட‌ங்க‌ள் முன்னாலேயே தாத்தாவுக்கு காது கேட்ப‌து நின்றுவிட்டிருந்த‌து. வீட்டில் எல்லோரும் ஹியரிங் எய்ட் வைக்க சொல்லியும், இன்று வ‌ரை அது எதுக்கு, வேண்டாம் என்று ம‌றுத்து வ‌ந்தார். விபத்துக் கார‌ண‌த்தைக் கூறி தாத்தாவை மெஷின் வைக்கச் சொல்லி வற்புறுத்த, ஒரு வ‌ழியாய் ச‌ம்ம‌தித்திருக்கிறார்.

த‌லையில் லேசாய்க் கீர‌லுக்கு ம‌ருந்திட்டு, சிறாய்புக்களுக்கு க‌ட்டுபோட்டு நீட்டிய‌ கால்க‌ளுட‌னும், பெட்டில் புத்த‌க‌ம் வாசித்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர்முன் நிற்க‌, பொக்கை வாய் திற‌ந்து (ப‌ல் செட் அத‌ற்கான‌ அழ‌கிய‌ ப்ளாஸ்டிக் ட‌ப்பாவில் நீந்திக் கொண்டிருந்த‌து), என்னை கிட்டே வ‌ர‌ச் சொல்லி, ஆர‌த் த‌ழுவிக் கொண்டார். எங்கே அழுதுவிடுவாரோ என்று ச‌ற்று வில‌கி த‌ள்ளி நின்று கொண்டேன்.

ச‌த்த‌மாக‌ப் பேசினால் கூட அவருக்கு கேட்கவில்லை. சைகையில் நான் பேச‌, வாய் திற‌ந்து தாத்தா ப‌தில‌ளித்தார். காற்றில் க‌ல‌ந்த‌ க‌ல‌வையாய் வார்த்தைக‌ள் தெறித்த‌து.

பையைப் பிரித்து, அழகாக‌ ஜொலித்த‌ ஹிய‌ரிங் எய்ட் பேக்கிங்கை தாத்தாவிட‌ன் நீட்டினேன். இந்த‌ முறை அழுதே விட்டார்.

ஒன்றைப் பிரித்து, எப்ப‌டி ஆப்ப‌ரேட் செய்ய‌ வேண்டும் என‌ விள‌க்கினேன். ஆசையாய் அதை வாங்கி உள்ளங்கையில் வைத்துப் பார்த்தார். சட்டைப் பொத்தானை விட சிரியதாக இருந்தது. அவ‌ர‌து இட‌து காதில் பொறுத்தினேன்.

"சுத்தமா வெளியில தெரியலைல ..." என்று குஷியானார்.

ப‌ட‌ப‌ட‌வென‌ ப‌ட்டாசு வெடிப்ப‌தாய் உண‌ர்ந்திருப்பார் போல‌. ரொம்ப நாட்கள் கேட்காமல் இருந்த காது, அவருடைய மெல்லிய சத்தத்தையும் பெரிதுபடுத்தி வாங்கியிருக்குமோ, என்னவோ ... லேசாக‌ சிலிர்த்துக் கொண்டார்.

"தாத்தா, எப்படி இருக்கீங்க. இப்ப கேட்குதா ?" என்றேன்.

"நல்லா இருக்கேன்ட நந்து. நல்லா கேட்குது என்று ப‌தில் அளித்தார்". பெருமித‌ம் தாங்க‌வில்லை அவ‌ருக்கு. விட்டால் எழுந்து ஓடி விடும் அள‌விற்கு முக‌த்தில் ஆன‌ந்த‌ம்.

"தனியாவா இங்க வந்தே. வேற யாரும் கூட வரலை ?!" என்று கேட்டார் தாத்தா.

"ஃப்ரெண்டோட வந்தேன் தாத்தா. அவன் இங்க பக்கத்தில ஏதோ வேலை இருக்குனு போயிருக்கான். அநேகமா இப்ப கீழே காத்திருப்பான். சரி உடம்பப் பார்த்துக்கங்க. அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க. நான் காலையில் வர்றேன்." என்று அங்கிருந்து நகர்ந்தேன்.

மறுநாள் நான் மருத்துவமணை செல்ல மதியம் ஆகிவிட்டது. சோகமாக இருந்த தாத்தாவை ஏறிட்டு நோக்கினேன். 'நேற்றிரவு குழந்தை போல இருந்தாரே...' "தாத்தா, என்னாச்சு உங்களுக்கு ?" என்று கேட்ட கேள்விக்கு பதிலில்லை. பக்கத்தில் சென்று படுக்கையில் அமர்ந்த என்னைக் கூர்ந்து கவனித்தார். அதே கேள்வியை மீண்டும் கேட்க ...

"இந்தக் கிழம் விடுற அட்டகாசம் தாங்கலை. என்றும் இளமைனு நெனைப்பு போல. ஆனா என்ன, காசு பார்ட்டி. முழிக்கிற முழியப் பாரு" என்றார் நர்ஸ். "பாத்து பேசுங்கம்மா, அவர் காதுல விழுந்திரப் போகுது" என்ற ஆயாவிற்கு, "இந்த டமாரத்துக்கா ..." என்ற எகத்தாளமான நர்ஸின் பேச்சில், 'அட ஈஸ்வரா !!!' எனக் கூசிப் போனார் விவேகான‌ந்த‌ன்.

"ஏங்க, வந்த உடனே கெளம்பணும்னு சொல்றீங்க. அப்படி இப்படி கொஞ்ச நேரம் இருக்க மாதிரி பாவ்லா காட்டுங்க‌. கைய கால புடிச்சு விடுங்க. நடிக்கவாவது தெரியுதா. உங்க அப்பாவுக்கும், சரி, பையன் தான் நம்ம மேல பாசமா இருக்கானு தோணும். கொட்டிக் குமிச்சு வச்சிருக்கதெல்லாம், அப்புறம் உங்க தங்கச்சி தட்டிகிட்டுல போயிடுவா... விட்டுருவேனா ..." என்று முழக்கிய மருமகளை ஏறிட்டார். வ‌ழிச‌லாய் ஒரு சிரிப்பை காட்டினாள். 'ஐயோ ராமா ... எவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இத்தனை நாள் சிரித்த இந்த‌ சிரிப்புக்கு இதுதான் அர்த்த‌மா ?!' என‌ நொந்து போனார்.

வ‌ந்த‌வ‌ரும், போன‌வ‌ரும் ... 'கெழ‌ம் எப்ப‌ போகும், எட‌ம் எப்ப‌ காலியாகும்' என்ற‌ நிலையிலேயே பேசிச் செல்ல, கவுண்டமணி ஒரு படத்தில் செய்வது போல 'என்ன‌ க‌ரும‌த்துக்கு இந்த‌ மெஷின் ந‌ம‌க்கு இனி, பேசாம காது கேட்காம இருக்கதே நல்லதுடாப்பா !!!' என ஹியரிங் எய்டை க‌ழ‌ட்டி குப்பையில் விசிறி அடித்த‌தை தாத்தா சொல்ல‌, வாய் பேசாது மௌனியாய் கேட்டுக் கொண்டிருந்தேன்.

Wednesday, May 20, 2009

விஞ்ஞானத்த வளக்க போறேண்டி

அலுவலகத்திலிருந்து வந்தவுடன் கவனித்தேன் தொலைபேசி மின்னிக் கொண்டிருந்தது. வீட்டுக்கு உடனே வரும்படி கோமதி மாமி தகவல் வைத்திருந்தார். ஒரு வாரமாக வேலையில் வெளியூர் சென்றிருந்ததால், கோமதி மாமி வீட்டுக்கு போகவில்லை. வாரத்திற்கு மூன்று, நான்கு முறையாவது அங்கே போய்விடுவேன். என்னுடன் வேலை செய்யும் குமாரின் தாயார்தான் கோமதி மாமி.

போன உடனே குழந்தை மாதிரி குதித்து வந்து என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குப் போனார்.

இந்த வேடிக்கைய பாருடா'

நம்ம ஊர் டீக்கடை பாய்லருக்கு கை கால் முளைத்த மாதிரி ஒரு வஸ்து சக்கரங்களுடன் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தது.
என்ன மாமி இது என்றேன்.
"இருடா அவரசப் படாதே. இப்ப பாரு. ஏ மாது யாரு வந்திருக்கா பாரு", என்றார் அந்த பாய்லரிடம்.

பாய்லர் என் பக்கம் திரும்பி, "யாரு அம்பி, நீதான் செல்வமா. உன்னப் பத்திதான் மாமி ஓயாம பேசிண்டே இருக்கா" என்றது. சுத்தமாக இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. "என்னது மாதுவா", என்றேன். இதுக்கே வாய பெளக்கறியாடா. இன்னும் பாரு வேடிக்கய என்றார் மாமி. ஏ மாது. செல்வத்துக்கு போண்டான்னா உசுரு. போட்டுத் தரியா.
"அதுக்கென்ன. போட்டுட்டா போச்சு. சித்த மாமி கிட்ட பேசிண்டு இருங்கோ அரநாழில பண்ணிட்றேன்", என்றது.

போண்டா போடும் பாய்லரா?

பாய்லர்/மாது சுறுசுறுப்பாக போண்டா தயாரிப்பில் மும்முரமானது. மாமியைப் பார்த்தேன் கேள்வியுடன். "சமையக்கார மிஷின்டா, இது. ஐ.நா.சபையோட எக்ஸ்பெரிமெண்டாம். குமார் ஏதோ வெப் சைட்ல பேர போட்டானாம். ரெண்டு நாள் முன்ன கொண்டாந்து வெச்சுட்டா. ஒரே கூத்துதான் போ", என்றார் மாமி.
"நான் மாதுன்னு பேரு வச்சுட்டேன். எல்லா பாஷையும் பேசும்டா. எல்லா ஊர் சமையலும் அத்துபடி இதுக்கு தெரியுமோ. உனக்கு கன்னடம் தெரியுமில்ல. இப்ப பாரு", என்று ஒரு ரிமோட்டை எடுத்து சில எண்களை அமுக்கினார் கோமதி மாமி. சமையல் அறையில் இருந்து, "நாளே ஹோலிகே மாடுபோதா" என்றார் பாய்லர் ராயர். அத விட வேடிக்கய பாரு என்று வேறு சில எண்களை அனுப்பினார். "இன்னா நைனா, போண்டா கூட ஒரு டீயும் அடிக்கிறியா". மாமி திரும்ப மாதுவுக்கே மாற்ற, மாது சொன்னது - "மாமி - அந்த ஜக்குவ கொஞ்சம் சும்மா விட்றேளா - எனக்கு தாங்கலே". ஃபீலிங்க்ஸ் வேறயா இதுக்கு!

"நம்ம ஊர் மட்டும் இல்லேடா. ஃப்ரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோன்னு எல்லாம் தெரியுது இதுக்கு."

"பாத்து மாமி, ஜாக்கிரதையா இருங்கோ. அப்புறம் ஆடு, மாடுன்னு ஏதாவது பண்ணிடப் போவுது. ஆமாம் அது என்ன பாய்லர் மாதிரி இருக்கு".
"சும்மா ட்ரயல்தானேடா. அவா நிஜமா விக்கும்போது இன்னும் நல்லா மனுஷா மாதிரியே பண்ணுவாளாம்".

போண்டா சூடு பறக்க வந்தது. மாது என்னிடம் கொடுத்துவிட்டு, "உப்பு எல்லாம் நல்லா வந்துருக்கா பாருடா அம்பி" என்றது. மாமிக்கு பெருமை தாங்கவில்லை. "பார்டா பேசறதுகூட என்ன மாதிரியே காப்பி அடிக்கறது".

"போண்டா சூப்பர்தான் மாது. மாமி - என்ன இருந்தாலும் உங்க போண்டா மாதிரி வருமா", என்றேன். "நீ சும்மா வழியாதேடா. உனக்கும், குமாருக்கும் செஞ்சு போட்டே எனக்கு கை ஓஞ்சு போச்சு. நான் இனிமே ஃபுல் ரெஸ்ட்லதான்", என்றார் மாமி.


"சரி, குமார் உள்ள இருக்கான். நீ போயி பேசிண்டு இரு. ராத்திரி மாதுவ பெசரட்டு பண்ண சொல்றேன். போயிடாதே......"

"ஏங்க - ஏந்திரிச்சி சாப்பிட வரீங்களா", என்ற சகதர்மிணியின் குரல் என்னை எழுப்பியது. எல்லாம் நேற்று ரொம்ப நாளுக்கப்புறம் கேட்ட என்.எஸ்.கே, டி.ஏ. மதுரம் பாடலின் விளைவு - "பட்டன தட்டி விட்டா ரெண்டு தட்டுல இட்டிலியும், காபி நம்ம பக்கத்துல வந்துடனும்". சாப்பிட உட்கார்ந்தால், தட்டில் பெசரட்டு. காலைக்கனவு பலிக்காமல் போகவில்லை.

பீச்சுக்கு போகலாமா ?! (அரைபக்கக் கதை)

சரியாகக் காலை பத்து மணிக்கு சிணுங்கியது செல்.

மறுமுனையில் செந்தில். "மாலதி ! இன்னிக்கு எதும் ப்ரோக்ராம் வச்சுக்காத. சாயந்திரம் பீச்சுக்கு போகலாம் !"

'சாயந்திரம் போற‌த்துக்கு இப்பவே என்ன அவசரம் ! என் கூட பேசிக்கிட்டே இருக்கணும் போல' என்று பெருமிதம் கொண்டாள் மாலதி.

சமையலில் மூழ்கினாள், புத்தகம் வாசித்தாள். அயற்சியாக இருக்க சிறிது கண்ணயர்ந்தாள்.

பண்ணிரண்டு முப்பதுக்கு மீண்டும் செல்லின் சிணுங்கல்.

"மாலதி ! நான் குணா. இன்னிக்கு எதும் ப்ரோக்ராம் இல்லியே ?! சாயந்திரம் பீச்சுக்கு போகலாமா ?"

'இல்லடா, செந்தில் கூப்பிட்டு இருக்கான்னு சொல்லிடலாமா ?!' என யோசித்து, அவன் என்னடான்னா போகலாம் என்று உத்தரவிடுகிறான். இவன் என்னடா என்றால் போகலாமா என்று கேட்கிறான். யாருக்கு என்ன பதில் சொல்வது'

"உனக்கு எத்தனை தடவை சொல்வது. பசங்களுக்கு இந்த அளவிற்கு செல்லம் கொடுத்து வளர்க்காதே என்று !!! பேரு சொல்லிக் கூப்பிட்டாங்க, ச‌ரி, அத ஆரம்பத்துலேயே கண்டிச்சிருக்கணும். விட்டாச்சு. இவனுங்க எலியும் பூனையுமா இருந்துகிட்டு, நம்மள பிரிக்கிறானுங்க. இப்ப பாரு, ஊர்ல எவ்வளவோ அழகழ‌கா புள்ளைக இருக்கு. எதிர்த்து நின்னு என்ன அழகா பேசுது. அதுல யாரையாவது புடிச்சு கிடிச்சு பீச்சுக்கு போக வேண்டியது தானே !!! என் பொண்டாட்டிய என் கூட அனுப்ப மாட்டேங்கிறானுங்க" என்று ம‌திய‌ச் சாப்பாட்டிற்கு வ‌ந்த‌ அர்ஜூன் வழக்கம் போல அலுத்துக் கொண்டார்.

Wednesday, November 26, 2008

சுவடுகள்: அவளைப் போல (சிறுகதை), தமிழ்த்திரையுலகம் ஒரு பார்வை

சுவடுகள்:தமிழ் சங்கத்தின் தமிழ் கதை,கட்டுரை பதிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட கதை மற்றும் கட்டுரை மறுபதிப்பு (2004).

கதை: மீனா வீரப்பன்
கட்டுரை: ச.சத்தியவாகீஸ்வரன்

Tamil Prose 2004 - Richmond Tamil Sangam

Saturday, April 26, 2008

சிறுகதை(கள்)

"இடுக்கண் வருங்கால்...", மற்றும் "அவளைப் போல்..." (இது சிலர் முன்னாடியே படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு நினைவுபடுத்தினதுக்கு நாகுவுக்கு நன்றி!)

http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_26.html
http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_23.html

Wednesday, March 05, 2008

அபார்ட்மென்ட் எண் 26

அபார்ட்மென்ட் பத்தி ஒரு செய்தியைக் கதையாய் எப்படி சொல்லலாம் என்று எண்ணி, ரொம்ப நாளா எழுதணும் என்று நினைத்து இப்ப தான் நேரம் கிடைத்தது. எழுதியிருக்கிறேன், வந்து படிச்சு பார்த்து உங்க கருத்துகளச் சொல்லுங்க.

http://vazhakkampol.blogspot.com/2008/03/26.html